பெற்றோருக்கு பக்குவமான பத்து
பெற்றோருக்கு பக்குவமான பத்து
* ஒரு குழந்தைக்கு முதன் முதலில் கிடைக்க வேண்டியது முழுமையான அன்பு. குழந்தை கேட்கும் பொருளை வாங்கி கொடுத்தால்தான் அன்பு என்று கிடையாது. குழந்தையை மடியில் அமர வைத்து நல்ல கதைகள் சொல்வது முழுமையான அன்பை அதற்கு கிடைக்கச் செய்யும். இப்படிப்பட்ட பெற்றோரிடம் குழந்தைகள் மிக நெருக்கமாகி விடும்.
* அடுத்ததாக குழந்தைக்கு நாம் கொடுக்க வேண்டியது நல்ல ஆரோக்கியம். குழந்தை பிறந்தது முதல் அதன் எடையை சரியாக 'மெய்ன்டெய்ன்' செய்து வரவேண்டும். 6 மாதத்திற்கு ஒருமுறை அதன் எடையை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். குழந்தையை ஆரோக்கியமாக வளர்க்க வேண்டும் என்பதற்காக அதிக ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுப் பொருட்களை அதிக அளவில் திணித்து குண்டு குழந்தைகளாக மாற்றிவிடக் கூடாது.
* மூன்று வயது முதல் நல்ல விஷயங்களை கற்றுக்கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். நகத்தை வெட்டுவது, தலையை சுத்தமாக பேணுவது, உள்ளாடைகள் மற்றும் உடல் அந்தரங்க உறுப்புகளை எப்படி ஆரோக்கியமாக பராமரிப்பது என்று அவர்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும். 18 வயது ஆகும்வரை ஒரே டாக்டரிடம் அழைத்துச் சென்று மருத்துவ ஆலோசனைகளை பெற வேண்டும்.
* அடுத்து முக்கியமானது பணம். பணம் இன்றி இன்றைய வாழ்க்கை முறையே இல்லை. அதனால், பணத்தின் மதிப்பை சின்ன வயதிலேயே குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். நம் குழந்தையுடன் படிக்கும் சக பெரிய இடத்து பிள்ளைகளிடம் பணம் அதிக அளவில் புழங்குகிறது என்பதற்காக நம் குழந்தைக்கும் பணத்தை அள்ளி செலவிடக்கூடாது. வீட்டின் சூழ்நிலையை பக்குவமாக புரிய வைத்து, தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது. 'பாக்கெட் மணி' கொடுத்தால், அந்த பணத்திலும் சேமிக்கும் பழக்கத்தை குழந்தையிடம் உருவாக்க வேண்டும்.
* குழந்தையுடன் நேரத்தை செலவிடுவதும் முக்கியமானது. குழந்தை என்ன பேசுகிறது என்பதை பெற்றோர் பொறுமையாக அமர்ந்து கேட்க வேண்டும். ஸ்கூல் டீச்சர், பக்கத்து வீட்டுக்காரர்கள் பற்றி குழந்தைகள் சொல்வதையும் ஆர்வமாக கேட்க வேண்டும்.
* குழந்தையை வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்து வளர்க்கக்கூடாது. அவ்வப்போது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும். தினமும் 'வாக்கிங்' அழைத்துச் செல்வதும் அவசியம்.
* குழந்தைகள் முதன் முதலாக தோல்வியை சந்திக்கும்போது நாம் கவனமாக இருக்க வேண்டும். தோல்வி என்பது வெற்றியின் அடிப்படை என்பதை பக்குவமாக புரிய வைக்க வேண்டும். இதற்காக, அம்மா, அப்பா இருவரும் ஏதாவது ஒரு விளையாட்டு விளையாடி யாரேனும் ஒருவர் தோற்பதுபோல் நடித்து, 'இதெல்லாம் சகஜம். தோல்வியை கண்டு துவளாமல் இருந்தால் அடுத்து வெற்றிதான்' என்பதை உணர்த்த வேண்டும். முக்கியமாக, எதையும் 'டேக் இட் ஈஸி'யாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை குழந்தையின் மனதில் பதிய வைக்க வேண்டும்.
* பிரச்சினைகளை எதிர்கொள்ளும் பக்குவத்தோடு குழந்தைகளை வளர்க்க வேண்டும். உன்னால் எதுவும் முடியும் என்று சொல்லி சொல்லி வளர்த்தால் குழந்தையிடம் தன்னம்பிக்கை தானாக வளர்ந்துவிடும். பிரச்சினை எப்படி வந்தது? ஏன் வந்தது? அதற்கு என்ன தீர்வு? - இந்த மூன்று விஷயங்களையும் தைரியமாக அணுக குழந்தைக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.
* குழந்தை மற்றவர்களிடம் பழகும்போது, அவர்கள் எப்படி தன்னிடம் பழகுகிறார்கள் என்பதை புரிந்துகொள்ளும் பக்குவத்தை வளர்க்க வேண்டும். எதிர் பாலினர் தன்னிடம் பேசும்போது, அவர்களது பேச்சு, பார்வை, தொடுதல் போன்றவற்றை ஒரு குழந்தை புரிந்துகொள்ளும் பக்குவத்தை பெறுவதும் அவசியம். மற்றவர்கள் தவறாக நடக்க முயற்சி செய்கிறார்கள் என்பதை எப்படி கண்டறிவது என்பதை சொல்லிக்கொடுக்கவும் தவறிவிடக்கூடாது.
* கண்டிப்பு என்பதை குழந்தையிடம் முற்றிலும் தவிர்த்து விட வேண்டும். ஒரு பெற்றோர் தங்களது குழந்தையை அதிகம் கண்டித்தால், அவர்கள் குழந்தையிடம் அதிகமாக எதிர்பார்க்கிறார்கள் என்றுதான் அர்த்தம். ஒரு குழந்தை அதன் சக்திக்கு தகுந்தவாறுதான் சிந்திக்கும். அதனால், எந்த சூழ்நிலையிலும் குழந்தையை கட்டாயப்படுத்தக் கூடாது. மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடவும் கூடாது.
மொத்தத்தில், அறிவு, அன்பு, உணவு - இந்த மூன்றையும் உங்கள் குழந்தைக்கு எப்பவும் கொடுக்க தயாராக இருங்கள். குழந்தை ஜெயித்தால் பாராட்டுங்கள். தோற்றால் தட்டிக்கொடுங்கள். உங்கள் குழந்தையும் நல்ல குழந்தைதான்.
"எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே-பின்பு
நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலே"
எவ்வளவு சத்தியமான வார்த்தைகள். குழந்தை வளர்ப்பு என்பது தனிக்கலை. ஒவ்வொரு குழந்தையும் இந்த உலகத்தில் பிறக்க கடவுள் தேர்ந்தெடுத்த கருவிகள் தான் பெற்றோர். உயிராகி, கருவாகி, உருவாகி, பிள்ளைக் கனியமுதாய்ப் பிறந்து, முகம் பார்த்து சிரித்து, தவழ்ந்து, விழுந்து, எழுந்து, பிஞ்சுப் பாதத்தால் அழகு நடை நடந்து, ஓடி, சிரித்து, அழுது, பேசி ஒவ்வொரு பருவத்தைக் கடந்து வரும் குழந்தைகள் உலகமே தனி. வாழ்க்கையில் எல்லாமே அவர்களுக்குப் புதியது. நாம் தான் எல்லாம் கற்றுத் தர வேண்டும். குழந்தைகளுக்கும் மனம், உணர்வுகள், விருப்பு-வெறுப்புகள் உண்டு என்பதை நாம் மறக்கக் கூடாது. பொதுவாக நம் எண்ணங்களை செயலாகின்ற செயலே பழக்கமாகின்றப் பழக்கமே வழக்கமாகின்ற வழக்கமே ஒழுக்கம் ஆகின்றது; தனிமனித ஒழுக்கமே பண்பாடு ஆகின்றது. பண்பட்ட குழந்தைகளை உருவாக்கும் பொறுப்பு பெற்றோர்களாகிய நம்மிடம் தான் இருக்கிறது. அதுவும் குழந்தைகளின் இளமைப்பருவத்தில் நாம் விதைக்கும் விதையே விருட்சமாகி நல்ல குடிமகனாக உருவாக வாய்ப்பாகின்றது. குழந்தை தானே என்று அசட்டையாக எண்ணாமல் வளர்ப்பில் கவனம் செலுத்தினால் நம் குடும்பத்திற்கு மட்டுமில்லாமல் நாட்டிற்கே நற்பிள்ளையாகத் திகழ்வான். குழந்தைகளின் வளர்ப்பு குறித்த பொதுவான வழிமுறைகள் இதோ....
வீட்டில் குழந்தைகள்:
* எந்த வயது குழந்தையையும் திட்டவோ அடிக்கவோ கூடாது. உடல் ரீதியாகவோ மனரீதியாகவோ துன்புறுத்தக் கூடாது.
* சிறுசிறு வேலைகளை இளமைக் காலத்திலிருந்தே குழந்தைகளுக்குப் பழக்க வேண்டும்.
* குழந்தைகள் எதிரில் பெரியவர்கள் சண்டை போடக் கூடாது. அது மனரீதியாகக் குழந்தைகளைப் பாதிக்கும்.
* எந்தக் குழந்தையுடனும் உங்கள் குழந்தையைத் தொடர்புபடுத்திப் பேசாதீர்கள். அது குழந்தைகள் மனதில் ஏக்கத்தையும் தாழ்வுமனப்பான்மையையும் விதைத்து விடும்.
* குழந்தைகள் எதிரில் பெரியவர்களை மரியாதை குறைவாகப் பேசக்கூடாது.
* எல்லாருடைய நல்ல குணங்களை மட்டுமே குழந்தைகள் எதிரில் பேச வேண்டும். யாரையும் தாழ்த்திப் பேசக் கூடாது.
* குழந்தைகளுக்கும் விருந்தோம்பலைக் கற்றுத் தர வேண்டும்.
* பிள்ளைகளின் வேலைகளை அவர்களே செய்யப் பழக்க வேண்டும். அவ்வாறு செய்தால் அவர்களுக்குப் பொறுப்புணர்ச்சி அதிகமாவதுடன் நமக்கும் வேலைப்பளு குறையும்.
* குழந்தைகளுக்கு உறவுகளின் அருமையையும் விட்டுக் கொடுத்தலையும் புரிய வைக்க வேண்டும்.
* ஆபத்தை விளைவிக்கும் எந்தப் பொருளையும் குழந்தைகள் கைக்கு எட்டும் தூரத்தில் வைக்கக் கூடாது.
பள்ளியில் பிள்ளைகள்
* குழந்தைகளைப் பயமுறுத்தி வளர்க்கக் கூடாது. அதிலும் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்துள்ள, குறும்புகள் அதிகம் செய்யும் குழந்தையிடம், "ரொம்ப சேட்டை பண்ணினேனா ஸ்கூல்ல கொண்டு தள்ளிடுவேன், ராகினி மிஸ்கிட்டே நல்லா நாலு அடி கொடுக்கச் சொல்றேன்" என்று கூறக் கூடாது. அப்படி செய்தால் பள்ளிக்கூடம் ஏதோ பயமுறுத்தும் இடம் போலவும், ஆசிரியர்கள் துன்புறுத்துபவர்கள் போலவும் குழந்தைகள் மனதில் பதிந்து விடும். அதற்குப் பதில் "நீ படிச்சு பெரிய ஆளாகணும், டீச்சர்ஸ் எல்லாம் ரொம்ப அன்பானவங்க, மாதா பிதா குரு தெய்வம்னு சொல்வாங்க. குருனா அது உன் டீச்சர் தான், உன்னைப் பெரிய ஆளாக்குறதுல அவங்க பங்கு தான் அதிகம்" என்று பள்ளிக்கூடத்தையும் ஆசிரியர்களையும் இனிமையானவர்களாகக் காட்ட வேண்டும்.
* பிள்ளைகள் வகுப்பில் பின்தங்கி இருந்தால் அவர்களை அன்புடன் அணுகி புரியாத பாடங்களைச் சொல்லித் தர வேண்டும். மிரட்டக்கூடாது.
* பிள்ளைகள் தங்களைத் தவிர வேற்று மனிதர்களிடம் எப்படிப் பழக வேண்டும் என்ற விழிப்புணர்வைத் தர வேண்டும்.
* பிள்ளைகள் மற்ற சக மாணவர்களுடன் போட்டி போடும் போது அது ஆரோக்கியமான போட்டியாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.
* பிள்ளைகளின் படிப்பு, பழக்க வழக்கங்கள் போன்றவற்றை அடிக்கடி ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.
* குழந்தையின் பள்ளிப் பையில் நம் வீட்டு விலாசம், தொலைபேசி எண் அடங்கிய கார்டை வைத்து விட வேண்டும். ஒருவேளை குழந்தைகள் காணாமல் போனாலும் விலாசம் இருப்பதால் குழந்தை பத்திரமாக வந்து சேரும்.
* பெற்றோரைத் தவிர வேறு முகம் தெரியாத நபர்கள் அழைத்தால் செல்லக் கூடாது என்று குழந்தைகளிடம் சொல்லி வைக்க வேண்டும்.
* பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளுக்குத் தங்க நகைகள் அணிவித்து அனுப்பக் கூடாது.
* பிள்ளைகளுக்கு ஆபத்து ஏற்படும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும், தற்காத்துக் கொள்ள வேண்டும் போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
குழந்தைகளும் கல்வியும்
* பிள்ளைகள் பள்ளிக்கூடப்பாடம் செய்து கொண்டிருக்கும் வேளைகளில் கண்டிப்பாக தொலைக்காட்சி பார்க்கக் கூடாது.
* பிள்ளைகள் படிக்கும் போது நாமும் அவர்களோடு அமர்ந்து ஏதேனும் புத்தகங்கள் படிக்க வேண்டும். இப்படிச் செய்வதால் குழந்தைகளின் கவனமும் சிதறாது. படிக்கும் ஆர்வமும் அதிகமாகும்.
* பிள்ளைகளை அதிக நேரம் தொலைக்காட்சியைப் பார்க்க விடக் கூடாது. அதற்குப் பதில் அருகில் உள்ள நூலகத்திற்கு அழைத்துச் சென்று நூல்கள் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தலாம்.
* கோடை விடுமுறையில் குழந்தைகளைச் சிறப்பு வகுப்புகளுக்கு அனுப்புவது சரிதான். ஆனால் ஒரே நேரத்தில் கராத்தே, பாட்டு, நடனம், யோகா என்று பலவித வகுப்புகளுக்கு அனுப்பும் போது குழந்தைகள் எதிலும் ஜொலிக்காமல் சோர்வடையக் கூடும். எனவே, குழந்தைகளுக்குப் பிடித்த ஏதேனும் ஒரு சில வகுப்புகளில் மட்டும் சேர்த்து விடலாம்.
* "காலை எழுந்தவுடன் படிப்பு பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு, மாலை முழுதும் விளையாட்டு" என்ற மகாகவி பாரதியின் வரிகளுக்கேற்ப மாலை வேளைகளிலே குழந்தைகளை விளையாடவும் விட வேண்டும்.
* அழகான ரோஜாவில் முட்களா? என்று சிந்திப்பது எதிர்மறை சிந்தனை, முட்களில் இத்தனை அழகான ரோஜாவா? என்பது ஆக்கப்பூர்வமான சிந்தனை. எனவே ஆக்கப்பூர்வமான சிந்தனைகளைக் குழந்தைகளிடம் வளர்க்க வேண்டும்.
* பிள்ளைகளை ஒரு பொருளை எடுத்தால் எடுத்த இடத்தில் வைக்கப் பழக்க வேண்டும். காலை நேரப் பரபரப்பில், "சீ எங்கே பாக்ஸ்" என்று பதட்டப்படத் தேவையில்லை.
* மனிதாபிமானம், அடுத்தவருக்கு உதவும் குணம் போன்றவற்றைப் பிள்ளைகளுக்குச் சொல்லித்தர வேண்டும். நாட்டுப்பற்றை ஊட்ட வேண்டும்.
* நம் கோபம், அவசரம், பதட்டம் என்று எதனையும் குழந்தைகளிடம் காட்டக் கூடாது.
* குழந்தைகளிடம் பொறுமையும் கனிவும் மிகவும் முக்கியம்.
குழந்தைகளின் உணவும் ஆரோக்கியமும்:
* சுத்தம், சுகாதாரம், சத்துள்ள ஆகாரம் ஆகிய மூன்றும் உடல் ஆரோக்கியத்தின் அடிப்படை என்பதைப் பிள்ளைகளுக்கு உணர்த்த வேண்டும்.
* பிள்ளைகள் தங்கள் அறையைச் சுத்தமாக வைத்துக் கொள்ளப் பழக்க வேண்டும்.
* சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளைக் கத்தியோ துன்புறுத்தியோ உண்ண வைக்காமல் சிறிது விட்டுப் பிடிக்கலாம்.
* ஒரே மாதிரி சமைக்காமல் குழந்தைகளுக்கு கேரட், பீட்ரூட் போன்ற விதவித வண்ண உணவுகளைச் சமைத்துத் தர வேண்டும். உணவை அவர்களுக்குப் பிடித்ததாக்க வேண்டும். உதாரணத்திற்கு ஏ, பி, சி போன்ற வடிவங்களில் தோசை வார்த்துத் தரலாம்.
* பாதாம்பருப்பைப் பொடித்து பாலில் கலந்து வாரத்திற்கு மூன்று முறை பிள்ளைகளுக்குக் கொடுத்து வர, அவர்களின் நினைவாற்றல் அதிகரிக்கும். கேரட்டைத் துருவி தேனில் கலந்து கொடுத்தாலும் புத்திக்கூர்மை ஏற்படும்.
* தினம் ஒரு காய், ஒரு பழம் உண்ணும் பழக்கத்தைச் சிறு வயதிலேயே ஏற்படுத்த வேண்டும்.
* கொழுப்புச் சத்து அதிகம் இருக்கும் உணவுகள், செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட குளிர்பானங்கள், உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் நொறுக்குத் தீனிகளைக் குழந்தைகளுக்குக் கொடுத்துப் பழக்கக் கூடாது.
* தொலைக்காட்சி பார்த்துக் கொண்டே குழந்தைகள் உணவு உண்ணும் பழக்கத்தை ஊக்கப்படுத்தக்கூடாது.
* உணவின் அருமையைக் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். அவர்களுக்குச் சத்துள்ள ஆகாரங்களைக் கண்டிப்பாகத் தர வேண்டும். உண்ண மறுத்தாலும் கொஞ்சம் கொஞ்சமாகப் பழக்க வேண்டும்.
* குழந்தைகளுக்கு எந்த விதமான உடல்-மன ரீதியான பிரச்சினைகள் ஏற்படின் அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
குழந்தைகளும் சேமிப்புப்பழக்கமும்
* பிள்ளைகளுக்குப் பணத்தின் அருமையை இளம் வயதிலிருந்தே உணர்த்த வேண்டும்.
* பிள்ளைகளுக்குச் சேமிக்கும் பழக்கத்தைச் சிறு வயதிலேயே ஏற்படுத்த வேண்டும்.
* பெரியவர்கள் குழந்தைகளுக்குப் பண்டிகை காலங்களில் தரும் பணத்தை உண்டியலில் அவர்கள் கையாலேயே போட்டு வரச் செய்ய வேண்டும், பணம் சேர்ந்தவுடன் அவர்கள் நீண்ட நாட்களாக ஆசைப்பட்ட பொருளை வாங்கித் தரலாம். அவர்களுக்குச் சேமிப்பின் அருமை தெரிவதுடன் தன் உழைப்பில் வாங்கிய பொருள் என்று மகிழ்ச்சியாக இருக்கும்.
* குழந்தை ஆசைப்படுகின்ற எல்லாப் பொருளையும் வாங்கித் தர வேண்டிய அவசியமில்லை. எது தேவையோ அதைத் தவிர மற்றவற்றைக் குழந்தையின் பிடிவாதத்திற்காக வாங்கித் தரக் கூடாது. குழந்தைக்குச் சிறு சிறு ஏமாற்றங்களும் கிடைத்தால் தான் பிற்காலத்தில் எதையும் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவமும் பணத்தின் மதிப்பும் தெரியும்.
* செலவிற்குப் பணம் என்று தனியாகப் பிள்ளைகள் கையில் பணத்தைப் புரள விடக் கூடாது.
குழந்தைகளின் வெற்றி-தோல்வி
* பிள்ளைகளின் எண்ணங்கள், கருத்துக்களைச் செவி கொடுத்துக் கேளுங்கள். அவர்களின் உணர்விற்கும் மதிப்பு கொடுங்கள்.
* பிள்ளைகளின் மேல் உங்கள் தனிப்பட்ட ஆசைகளைத் திணிக்காமல் அவர்களின் ஆர்வம் எதில் இருக்கிறதோ அதைக் கண்டறிந்து ஊக்கப்படுத்துங்கள். பல்வேறு போட்டிகளில் சேரச் சொல்லுங்கள்.
* பிள்ளைகள் செய்யும் நல்ல விஷயங்களையும் மனம் திறந்து பாராட்டுங்கள். ஒவ்வொரு முறை பாராட்டு வாங்குவதற்காகவே நல்ல பழக்கங்களை மேற்கொள்வார்கள்.
* வெற்றியானாலும் சரி, தோல்வி கிடைத்தாலும் சரி, எல்லாமே வாழ்க்கையின் அங்கங்கள் என்பதைப் புரிய வையுங்கள்.
* பிள்ளைகள் நல்ல விஷயங்கள் செய்தாலும், நல்ல மதிப்பெண்கள் வாங்கினாலும், போட்டியில் வெற்றி பெற்று வந்தாலும் ஏதேனும் பரிசுப் பொருள் வாங்கிக் கொடுத்து உங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
* பிள்ளைகள் எந்த விஷயத்திலாவது தோல்வியடைந்தால் திட்டாமலும் சோகத்தை வெளிக்காட்டாமலும் அடுத்த முறை வெல்லலாம் என்று ஊக்கப்படுத்துங்கள்.
* குழந்தைகளைப் பெருமையாக மற்றவர்களிடம் கூறுங்கள். உங்கள் ஊக்கமும் உற்சாகமும் குழந்தைகள் மனதில் தன்னம்பிக்கையை விதைக்கும்.
* ஆண் என்றால் உயர்ந்தவர், பெண் என்றால் தாழ்ந்தவர் என்ற பேதத்தையோ சாதியையோ பிள்ளைகள் மனதில் விதைக்கக் கூடாது.
* நாம் எப்படி நடக்கிறோமோ அது போலவே தான் பிள்ளைகளும் நம்மைப் பின்பற்றுவார்கள். எனவே பிள்ளைகள் எதிரில் பேச்சிலும், செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.
* குழந்தை வளர்ப்பில் தந்தை-தாய் இருவருக்கும் சரி பங்கு இருக்கிறது. பிள்ளைகள் நல்ல மதிப்பெண்கள் பெற்றால் மட்டும் பெருமையில்லை. இளமையிலே அவர்களுக்கு ஒழுக்கத்துடன் கூடிய வாழ்க்கைக் கல்வியையும் தர வேண்டு..
குழந்தை பிறந்த சில நாட்களுக்கு தாய்க்கும், குழந்தைக்கும் அமைதியும், அதிகமான ஓய்வும் தேவை. குழந்தை தினமும் 23 மணி நேரம் தூங்க வேண்டும். தாயும் அதிக நேரம் தூங்க வேண்டும். அந்த நேரத்தில் சத்தமில்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. குழந்தை பிறந்ததும் உறவினர்கள் பார்க்க வந்து தாய் மற்றும் குழந்தைக்கு தொந்தரவு கொடுக்காமல் சில நாட்கள் கழித்து குழந்தையை பார்த்து கொஞ்சுவதே மிகவும் நல்லது. குழந்தை பிறந்த சில நாட்களுக்கு மற்றவர்கள் தூக்கி கொஞ்சாமல் இருப்பது சுத்தமானது... சுகாதாரமானது!
குழந்தைக்கு ரோல்மாடலே பெற்றோர்கள்தான். அவர்கள் தங்கள் கடமைகளை சரியான நேரத்தில், ஒழுங்காக செய்தாலே குழந்தைகளும் அதை செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். இரவு 12 மணி வரை டிவி பார்ப்பது, காலையில் தாமதமாக எழுவது, அடிக்கடி ஓட்டலில் சாப்பிடுவது போன்ற பெற்றோரின் பழக்கங்கள் குழந்தைகளிடம் மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும். குழந்தைகள் படிக்கும்போது பெற்றோர்கள் டிவி பார்ப்பதையோ, வெளியே செல்வதையோ அல்லது யாரிடமாவது ஜாலியாக பேசுவதையோ தவிர்ப்பது நல்லது.
குழந்தைக்கு சேலை மற்றும் இதர துணிகளால் தொட்டில் கட்டுவது கூடாது. இதனால் குழந்தைக்கு பல தீமைகள் ஏற்படும். குழந்தை தன் விருப்பத்திற்கு கை, கால்களை ஆட்டவும், புரண்டு படுக்கவும் முடியாது. தன் நெஞ்சு மற்றும் உடம்பை குறுக்கிக் கொண்டு தூங்க வேண்டிய சூழல் ஏற்படும். காற்றோட்டமும் குறையும். இதனால் குழந்தைக்கு மார்பில் மூக்கடைப்பும், சளியும் ஏற்படும். மேலும் தொட்டிலில் தூங்கும் குழந்தைகள் அடிக்கடி விழித்துக் கொள்ளும். இதனால் தாய்க்கும் தூக்கம் கெடும்.
'ஊட்டி வளர்த்த பிள்ளை உருப்படாது' என்பது பழமொழி. சாப்பிடுவதற்கு குழந்தைகள் அடம் பிடித்தால் ஊட்டுவதை நிறுத்துங்கள். சாப்பாட்டைக் கண்டால் ஒரு வெறுப்புணர்ச்சி ஏற்படும்படி செய்ய வேண்டாம். சாப்பாடு வேண்டும் என்று குழந்தை கேட்கும் வரை கண்டுகொள்ளாமல் பொறுமையாக இருக்கவும். வீட்டில் உள்ள மற்றவர்கள் சாப்பிடும் போது குழந்தைக்கும் சாப்பாடு வைத்து மற்றவர்களை பார்த்து சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்தவும். நாளடைவில் குழந்தைக்கு நல்ல சாப்பாட்டு பழக்கத்தை இது உருவாக்கும்.
குழந்தைகளை மற்ற குழந்தையுடன் ஒப்பிட வேண்டாம். ஒப்பீடு செய்வது பெற்றோர்கள் செய்யும் மிகப் பெரிய தவறு. ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதத்தில் மற்ற குழந்தையை மிஞ்சித் தான் இருப்பார்கள். பெற்றோர்களின் ஊக்குவிப்பினால் குழந்தைக்கு தன்னம்பிக்கை அதிகமாக வேண்டும், மேலும் நீங்கள் கொடுக்கும் பயிற்சியால் குழந்தை மிகவும் திறமைசாலியாக மாறும் சூழல் ஏற்படும். ஆரம்பத்தில் தோல்வி கண்டாலும் ஊக்குவித்தால் குழந்தைகள் முயற்சி செய்து வெற்றி அடைவார்கள்.
குழந்தையை மிகுந்த கண்டிப்புடன் வளர்ப்பது தவறு. கண்டிப்பு இல்லாமல் மிகுந்த செல்லத்துடன் வளர்ப்பதும் தவறு. குழந்தையை கண்டிப்புடனும், செல்லமாகவும் வளர்க்க வேண்டும். கண்டிப்புடன் வளர்க்கும் பெற்றோரை குழந்தைகள் நேசிக்காமல் பயப்படுவார்கள். கண்டிக்காமல் செல்லம் கொடுத்து வளர்த்தால், குழந்தை பெற்றோரை தாம் நினைத்ததைச் செய்யும் அடிமை என்று நினைத்து விடுவார்கள். இதனால் அந்தக் குழந்தையின் எதிர்காலம் பாதிக்கப்படும்.
அடம் பிடிக்கும் குழந்தையிடம் எக்காரணம் கொண்டும் பெற்றோர்கள் அடிபணியக் கூடாது. தொடர்ந்து குழந்தை அடம் செய்ய ஆரம்பித்தால், அலறினால் யாரும் கண்டு கொள்ள வேண்டாம். குழந்தையை அடிக்கவோ, அதட்டவோ, கட்டாயப்படுத்தவோ வேண்டாம். இது கஷ்டம்தான் என்றாலும் பொறுமையாக பெற்றோர் இருந்தாலே, அடம் செய்தால் நமக்கு எதுவும் கிடைக்காது என்பதை குழந்தைகள் புரிந்து கொள்வார்கள். பின்னர் அமைதியாக இருக்கும்போது பொறுமையாக எடுத்துச் சொல்லி புரிய வைக்கவும்.
குழந்தைகளின் ஆரோக்கியத்தில் தாயின் பொறுப்பு மிக முக்கியம், அவசியமானதும்கூட. கர்ப்பிணித் தாயின் ஆரோக்கியத்தைப் பொறுத்தே பிறக்கும் குழந்தையின் ஆரோக்கியமும் அமையும் என்பதால், பேறுகாலத்தின் போது ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும்.
* குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவப் பரிசோதனைகளை செய்ய வேண்டும்.
* வழக்கத்தை விட, ஒன்று அல்லது இரண்டு முறை கூடுதலாக சாப்பிட வேண்டும்.
* பழங்கள், கீரைகள் உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
* உங்கள் குழந்தைக்கு பாலூட்ட ஆயத்தாமாகுங்கள்; அதற்கு தடையாக ஏதேனும் பிரச்சினை இருக்குமென்றால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள்.
தாய்ப்பால்:
* உங்கள் குழந்தைக்கு பெரிதும் நன்மை பயக்கக்கூடியது தாய்ப்பால்தான்; அது கடவுள் உங்கள் குழந்தைக்கு வழங்கியது.
* குறித்த கால அளவுக்கு முன்னர் பிரசவித்த தாயின் பால், குறித்த காலம் நிறைவடைந்த தாயின் பால், இவற்றில் அடங்கியுள்ள சத்துக்கள் வித்தியாசப்படும்.
* தாய்ப்பால் அருந்தும் குழந்தைகள் அதிக புத்திசாலித்தனமும் மூளை வளர்ச்சியும் உடையவர்களாக இருப்பர்.
* வயிற்றுப்போக்கு, மூச்சுப் பிரச்சினைகள், காதில் வரும் நோய்களின் தொற்று போன்றவற்றை எதிர்க்கக்கூடிய சக்தி பெற்றிருப்பர்.
* ஒவ்வாமை என்ற அலர்ஜி ஏற்பட வாய்ப்பு குறைவு.
* வளரும்போது அதிக எடை மற்றும் இரத்த திசுக்களில் பாதிப்பு (Arteries) ஏற்பட வாய்ப்பு குறைவு.
* தாய்ப்பால் அளிப்பது பாலூட்டும் தாய்க்கும் நன்மை பயக்கும். பிள்ளை பேற்றுக்குப் பின்னர் கருப்பை பழைய அளவை பெறவும், கருக்குழாய் மற்றும் மார்பகங்களில் புற்றுநோய் ஏற்படக்கூடிய வாய்ப்பைத் தடுக்கவும், உடலிலுள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைக்கவும் தாய்ப்பால் கொடுப்பது உதவும். பாலூட்டுவதே உங்களுக்கும், உங்கள் குழந்தைக்கும் நெருக்கமான உறவை வளர்க்க உதவும் முதல் காரணி.
தாய்ப்பால் ஊட்டும் முறைகள்:
* பிறந்து ஆறு மாதங்கள் வரை குழந்தைக்கு தாய்ப்பாலை மட்டுமே அளிக்க வேண்டும். அதனுடன் வேறு எந்த உணவையும் கண்டிப்பாகக் கொடுக்கக்கூடாது. தண்¬ரும் கொடுக்கக்கூடாது. மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டும், மருந்து அல்லது வைட்டமின் சத்து மருந்து ஆகியவற்றை கொடுக்கலாம்.
* சுகப்பிரசவம் அடைந்தோர் அடுத்த அரைமணி நேரம் கழித்தும், அறுவை சிகிச்சையின் மூலம் பிரசவம் நடந்தால், நான்கு மணி நேரம் கழித்தும் பாலூட்ட ஆரம்பிக்கலாம். அதற்கு முன் குழந்தைக்கு சர்க்கரை தண்ணீ¬ர், கழுதைப்பால் இவற்றை கொடுக்கக்கூடாது. பிரசவத்திற்குப் பின் முதல் இரண்டு முதல் நான்கு நாட்களில் வரும் தாய்ப்பால் அடர்த்தியாக இருக்கும். இது புரதச்சத்தும், நோய்த் தொற்றை தடுக்கும் சத்தும் நிறைந்தது. ஆகவே, அதை குழந்தைக்கு கொடுக்கத் தவறக்கூடாது.
* தேவைப்படும்போதெல்லாம் பாலூட்டலாம். தாய்ப்பாலிலேயே தேவையான சக்தி, ஊட்டச்சத்து மற்றும் நீர் இருப்பதால், வெப்பமான காலநிலைகளிலும் இவ்வாறே செய்யலாம்.
* பாலூட்டும் தாய், வேலைக்குச் செல்பவராக இருந்தால், அலுவலகம் செல்லும் முன்னரும், வந்த பின்னரும், இரவில் தேவைப்படும்போதும் மற்றும் விடுமுறை நாட்களிலும் தவறாது பாலூட்ட வேண்டும். வேலைக்குச் செல்லும்போது சுத்தமான கலன் ஒன்றில் தாய்ப்பாலை சேகரித்து, கிண்ணம், கரண்டி மற்றும் சங்கு (Paladai) மூலம் குழந்தைக்குக் கொடுக்கலாம். புட்டி மூலம் ஊட்டுவதைத் தவிர்க்கவும்.
* குழந்தை நோய்வாய்ப்பட்டு இருந்தாலும் தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.
ஆறு முதல் பன்னிரண்டு மாதங்கள்:
ஆறாம் மாதத்திலிருந்து திட உணவுகளை கொடுக்க ஆரம்பிக்கலாம். அதனுடன், குழந்தை விரும்பும்போதெல்லாம் தாய்ப்பாலையும் கொடுக்க வேண்டும். ரவை, மசித்த சாதம், பாயாசம், தானியங்களின் கஞ்சி இவற்றை சர்க்கரை, வெல்லம் மற்றும் எண்ணெய், நெய் சேர்த்து சமைத்துக் கொடுக்கலாம். காய்கறிகளை சமைத்து கொடுக்கலாம். முதலில் ஒன்று அல்லது இரண்டு மேசை கரண்டிகளில் ஆரம்பித்து, ஒன்று முதல் மூன்று சிறு கிண்ண அளவு வரைக்கும் ஊட்டலாம்.
ஏழு முதல் ஒன்பது மாதங்கள்:
வீட்டில் சாப்பிடும் சாதாரண உணவு வகைகளை சற்று மசித்து கொடுக்கலாம். அவற்றுடன் வகைக்கு ஏற்ப சர்க்கரை, வெல்லம், எண்ணெய் மற்றும் நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். முட்டையின் மஞ்சள் கருவை ஊட்டலாம். பின்னர் வெள்ளை கருவையும் கொடுக்க ஆரம்பிக்கலாம்.
ஒன்பது முதல் பன்னிரண்டு மாதங்கள்:
வீட்டில் சமைக்கும் உணவுகளை கொடுக்கலாம்.
ஒன்று முதல் இரண்டு வயது வரை:
குழந்தை விரும்பும் பொழுது தாய், பாலூட்டலாம். மற்றபடி, வீட்டில் சமைக்கும் உணவை ஒன்றரை கிண்ணம் அளவில் ஒரு நாளில் ஐந்து முறை கொடுக்கலாம். குழந்தை சாப்பிட தனி தட்டு ஒன்றைப் பயன்படுத்த வேண்டும். சாப்பிடும் முன்னர், சோப் உபயோகித்து நன்றாக நீரினால் கழுவ வேண்டும். குழந்தை சாப்பிடும்போது, பக்கத்தில் உட்கார்ந்து, ஊக்குவியுங்கள்.
இரண்டு வயதுக்கு மேல்:
வீட்டில் சமைக்கும் உணவினை மூன்று வேளைக்குக் கொடுங்கள். அதனுடன் இருவேளைகளுக்கு வாழைப்பழம், பிஸ்கட் போன்ற சத்துள்ள சிறுஉணவுகளை கொடுக்கலாம். குழந்தைக்கு உணவு பரிமாறும் முன்னர் உங்கள் கைகளை சோப் உபயோகித்து கழுவுங்கள். உணவு உண்ணும் முன்னர், கைகளை சோப் உபயோகித்து நன்றாக நீரினால் கழுவ வேண்டும் என்பதை குழந்தைக்கு கற்று கொடுங்கள். குழந்தை நோய்வாய்ப்பட்டு குணமானதும் ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்கு கூடுதலாக உணவு கொடுங்கள். நோய்வாய்ப்பட்டு இருக்கும் போது, திரவ உணவுகளை அதிகமாகக் கொடுங்கள். மருத்துவர் அறிவுறுத்தும் கால அட்டவணைப்படி, தடுப்பு ஊசிகளைப் போடுங்கள்.
வயிற்றுப்போக்கு ஏற்பட்டால்:
தொடர்ந்து பாலூட்ட வேண்டும். வீட்டில் கிடைக்கும் திரவ உணவுகளை கூடுதலாக வழங்கலாம். உடலின் நீர் இழப்பை சரிக்கட்டும் கரைசலை (Oral Rehydration Solution) தயாரித்துக் கொடுக்க வேண்டும்.
கரைசலை (ORS) தயாரிக்கும் முறை:
கைகளை நன்கு கழுவிய பின்னர், இதற்கான பொடி அடங்கிய பொட்டலத்தைப் பிரித்து, அனைத்தையும் சுத்தமான பாத்திரம் ஒன்றில் போட்டுக் கொள்ளவும். காய்ச்சி, ஆறிய நீரை 1 லிட்டர் எடுத்து, அதை பாத்திரத்தில் ஊற்றி, அனைத்து பொடியும் கரையும்படி நன்கு கலக்கவும். இப்படி தயாரித்த கரைசலை 24 மணி நேரத்துக்குள் உபயோகித்துக் கொள்ளவும். மறுநாளுக்கு புதிதாகத் தயாரிக்க வேண்டும். 24 மணி நேரத்துக்குப் பின்னர் மீதியாகும் கரைசலை திரும்ப உபயோகிக்கக்கூடாது.
* இரண்டு வயதுக்குக் குறைவான குழந்தைக்கு, ஒவ்வொரு முறை வயிறு கழிந்த பின்னரும் 50 முதல் 100 மி.லி. அளவு கரைசலை மேசை கரண்டி மூலம் ஊட்டலாம்.
* இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு 100 முதல் 200 மி.லி. கரைசலைக் கொடுக்கலாம்.
* பத்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தேவைப்படும் போதெல்லாம் கொடுக்கலாம்.
* வயிற்றோட்டம் நின்றவுடனேயே, இந்தக் கரைசலை கொடுப்பதை நிறுத்தி விட வேண்டும்.
வீட்டில் தயாரிக்கக்கூடிய திரவக்கரைசல்கள்:
* ஒரு லிட்டர் நீரில் எட்டு மேசைக் கரண்டி அளவு சர்க்கரை மற்றும் இரண்டு மேசைக்கரண்டி அளவு உப்பை கரைத்து கிடைக்கும் கரைசல்.
* சாதம் வடித்த நீரில் உப்பை கரைத்து கிடைக்கும் கரைசல், உப்பு கலந்த லஸ்ஸி, தேங்காய் தண்ணீ¬ர், சூப், பருப்பு நீர்.
* வயிற்றோட்டத்தின்போது, உப்பு கலக்காத குளுக்கோஸ் தண்ணீ¬ர், சர்க்கரை கலந்த பழச்சாறு, சோடா மற்றும் புட்டிகளில் கிடைக்கும் குளிர்பானங்கள், தேநீர் போன்றவற்றை குழந்தைக்குத் தரக்கூடாது.
* குழந்தை தொடர்ந்து பால் அருந்த மறுத்தால் அல்லது மிகக்குறைவாக அருந்துவதோடு, இரத்தமாக வயிறு கழிதல், காய்ச்சல் இவற்றால் அவதிப்பட்டால், மருத்துவரை அணுகவும்.
தடுப்பூசிகள் போட்ட பின்னர் கவனிக்க வேண்டியவை:
* BCG தடுப்பூசி போடப்பட்ட பின்னர், இரண்டு வார காலத்துக்குள் சிறிய வீக்கமும் புண்ணும் ஏற்படலாம். இதற்குச் சிகிச்சை தேவையில்லை. தானாகவே சரியாகி விடும்.
* DPT ஊசிக்குப் பின்னர், காய்ச்சலும், வலியும் வரலாம். இதற்கு சாதாரண காய்ச்சல் மருந்து (Paracetamol) கொடுத்தால் போதும்.
* சின்னம்மை (Measles) தடுப்பு ஊசிக்குப் பின்னர், காய்ச்சலும், மிகச் சிறிய தடுப்புகளும் உருவாகலாம். இதற்கு சாதாரண காய்ச்சல் மருந்து கொடுத்தால் போதும்
* DT ஊசிக்குப் பின்னர், காய்ச்சல் வரக்கூடும். இதற்கு சாதாரண காய்ச்சல் மருந்து கொடுத்தால் போதும்.
கோடை விடுமுறையில் வீட்டில் எங்கு பார்த்தாலும் குழந்தைகளின் ராஜ்ஜியம்தான்! அவர்கள் விளையாடும் விளையாட்டுகளும், கூச்சலும், கும்மாளமும் பரவலாக எதிரொலிக்கும்.
பெற்றோர்கள் தொலைக்காட்சி முன்பாக உட்கார்ந்து கொண்டு ரிமோட்டை சுழற்றியபடி, டிவி பார்க்காதே... விளையாடாதே என்று கூறினால் எப்படி கேட்பார்கள்?
நம் குழந்தைகளுக்கு நல்ல குண நலன்களையும், ஒழுக்கத்தையும், பழக்க வழக்கங்களையும் நாம்தான் கற்றுத்தர வேண்டும். அவர்கள் படிப்பில்... தொழிலில்... வேலையில் வெற்றி பெற வேண்டுமென்றால், அதை நாம் கற்றுத் தந்துவிட்டால், வாழ்க்கையில் அவர்கள் பிரகாசிப்பது ரொம்ப சுலபம். படிப்பும், வேலையும் அவரவர்களுக்கு இருக்கும் திறமைக்கும், ஆர்வத்துக்கும் ஏற்ப அவர்கள் தேர்ச்சி பெற்று விடுவார்கள். படிப்பிலும், தொழிலிலும் கிடைக்கும் வெற்றி நிலைக்க வேண்டும் என்றால், அது நாம் கற்றுத்தரும் பண்புகளால்தான் முடியும்.
நல்ல விஷயங்களை போதனையாக... அறிவுரையாக சொல்லி திருத்துவதை விட கதைகள், உதாரணங்கள் மூலம் எடுத்துக் கூறினால் அவர்களை எளிதாக சென்றடையும். குழந்தைகளுக்கு மிகவும் முக்கியமாக சொல்லிக் கொடுக்க வேண்டியது,
* வெற்றியை அடைய குறுக்கு வழியில் செல்லாமல் நேர்வழியில் செல்வது...
* அம்மாவிடமிருந்து உறுதியான மறுப்பு வரும்போது அதை செய்யக்கூடாது...
* ஏதாவது கலை அல்லது விளையாட்டில் சிறப்பு கவனம்...
* அனுபவத்தால் உணரக்கூடிய சிறிய வயது விஷமங்களை கண்டித்துக் கொண்டே இருக்காமல், அனுபவம் மூலம் தெரிந்து கொள்ளவிடுவது.
* ஒரு செயலை செய்ய வேண்டும் அல்லது செய்யக் கூடாது என்று நாம் சொல்வதற்கான காரணத்தை தெரிந்து கொள்வது.
* தம் மீது பெற்றோர்கள் சந்தேகப்பட மாட்டார்கள் என்ற நம்பிக்கை...
நம் குழந்தைகள் சந்தோஷமான குழந்தைகளாக வளர்வதற்கும், நல்ல பண்புகள் கொண்ட வருங்கால இளைஞர்களாக இருப்பதற்கும், சாதனைகள் புரிவதற்கும் அடிப்படை காரணம் பெற்றோர்களின் வளர்ப்புதான். உங்களுடைய குழந்தைகளுக்கு சம்பாதிக்கவோ அல்லது பணத்தை சேர்த்து வைக்கவோ கற்றுத் தர வேண்டாம். நல்ல குணங்களை... வாழ்க்கையை கற்றுக் கொடுங்கள். சம்பாதிக்கவும், சேமிக்கவும் அவர்களே கற்றுக் கொள்வார்கள்
பெற்றோர் ஊருக்குப் போய்விட்டால், சில குழந்தைகள் வீட்டில் தனியாக இருப்பதற்குப் பயப்படுவார்கள். சிலர் லைட் வெளிச்சமில்லாத தெருவைக் கடந்து, கடைக்குச் செல்ல அண்ணனின் துணையைத் தேடுவார்கள். இன்னும் சில பிள்ளைகள் வீட்டுக்கு விருந்தினர் வந்துவிட்டால், ஹால் பக்கம் எட்டியே பார்க்க மாட்டார்கள். வேறு சில குழந்தைகளுக்கு இரவில் பாத்ரூமுக்குச் செல்வது வாழ்க்கையின் மிகப் பெரிய சவால். பெற்றோர் மனம் நொந்துகொள்ளும் அளவுக்கு விதவிதமான பயங்களோடு இந்தக் குழந்தைகள் அல்லாடுவதற்கு என்ன காரணம்? குழந்தைகள் நல நிபுணரும் வளர் இளம் பருவ சிறப்பு மருத்துவருமான டாக்டர் யமுனா அக்கறையுடன் கூறிய தகவல்கள் இவை: "குழந்தைகள் பிறந்த 2, 3 மாதங்களிலேயே அம்மாவின் நடவடிக்கைகளையும் சுற்றுப்புற அசைவுகளையும் கவனிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். அவற்றை அப்படியே பிரதிபலிக்கவும் செய்வார்கள்.
ஆறேழு மாதங்கள் ஆன நிலையில், குழந்தையை இரவில் உறங்க வைப்பதற்குப் பெற்றோர் பெரிய போராட்டமே நடத்த வேண்டியிருக்கும். ஓரளவுக்கு மேல் கண்விழிக்க முடியாத பெற்றோர் கடைசியில் கையில் எடுக்கும் ஆயுதம், குழந்தைகளைப் பயமுறுத்துவதுதான். "பூச்சாண்டி வந்து உன்னைத் தூக்கிட்டுப் போயிருவான்!" என்று டென்ஷனை உருவாக்குவார்கள். இதற்கெல்லாம் மசியாமல், "நானாவது, தூங்குறதாவது?" என்று கேட்பது போல குழந்தை நக்கலாகச் சிரிக்கும். ஆனால், அப்போது குழந்தையின் மனசில் பயம் தூண்டிவிடப்படுகிறது என்பதுதான் உண்மை.
எட்டாவது மாதத்தில் குழந்தை குப்புற விழுந்து நகரத்தொடங்கும். அதன் பார்வையில் இருளென்றும் வெளிச்சமென்றும் பேதம் கிடையாது. தரையில் கிடக்கும் எந்தப் பொருளையும் தயங்காமல் வாயில் வைத்து ருசி பார்க்கும். பெற்றோரால் தொடர்ந்து குழந்தையைக் கண்காணிக்க முடியாது. அதனால் குழந்தையின் நகர்வைக் கட்டுப்படுத்தவே முயல்வார்கள். "அங்கே இருட்டு. போகாதே. உள்ளே பூதம் இருக்கு!" என கட்டுக்கதைகளைச் சொல்லி, குழந்தையை ஒரே இடத்தில் இருக்கச் செய்ய முயற்சி நடக்கும். இதோ, குழந்தைக்கு இன்னொரு டோஸ் பயம் ஏற்றியாச்சு!
சோறு ஊட்டும் பருவத்திலும் குழந்தையைப் பயங்கள் தொடர்கின்றன. சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தையிடம் அபார்ட்மென்ட் செக்யூரிட்டியையோ, பெரிய மீசை வைத்த எதிர்வீட்டு மாமாவையோ காட்டி பயமுறுத்தாத பெற்றோர் இல்லை.
யூ.கே.ஜி. படிக்கும் குழந்தை சேட்டை செய்தால், அதைக் கட்டுப்படுத்த ஸ்கூல் டீச்சரின் பேரை மந்திரம் போல உச்சரிக்கும் பெற்றோர் இருக்கிறார்கள். குழந்தை விளையாடக் கிளம்பினால், "கீழே விழுந்துரப் போறே!", "தலையில அடிபட்டுரும்!" "எப்ப பார்த்தாலும் விளையாட்டுதானா?" என்று நெகட்டிவ் பேச்சுகளால் குழப்புவதும் நடக்கும்.
பஸ் பயணங்களின்போது ஆர்ப்பரிக்கும் குழந்தையைக் கட்டுக்குள் வைப்பதற்கும் பெற்றோர் நாடுவது, சின்னச் சின்ன பொய்களையும் பயங்களையும்தான். ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்கும் அலுப்புத் தாங்காமல் குழந்தை அழும்போது, "அழுதால் பஸ்லருந்து இறக்கி விட்டுருவாங்க!" என்று சொல்வது தவறான அணுகுமுறை. கவனத்தைத் திசை திருப்புவதுபோல பொருட்களைக் கொடுத்தும் அழகான கதைகள் சொல்லியும் அந்த இடத்தில் சாத்தியமான விளையாட்டுகளில் ஈடுபட்டும் குழந்தைகளைச் சமாதானப்படுத்துவதுதான் சரி. எனினும் பொறுமையும் கற்பனைத்திறனும் தேவைப்படுகிற இந்த வேலைகளுக்கு ஏறக்குறைய அரைமணி நேரத்துக்கு மேல் ஆகும். ஆனால் பயமுறுத்தி அடக்குவதற்கு ஓரிரு நிமிஷங்கள் போதும். அதனால்தான் பெரும்பாலான பெற்றோர், பயமுறுத்தும் டெக்னிக்கைப் பின்பற்றுகிறார்கள்.
பல குழந்தைகளுக்குப் படிப்பும் பரீட்சையும் அச்சமூட்டும் விஷயங்கள் ஆனதற்குக்கூட இந்த டெக்னிக்தான் காரணம். தேர்வில் எழுதத் தேவையான அளவுக்குப் படித்துவிட்டதாக ஒரு யூ.கே.ஜி. பையன் சொல்லும்போது, பெற்றோர்கள் அதை நம்புவதே இல்லை. அவன் அவர்களுக்கு முன்னால் கர்மசிரத்தையுடன் படித்துக் காட்ட வேண்டும். தேர்வுக்குப் புறப்படுவதற்கு முன்னால், இரண்டு மூன்று முறை அதை மனப்பாடமாக ஒப்பிக்க வேண்டும். இதற்கெல்லாம் பிறகுதான் பெற்றோருக்கு நம்பிக்கை வரும். இங்கே பையனின் நம்பிக்கைக்கு இடம் கிடையாது. இந்த அணுகுமுறையால் குழந்தையின் சுய மதிப்பீட்டுத் திறன் குறைந்துவிடுகிறது.
மழலைப் பருவத்தில் குழந்தைக்குள் ஊடுருவும் பயம், அவன் வளர்ந்த பிறகு பல விஷயங்களைத் தவறான திசையில் தீர்மானிக்கிறது என்பது அறிவியல் பூர்வமான உண்மை. பெற்றோருக்கும் குழந்தைக்கும் இடையே குறைந்தபட்சம் 25 வருட வித்தியாசம் இருக்கிறது. பெற்றோர் தங்கள் காலத்துக்குப் பிறகு வாழ்வின் நெருக்கடிகளைத் தைரியமாக எதிர்கொள்ளும்படி தயார்படுத்துவதுதான் பாசிட்டிவ் வளர்ப்பு முறை."
இருட்டைக் காட்டி பயமுறுத்தக் கூடாது. இருட்டான அறையை வெளிச்சமாக்கக் கற்றுக் கொடுப்போம்.
மரணம் குழந்தைகளுக்குப் பெரும் புதிர். மரண ஊர்வலம் அவர்களுக்குப் பீதியைக் கிளப்பும் சம்பவம். இவற்றை முடிந்தவரை அறிவியல் பூர்வமாகப் பேசிப் புரிய வையுங்கள்.
இயற்கையைக் குழந்தைகள் ரசிப்பதில் பயம் ஒரு தடையாக இருக்க வேண்டாமே.
நெகட்டிவ் அறிவுரை தவறான அணுகுமுறை.
குழந்தைகளை நல்லவர்களாக வளர்ப்பது என்பது ஒரு கலை. அவர்களை அவர்களுக்கு தெரியாமலேயே கவனித்து, அவர்களுக்கு பிடிக்கும் வண்ணம், புரியும் வண்ணம் சொல்லிக் கொடுத்தால் மட்டுமே காது கொடுத்து கேட்பார்கள், அதை மனதில் வைத்து நடந்து கொள்வார்கள்!
எந்த குழந்தையும் ஒரு வயதிலிருந்து 12 வயது வரைதான், பெற்றோர் மற்றும் பெரியவர்கள் சொல்வதை கேட்டு நடப்பார்கள். 12 வயதுக்கு மேல் "டீன் ஏஜ் பருவம்" தொடங்கி விடுவதால் எதையும் கேட்காமல், அவர்களுக்குள்ளேயே கேள்வியும், பதிலுமாய் திரிவார்கள்.
அப்போது நீங்கள் அறிவுரை சொல்வதை குறைத்துக் கொள்ளவேண்டும். இந்த காலக்கட்டத்தில் யார் எதைச் சொன்னாலும் அதற்கு எதிராக நடந்து கொள்ள மனம் துடிக்கும். இந்த சமயத்தில் நீங்கள் உங்கள் பிள்ளைக்கு நல்ல நண்பனாக இருந்தால் போதும். அப்போது அவர்களை அதட்டுவதோ, மிரட்டுவதோ அவர்களை முரடர்களாக்கி விடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
19 வயதுக்கு பின்னர் கொஞ்சம், கொஞ்சமாக உங்கள் வழிக்கு மாற ஆரம்பிப்பார்கள். 19 வயதுக்கு மேல் அவர்களை எளிதாக வளைக்க முடியும்.
இந்த சமயத்தில் நீங்கள் கற்றுக் கொடுக்க நினைக்கும் விஷயங்களை மெதுவாக கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக் கொடுக்கலாம். என்ன கற்றுக் கொடுக்கப் போகிறீர்கள் என்பதை வெளிப்படையாக சொல்ல வேண்டாம்.
பிள்ளைகளின் விருப்பமான படிப்பை படிக்க அனுமதித்தால் கண்டிப்பாக பெற்றோர் சொல்வதை கேட்பார்கள். "என் அனுபவத்தில் இதுதான் உன் எதிர்காலத்துக்கு உகந்த படிப்பாக இருக்கும்" என்று நீங்களாக உங்களுக்கு பிடித்த கல்வியை உங்கள் பிள்ளைகள் மேல் திணிக்கக்கூடாது.
உங்களுடைய வாரிசுகள் செய்ய விரும்பும் தொழிலில் உங்களுக்கு விருப்பம் இல்லை என்பதாலோ, அல்லது அதுபற்றி உங்களுக்கு எதுவும் தெரியாது என்பதாலோ அவர்களின் முடிவு தவறு என்று ஒதுக்கி விட முடியாது. மேலும், பிடிக்காத விஷயத்தை செய்யச் சொல்லி அவர்களை கட்டாயப்படுத்தினால் பாதகமான விளைவுகளே ஏற்படும்.
ஒருவேளை உங்களுக்கு சொந்தமாய் நிறுவனம் இருந்து அதில் உங்கள் வாரிசை அமரவைக்க விருப்பப்பட்டால் எடுத்த உடனேயே தலைமை பதவியைத் தர வேண்டாம். ஒரு தலைவனாக இருப்பதற்கு முன்பாக, ஓர் ஊழியனாக இருப்பதே சிறந்த அனுபவத்தை தரும். "ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது" என்ற கதையாக... வெறும் படிப்பு மட்டுமே முழு அனுபவத்தை தராது.
பயிற்சி என்று வரும்போது அதை உங்கள் நிறுவனத்தில் கொடுக்க வேண்டாம். அப்படியே வேறு வழியின்றி உங்களுடைய நிறுவனத்திலேயே பயிற்சி கொடுத்தால், "நம்ம நிறுவனம்தானே... இஷ்டப்படி எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்... கேள்வி கேட்க ஆளில்லை" என்ற நினைப்பு வரும்.
மேலும் மற்றவர்களும், "நாளைய முதலாளி" என்ற நினைப்பில் தவறை தட்டிக் கேட்கத் தயங்குவார்கள். இதனால் உங்களுடைய வாரிசுக்கு முழுமையான பயிற்சி கிடைக்காது. இந்த பிரச்சினைகளைத் தவிர்க்க, வேறு நிறுவனத்தில் பயிற்சி என்பதே சிறந்த வழி.
அப்படி வேறு நிறுவனத்தில் பயிற்சி கொடுக்க விரும்பாதபட்சத்தில், உங்கள் நிறுவனத்தில் பயிற்சி கொடுக்கும்போது, நீங்களே நேரடியாக பயிற்சி கொடுக்க வேண்டாம். வேறு ஒரு அதிகாரியின் கீழ் வேலை பார்க்கச் சொல்லி பயிற்சி கொடுங்கள்.
அந்த அதிகாரியிடம், "முதலாளியின் மகன் என்று எந்த சலுகையும் காட்ட வேண்டாம்" என்பதையும், "சாதாரணமாக ஒரு ஊழியரை எப்படி நடத்துவீர்களோ... அப்படி நடத்தினால் போதும்" என்பதையும் கண்டிப்பாக சொல்லிவிடுங்கள். இப்படி நடத்துவதைக் கண்டு, உங்கள் வாரிசுகள் அப்போது மனம் நொந்து போனாலும், பின்னாளில் இதை மிகவும் பெருமையாக நினைப்பார்கள்!
இப்படித்தான் நீங்களும் இருந்தீர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு அவர்களை எப்படி... எப்போது சொன்னால் கேட்பார்கள் என்பதையும் அறிந்து, உங்களுடைய எண்ணங்களை, விருப்பங்களை அவர்களுக்கு புரிய வைத்தால், கண்டிப்பாக அவர்கள் உங்களைப் போல் பெரிய ஆளாக வருவார்கள்.
குழந்தை வளர்ப்பு:குழந்தைகள் முன்னிலையில் பெற்றோர்கள் தவிர்க்க வேண்டியது...
குழந்தைகளை நல்ல விதமாய் வளர்ப்பது பெற்றோர் கையில் தான் உள்ளது. குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாத, சொல்லக்கூடாத சிலவற்றைத் தவிர்த்தால், அவர்கள் நல்ல பிள்ளைகளாக வளர்வது நிச்சயம். குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாதது என்னென்ன?
கணவன்-மனைவி சண்டை சச்சரவு குழந்தைகளுக்குத் தெரியக்கூடாது. அவர்கள் முன்னிலையில், சண்டையிட்டுக் கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
குழந்தைகள் முன்னிலையில், பிறரை பற்றி தேவையில்லாமல் விமர்சிக்காதீர்கள். உதாரணமாக, "உங்கள் பிரண்ட் மகா கஞ்சனாக இருக்கிறாரே" என்று நீங்கள் உங்கள் கணவனிடம் கேட்டதை நினைவில் வைத்துக் கொண்ட குழந்தை, அவர் வரும்போது, "அம்மா கஞ்சன் மாமா வந்து இருக்கிறார்" என்று சொல்ல நேரிடலாம்.
தீய சொற்களை பேசுவதை தவிருங்கள். அதிலும் குழந்தைகள் முன்னிலையில் பேசுவதை அறவே தவிருங்கள். நீங்கள் பேசுவதை கவனித்து தான் உங்கள் குழந்தை பேசுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
சிறு குழந்தைகளை மிரட்டும் போது, கொன்னுடுவேன், தலையை திருகிடுவேன், கையை உடைப்பேன் போன்ற வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள்.
சில தாய்மார்கள் சில விஷயங்களை தங்கள் கணவரிடம் இருந்து மறைக்க விரும்புவர். எனவே, குழந்தைகளிடம், "அப்பாகிட்டே சொல்லிடாதே" என்று கூறுவர். அப்படி நீங்கள் சொன்னால், உங்கள் குழந்தை தன்னை பெரிய ஆளாக நினைத்துக் கொண்டு, உங்கள் கணவர் முன்னிலையிலேயே "அப்பாகிட்ட சொல்லிடுவேன்" என்று மிரட்டும்.
குழந்தைகளிடம் அவர்கள் டீச்சரைப் பற்றி கமென்ட் அடிக்கக் கூடாது. "உங்க டீச்சருக்கு வேற வேலை இல்லை; உங்க டீச்சருக்கே ஒண்ணும் தெரியலே" போன்ற வார்த்தைகளை அவர்களிடம் கூறக் கூடாது. அப்படி கூறினால், குழந்தைகள் அவர்கள் ஆசிரியர் மீது வைத்திருக்கும மதிப்பு குறைந்து, அவர்கள் படிப்பை பாதிக்க வழிவகுக்கும்.
குழந்தைக்கு எதற்கெடுத்தாலும் காசு கொடுத்துப் பழக்கக் கூடாது. அதிலும் கமிஷன் கொடுத்து பழக்கப்படுத்துவது கூடவே கூடாது. " கடைக்கும் போய் ஷாம்பூ வாங்கிட்டு வந்தால், உனக்கு சாக்லேட் வாங்க காசு தருவேன்" என்பது போல பேசுவதை தவிருங்கள். இல்லாவிட்டால், நாளடைவில் ஒவ்வொன்றிற்கும் காசை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவர்.
குழந்தைகள் முன்னிலையில் தரமான படங்களையே பார்க்க வேண்டும். நீங்கள் வாங்கும் புத்தகங்களும் தரமாக இருக்கிறதா என்று பார்த்து வாங்கவும்.
உங்கள் குழந்தையுடன் அடுத்த வீட்டுக் குழந்தையை ஒப்பிட்டுப் பேசாதீர்கள். அப்படி பேசினால், குழந்தையின் மனதில் தாழ்வு மனப்பான்மை வளரும்.
படிப்பு விஷயத்தில் குழந்தைகளை கண்டிக்கும்போது, "பாசிடிவ் அப்ரோச்" இருக்க வேண்டும். "நீ நன்றாக படித்தால் டாக்டராவாய்; நன்றாக விளையாடு பெரிய ஸ்போர்ட்ஸ்மேன் ஆகலாம்" என்று கூறி, ஊக்கப்படுத்த வேண்டும். "நீ படிக்கிற படிப்புக்கு பியூன் வேலை கூட கிடைக்காது. இந்த மார்க் வாங்கினா மாடு தான் மேய்க்கலாம்" என்றெல்லாம் பேசி, பிஞ்சு மனதை வேதனை அடைய செய்யக்கூடாது.
குழந்தை முன்னிலையில் உங்கள் கணவர், வீட்டில் இருக்கும் பிற நபர்கள் சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது, புகையிலை போன்ற செயல்களை மேற்கொள்ள ஒரு போதும் அனுமதிக்காதீர்கள்.
எதற்கெடுத்தாலும் குழந்தையை அடிக்காதீர்கள். அன்பாக சொல்லி திருத்துங்கள். எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அது நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பிலே என்று, பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள். ஆக குழந்தை வளர்ப்பில் தாயின் பங்கீடுதான் அதிகமாக இருக்கிறது. அதனால் பெற்றோர்கள் குழந்தைகளை கனிவுடன் வழிநடத்திச் செல்லுங்கள்.
வீட்டிலிருந்து உங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளி எட்டிப் பிடிக்கும் தூரத்தில் இருந்தால், நடந்து செல்லுங்கள். அல்லது சைக்கிளில் செல்லுங்கள். தூரம் அதிகமிருந்து தவிர்க்க முடியாத காரணத்தால் ஆட்டோ, வேன் போன்றவற்றை நாடுவதற்கு முன் அதில் எத்தனை குழந்தைகளை அதிகப்பட்சம் ஏற்றுகிறார்கள் என்பதையெல்லாம் தீர விசாரியுங்கள்.
உங்கள் குழந்தைகள் அதில் சௌகரியமாக, பாதுகாப்பாக பயணம் செய்வதற்கு வழி இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொண்டபின், குழந்தைகளை வண்டியில் ஏற்றுங்கள். தொடக்கத்திலேயே இந்த விஷயங்களில் கவனம் செலுத்தி முடிவெடுப்பது, பல அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்கு உதவும்.
புதிய பள்ளி, புதிய வகுப்பு, புதிய மாணவர்கள், புதிய ஆசிரியர்கள் குறித்த லேசான தயக்கம், பயம் இரண்டாவது படிக்கும் மாணவனுக்கும் இருக்கும். பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கும் இருக்கும்.
இது இயல்பு. சில மாணவர்களுக்கு அவர்களுடைய பழைய வகுப்பு நண்பர்களை, ஆசிரியர்களைப் பிரிய மனம் வராது. இந்த மாற்றங்களை எல்லாம் அவர்களின் மனம் நோகாமல் எடுத்துரைக்க வேண்டும். அப்போதுதான் புதிய வகுப்புகளில் அவர்களால் பல சாதனைகளை நிகழ்த்த முடியும்.
எல்லா பள்ளிகளிலும் அனேகமாக விடுமுறை நாளிலேயே புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் தந்துவிடுவார்கள். அந்தப் புத்தகங்களுக்கு அட்டை போடும்போது உங்கள் குழந்தைகளிடம், "அடுத்த வருஷம் வரைக்கும் இந்த அட்டையை கிழிக்காமல், பக்கங்களை மடிக்காமல் வைத்திருக்கவேண்டும்... நாங்கள்லாம் அந்தக் காலத்திலே ஸ்கூலுக்குப் போகும்போது, அவ்வளவு ஒழுங்காக புத்தகங்களை டைம்-டேபிள் பிரகாரம் எடுத்துட்டுப் போய், கொஞ்சம் கூட கிழிக்காமல் எடுத்து வருவோம்.
இப்படி எந்தத் தொணதொணப்பும் இல்லாமல் அட்டையைப் போட்டுக் கொடுங்கள். நீங்கள் வெளியில் நோட்டுப் புத்தகங்கள் வாங்குவதாக இருந்தால், திரையுலக நட்சத்திரங்களின் படங்களை அட்டையில் போட்ட நோட்டுப் புத்தகங்களை வாங்கிக் கொடுக்காதீர்கள்.
இரண்டாம் வகுப்பு போகும் குழந்தையாக இருந்தாலும் சரி, பிளஸ் டூ படிக்க இருக்கும் வளர்ந்த குழந்தையாக இருந்தாலும் சரி, விடுமுறை நாளில் கொட்ட கொட்ட முழித்திருந்து எல்லா சேனல்களிலும் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை திகட்டத் திகட்ட பார்த்துவிட்டு, மறுநாள் காலையில் 8, 9 மணிக்கு எழுந்திருப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருப்பார்கள்.
விடுமுறை கழித்து பள்ளிகள் திறக்கும் நாளில், இந்த வழக்கத்தை திடீரென்று மாற்றிக் கொள்ளவும் முடியாது. அதனால், ஒரு வாரத்திற்கு முன்பாகவே இரவில் சீக்கிரம் தூங்கி, காலையில் சீக்கிரம் எழுந்து கொள்வதற்கு உங்களின் குழந்தைகளுக்கு பயிற்சி அளியுங்கள். இத்தனை நேரத்திற்கு மேல் குழந்தைகள் பார்க்கக்கூடாது என்று நினைக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை, நீங்களும் தியாகம் செய்வதற்குத் தயாராக இருக்கவேண்டும்.
வளர் இளம்பருவத்தில் இருக்கும் ஆண் பிள்ளைகளுக்கு மீசை முளைக்கும் பருவம். வீரதீரச் செயல்களுக்கும், இனக் கவர்ச்சிக்கும் ஆளாகும் பருவம். அவர்களின் நட்பு வட்டத்தை கவனியுங்கள்.... அவர்கள் கூடுமிடும்... அவர்களின் பேச்சு... அவர்களின் ரசனை போன்றவற்றை உற்றுக் கவனியுங்கள்.
படிப்பில் அவர்களின் முன்னேற்றம், விளையாட்டில் மற்ற கலை வடிவங்களில் அவர்களுக்கிருக்கும் ஆர்வம் போன்றவற்றுக்கான பாராட்டை உங்களிடம் அவர்கள் நிச்சயமாக எதிர்பார்க்கும் பருவம்.
- by.ujeyanthan.B.Ed(Hons)
லேபிள்கள்: யோ உஜேயந்தன்