புதன், 4 மே, 2011

இலங்கையின் கல்வி முறையில் காணப்படும் குறைபாடுகள்

அண்மைக் காலங்களில் இலங்கையின் கல்வி முறை பற்றி பல்வேறு தரப்பினரும் ஏராளமான குறைபாடுகளைச் சுட்டிக் காட்டுகின்றனர். கல்வித் தராதரங்களின் வீழ்ச்சி, மாணவர்களின் ஒழுக்க நிலைகளில் வீழ்ச்சி, முதலாம் வகுப்பில் மாணவர் அனுமதிப் பிரச்சினை, பரீட்சைகளை வலியுறுத்தும் கல்விமுறை, அதன் காரணமாக வளர்ச்சி பெற்றுள்ள தனியார் போதனை, பாடசாலைகள் மத்தியில் ஏற்றதாழ்வு, மூடப்பட்டு வரும் பாடசாலைகள், ஆங்கில மொழித் தராதரமின்மை எனப் பட்டியல் நீண்டு செல்லுகின்றது.
இந் நிலையில் கடந்த ஆறு தசாப்த காலத்தில் ஏற்பட்ட பல்வகைக் கல்வி வளர்ச்சி, சாதனைகள் என்பவை சற்று மறைக்கப்படும் நிலையும் உண்டு.
கலாநிதி கன்னங்கரா காலம் (1943 முதல்) தொடக்கம் இடம்பெற்று வந்த இலங்கையின் கல்வி வளர்ச்சியானது, நாட்டின் பின்தங்கிய வகுப்பினரின் கல்வி மேம்பாட்டை இலக்காகக் கொண்டமைந்தது. அவர்களுடைய மேம்பாட்டை நோக்கி நடைமுறைப்படுத்தப்பட்ட சீர்திருத்தங்கள், பிற்காலத்தில் இலங்கை வளர்முக நாடுகள் மத்தியில் சிறந்த கல்வி வளர்ச்சியைப் பெற்றுக் கொள்ளக் காரணமாக இருந்தது.
இலவசக் கல்வி, படிப்படியாகத் தாய்மொழி போதனாமொழி ஆக்கப்பட்டமை, இலவச சீருடை, இலவச பாடநூல் விநியோகம், ஐந்தாம் வகுப்புப் புலமைப் பரிசில்கள், கிராமங்கள் தோறும் பாடசாலைகளின் விரிவாக்கம், கன்னங்கரா காலத்து மத்திய பாடசாலைகள் என்று பின்தங்கிய வகுப்பினரை இலக்காகக் கொண்ட கல்விச் சீர்திருத்தங்கள் நீண்டு செல்லுகின்றன.
இதனால், பின்தங்கிய வகுப்பினரை விட மத்திய வகுப்பினரும் பயனடைந்தனர் என்ற கருத்தும் உண்டு.
இவ்வாறான கல்விச் சீர்திருத்தங்கள் காரணமாக, வளர்முக நாடாகிய இலங்கையில் ஏற்பட்ட கல்வி வளர்ச்சி உலகளாவிய அபிவிருத்தி அறிஞர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. நோபல் பரிசு பெற்ற பொருளியல் பேராசிரியர் அமாருத்திய சென் முதல் உலக வங்கியின் கல்வியியல் ஆய்வாளர்கள் வரை, கல்வித்துறையில் இலங்கையின் சாதனைகளை வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.
அஞ்சலா விட்டில் என்ற பிரித்தானியக் கல்வியாளரின் கருத்தின்படி இலங்கையின் பொருளாதார வளர்ச்சி சற்று நிதானமானதாகவே இருந்தாலும் அதன் கல்வி முறையின் உயர் தராதரங்கள், சர்வதேச ரீதியாகப் பாராட்டுக்குரியன.
“இலங்கையின் கல்வி முறை வெற்றிகரமான ஒரு வரலாறைக் கொண்டது; கல்விக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் உள்ள தொடர்பானது, வழமைக்கு மாறாக விசேடமானது‘ என்பது உலக வங்கி ஆய்வாளர்களின் கருத்து. இலங்கையின் குறைந்த பொருளாதார வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது, உயர்ந்த எழுத்தறிவு வீதம் (2006 இல் 93%), ஆரம்பப்பள்ளி மாணவர் சேர்வு வீதம் (2002 இல் 96%) என்பன மிகவும் உயர்ந்தவையாகும் என என்ற ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த அளவுக்குக் கல்வித்துறையில் இலங்கையின் சாதனைகளை சிலாகித்துக் கூற முடியும். இப்பின்புலத்தில், இலங்கை அர சாங்கத்தில் கல்வி விரிவுக்கான, யாவருக்கும் கல்வியை வழங்கும் கொள்கைகளும் முயற்சிகளும் பல பின்தங்கிய பிரிவினரை முழு அளவில் எட்டவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிள்ளைகளின் கல்வி பெறும் உரிமையை வலியுறுத்தும் ஆவணங்களும் ஆய்வுகளும் கல்வி வாய்ப்புகளை உரிய முறையில் பெறாத, பல பின்தங்கிய பிரிவினரின் நிலைமைகளைச் சுட்டிக் காட்டுகின்றன. இலங்கையின் கல்வி முறை ஏற்கனவே கூறியது போல, பல சாதனைகளையும் படைத்திருந்த போதிலும், இலங்கையின் கல்விக் கொள்கை வகுப்பாளர்கள் தற்போதும் பின்தங்கிய வகுப்பினரின் கல்வி மேம்பாட்டில் அக்கறை செலுத்தி வருவது ஒரு முக்கிய விடயமாகும்.
புதிய ஆலோசனைகள்
கலாநிதி ப.குணவர்தனா சமர்ப்பித்துள்ள கல்விச் சட்டத்துக்கான ஆலோசனைகளில் (2009) பின்தங்கியோரின் கல்வி மேம்பாட்டுக்கான பல முன்மொழிவுகள் காணப்படுகின்றன. கல்வி மேம்பாடு நோக்கிக் கவனிக்கப்பட வேண்டிய பல்வேறு தரப்பினர் இன்னும் இருக்கின்றார்கள் என்பதை இம்முன்மொழிவுகள் காட்டுகின்றன.
அத்துடன் பின்தங்கியோருக்கென அறிமுகம் செய்யப்பட்ட இலவசக் கல்வி போன்ற நலனளித்தல் திட்டங்களால் சில பின்தங்கிய பிரிவினர் நன்மைகளைப் பெறவில்லை; அதன் காரணமாக அவர்களுடைய கல்வி மேம்பாடு பற்றி விசேடமாகக் கவனிக்கப் புதிய கொள்கை தேவைப்படுகின்றன என்பதையும் புதிய கொள்கை ஆக்க முயற்சிகள் காட்டுகின்றன.
இன்னொரு நோக்கில் சர்வதேச மற்றும் உள்நாட்டுச் சட்டங்களும் சக பிள்ளைகளுக்கும் கட்டாய, இலவசக் கல்வியையும் வலியுறுத்துகின்றன. பிள்ளைகளின் கல்வி உரிமையை வலியுறுத்தும் இலங்கை ஆவணங்களாவன;பிள்ளைகளுக்கான தேசிய நடவடிக்கைத் திட்டம் (1991)பிள்ளைகள் பட்டயம் (1992)கட்டாயக் கல்வி விதிகள் (1997)
இவை பிள்ளைகளின் கல்வி உரிமையை மிகவும் ஆணித்தரமாக சட்டபூர்வமாக வலியுறுத்தும் ஆவணங்களாகும். இலங்கை அரசியல் யாப்பும் பிள்ளைகளின் முழுமையான உடல், உள, சமூக, ஒழுக்க, சமய விருத்தியை உறுதிப்படுத்தும் ஏற்பாடுகளைக் கொண்டது. எனவே, பிள்ளைகளின் நலன்களைக் கருதி அவர்களுடைய கல்வி பெறும் உரிமைக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
இன்று அரசாங்கத்துக்குரிய ஒரு பிரதான சவால் யாவருக்கும் அவர்களுடைய கல்வி உரிமையைக் கிடைக்கச் செய்வதாகும். இவ்வுரிமை தொடர்பான தனது சர்வதேசக் கடப்பாடுகளை நிறைவு செய்யும் வகையில், அரசாங்கம் கட்டாயக் கல்வி தொடர்பான கொள்கைகளையும், விதிகளையும் நடைமுறைப்படுத்துதல் வேண்டும். பிள்ளைகளின் எதிர்காலத் தேவைகளைக் கருத்திற் கொண்டு பொருத்தமான கல்வியை, சமத்துவமான முறையில், பிள்ளை நேயப் பாடசாலைகளினூடாக வழங்கச் சகல ஏற்பாடுகளையும் அரசாங்கம் செய்தல் வேண்டும்.
பின்தங்கிய வகுப்பினருக்கான பாடசாலைகளும் அவை அமைந்துள்ள பிரதேசங்களும் வசதிகள் குறைந்தவை. இத்தகைய பாடசாலைகளை ஆசிரியர்கள் அதிகம் விரும்புவதில்லை. அங்கு நியமிக்கப்படும் ஆசிரியர்கள் வழமையாக ஏதேனும் செல்வாக்கைப் பயன்படுத்தி வசதியான நகர்ப்புறப் பாடசாலைகளுக்குச் சென்று விடுவர். இதனால், நகர்ப்புறங்களில் தேவைக்கு அதிகமான ஆசிரியர்கள் காணப்படுவர்; பின்தங்கிய பகுதிகளில் எப்போதும் ஆசிரியர் பற்றாக்குறை இருக்கும்.
இந்நிலையில், புதிய ஆலோசனைகளின்படி, பின்தங்கிய பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் சென்றடையும் வகையில், தேவையான ஊக்குவிப்புகளும் சேவை நிபந்தனைகளும் உருவாக்கப்படல் வேண்டும்; அதற்கேற்ற சேவை நிபந்தனைகளும் இடமாற்றத் திட்டமும் வகுக்கப்படல் வேண்டும்; அத்துடன், இத்தகைய பாடசாலைகளில் சேவையாற்றச் சாதகமான உளப்பாங்குகள் ஆசிரியர்களிடத்து வளர்க்கப்படல் வேண்டும்.
வலது குறைந்த மாற்றுத் திறன் உள்ள பிள்ளைகள், பாடசாலை செல்லும் வயதெல்லையில் உள்ள பிள்ளைகளில் 10 சதவீதமானவர்கள் என உலக சுகாதார ஸ்தாபனம் மதிப்பீடு செய்துள்ளது; இலங்கையில் உடல் உள ரீதியாகப் பாதிக்கப்பட்ட பிள்ளைகள் 4,00000 பேர் என்பது ஒரு மதிப்பீடு. 2007 ஆம் ஆண்டில் இவர்களில் (514 வயதெல்லை) 22,500 பேர் பாடசாலைகளில் பயின்றதாகவும் 19,000 பேர் பாடசாலை செல்லாதவர்கள் என்றும் கல்வி அமைச்சின் புள்ளி விபரங்கள் தெரிவித்தன.
இவ்வாறான புள்ளி விபரங்கள் நம்பகத்தன்மையற்றவை என்பதால், இப்பிள்ளைகள் பற்றிய முறையான தகவல் தளமொன்று தயாரிக்கப்படல் வேண்டும் என ஆலோசனை கூறப்பட்டுள்ளது. இப்பிள்ளைகளுக்கான விசேட கல்வி தொடர்பான சாதனங்களை உருவாக்குதல், அதற்கான ஆசிரியர்களைத் தொழில் ரீதியாக விருத்தி செய்தல், இவர்களுக்கான கல்வி நிகழ்ச்சித் திட்டங்களைக் கண்காணிக்கும் வகையில் அதிபர்களையும் அதிகாரிகளையும் திசைமுகப்படுத்தல் இப்பிள்ளைகளின் கல்வி தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள பிரதான ஆலோசனைகளாகும்.

லேபிள்கள்:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு