புதன், 4 மே, 2011

பாரதியார் குழந்தை கல்விக் பற்றிய கருத்துக்கள்

தமிழகத்திற் செயற்பட்டுக்கொண்டிருந்த ஆங்கிலக்கல்வி முறையும் புதுச்சேரியில் இயங்கிக்கொண்டிருந்த பிரெஞ்சுக் கல்வி முறையும், சிறார் தொடர்பான அணுகு முறைகளில் புதிய புலக் காட்சிகளை ஏற்படுத்தின. சிறார் அனைவருக்கும் கல்வி, பெண் சிறார்களுக்கும் கல்வி, சிறார்க்குரிய கற்பித்தல் உள்ளடக்கம், கற்பித் தல் முறைகள், இலக்கிய ஆக்கம் முதலாம் துறைகளில் மேலெழுந்த அபிவிருத்திகளை பாரதியார், பாரதிதாசன், தேசிகவிநாயகம் முதலானவர்களின் ஆக்கங்களிலே காணமுடியும்.
பாரதியார் வாழ்ந்த காலத்தில் இந்தியக் கல்வி முறையிலே நன்கு இனங்காணக் கூடியதான இருமைத் தன்மைகள் காணப்பட்டன. ஒருபுறம் வளமான கட்டுமானங்களுடன் கூடிய ஆங்கிலக்கல்வி ஒழுங்கமைப்பு, மறுபுறம் நலிவுக்கு உள்ளாக்கப்பட்ட சுதேசக் கல்வி முறை. இந்த முரண்பாடுகளை விளங்கியும் உணர்ந்தும் பாரதியாரின் சிந்தனைகள், சிறப்பாக சிறார் கல்விச் சிந்தனைகள் முகிழ்த்தெழுந்தன.
இந்தியாவெங்கிலும் பொதுமக்களின் கல்வி பங்கு பற்றல் விசை யடைந்துவரும் காலகட்டத்தில் தமிழகத்து மக்களின் கல்விப் பங்கு பற்றல் பின்னடைந்த நிலையில் இருப்பதை ‘விதி’ என்ற தமது கட்டுரையில் தெளிவாகச் சுட்டிக்காட்டினார். கல்வி பரவலும், பங்கு பற்றலும், சிறார் கல்வியிலிருந்தே கால்கோள் கொள்ளல் வேண்டு மென்று அவர் கருதினார். தாய் மொழியை ஊடகமாகக் கொண்ட கல்வியே பயன்மிக்க கல்வியாகவும், வினைத்திறன் கொண்ட கல்வி யாகவும். சிறார்களிடத்தே கூடிய விளக்கத்தை ஏற்படுத்தும் கல்வி யாகவும் அமையுமென்பது அவரது துணிபு. அத்துடன் சிறார்க்கான கல்வி, கட்டணம் எதுவுமின்றி இலவசமாகத் தரப்படல் வேண்டு மென்ற கருத்தையும் அவர் முன்வைத்தார்.
ஆங்கிலக்கல்வி முறைமை,கற்பவர் அனைவரையும் அந்நிய மயப்படுத்திக் கொண்டிருந்த அவலங்களையும் அறிந்திருந்தார். “ஆங்கிலம் ஒன்றையே கற்றார், அதற்கு ஆக்கையோடு ஆவியும் விற்றார், தாங்களும் அந்நியர் ஆனார்” என்று துணிந்து எழுதினார்.
பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் ஏழ்மைக்கும் கல்விக்குமிடை யேயிருந்து இடைவெளியைத் தமது பட்டறிவு வாயிலாக அறிந்து கொண்ட பாரதியார் பின்வருமாறு குறிப்பிட்டார்:

“அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
அன்னயாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்”.
சிறார்கள் வீரமும் உறுதியும் கொண்டவர்களாக மலர்ச்சி கொள் ளல் வேண்டும் என்பது பாரதியாரின் குழந்தைக் கல்விச் சிந்தனை களுள் மேலோங்கிய வீச்சாக அமைந்தது. பின்வரும் அடிகளில் அந்த விசைகளைக் காணலாம்.
“ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா
உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா”.
"அச்சம் தவிர்
ஆண்மை தவறேல்".
“பாதகம் செய்பவரைக் கண்டால்- நீ
பயங்கொள்ளலாகாது பாப்பா
மோதி மிதித்துவிடு பாப்பா
முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா""
சிறுவர்களது ஆளுமையைத் துலங்கவிடாது தடுத்தும், அவர் களால் எதுவும் செய்யமுடியாது என்று பலவீனப்படுத்தியும் அவர் களின் புத்தாக்கத் திறன்களை முறியடித்தும் வந்த கல்விச் சூழலுக்கு எதிரான கிளார்ச்சியாக பாரதியாரின் கல்விக் கருத்துக்கள் எழுந்தன. பிரெஞ்சுப் புரட்சி, சோவியத் புரட்சி முதலியவை பற்றிய இலக்கியங் களை அறிந்தமையால் சிறார் கல்வி தொடர்பான மரபுநிலைக்கு மாறுபட்ட கருத்துக்கள் பாரதியாரிடத்து அரும்பிநின்றன.
குழந்தைகளைத் தெய்வ வடிவினராகக் காணுதல் பாரதியாரது கவிதைகளிலே பரவலாகக் காணப்படும் ஒரு பண்பாகும். பராசக் தியை அவர் குழந்தையாகப் பாவனைசெய்து, தெய்வம் - குழந்தை அன்பு செல்வம் முதலாம் பரிமாணங்களை ஒன்றிணைத்துப் பாடி னார்.

“அன்பு தருவதிலே-உனைநேர்
ஆகுமோர் தெய்வமுண்டோ?
மார்பில் அணிவதற்கே- உன்னைப்போல்
வைர மணிகள் உண்டோ?
சீர்பெற்று வாழ்வதற்கே-உன்னைப்போல்
செல்வம் பிறிது முண்டா?”
என்ற பாடல் மேற்கூறிய கருத்தை மீள வலியுறுத்தி நிற்கின்றது.
பாரதியாரது குழந்தைக் கல்விச் சிந்தனைகள் பாப்பாப் பாட்டில் உரத்து வெளிப்படுகின்றன.
குழந்தைகளுக்கான கலைத்திட்டத்தில் கற்றல் அழகியற் செயற்பாடுகள்-விளையாட்டு-ஆகியவை ஒன்றிணைந்திருத்தலின் சிறப்பை அவர் பின்வருமாறு விளக்கினார்:
“காலை எழுந்தவுடன் படிப்பு
பின்னர் கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுவதும் விளையாட்டு”.
பாரதியாருடைய குழந்தைக் கல்விச் சிந்தனைகளுள் முகிழ்த் தெழும் பிறிதொரு விசையாகக் காணப்படுவது, அனைத்து உயிர் களிடத்தும் அன்பு காட்டும் நெறியாகும். பாலைப் பொழியும் பசு, வாலைக் குழைக்கும் நாய், வண்டியிழுக்கும் குதிரை, வயலில் உழும் மாடு, அண்டிப்பிழைக்கும் ஆடு என்றவாறு அனைத்துப் பிராணி களிடத்தும் அன்பு காட்டல் என்பது கல்விச் செயல்முறையின் வாயிலாக மலர்விக்கப்படல் வேண்டு மென்பதை அவர் வலியுறுத்து கின்றார்.
அறக்கல்வி, ஒழுக்கக்கல்வி முதலியனவும் பாரதியாரது சிறார் கல்விச் சிந்தனைகளிலே பரக்கக் காணப்படுகின்றன. 'பொய் சொல் லக் கூடாது" என்பது பொதுவாக எல்லா அறங்களிலும் வலியுறுத்தப் பட்டு வந்தாலும், பாரதியார் அதனையும் வலியுறுத்தி அதற்கு மேலாகவும் சென்று ''புறம் சொல்லலாகாது"" என்ற கருத்தைச் சிறார் க்கு வழங்கியுள்ளார்.
பாரதி வாழ்ந்த காலத்து அரசியற் சூழல் கல்வி வாயிலான நாட்டுப் பற்றை வளர்ப்பதற்குத் தூண்டுதலளித்து. குழந்தைகளிடத்து மொழிப் பற்றையும், நாட்டுப்பற்றையும் நேரடியாக உணர்த்திக் கற்பித்தல் வேண்டு மென்று அவர் விரும்பினார்.
“தமிழ்த்திரு நாடுதனைப்பெற்ற - எங்கள்
தாயென்று கும்பிட்டி பாப்பா
அமிழ்தில் இனியதடி பாப்பா - நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா”.
நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் வளர்த்தல் தொடர் பான இரண்டு விதமான கருத்துக்கள் கல்வியியலாளரிடையே காணப்படுகின்றன. ஓருசாரார் நாட்டுப்பற்றையும் மொழிப்பற்றை யும் நேரடியாகக் கற்பிக்காது, அறிவுத்துறைகளோடும் அழகியற் பாடங்களோடும் ஒன்றிணைத்துக் கற்பித்தல் வேண்டுமென்று கருதுகின்றனர். இன்னொருசாரார் அவற்றை நேரடியாகவே கற்பிக்க வேண்டுமென்று கருதுகின்றனர். இந்த நேரடி முறைமையே பாரதி யாரால் தெரிந்தெடுக்கப்பட்டுள்ளது. நாட்டுப் பற்றைப் போலவே சாதி வேறுபாடுகளுக்கு எதிரான மனோபாவங்களை வளர்க்கும் கற்பித்தலையும் நேரடியான முறையில் அவர் முன்வைக்கிறார்.
“சாதிகள் இல்லையடி பாப்பா-குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்
நீதி உயர்ந்த மதி கல்வி-அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்”
என்ற பாடல் மேற்கூறிய கருத்தைத் துல்வியமாக விளக்கிநிற்கின்றது.
சிறார் கல்வியோடு வளர்ந்தோர் கல்வி தொடர்புபட்டு நிற்ற லும் கல்வி விரிவாக்கம் அனைத்து மக்களையும் தழுவிய வெகுஜனப் படுத்தலாக (ஆயளளகைiஉயவழைn) இருத்தல் வேண்டும் என்பதும் பாரதியின் வேட்கைகளாக அமைந்தன.
“வீடுதோறும் கலையின் விளக்கம்
வீதிதோறும் இரண்டொரு பள்ளி
நாடு முற்றிலும் உள்ளன ஊர்கள்
நகர்கள் எங்கும் பலப்பல பள்ளி
தேடு கல்வியிலாத தோர் ஊரைத்
தீயினுக்கிரையாக மடுத்தல்……”
என்ற பாடல் மேற்கூறிய கருத்தை மீள வலியுறுத்தி நிற்கின்றது.
சிறார் கல்வியூடாக வளர்ந்தோர் கல்விக்கு அடித்தளமிடுதலு டன் மட்டும் பாரதியாரது வேட்கை நின்றுவிடவில்லை. கல்விவாயி லான சமூக அசைவியக்கம் (ளுழஉயைட ஆழடிவைவைல) பற்றி தொலை நோக்கும் அவரிடத்துக் காணப்பட்டது.
“வயிற்றுக்குச் சோறிட வேண்டும்
இங்குவாழு மனிதருக் கெல்லாம்
பயிற்றிப் பலகல்வி தந்து இந்தப்
பாரை உயர்த்திட வேண்டும்.”
கல்விவாயிலான சமூக அசைவியக்கம், மனிதவள மேம்பாடு, தேசிய செல்வத்தின் வளர்ச்சி முதலியவை பாரதியாரால் முன்மொழி யப்பட்டுள்ளன.

லேபிள்கள்:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு