புதன், 4 மே, 2011

முன்பள்ளி கல்வி சிந்தனையாளர் ஜி.ஸ்ரான்லி ஹோல்

ஜி.ஸ்ரான்லி ஹோல்

சார்ல்ஸ் டார்வினுடைய உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி பற்றிய ஆய்வுகள் குழந்தைக் கல்வி பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டோ ருக்குப் பெரும் உற்சாகத்தைத் தந்தன. ஐரோப்பாவில் வாழ்ந்த ஆய்வாளர்கள் குழந்தைகளின் இயற்கையான வளர்ச்சி பற்றிய ஆய்வுகளிலே சிறப்பார்ந்த கவனம் செலுத்தினர். அமெரிக்காவில் இந்த ஆய்வுகளின் செல்வாக்கு ஜி. ஸ்ரான்லி ஹோல் (1844-1924) அவர்களிடம் பிரதிபலித்தது. குழந்தைகள் பற்றிய கற்கையின் தந்தை என்று அவரை அமெரிக்கர்கள் குறிப்பிட லாயினர்.
மனிதரைப் பற்றி விளங்கிக்கொள்வதற்கு குழந்தை நிலையி லிருந்து அவர்களது விருத்திபற்றிய கற்கை இன்றியமையாதுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொருவரதும் விருத்தியானது எமது முன்னோர்கள் ஒவ்வொரு கட்டத்திலும் அனுபவித்தவற்றுக்கு ஏறத்தாழச் சமமானதாயிருக்கும் என்ற ஒரு கருத்தை அவர் முன்வைத் தார். இது தொடர்பாக அவர் குழந்தைகள் தொடர்பான ஆசிரியர் களின் கருத்துக்களைக் கேட்டறிந்தார். அவற்றிலிருந்து சிறார்களின் நடத்தைகள், மனப்பதிவுகள், உணர்வுகள், பிரச்சினைகள், நம்பிக்கை கள் தொடர்பான பெருந்தொகையான தகவல்களைத் திரட்டிக் கொண்டார்.
ஆரம்பத்தில் இவர் அகநோக்கல் என்ற ஆய்வுமுறையைப் பயன் படுத்தினார். அந்த ஆய்வுமுறையில் இருந்த மட்டுப்பாடுகளை அவர் பின்னர் அறிந்துகொண்டார், அதன் பயனாக அவர் திருத்தமானதும் ஒழுங்கமைக்கப்பட்டதுமான வினாக்கொத்துக்களைப் பயன்படுத்தி சிறார் தொடர்பான ஆய்வுகளை முன்னெடுத்தார். இந்த முறையின் பயனாக மிகக் குறைந்தளவு காலப்பகுதியில் பெருந்தொகுதியான தகவல்களையும், தரவுகளை அவரால் திரட்ட முடிந்தது.
வளர்ந்தோர்கள் சிறுவர்களாயிருந்த பொழுது பெற்ற அனுபவங் களையும் வினாக் கொத்துக்கள் வாயிலாக அவர் திரட்டிக் கொண் டார். அவை அனைத்தையும் தொகுத்து சிறாரின் ஆசைகள், பயம், தண்டனைகள், கனவுகள், விளையாட்டுப் பொருள் விருப்புக்கள், தம்மைப்பற்றிய புலக்காட்சி , பிரார்த்தனைகள், ஒத்திசைவுகள் பற்றிய புலக்காட்சி முதலியவற்றை அறிக்கைகளாக அவர் வெளியிட்டார்.
இயன்றவரை விஞ்ஞான பூர்வமாகவும், புறவயமாகவும், சிறார் தொடர்பான ஆய்வுத்தகவல்களைப் பெறவேண்டும் என்பதே அவரது விருப்பமாக இருந்தது. விஞ்ஞான பூர்வமற்றதும், குறை பாடுகள் கொண்டதுமான ஆய்வுக் கருவிகளை சிறார் உளவியலி லும், சிறார் பற்றிய ஆய்வுகளிலும் பயன்படுத்தலாகாது என்ற அணுகுமுறையை முன்னெடுத்தவர்கள் வரிசையில் இவர் முதன்மை யாகக் கருதப்படுகின்றார்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் இருபதாம் நூற் றாண்டின் முற்பகுதியிலும் சிறார் தொடர்பான ஆய்வுகளை விஞ் ஞான பூர்வமாக முன்னெடுப்பதில் இவர் மேற்கொண்ட பணிகள் பிற சிந்தனையாளர்கள் மீதும் செல்வாக்கினை ஏற்படுத்தின.
வினாக் கொத்துக்களில் இருந்து திரட்டப்பட்ட தகவல்களை யும், தரவுகளையும் பகுத்து ஆராய்வதற்கு இவர் எளிமையான புள்ளி விபர வியல் நுட்பங்களைப் பயன்படுத்தினார். இதுவும் இவரது அணுகு முறையின் தனித்துவமாகக் கருதப்படுகின்றது.
ஸ்ரான்லி ஹோல் மேற்கொண்ட சிறார் தொடர்பான ஆய்வுகள் டார்வினுடைய கூர்ப்புக் கோட்பாட்டினைச் சிறாருடன் தொடர்பு படுத்தி மீளாய்வு செய்வதற்கும் உறுதுணையாக அமைந்தன. விலங்கு களில் இருந்து மனிதனின் எவ்வாறு படிமலர்ச்சி கொண்டான் என்பதை விளக்கும் ஒரு தொடுகோடாக (டுiமெ) குழந்தைகள் அமை கின்றார்கள் என்பது தொடர்பான ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டன. குழந்தைகளின் அசைவுகளுக்கும் மீன்களின் நீச்சலுக்குமிடையே தொடர்புகள் காணப்படுகின்றன. குழந்தைகள் தாவுதலுக்கும் முலை யூட்டிகளின் அசைவுகளுக்குமிடையே ஒற்றுமைகள் தென்படுகின் றன. குழந்தைகள் ஓடுதலுக்கும் மனிதரின் அசைவுகளுக்குமிடையே உடலியக்கம் சார்ந்த தொடர்புகள் உள்ளன.
டார்வினுடைய ஆய்வு முன்னெடுப்புக்கள் அவருக்குப் பின்னர் பல பரிமாணங்களிலே வளர்ச்சியுற்றுச் சென்றன. டார்வினுடைய ஆய்வுகளையும் முன்மொழிவுகளையும் முன் உதாரணங்களாகக் கொண்டு குழந்தை உளவியல், குழந்தைகளின் விருத்தி, உடலியக்கச் செயற்பாடுகள், மனவெழுச்சிக் கோலங்கள், சூழலுக்கு அவர்கள் இசைவாக்கம் செய்யும் முறைமை, முதலாம் துறைகளில் புறவயமான ஆய்வுகளை முன்னெடுத்த முன்னோடிகளுள் ஒருவராக இவர் விளங்குகின்றார்.
சிறார்களுக்கான நுண்மதித் தேர்வுகளை வடிவமைப்பதிலும் இவரது ஆக்கப்பணிகள் விதந்து குறிப்பிடப்படுகின்றன. ஹேலின் மாணவர்கள் இப்பணியினை முன்னெடுத்துச் சென்றார்கள். லிவிஸ் மடிசன், ரேர்மன் என்ற இவரது மாணவர் நுண்மதித் தேர்வினை ஆக்கும் பணியிலே சிறப்பார்ந்த பங்களிப்பைச் செய்துள்ளார்.

லேபிள்கள்:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு