புதன், 27 ஏப்ரல், 2011

எழுத்தறிவு என்பது

எழுத்தறிவு என்றதும் எழுதுவது மட்டுமன்று. கேட்பதும், வாசிப்பதும் கூட எழுத்தறிவுக்குள் அடங்கும்.

சர்வதேச எழுத்தறிவு தினம் ஆண்டு தோறும் செப்டம்பர் 8ஆம் திகதியன்று உலகளாவிய ரீதியில் நினைவுகூரப்பட்டு வருகிறது.

அடிப்படை எழுத்தறிவை கற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியம் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், எழுத்தறிவைப் பெற்றுக்கொள்ள முடியாமற் போன வளர்ந்தோருக்கு முறைசாராக் கல்வித் திட்டத்தின் மூலம் எழுத்தறிவைப் போதிக்கும் நோக்கத்துடனும் ஆண்டுதோறும் எழுத்தறிவு தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

1965 ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் திகதி தெஹ்ரான் நகரில் உலகளாவிய கல்வி அமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது. இம் மகாநாட்டில் உலகளாவிய ரீதியில் எழுத்தறிவின்மையால் ஏற்படக் கூடிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுமுகமாக பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதன்போதே ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 8ஆம் திகதியை சர்வதேச எழுத்தறிவு தினமாக அனுசரிக்க வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது.

இதனடிப்படையில் 1965 நவம்பர் 17, திகதி யுனெஸ்கோ நிறுவனம் கூடியபோது செப்டம்பர் 8ஆம் திகதியை சர்வதேச எழுத்தறிவு தினமாகப் பிரகடனம் செய்தது. இத்தினம் 1966ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது.

தனி மனிதனுக்கு மட்டுமன்றி, பல்வேறு தரப்பினருக்கும் சமுதாயங்களுக்கும் எழுத்தறிவு எவ்வளவு முதன்மையானது என்பதை எடுத்துரைப்பதே இந்த நாளின் குறிக்கோள்.

எந்த மொழியிலும் இலகுவான வசனங்களைக் கூட எழுதவும் படிக்கவும் தெரியாத நிலையே எழுத்தறிவின்மை என ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் இதனை வரையறுக்கிறது.

பொதுவாக எழுத்தறிவு ஒரு மொழியை வாசிக்க, எழுத, பேச, கேட்டுப் புரிந்து கொள்ளக் கூடிய ஆற்றலைத் தருகின்றது.

இன்று எழுத்தறிவு பல வகைப்பட்ட தொடர்பாடல் முறைகளைப் பின்பற்றி நடைமுறைப்படுத்தப்படுகிறது. இவற்றில் கணித்தலும், கணினி பயன்பாடும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகில் சுமார் 776 மில்லியன் வயது வந்தோர் அடிப்படை எழுத்தறிவற்றவர்களாக இருக்கிறார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது வயது வந்தவர்களில் 5 பேரில் ஒருவருக்கு எழுதவோ படிக்கவோ தெரியாது. இவர்களில் மூன்றில் இரு பகுதியினர் பெண்கள்.

அத்துடன், சுமார் 103 மில்லியன் சிறுவர்கள் பாடசாலை சென்று கற்கமுடியாத அற்ற நிலையில் உள்ளார்கள்.

உலக மயமாக்கத்தில் விழிப்புடன் செயற்பட்டு வரும் இன்றைய காலகட்டத்தில் எழுத்தறிவின்மை என்பது வெட்கப்படக்கூடிய விளைவு தான் என்றால் கூட அது தவறல்ல.

அதி நவீன தொழில்நுட்பத் திறனும் கணினிப் பயன்பாடும் இன்றைய உலகை ஆக்கிரமித்திருக்கும் இன்றைய சூழலில் எந்தவொரு நாடும் தனது மக்கள் எழுத்தறிவில் பின்தள்ளப்பட்டுள்ளனர் என்று கூற வெட்கப்பட்டே ஆக வேண்டும்.

இவ்வாறாக எழுத்தறிவைப் பெற்றுக் கொள்ள முடியாமைக்கான காரணங்களாக உள்ள சமூக நிலைகள் பற்றியும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வறுமை, போஷாக்கின்மை, அரசியல் நெருக்கடிகள், கலாசார பாகுபாடு, அடிமைநிலை போன்ற பல்வேறு காரணங்களால் எழுத்தறிவின்மை உலக நாடுகளில் இன்றும் காணப்படுகின்றது என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

கல்வியறிவு அல்லது எழுத்தறிவின் முக்கியத்துவம் தான் என்ன?

தேசிய ரீதியிலும், சர்வதேசரீதியாக இது தொடர்பான செயற்திட்டங்கள் எவ்வாறு முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன? இவற்றைக் கொண்டு செல்வது யார் என்பன போன்ற வினாக்களுக்கு நாம் விடை காண வேண்டியதவசியம்.

வறுமையை ஒழித்தல், சிறுவர் இறப்பு வீதத்தைக் குறைத்தல், சனத்தொகை அதிகரிப்பை கட்டுப்படுத்தல், பால் சமத்துவத்தை கட்டியெழுப்பல், முறையான அபிவிருத்தியை உறுதி செய்தல் சமாதானம் மற்றும் ஜனநாயகம் போன்ற பல விடயங்களின் அபிவிருத்தியையும் எழுத்தறிவு அபிவிருத்தியுடன் இணைத்து நோக்க வேண்டியுள்ளது.

யுனெஸ்கோவின் 'அனைவருக்கும் கல்வி பற்றிய உலக அறிக்கை (2006)” அறிக்கையின்படி தெற்கு மற்றும் மேற்கு ஆசிய பகுதிகளிலேயே மிகக் குறைந்த வீதமானோர் (வயது வந்தோரில்) (58.6 %) படிப்பறிவில்லாமல் உள்ளனர்.

அதற்கடுத்த படியாக ஆபிரிக்கா (59.7 %), அரபு நாடுகள் (62.7 %) என்பவற்றைக் குறிப்பிடலாம்.

இலங்கையும் எழுத்தறிவு வீதமும்

எழுத்தறிவைப் பொறுத்தவரை தெற்காசியாவில் இலங்கை ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இலங்கையில் 5 முதல் 14 வயது வரை, கட்டாயக் கல்விக்கான வயதெல்லையாகப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை, கல்விசார் அபிவிருத்தித் திட்டங்களில் இணைந்து செயற்படுவதற்காக 1949 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் திகதி யுனெஸ்கோ அமைப்பில் இணைந்து கொண்டது.

இன்று இலங்கையின் எழுத்தறிவு வீதமானது நகர்ப்புறங்களிலேயே முன்னேற்றங் கண்டுள்ளது எனலாம்.

சுதந்திரம் கிடைத்து 62 வருடங்களுக்குப் பிறகும் கூட பெருந்தோட்டப்பகுதிகளில் அடிப்படை கல்வி வசதியை பெறத் தவறியவர்கள் ஏராளம் பேர் உள்ளனர்.

இலங்கை குடிசன மதிப்பீட்டு புள்ளி விபர திணைக்களத்தின் அறிக்கையின் படி இலங்கையின் நகர்ப்புறங்களில் எழுத்தறிவு 95 வீதமாகவும் கிராமப்புறங்களில் 93 வீதமாகவும் பெருந்தோட்டப் பகுதிகளில் 76 வீதமாகவும் உள்ளது.

இந்த வகையில், ஆண்கள் 94 சதவீத கல்வியறிவையும் பெண்கள் 91.1வீத கல்வியறிவையும் பெற்றுள்ளனர்.

யுனெஸ்கோவின் அபிவிருத்தித் திட்டங்களில் எழுத்தறிவித்தல் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கின்றது. ஒவ்வொரு நாடுகளிலும் இத்திட்டங்கள் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றமை இதன் முக்கிய அம்சம். அத்துடன் முதியோர்களுக்குக் கல்வி போதித்தல் பிரதான இடத்தை வகிப்பது வரவேற்கத்தக்கது

லேபிள்கள்:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு