புதன், 4 மே, 2011

முன்பள்ளி கல்வி சிந்தனையாளர்கள்

குழந்தைக் கல்விச் சிந்தனைகள்

ஜோன் கென்றி பெஸ்டலோசி
(1746 - 1826)

சிறுவர்களுக்கான உளவியல் மயப்பட்ட கல்விச் செயற்பாடுகளை முன்மொழிந்தவர்களுள் பெஸ்டலோசி தனிச்சிறப்புப் பெற்றவர். ஐரோப்பாவில் ஏற்பட்ட கைத்தொழில்களின் படிப்படியான வளர்ச்சியும் அதனால் நிகழ்ந்த ஏழ்மையும், கல்வி நிராகரிப்புகளும் இவரின் கல்விச் சிந்தனைகளிலே பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தின. ரூசோவின் இயற்பண்பு நெறி பெஸ்டலோசியின் மீது கருத்தியல் சார்ந்த நேர்நிலைகளையும் எதிர்நிலைகளையும் பிறப்பித்தது. ஐரோப்பிய சூழலில் அரும்பத் தொடங்கிய மக்களாட்சிச் சிந்தனைகள் அவருடைய கல்விச் சிந்தனைகளில் வலிதாக ஊடுருவி நின்றன.

இவர் தமது கல்விச் சிந்தனைகளை வெறுமனே எழுத்து வடிவில் மட்டும் கூறாது, அவற்றின் நடைமுறைப் பரிமாணங்களையும் விரிவாக ஆராய்ந்தார். ஸ்ரான்ஸ் ( Stanz), பேர்டோர்ப் ( Burgdorf), வேர்டன் (Yverdon) முதலாம் ஊர்களில் பரிசோதனைப் பள்ளிக் கூடங்களை நிறுவி தமது கோட்பாடுகளின் நடைமுறை நுட்பங்களையும் கண்டறிந்தார்.

பெஸ்டலோசி எழுதிய பின்வரும் நூல்கள் அவரது கல்வித் தரிசனத் தின் பரிமாணங்களைப் பலவகைகளில் விளக்குகின்றன.
1) ''எனது அனுபவங்கள்"
2) ''அன்னப் பறவையின் கீதம்"
3) ''ஒரு துறவியின் மாலைப்பொழுது"
4) ''லெனோர்ட்டும் யேர்ரூட்டும்"
5) ''கிறிஸ்தோப்பரும் எலியாவும்"
6) ''இயற்கையின் அருள்மலர்ச்சியில் மனித உளறலின் வளர்ச்சி பற்றிய பரீசிலனை"
7) ''யேர்ரூட் தமது குழந்தைகளுக்கு எவ்வாறு கற்பிக்கின்றார்"

பெஸ்டலோசியின் கல்விச் செயல்முறையில் குடும்பத்தின் முக்கியத்துவம் மீள வலியுறுத்தப்படுகின்றது. அவரின் வாழ்நிலை அனுபவங்களே இந்த நிலைக்கு அடித்தளமிட்டன. அவர் பிறந்த சுவிற்சலார்ந்து சூரிச் நகரின் வாழ்க்கையிலும் குழந்தை வளர்ப்பிலும், கல்வியிலும் குடும்பங்கள் உன்னதமான இடத்தை வகித்தன. பெஸ்டலோசி சின்னஞ் சிறுவனாயிருக்கும் பொழுதே தமது தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வந்தார். கல்வி கற்பிப்பவர்களுக்குத் தாயின் குணவியல்புகள் அவசியமானவை என்பதை அவர் கண்டறிந்தார்.

பல்கலைக்கழகக் கல்வியை முடித்துக் கொண்டதும் இவரது கல்விப் பணிகள் ஏழை விவசாயக் குழந்தைகளைத் தழுவியதாய் அமைக்கப்பட்டன. 1764-ம் ஆண்டில் அநாதைகளாய் விடப்பட்ட குழந்தைகளுக்கென ஒரு பள்ளிக்கூடத்தை நிறுவி செயல் அனுபவங் களை தழுவிய கல்வியை வழங்கினார்.
சிறுவர்க்கான கல்வியில் கைகளும், அறிவும், உணர்வும் என்ற முப்பொருள்களினதும் முக்கியத்துவத்தை விளக்கிய அவர் அவற்றுக்கு உரிய முறையிலே பயிற்சிகள் வழங்கப்படல் வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
செயல் அனுபவங்கள் இன்றிக் கற்றல், முயன்று தவறிக் கற்றல், இயற்கையை நம்பிய கற்றல் முதலியவற்றின் எதிர்மறைப்பண்புகளை அவர் விளக்கினார். இச்சந்தர்ப்பத்தில் ரூசோவின் இயற்பண்பு நெறி யோடு பெஸ்டலோசி முரண்படுகின்றார். கல்வியின் வாயிலாக குடும்பத்தை, கிராமத்தை, சமூகத்தை மறுமலர்ச்சி பெற வைக்க முடியும் என அவர் நம்பினார்.
கல்வியின் உள்ளடக்கம் பெஸ்டலோசியினால் இரு பெரும் பிரிவுகளாக வகுத்துக் கூறப்பட்டது.
1) பருப்பொருள் தொடர்பான கல்வி உள்ளடக்கம். இதில் பொருள் உற்ப்பத்தி, விவசாயம், வணிகம், அறிவியல், பயன் தரு கலைகள் முதலியவை பற்றிய கற்கைகள் இடம்பெறும்.
2) அறவொழுக்கம் தொடர்பான கல்வி உள்ளடக்கம். இப்பிரிவில் ஒழுக்கவியல், சமயம், குடியியல் உரிமைகள், பிரசைகளுக்குரிய கடமைகள் ஆகியவை பற்றிய கற்கைகள் உள்ளடங்கும்.
இவ்வாறாக அமையும் கல்வியை வழங்கும்பொழுது கல்வியின் நடைமுறை முக்கியத்துவத்தை அல்லது பிரயோக முக்கியத்துவத்தை அவர் ஆழ்ந்து வலியுறுத்தினார். இச் சிந்தனையின் தொடர்ச்சியும் வளர்ச்சியும் அவரது குழந்தைக் கல்விச் சிந்தனைகளில் ஆழ்ந்து வேரூன்றி நின்றன.
அதாவது, குழந்தைகளுக்கான கல்வியும் கோட்பாட்டளவில் நின்றுவிடாது நடைமுறை சார்ந்தாக இருத்தல் வேண்டும் என்பது அவரது துணிபு.
பெஸ்டலோசியின் சிறார்கல்விச் சிந்தனைகளைப் பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்:
1) குழந்தைக் கல்வியில் பேச்சுக்கு முக்கியத்துவம் வழங்குதல், பேச்சுக்குப் பின்னரே எழுத்துக் கற்பித்தல் ஏற்புடையது. அவர் வாழ்ந்த காலத்தில் குழந்தைக்கல்வி, எழுதுதல் முக்கியத்துவத்தோடு ஆரம்பித்தமையை அவர் நிராகரித்தார்.
2) கற்பிக்கப்படும் பாடம் பொருள் குழந்தைகளின் உடல், உள்ள, மனவெழுச்சிக்குப் பொருந்தக் கூடியதாக அமைதல் வேண் டும்.
3) கற்பித்தல் என்பது முற்றிலும் உளவியல் மயப்பட்டதாக, எளிதில் இருந்து படிப்படியாக, சிக்கலை நோக்கிச் செல்லக் கூடியவாறு ஒழுங்குபடுத்தப்பட்டதாக அமைக்கப்படுதலே சிறந்தது.
4) குழந்தைகளின் உள்ளுணர்வு ஆற்றலுடன் இணைந்த கல்வியை வழங்குதல் வேண்டும். அதாவது எண், மொழி, வடிவம் முதலியனவே உள்ளுணர்வு ஆற்றலுடன் தொடர்புடையவை. இவைதான் புலன்களால் தரிசிக்கப்படும் பொருள்கள் பற்றிய அறிவுக்கு அடிப்படைகளாகும். இதனை மேலும் விளக்குவதாயின் குழந்தைகள் காணும் பொருள்களுக்கு வடிவமும், எண்ணும், பெயரும் உண்டென்பதை அவர் கண்டார். பொருள்கள் பற்றிய நேரடி அனுபவங்களில் இருந்தே அறிவு கிளார்ந்தெழுவதாகக் கொள்ளப்படுகின்றது.
5) உற்றுநோக்கலும் புலக்காட்சியும் அறிதலுக்கு அடிப்படை களாகின்றன. உற்றுநோக்கப்படும் பொருள்கள் மொழியுடன் தொடர்பு படுத்தப்படல் வேண்டும். பொருளறியா ஒலிகளைக் கற்பிப்பதனால் பயனில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தெளிவற்ற-ஆனால் பொருள்பொதிந்த புலன் உணர்வுகளைத் தெளிவு படுத்துவதற்குச் சொற்கள் துணைநிற்கும். தற்காலத்தில் பயன்படுத்தப்படும் ஒலி மொழி முறையியலுக்குரிய முன்னோடியாகவும் அவரைக் கருதலாம்.
6) குழந்தைகளுக்கான கற்பித்தலில் ஓவியம் வரைதலின் முக்கி யத்துவமும் அவரால் வலியுறுத்தப்பட்டது. பொருள்களின் வடிவங்கள் பற்றிய விளக்கத்தைப் பெறுவதற்கு ஓவியம் துணைசெய்யும். எழுத்துக்கள் செப்பமடைய ஓவியங்கள் துணை செய்யும் என்றும் அவர் கருதினார்.
7) செயல்முறை அனுபவங்களில் இருந்தே எண்ணும் கணிதமும் கற்பிக்கப்படல் வேண்டும் என்ற கருத்தையும் முன் மொழிந்தார். அவர் காலத்தில் குழந்தைகள் மீது திணிக்கப் பட்ட அருவநிலையான (யுடிளவசயஉவ) கற்பித்தல் பயனற்ற நடவடிக்கை என்பது அவரது துணிபாக இருந்தது.
8) கற்றலின் பல்வேறு கூறுகளிடையேயும் தொடர்பும் ஒத்திசைவும் இருக்கவேண்டிய தேவையைத் தமது கற்பித்தல் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு தெளிவுறக் கூறினார். அதன் வாயிலாக ஆளுமையின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு வளமூட்ட முடியும்.
9) அனைத்துக் குழந்தைகளும் கல்வி கற்பதற்குரிய தகுதி யுடையவர்கள் என்ற கருத்து அவரால் உரத்து ஒலிக்கப் பட்டது. ஒரு வகையில் தற்காலத்தில் முன்னெடுக்கப்படும் சமத்துவம், சமவாய்ப்பு முதலிய முனைப்புகளுக்கு உரிய முன்னோடி களுள் பெஸ்டலோசியையும் ஒருவராகக் கருத முடியும். ஆற்றலுள்ளவர்களுக்கும் வசதிபடைத்தவர் களுக்குமே கல்வி என்ற கருத்து வலிமையாக ஒலித்த காலகட்டத்தில் பெஸ்டலோசி நலிந்தவர்களின் கல்வி வாய்ப்புகளுக்கான குரலாக ஒலித்தார்.
10) மனிதரின் தேவைகளில் இருந்தே கல்வியும் கண்டுபிடிப்புக்களும் முகிழ்த்தெழும் என்பது அவரது கருத்தாக அமைந்து. 'அழுதபிள்ளை பால் குடிக்கும்' என்று தமிழ் மரபிலே கூறப் பட்ட கருத்துக்களுக்கும் பெஸ்டலோயின் கருத்துக்களுக்குமிடையே ஒப்புமை காணமுடியும்.
பெஸ்டலோசி அவர்களது கல்விப் பங்களிப்புக்களைத் திறனாய்வு செய்கையில் குழந்தைகள் கல்வியிலும் வறியோர்கள் கல்விலும் அடிப்படையான புரட்சிகளைச் செய்தார் என்று கூற முடியாது. ஆனாலும் குழந்தைகளை நடுநாயகப்படுத்தும் செயல்முறை சார்ந்த கற்பித்தல் இயக்கத்தை வலுவூட்டிய ஒருவராக அவர் விளங்கினார் என்பதை மறுக்க முடியாது. பெஸ்டலோசியின் பணிகள் அவரின் பின்வந்தோரால் தொடர் ந்து முன்னெடுக்கப்பட்டு வருதல் அவரின் செல்வாக்கைத் தெளிவுபடுத்துகின்றன.

லேபிள்கள்:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு