புதன், 27 ஏப்ரல், 2011

வெளிவாரிக் கல்வியின் தாக்கம்

ஆயிரமாயிரம் பட்டதாரிகளுக்கும், மாணவர்களுக்கும் அதிர்ச்சி அளிக்கும் தகவலுடன் ஆரம்பிக்கிறது இந்தக் கட்டுரை!
'பன்னிரண்டாம் வகுப்பு வரை முறையான பள்ளிக் கல்வியைப் பெறாமல், திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தின் மூலம் நேரடியாக இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் பெற்றவர்களின் பட்டம் செல்லாது!' என்று அதிரடியாக ஒரு தீர்ப்பு வழங்கியிருக்கிறது உச்சநீதிமன்றம். 'திறந்தவெளிப் பல்கலைக்கழகம் மூலமாக வழங்கப்படும் கல்விக்கு நாங்கள் அனுமதியே வழங்கவில்லை!' என்று யு.ஜி.சி-யும் (பல்கலைக்கழக மானியக் குழு) கை விரித்திருக்கிறது. அப்படியானால், திறந்தவெளிப் பல்கலைக்கழகப் பட்டதாரிகளின் கதி?

அப்பாவி ஏழை மக்களுக்கும், குடும்பச் சூழ்நிலைகளால் படிப்பைத் தொடர முடியாதவர்களுக்கும் வரப்பிரசாதமாக அமைந்ததுதான் திறந்தவெளிப் பல்கலைக்கழகம். அதில் படித்து, தேர்வுகள் எழுதி, பட்டங்கள் பெற்ற பலர் பல்வேறு பணிகளில் இருக்கிறார்கள். ஆனால், இப்போது ஆணிவேரையே அசைக்கும், 'அந்தப் பட்டம் செல்லுமா?' என்ற கேள்வி பல்லாயிரக் கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை ஸ்தம்பிக்கச் செய்திருக்கிறது.

'நீங்கள் ஒன்றாம் வகுப்புகூடப் படித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. குறிப்பிட்ட வயது நிறைந்திருந்தால்போதும்... எம்.ஏ., படிக்கலாம் வாருங்கள்!' என்று சில தனியார் பல்கலைக்கழகங்கள் லேகிய விளம்பரம் கணக்காக பொதுமக்களைக் கூவிக்கூவி அழைத்தன. சில அங்கீ கரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களும்கூட அந்தப் போட்டியில் குதித்தன. இதில் அண்ணாமலை திறந்தவெளிப் பல்கலைக்கழகம் 'தாங்கள் வழங்கும் பட்டத்துக்கு முறையான அனுமதி தர வேண்டும்' என்று அரசிடம் கோரிக்கை வைத்தது. அரசும் 'திறந்தவெளிப் பல்கலைப் பட்டங்களையும் முறையான கல்லூரிப் பட்டங் களுக்கு இணையாகக் கருதலாம்' என்று அரசாணை பிறப்பித்தது. அண்ணாமலை திறந்தவெளிப் பல்கலைக்கழக மாணவர்களில் பலர் பொதுப் பணிகளில் வேலைவாய்ப்புகளும் பெற்றார்கள்.
2000-ம் ஆண்டில் மீண்டும், 'திறந்தவெளிப் பல்கலை மூலம் வழங்கப்படும் கல்வியானது ரெகுலர் முறையில் வழங்கப்படும் கல்விக்கு இணையானதா?' என்று கேள்வி எழுந்தபோது, முந்தைய அரசாணை சாயலிலேயே இன்னொன்றையும் வெளியிட்டது. அடுத்தடுத்து விவாதங்கள் கிளம்பியபோதும், இதேபோன்று சில அரசாணைகள் பிறப்பித்ததோடு தன் கடமையைச் செவ்வனே நிறைவேற்றிக் கொண்டது அரசு.

'இனி எல்லாம் சுகமே' என்று இருந்தபோது, முளைத்தது புது பூதம். பி.எஸ்.என்.எல். நிறுவன தமிழ்நாடு வட்டத் தலைமைப் பொது மேலாளர் 2004-ம் ஆண்டு, 'ப்ளஸ் டூ தேர்ச்சியைக் குறைந்தபட்சக் கல்வித் தகுதியாகக்கொண்ட ஒரு பணியிடத்துக்கு, பள்ளிகளில் முறையாக ப்ளஸ் டூ தேர்ச்சி அடையாமல், திறந்தவெளிப் பல்கலைக்கழகங்கள் வாயிலாக இளங்கலைப் பட்டம் பெற்றவர்களைப் பணிஅமர்த்தலாமா?' என்று கேள்வி எழுப்பினார். 'ஆனால், அவர்கள் ப்ளஸ் டூ படிக்கவில்லையே!' என்று சொல்லி தடா போட்டுவிட்டது கல்விக் குழு.
திறந்தவெளிப் பல்கலைக்கழகப் பட்டங்கள் மீதான குழப்ப மழுப்பல்கள் சூடு பிடித்தது அப்போதுதான்.
'முறையாகப் பள்ளிக்குச் சென்று பத்து மற்றும் ப்ளஸ் டூ வகுப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள், திறந்தவெளிப் பல்கலைகழகங்களில் இளநிலை அல்லது முதுகலைப் பட்டங்கள் பெற்றிருந்தால் அவர்களை மட்டும் பொதுப் பணி நியமனம் மற்றும் பதவி உயர்வுகளுக்குப் பரிசீலிக்கலாம்' என்றது அடுத்த அரசாணை. தற்காலிகத் தீர்வு தேடியே அந்த ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், அது இன்னும் நிலைமையைச் சிக்கலாக்கியது. இந்த அரசாணையைச் சுட்டிக்காட்டி, அதற்கு முன் திறந்தவெளிப் பல்கலைக்கழகப் பட்டங்கள் மூலம் மட்டுமே (பள்ளியில் 10, +2 தேர்ச்சி அடையாதவர்கள்) பணி நியமனம் பெற்றவர்கள் அல்லது பதவி உயர்வு பெற்றவர்களின் பதவிகளைப் பறிக்கச் சொல்லி, மேலதிகாரிகளுக்குக் கடிதங்களைத் தட்டிவிடத் தொடங்கினார்கள் 'ரெகுலர்' பட்டதாரிகள். உடனே, கல்வித் துறை, 'திறந்தவெளிப் பல்கலைக்கழகம் மூலம் முதுகலைப் பட்டம் பெற்றவர்களை ரெகுலர் முறையில் கல்வி கற்றவர்களாகக் கருதி, பதவி உயர்வு வழங்கக் கூடாது' என்று ஓர் அரசாணை வெளி யிட்டது. இதை எதிர்த்து தொடரப் பட்ட வழக்கில் அரசாணையை ரத்து செய்தது நீதிமன்றம்.
இது இப்படி இருக்க, தமிழ்நாடு திரைப்படக் கல்லூரியின் முதல்வராக ரமேஷ் என்பவர் நியமிக்கப்பட்டார். 'ரமேஷ் இளங்கலைப் பட்டம் பெறாமல், திறந்தவெளிப் பல்கலைக்கழகம் மூலம் நேரடியாக முதுகலைப் பட்டம் பெற்றவர். அதன் அடிப்படையில் அவர் முதல்வராக நியமிக்கப்பட்டது செல்லாது!' என்று வழக்கு தொடர்ந்தார் மதன் கேப்ரியல். இவர் ரமேஷ§க்கு அடுத்த சீனியாரிட்டியில் இருந்த 'ரெகுலர்' பட்டதாரி.
உயர் நீதிமன்றத்தில் இருந்து உச்ச நீதிமன்றத்துக்குத் தாவியது வழக்கு.
அப்போது தடாலடியாக, 'திறந்தவெளிப் பல்கலைப் படிப்புகளுக்கு தாங்கள் அனுமதி வழங்கவே இல்லை' என்று நீதிமன்றத்தில் அறிவித்தது பல்கலைகக்கழக மானியக்குழு (யு.ஜி.சி). கடந்த பிப்ரவரி அன்று வெளியான இறுதித் தீர்ப்பில், 'ரமேஷ் திறந்தவெளிப் பல்கலைக்கழகம் மூலம் இளங்கலைப் பட்டப்படிப்பு படிக்காமல் நேரடியாகப் பெற்ற முதுகலைப் பட்டப்படிப்பு செல்லாது. அதனால் அவரது முதல்வர் பணி நியமனம் சட்டத்துக்குப் புறம்பானது' என்று அறிவித்தது உச்ச நீதிமன்றம். வெடித்தேவிட்டது கண்ணி வெடி.
திறந்தவெளிப் பல்கலைக்கழகம் மூலம் பட்டம்பெற்றவர்களின் எதிர்காலத்தை ஆணியடித்ததுவிட்டது தீர்ப்பு. உச்ச நீதிமன்றத் தீர்ப்புப்படி முறையாக ப்ளஸ் டூ முடிக்காமல், திறந்தவெளிப் பல்கலைக்கழகம் மூலம் நேரடியாகப் பட்டம் பெற்றவர்களின் படிப்புகள் செல்லாது என்பதுதான் இன்றைய உண்மை நிலை.
''திறந்தவெளிப் பல்கலைக்கழகப் பட்டதாரிகளுக்கு இனி அரசுப் பணி வாய்ப்புகள் மறுக்கப்படுமா?" என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியிடம் கேட்டோம். ''திறந்தவெளிப் பல்கலைக்கழகப் பட்டங்களின் அங்கீகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் தெளிவாக அறிவித்துவிட்டது. நீதிமன்ற உத்தரவை மீறி எதுவும் செய்ய முடியாது. ஆனாலும், இந்த விஷயத்தை தமிழக அரசு கவனமாகப் பரிசீலித்து வருகிறது. திறந்தவெளிப் பல்கலைக்கழகப் பட்டதாரிகள் எத்தனை பேர் அரசுப் பணியில் இணைந்துள்ளனர் என்ற தகவல்களைச் சேகரித்து வருகிறோம். 'எடுத்தோம் கவிழ்த்தோம்' என்று செயல்படாமல் அவர்கள் அனைவரையும் அரவணைக்கவே அரசு விரும்பும்!" என்றார்.
ஆனால், சமீபத்தில் முடிந்த குரூப் 2 தேர்வுகளில் தேர்ச்சிஅடைந்த 128 பேர் திறந்தவெளிப் பல்கலைப் பட்டதாரிகள். அந்த 128 பேர்களின் முடிவை மட்டும் நிறுத்திவைத்திருக்கிறது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம். இது தொடர்பாக கருத்து தெரிவிக்க 'தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் எவரும் முன்வரவில்லை. தேர்வாணையத்தில் உள்ள இணைச் செயலாளர், துணைச் செயலாளரும் திறந்தவெளிப் பல்கலைப் பட்டதாரிகள்தான் என்பது ஒரு ஸ்கூப்!
அரசுத் துறைகளுக்குள் ஒருங்கிணைப்பு இல்லாமல், தற்காலிகத் தீர்வு தேடி, முன்னுக்குப் பின் முரண் அரசாணைகள் வெளியிட்டதால், ஒரு தலைமுறை இளைஞர்களே திக்கு தெரியாமல் திகைத்துக்கிடக்கிறார்கள். இந்த விஷயத்தில் இறுதி முடிவெடுக்க வேண்டியது எவராக இருந்தாலும், தாயுள்ளத்தோடு செயல்பட வேண்டியது அவசியம்!

லேபிள்கள்:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு