புதன், 4 மே, 2011

இலங்கையின் ஆரம்பக்கல்வியின் சம பங்கிடின் நிலை

காலத்தே பயிர்செய் என்பது நம்மத்தியில் வழங்கி வரும் ஒரு கூற்று. காலம் பிந்தியோ, முந்தியோ பயிர் செய்வதால் பயனில்லை. பயிர்களும் உரிய விளைச்சலைத் தராது என்பது அதன் பொருளாயமைகின்றது.
அதேபோல் கல்வியும் உரிய காலத்தில் வழங்கப்படவேண்டிய ஒன்றாகும். அதனால் தான் நமது நாட்டின் கல்வித்திட்டமும் இலவசக்கல்வி, சமத்துவக்கல்வி, பதின்நான்கு வயதுவரை கட்டாயக் கல்வி என்ற உயரிய கோட்பாட்டைக் கொண்டதாக விளங்குகின்றது.
நடைமுறையில் நாடளாவிய ரீதியில் தமிழ்மொழி மூலக்கல்விக்கு நாட்டின் கல்விக் கோட்பாடு உட்பட்டதாகவுள்ளதா வென்பதைக் கவனத்தில் கொள்பவர்கள் எவருமில்லை. உண்மையைக் கூறுவதானால் நாட்டின் கல்விக் கொள்கை தமிழ்மொழி மூலக்கல்வியில் அடங்காத ஒன்றாகவேயுள்ளது.
ஆசியாவிலேயே கல்வித் தரத்தில் இரண்டாமிடம் வகிப்பதாகவும் இலங்கையரில் தொண்ணூறு வீதத்திற்கு மேற்பட்டோர் கல்வியறிவு பெற்றவர்களென்றும் பிதற்றிக் கொள்வதால் மட்டும் கல்வியில் செம்மைகாண முடியாது. உலகத்தோடு போட்டியிடக் கூடியதாக தகவல் தொழில் நுட்ப அறிவை மாணவர் மத்தியிலே மேம்படுத்தப் பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. அவை உண்மையோ என்னவோ தெரியாதுவிட்டாலும் தமிழ்மொழி மூலக் கல்வியைப் பொறுத்தவரை பின்தங்கிய நிலையை மட்டும் தெளிவாக உணர முடிகின்றது.
இலங்கையின் கல்வித் தரத்தில் முதலிடம் வகித்த பெருமை யாழ்ப்பாண மாவட்டத்திற்குண்டு. தலைசிறந்த கல்வி மான்களை, வைத்தியர்களை, பொறியியலாளர்களை, சட்ட அறிஞர்களை, சிந்தனையாளர்களை, அரசியல் வாதிகளை, எழுத்தாளர்களை இவ்வாறு பல்துறைகள் புத்திஜீவிகளை உருவாக்கிய பெருமை யாழ்ப்பாண மாவட்டத்திற்கு உண்டு.
இன்றைய நிலைமை என்ன? தரப்படுத்தல் என்ற போர்வையில் அன்றைய ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சிக் காலத்தில் பதியுதீன் மகமூத் என்ற கல்வி அமைச்சர் தமிழ்ப் பிள்ளைகளின், குறிப்பாக யாழ்ப்பாணத் தமிழ்ப் பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டிற்குத் தடைபோடும் எண்ணத்தில் தரப்படுத்தல் என்ற கல்வித் தடையை ஏற்படுத்தினார் என்பது வரலாற்றுப் பதிவாகவும், வரலாற்று அவலமாகவும் அமைந்துவிட்டது.
பதியுதீன் முகம்மதுவால் யாழ்ப்பாணத் தமிழ் மாணவர்களின் கல்விக்கு ஏற்படுத்தப்பட்ட தடை தமிழ், சிங்கள உறவுக்கும், நாட்டு மக்களின் இன ஒற்றுமைக்கும் வைக்கப்பட்ட வேட்டாகவே கொள்ளப்படுகின்றது. அதன் தாக்கத்திலிருந்து இந்த நாடு இன்னும் மீளவில்லை. இனரீதியான, மதரீதியான சிந்தனை கல்விப் புலத்தில் திணிக்கப்பட்டதன் தாக்கம் பல்வேறுபட்ட தாக்கங்களை இலங்கையில் ஏற்படுத்தியதுடன் மட்டுமன்றி நாட்டின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கும் தடையாக நீடித்து வருகின்றது.
தேசியக்கல்விக் கொள்கை நாடளாவிய ரீதியில் உரியபடி இன, மொழி, மத வேறுபாடுகளுக்கப்பால் இருந்து செயற்படவேண்டியது காலத்தின் தேவையாகும். தமிழ்க்கல்வியை, தமிழர்கல்வியை கருவறுப்பதிலேயே சிந்தனை செலுத்தும் பொறுப்பற்ற நிலைமை தொடர்வது இலங்கைக்கோ, இலங்கையின் கல்விக் கொள்கைக்கோ பெருமை சேர்க்காது என்பதை நாட்டின் நலனிலும், மேன்மையிலும், தேசிய இனங்களுக்கிடையேயான ஒற்றுமையிலும் ஆர்வம் கொண்ட கல்விமான்களும், புத்திஜீவிகளும், அரசியல்வாதிகளும் தெளிவாகப் புரிந்து கொண்டால் அது நாட்டிற்கும் நன்மை பயப்பதாயும், பெருமை சேர்ப்பதாயும் அமையும்.
கல்விக் களநிலை பற்றிப் பல்வேறு மதிப்பீடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவற்றை அடிப்படையாகக் கொண்டு தேசிய மட்டம், மாகாணமட்டம், மாவட்ட மட்டம், வலயமட்டம், கோட்டமட்டம் என்று பல்வேறு மட்டங்களில் கல்வித்தரக் கணிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே ஏனைய ஏழு மாகாணங்களிலும் நடத்தப்படும் கணிப்பீடுகள் சிங்களப்பாடசாலைகளினதும், அவற்றில் பயிலும் மாணவ-மாணவியரதும் தரத்தை அடிப்படையாகக் கொண்டே நடத்தப்படுகின்றன. இதுவே உண்மை நிலை, நடைமுறையில் உள்ளநிலை.
கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை, கண்டி, குருணாகல், புத்தளம், இரத்தினபுரி, கேகாலை உள்ளிட்ட மாவட்டங்கள் கல்வித் தரத்தில் மேம்பட்டவையாக கணிக்கப்படுகின்றன. பல்கலைக்கழக அனுமதிக்கான புள்ளிகள் மட்டம் இதற்கோர் எடுத்துக்காட்டு. மேற்படி மாவட்டங்களில் பல்கலைக்கழக அனுமதிக்கான கல்விப் பொதுத்தராதரப்பத்திர உயர்தரப்பரீட்சைக்குத் தோற்றிய பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் சிங்கள மாணவ மாணவியருக்கும் தமிழ் மாணவ-மாணவியருக்கும் ஒரே அளவினதாகவேயுள்ளன.
ஆனால், மேலே குறிப்பிட்ட கல்வித் தரத்தில் உயர் நிலையிலுள்ளதாகக் கொள்ளப்படும் மாவட்டங்களிலுள்ள தமிழ்ப்பாடசாலைகளை, அவற்றில் பயிலும், பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் நிலை தொடர்பாக எவரும் கவனம் செலுத்துவதில்லை.
ஆசிரிய வளப் பற்றாக்குறை, பௌதிகவளப்பற்றாக்குறைகளுடன் இயங்கும் தமிழ்ப் பாடசாலைகளில் பயிலும், பரீட்சைக்குத் தோற்றும் மாணவ, மாணவியர் பெற்றுக் கொள்ளும் கல்வித்தரத்தை விட உயர்ந்ததரத்திலான கல்வியைப் பெரும்பான்மையின பிள்ளைகள் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு, வசதிகள் உள்ளன. இருமொழிகளிலும் நடத்தப்படும் தேசியப்பரீட்சைகள் ஒரே பாடத்திட்டத்தினடிப்படையில் நடத்தப்படுவதுடனும் வினாக்கள் ஒன்றாகவும் புள்ளிவழங்கும் திட்டமும் ஒன்றாகவேயுள்ளன.
தமிழ் மொழி மூலக் கல்வியின் பின்னடைவு தேசிய மட்டத்தில் ஒரு கட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளமைக்கு ஐந்தாம் ஆண்டுப்புலமைப் பரிசில் பரீட்சை ஒரு எடுத்துக்காட்டாகவுள்ளது என்பது கவனத்தில் கொள்ளப்படவேண்டும். மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் சிங்கள மொழி மூல மாணவ-மாணவிகள் பெற்றுக் கொள்ளும் புள்ளிகளும், தமிழ்மொழி மூலப் பிள்ளைகள் பெற்றுக் கொள்ளும் புள்ளிகளும் ஒரே புள்ளி வழங்கும் திட்டத்திற்கமைய வழங்கப்பட்டாலும் புலமைப் பரிசில் பரீட்சையின் சித்திக்கு சிங்கள மாணவ மாணவியருக்குரிய தேர்ச்சி மட்டப்பு ள்ளிகளும் தமிழ்மொழி மூல மாணவர்கள் பெறும் தேர்ச்சி மட்டப் புள்ளிகளும் ஏற்ற இறக்கங்களுடன் அங்கீகரிக்கப்பட்டு புலமைப்பரிசில்களுக்குத் தெரிவாகின்றனர். ஐந்தாம் தரத்தில் தமிழ்மொழி மூலப் பிள்ளைகளின் கல்வித்தரம் சிங்கள மொழி மூலப் பிள்ளைகளின் கல்வித்தரத்தைவிடப் பின்னடைந்தேயுள்ளது என்பது அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இருந்த போதிலும் கல்விப் பொதுத் தராதரப்பத்திர சாதாரண தரப் பரீட்சையிலோ, உயர்தரப் பரீட்சையிலோ, பல்கலைக்கழகத் தெரிவின் போதோ தமிழ்க்கல்வியின் பின்தங்கிய நிலை கவனத்தில் கொள்ளப்படுவதில்லை.
பின்தங்கிய நிலையிலுள்ள தமிழ்க்கல்வியைக் கவனத்திற்கொண்டு தமிழ்ப்பிள்ளைகளின் கல்விமட்ட அளவை வேறுபடுத்திக் கணிக்க வேண்டும் என்பது எனது கருத்தல்ல. தமிழ்ப்பிள்ளைகளும் உரிய, உரிமையான, சமத்துவமான கல்வியைப் பெறவழிவகை செய்யப்பட வேண்டும். வசதி, வாய்ப்புகள் ஏற்படுத்தப்படவேண்டும் என்பதே கோரிக்கையாகும்.
தரம் ஒன்று முதல் ஐந்து வரை ஆரம்ப பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் கற்பிக்க வழிசெய்ய வேண்டுவது விதியாகவுள்ளது போன்றே கல்விப் பொதுத்தராதரப் பத்திர சாதாரணதர வகுப்புகள் வரை உரிய பாடங்களில் பயிற்சியோ, பட்டமோ பெற்ற ஆசிரியர்களும், உயர்தர வகுப்பில் குறிப்பிட்ட பாடங்களில் பட்டம் பெற்ற ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டியது முறைமையாக கல்விக்களத்தின் ஒழுங்காக இருக்கின்றது.
இருந்த போதிலும் தமிழ்ப்பாடசாலைகளில் நிலவும் நிலைமை பற்றி ஆராயும் போது இம்முறைமை சீராகச் செயற்படவில்லையென்பது தெளிவாகப்பு ரிகின்றது.
இதற்கு எடுத்துக்காட்டாக மலையகத் தமிழ்ப் பாடசாலைகளின் நிலைமையைக் காண முடிகின்றது. பெரும்பாலான மலையகத் தமிழ்ப் பாடசாலைகளில் ஆரம்பப் பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் பெருமளவில் உள்ளன. அதேபோன்று ஆறு முதல் பதினாறாம் தரம் வரையான வகுப்புகளில் கற்பிக்க உரிய பாடங்களில் பயிற்சியோ, பட்டமோ அற்ற ஆசிரியர்கள் கற்பிக்கும் நிலையுள்ளது.
கல்விப் பொதுத் தராதரப்பத்திர சாதாரணதரப் பரீட்சையின் கட்டாய பாடங்களான கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், தமிழ் ஆகிய பாடங்களைக் கூட கற்பிக்க தகைமையான ஆசிரியர்கள் அற்ற நிலை காணப்படுகின்றது. இந்நிலையில் சாதாரண தரப்பரீட்சையில் தமிழ் மாணவ-மாணவியர் சிறந்த பெறுபேற்றைப்பெற முடியுமா? பரீட்சையில் சித்தியைத்தான் அடைய முடியுமா? உயர்கல்வியைத் தொடரமுடியுமா?
மலையகத் தமிழ்ப் பாடசாலைகளைப் பொறுத்தவரை கல்விப் பொதுத் தராதரப்பத்திர உயர்தரவகுப்புகள் நடைபெறும் பெரும்பான்மையான பாடசாலைகளில் கலைப்பிரிவு மட்டுமேயுள்ளது. கலைப்பிரிவில் பல்வேறு பாடங்களிருந்தபோதும் கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, பதுளை உள்ளிட்ட மலையகத் தமிழ்ப்பாடசாலைகளில் தமிழ், புவியியல், அரசறிவியல் ஆகிய பாடங்களும் ஒருசில பாடசாலைகளில் தமிழ், அரசறிவியல், இந்து நாகரிகம் ஆகிய பாடங்களுமே கற்பிக்கப்படுகின்றன.
பட்டதாரி ஆசிரியர்கள் அற்ற நிலையில் தமிழ்மொழிப் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தமிழ், இந்து நாகரிகம் போன்ற பாடங்களையும், சமூகக்கல்வி பயிற்சிபெற்ற ஆசிரியர்கள் புவியியல், அரசறிவியல் போன்ற பாடங்களையும் கற்பிக்கும் நிலையுள்ளது. பல்கலைக்கழகப் பட்டதாரி ஆசிரியர்களால் கற்பிக்கப்படவேண்டிய பாடங்கள் ஆசிரியகலாசாலைகளில் பயிற்சி பெற்ற சாதாரணதரம் வரை பயிற்றுவிக்கும் தகைமைபெற்ற ஆசிரியர்களாலேயே கற்பிக்கப்படுகின்றன.
சில பாடசாலைகளில் ஆரம்பபயிற்சி பெற்ற ஆசிரியர்கள் உயர்வகுப்புகளில் கற்பிப்பதும், வேறுசில பாடசாலைகளில் உயர்தரப்ப ரீட்சைக்குத் தோற்றி சித்தியடையாத ஆசிரியர்களும் உயர்தர வகுப்புகளில் கற்பிப்பதும் தெரியவந்துள்ளது. கேகாலை மாவட்டத்தில் தரம் ஒன்று முதல் ஐந்து வரையுள்ள ஒருபாடசாலையின் அதாவது நூறு வீதம் தமிழ் மாணவர்களைக் கொண்ட பாடசாலையின் ஐந்து ஆசிரியர்களில் ஒருவர் மட்டுமே தமிழராக இருக்கும் அதேவேளை ஏனைய நால்வரும் தமிழ் மொழியில் பரிச்சயமில்லாத சிங்கள ஆசிரியர்கள் என்பதும் வெளிப்பட்டுள்ளது. தமிழ் மாணவர்களுக்கு தமிழ்ப் பாடசாலையில் தமிழ் மொழிமூலம் தமிழ் தெரியாத ஆசிரியர்கள் எவ்வாறு கற்பிக்க முடியும்? பிள்ளைகள் எவ்வாறு உரிய கல்வியைப் பெறமுடியும்?
பல்கலைக்கழகம் மலையகத்தில் அமையவேண்டிய அவசியம் பற்றி இன்று பல மலையக கல்விமான்களும், புத்திஜீவிகளும் பேசுகின்றனர். அடிப்படைக் கல்வியே ஆட்டங்கண்ட நிலையில் தமிழ் மாணவர்கள் குறிப்பாக மலையகத் தமிழ் மாணவர்கள் அவதிப்பட்டுக் கொண்டுள்ள நிலையில் ஆரம்பக்கல்வி முதல் அதாவது பாடசாலை மட்டக் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டிய தேவை சகல தரப்பினராலும் உணரப்படவேண்டும்.
எனவே, தமிழ்க்கல்வியின் இன்றைய நிலையை, யதார்த்த நிலையை தெளிவாக உணர்ந்து, தெரிந்து கல்வித் தேவைகளை அறிந்து அவற்றை நிறைவேற்ற கல்விப் புலத்தில் ஆர்வமுள்ளோர் முன்வர வேண்டும்.
அத்திவாரம் ஆட்டங் கண்டுள்ள நிலையிலுள்ள கட்டத்தில் மாடி அமைப்பது பற்றி சிந்திப்பவரை புத்திசாலிகள் என்று எவரும் கூறமாட்டார்கள். அதேபோல் ஆரம்பக்கல்வி ஆட்டங்கண்ட நிலையிலுள்ளதைப் புரிந்து கொள்ள முடியாது பட்டப்படிப்பு படிக்க பல்கலைக்கழகம் தேடுவோர் நிலையும் அமைந்துவிடும்.
வடக்கு-கிழக்கிலாகட்டும் மலையகத்திலோ, மேற்கிலோவாகட்டும் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட எந்தவொரு பாராளுமன்ற, மாநகரசபை மற்றும் அரசியல் நிறுவனங்களின் பிரதிநிதியும் தமிழ்க்கல்வி தொடர்பில் அதன் பின்னடைவு தொடர்பில் ஆதாரத்துடன் எடுத்துக் கூறாதிருப்பது வேதனைக்குரியது.
அதுமட்டுமல்ல நமது பேராசிரியர்கள், புத்திஜீவிகள், கல்விமான்கள் உள்ளிட்ட சமூக அக்கறை கொண்டோரிடம் கூட நாட்டின் தமிழ்க் கல்வியின் பின்னடைவு தொடர்பான கவனம் ஈர்க்கப்படவில்லை என்ற உண்மை கசந்தாலும் உண்மை உண்மையாகவேயுள்ளது.
தமிழ் சமூக நலன்கருதி தமிழ்க்கல்வி நிலையை உணர்ந்து அதன் மேம்பாட்டிற்காகக் குரல் கொடுத்து ஆவன செய்யும் பொறுப்பு தட்டிக்கழிக்கக் கூடியதல்ல

லேபிள்கள்:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு