புதன், 27 ஏப்ரல், 2011

தமிழ் மொழி கல்வியின் அவசியம்

தமிழ் மொழி கல்வியின் அவசியம் என்ன? தமிழ் மொழி கற்பதால் அப்படியென்ன சிறப்பு? தமிழக அரசு இதற்காக ஏன் சிறப்பு சட்டத்தை உருவாக்க வேண்டும்?

தமிழ்மொழி கல்வியின் முக்கியத்துவத்தை உணர ஆதிக்க அரசியல் கருத்தியலை புரிந்து கொள்வது அவசியம். இந்தி ஆதிக்கம், பார்ப்பனீய/இந்துத்துவ ஆதிக்கம் இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்தே இயங்குகின்றன. ஆரியர்களது ‘வருகையின்’ பின்னர் பார்ப்பனர்களின் வேத பாடல்களை ஏற்காமல் மாற்று சிந்தனைகளை முன்வைத்த சிந்தனையாளர்களின் கருத்துக்கள் சிதைத்து அழிக்கப்பட்டன. பார்ப்பனர்களின் பாடல் வடிவிலான வேண்டுதல்களும், புலம்பல்களுமான வேதங்கள் எஞ்சியிருந்தன. அவை கூட சமஸ்கிருத மொழியில் இயற்றப்பட்டன. சமஸ்கிருதமும், வேதமும் பார்ப்பனரல்லாதவர்களுக்கு மறுக்கப்பட்டது. பின்னர் இடைக்காலத்தில் மாற்று சிந்தனை கருத்துக்கள் களவாடப்பட்டு வைதீக வைணவ (பார்ப்பன) மதத்தில் உட்சொருகப்பட்டு சொந்த சிந்தனைகள் போல மாற்றப்பட்டன.

மண்ணின் மக்களது இலக்கியங்களான தத்துவங்கள், சிந்தனைகளை அழித்ததன் வழி முதலில் கல்விக்கும், அறிவிற்கும், சிந்தனைக்கும் தடை செய்து, சிலரது ஆதிக்கத்தை நிறுவ வேதம் படிக்க, சமஸ்கிருதம் படிக்க தடை பயன்பட்டிருக்கிறது. அறிதலும், கற்றலும், சிந்தனையும் இணைந்த வளர்ச்சி விடுதலையான சுதந்திர பறவையாக மனிதனை செழுமைப்படுத்தும். இதற்கு மொழியின் பங்கு அவசியமானது. அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் மொழியின் சொற்கள், சொலவடைகள் சமூக, அரசியல் பின்னணியை கொண்டவை என்பதை கூர்ந்து கவனிக்கும் போது விளங்கும். குறிப்பாக நமது கிராமங்களில் சொல்லப்படும் பல வார்த்தைகளின் பின்னால் பல நூற்றாண்டின் வரலாற்றை உள்ளடக்கிய பெரும் சமூக அரசியலே இருக்கிறது. இன்று இத்தகைய வார்த்தைகள் எத்தகைய பின்னணியில், யாரால், எதற்காக பயன்படுத்தப்படுகிறது?

உதாரணமாக குமரிமாவட்டத்தில் குழந்தைகளை பயங்காட்ட (அச்சமூட்ட) ‘பிள்ளைபிடிகாரன் வாறான்’, ‘சாக்குக்காரன் வாறான்’, ‘மூக்கறுத்து போடுவேன்’ சொல்வார்கள். பள்ளிக்கு செல்லும் காலங்களில் எங்களிடையே ‘பிள்ளைபிடிகாரன்’ பற்றிய வதந்திகள்/செய்திகள் பரவி பயத்தை அதிகரிக்கும். அப்போதெல்லாம் ஆளரவமற்ற நல்லுச்சைக்கு (மதியம்) பள்ளியிலிருந்து வீட்டுக்கு சாப்பிட போக பெரிய கிளாஸ்ல படிக்கிற அக்காமாரோ, அண்ணன்மாரோ கூட தான் போவது வழக்கம். பெரிய மரங்கள், பாரம்தூக்கும் கற்கள் இவற்றின் பின்னால் யாராவது மறைந்திருக்கிறார்களோ என்ற பயமும் கலந்து ஓட்டமும், நடையுமாக வீட்டுக்கு வருவோம். இவ்வளவு அச்சமூட்டும் ‘பிள்ளைபிடிகாரன்’, ‘சாக்குக்காரன்’ யாரையும் அப்போதெல்லாம் நேரடியாக பார்த்ததில்லை. பிச்சையெடுத்தல், உடல் உறுப்பு கொள்ளை, குழந்தை தொழில், பாலியல் தொழில் போன்ற கொடுமைகளுக்காக இரக்கமற்று குழந்தைகளை கடத்துபவர்கள் இன்றைய காலத்து பிள்ளைபிடிகாரன்கள். பிள்ளைபிடிகாரன் என்ற சொல் தமிழ்மொழியில் எப்படி அன்றைய காலத்தில் உருவானது?

திருவிதாங்கூர் மன்னர்களது ஆட்சி பார்ப்பனீயத்தின் தொட்டிலாக விளங்கியது. கோயில்கள், அரண்மனைகள் போன்ற மிகப்பெரிய கட்டிடவேலைகள் நடைப்பெற்றது. பார்ப்பன மதத்தின் நம்பிக்கையான ‘பலிகொடுத்தல்’ என்னும் பெருங்கொடுமை இந்த மன்னர்களையும், அவர்களை சார்ந்த குடும்பங்கள், நம்பூதிரிகளையும் பிடித்திருந்த நோயாக இருந்தது. அரண்மனை, அணைகள், கோயில்கள் கட்டும் போது கட்டடம் நிற்கவேண்டுமென்றால் உயிர்பலி கொடுக்கவேண்டுமென்ற மூடநம்பிக்கை பல்லாயிரம் உயிர்களை ‘பலி’வாங்கியிருக்கிறது. பலியிடுதல் என்னும் சொல்லின் பின்னால் இருக்கும் சமூக அரசியலில் உயிரை காணாமல் போக்கப்பட்டு, உயிரை இழந்தவர்கள் அவர்ணர்களாக கருதப்பட்ட சூத்திர, பஞ்சம சாதியினர் என்பது வரலாறு. கட்டிடம் நிலைநிற்க உயிர்ப்பலி கொடுக்க பிள்ளைகளை, அதுவும் தலைப்பிள்ளைகளை ‘பிடிக்க’ (கடத்த) பிள்ளைபிடிகாரன்கள் சாக்குப்பைகளுடன் வருவார்களாம். அதன் தொடர்ச்சியாக பெற்றோர்கள் பேச்சுகளில் உருவான சொல் ‘பிள்ளைபிடிகாரன்’. (இன்று கட்டிடங்களை நிலைநிறுத்த, வளர்ச்சிபெற என்ற பெயரில் ‘வாஸ்து சாஸ்திரம்’ என்ற பெயரில் நடக்கிறது இன்னொருவகை மோசடி).

ஆக, தமிழ்மொழி கற்க அவசியமில்லையென்றால் தனது சமூகத்தின் வரலாற்றை, சமூக அரசியலை அறிந்து, கற்று, சிந்தித்து மனிதவிழுமியங்களுடன் சுதந்திரமான மனிதத்தை உருவாக்க இயலுமா? ‘பிள்ளைபிடிகாரன்’ போன்ற பல சொற்கள் நமது கிராமப்புற மக்களிடம் புதைந்து கிடக்கின்றன. அவற்றில் சமூக அரசியலை அறிய தேவை எழுகிறது. அடக்கப்பட்டு அடிமையாக இருந்த மக்களின் இவ்வகை சொற்களை இலக்கியகுருசாமி ஜெயமோகன் போன்ற ஆதிக்கசாதி கருத்தியலில் ஊறியவர்கள் எப்படி பயன்படுத்திவருகிறார்கள் என்பது அப்போது வெளிச்சத்திற்கு வரும். சாதி,மத ஆதிக்கத்திலிருந்து விடுபட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்மொழிவழி கல்வி அடிப்படை. தமிழ்மொழி கல்வியில் எதை படிப்பது, எப்படி படிப்பது, அதன்வழி என்ன வகையான சமூகத்தை கட்டமைப்பது என்பதில் கவனம் செலுத்துவதும் அவசியம். மூடநம்பிக்கையையும், மதவெறியையும், சாதிவெறியையும் உருவாக்காதாவகையில் தமிழ்மொழி கல்வி அமையவேண்டும்.

லேபிள்கள்:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு