லேபிள்கள்: யோ உஜேயந்தன்
செவ்வாய், 25 நவம்பர், 2014
இல்லறம் எனும் இனிய பந்தத்திலே இணைந்து வாழ மனப் பொருத்தம், ஜோடிப் பொருத்தம், அந்தஸ்துப் பொருத்தம் இவற்றை எல்லாம் புறம் தள்ளி இறுதி வரை வாழ்வை செப்பனிட்டு செல்வது இருவரது ஜாதகப் பொருத்தங்களே.
இன்றைய கால கட்டத்திலே பெரும்பாலும் மாப்பிள்ளைகள் வெளிநாடுகளிலேயே இருப்பதால் பெண்ணை கொடுக்கும் பெற்றோர் ஜாதகப் பொருத்தங்களையே பெரிதும் நம்பி செயற்படுகின்றனர். அதில் சிலர் இன்று ஜாதகப் பொருத்த நிச்சயங்களை சரியான ஆய்வு செய்யாமல் பொருத்தம் அற்ற ஜாதகங்களையும் பொருத்தம் என்று குறிப்பிட்டு விடுகின்றனர். அதைப் பின்பற்றி திருமணத்தை செய்து விட்டு பின் அவஸ்தை நிலை பெறுகின்றனர். எப்போதும் திருமணப் பொருத்தம் என்பது குறைந்தது மூன்று ஜோதிடர்களிடம் என்றாலும் காண்பிக்கப்பட வேண்டும். அப்போது தான் அதன் பொருத்தத் தன்மையை நாம் ஓரளவிற்கு தெளிவாக புரிந்து கொள்ள முடியும். கிரக நிலைப் பொருத்தங்களில் பெண்ணின் ஜனன லக்னத்திற்கு ஆண் ஜனன லக்னம் வசியமாக அமைந்தால் கிரக நிலை லக்ன வசியம் அமைகின்றது. இந்த நிலை கிரஹ நிலையில் உள்ள மற்றைய தோஷ நிலைகளை நிவர்த்தி செய்து விடுகின்றன. பெண் ஆண் ஜாதக லக்னங்கள் நேர்கோட்டு நிலைகளில் அமைந்தாலும் கிரக நிலையில் அனுகூலமான பொருத்த நிலைகள் அமையும்.
பொதுவாக குடும்பஸ்தான அதிபதி களத்திரஸ்தான அதிபதி கிரகங்கள் மறைவு நிலை நீச நிலைகள் பெற்று அமைந்தால் அதேபோல் அதற்கு ஈடான சமதோஷ நிலை மற்றைய ஜாதகத்திலும் அமைந்து இருப்பதே மிகவும் விசேடமாகும். ஒரே நட்சத்திரம் என அமையும் போது ஆண், பெண் இருவரும் ரோகிணி, திருவாதிரை, மகம், விசாகம், அத்தம், திருவோணம், உத்தரட்டாதி, ரேவதி இந்த எட்டு நட்சத்திரங்களும் மிக உத்தமமான நட்சத்திரம். அடுத்து அமைகின்ற அஸ்வினி, கார்த்திகை, புனர்பூசம், பூசம், பூரம், உத்தரம், சித்திரை, அனுஷம், பூராடம், உத்தராடம் இந்த பத்து நட்சத்திரங்களும் ஒரே நட்சத்திரமாயின் மத்திமமான பொருத்தமே. மற்றைய நட்சத்திரங்கள் சிறப்பானதாக எடுக்கக் கூடிய நிலை இல்லை. இதிலே மிருக சீரிடம், மகம், சுவாதி, அனுஷம் ஆகிய நான்கு நட்சத்திரங்களில் ஒன்று பெண், ஆண் யாருக்கு அமைந்தாலும் பொருத்தம் பார்க்காமலே திருமணம் செய்யலாம் என்கின்ற ஒரு விதியை ஜோதிட நூல்கள் கூறி நிற்கின்றன.
இருப்பினும் இந்த நான்கு நட்சத்திரம் கொண்டவர்களில் வாழ்வியல் அனுபவ ரீதியில் போராட்டம் கொண்ட நிலையிலேயே அமைகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. எனவே நட்சத்திரப் பொருத்தங்களில் இவைகளை மிகவும் முக்கியமாக கவனித்துக் கொள்ள வேண்டும். பெண் ஜாதகத்தில் குடும்பஸ்தானம் எனப்படும் 2 ஆம் இடமும் களத்திரஸ்தானம் எனும் 7 ஆம் இடமும் மாங்கல்ய ஸ்தானம் எனப்படும் 8 ஆம் இடமும் மிக மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியவை.
திருமணப் பொருத்தங்கள் மொத்தம் 14 உண்டு. இவற்றில் மிக முக்கியமான பொருத்தங்களாக கருதப்படுபவை கிரகம், நட்சத்திரம், கணம், யோனி, ராசி, வசியம், ராசியதிபதி, தாலி, புத்திரர், ஆயுள். இதிலே யோனி அல்லது வசியம் ராசி அல்லது ராசியதிபதி ஏதேனும் ஒன்று பொருந்தி இருந்தால் போதுமானது. யோனி, வசியம் இவை இரண்டும் பொருத்தமே இல்லாமல் அமைகின்ற நிலையில் அத்திருமணத்தை தவிர்ப்பது நல்லது. ஒரு சில ஜாதகங்களில் கிரக நிலைப் பொருத்தம் குறைவாக அமைந்து மற்றைய பஞ்சாங்கப் பொருத்தம் அனைத்தும் மிகவும் சிறப்பாக பொருந்தி இருந்தால் கிரக நிலை பொருத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய நிலை இல்லை. அதே நேரம் கிரக நிலையில் செவ்வாய், சுக்கிரன், ராகு, கேது தோஷ நிலைகள் ஒருவருக்கு அமைந்து மற்றையவருக்கு அமையாது விடும் நிலையில் அந்த நிலையிலுள்ள ஜாதகம் தவிர்க்கப்பட வேண்டியதாகும். அதேநேரம் இருவருக்கும் செவ்வாய் தோஷம் மற்றைய தோஷங்கள் சமனாக அமைகின்ற நிலை ஏற்பட்டால் பாதிப்புக்கள் அமையாது. முக்கியமாக ரச்சு எனப்படும் தாலிப் பொருத்தம் மிக முக்கியமானதாக கருதப்படுவதாகும். ஒரு பெண் தன் வாழ்நாளில் பலவித பிரச்சினைகள், சஞ்சலங்கள், துன்பங்கள் என தொடர்ந்தாலும் அப் பெண்ணின் அந்தஸ்து மேன்மை சமூக மரியாதை என்பனவற்றை நிலை நிறுத்தும் ஒரே விடயம் சுமங்கலி என்கின்ற நிலையாகும். தாலிப் பொருத்த நிலையில் ஐந்து விதமான ரச்சு அமைகின்றது. சிரோ ரச்சு, கண்ட ரச்சு, நாபி ரச்சு, ஊரு ரச்சு, பாதரச்சு என்கின்ற இந்த ஐந்து ரச்சு வரிசைகளில் அமைகின்ற நட்சத்திரத்திலேயே பெண் ஆண் நட்சத்திரம் அமைந்தால் தாலிப் பொருத்தம் அற்ற நிலையாகின்றது. ஒரு சில ஜோதிட நூல்கள் ஆரோகண அவரோகண கதியில் அமைந்தால் தாலிப் பொருத்தம் உண்டு என்று கூறினாலும் கிரக நிலையில் உள்ள பெண் ஆண் ஆயுள் பாவமும் பெண்ணின் மாங்கல்ய ஸ்தான கிரகத்தின் நிலையும் நன்கு ஆய்வு செய்தே இந்த தாலிப் பொருத்த நிலை முடிவு செய்யப்பட வேண்டும். மாங்கல்ய தோஷ நிலை தரும் கிரக அமைப்புக்கள் சில பெண்கள் ஜாதகத்தில் 8 ஆம் இடம் பாவக் கிரகங்கள் அமைவதும் செவ்வாய் சனி பார்வை 8ஆம் இடத்தை நோக்குவதும் பாவக் கிரகபார்வை 8 ஆம் இடம் அமைவது 7 ஆம், 8 ஆம் இடம் சூரியன் சுக்கிரன், சேர்க்கை அமைவது சூரியன், செவ்வாய் சேர்க்கை பெற்று எந்தஸ்தானம் அமைவதும் சந்திரன் பலம் குன்றி பாவக் கிரக சேர்க்கையுடன் 8 ஆம் இடம் அமைவது குரு சுக்கிரன் 12 ஆம் இடம் அமைவது 9 ஆம் இடத்திற்குரிய கிரகம் சூரியனுடன் சேர்க்கை பெற்று 6 ,8, 12 ஆம் இடம் அமைவதும் அந்த ஸ்தான அதிபதிக் கிரகங்களும் 6ஆம், 8ஆம், 12ஆம் இடம் அமைவது என்பன பெண்களுக்கு மாங்கல்ய தோஷ நிலையைக் கொடுக்கும். திருமணம் எனும் பந்தம் அமைய திருமணப் பொருத்தத்தின் சூட்சும விடயங்கள் பல உண்டு.
பருவக் காதல் பருவ மழையைப் போன்றது. வண்ண வண்ண ஆடை அணிந்து நெளிவு சுழிவுகளைப் பார்த்து கண்ணாடி முன் தான் அழகாக இருக்கின்றேனா? எனப் பல முறை ரசிக்கும் இளம் பெண்களுக்கு தன்னையும் ஒருவன் ரசிக்கின்றான் என்றதும் அவளை அறியாமலே அவன் மீது ஈர்ப்பும் விருப்பமும் ஏற்படுவது இயல்பே. ஆனால், அது இந்த பருவத்தில் ஏற்படும் எதிர்ப்பாலினக் கவர்ச்சியே. இதை விட சிறந்த வாழ்வு உண்டு என்பதை உணரும் முன்னரே நிரந்தரமற்ற பிரச்சினைகளுக்கு நிரந்தரமான, பாரதூரமான முடிவினை நோக்கி செல்கின்றனர் இன்றைய இளம் பெண்கள்.
லேபிள்கள்: உஜேயந்தன்
நாட்டில் கல்வித்துறையில் மிக வும் பின்தங்கியுள்ள மக்களாக பெருந்தோட்டத்துறை மக்களே கணிப்பீடு செய்யப்பட்டுள்ளனர் என்பது அனைவரும் அறிந்த விடயமாகும். நாட்டில் மலையக மக்களின் தொகை ஆறு அல்லது ஏழு விகிதமாக இருந்தாலும் ஆண்டுதோறும் பல்கலைக்கழகங்களில் அனுமதிபெறும் மாணவர் எண்ணிக்கை இன்னும் 05% விகிதத்தை விடவும் அதிகரிக்காமல் இருப்பது பெருந்தோட்ட மக்கள் கல்வியில் எவ்வளவு பின்தங்கியுள்ளார்கள் என்பதற்கு தெளிவான சாட்சியமாகும். கடந்த காலங்களில் மலையக கல்வித்துறையில் படிப்படியாக மாற்றங்களும் முன்னேற்றங்களும் ஏற்பட்டுவந்துள்ளன என்பது உண்மை. ஆனா லும் நாம் கல்வி அபிவிருத்தியில் மற்றைய துறையினரை எட்டிப்பிடிக்க இன்னும் பல ஆண்டுகள் செல்லும்.
பிள்ளையின் கல்வி முன்னேற்றத்திற்கு முன்பள்ளிக் கல்வி அத்தியாவசியமானதாகும். இன்றைய நவீன கல்விமுறையில் பிள்ளை பாடசாலையில் எதிர்நோக்கும் சவால்களை சமாளிக்க வேண்டுமானால் பாடசாலைக்கு செல்லும் முன்னர் பிள்ளை, முன்பள்ளியில் நன்கு ஆயத்தப்படுத்தப்பட வேண்டும். நகர, கிராம பகுதிகளில் பெற்றார்கள் தங்கள் பிள்ளைகள் பாடசாலைக்கு செல்லும் முன்னர் முன்பள்ளிக்கு அனுப்புகிறார்கள். இன்று இது ஒரு கட்டாய தேவையாகிவிட்டது. ஆனால், பெரும்பான்மை யான பெருந்தோட்டங்களில் முன்பள்ளிக் கல்வி என்பது இன்னும் கூட முற்றிலும் அறியப்படாத ஒன்றாகவே உள்ளது. முன்பள்ளிக் கல்வியின் முக்கியத்துவத்தை பல்லாயிரக்கணக்கான பெருந்தோட்ட பெற்றார் கள் அறிந்திருந்தாலும் பெருந்தோட்ட பகுதிகளில் முன்பள்ளிகள் இல்லாமையால் தமது பிள்ளைகளுக்கு இந்த வசதியை பெற்றுத்தர முடியாத நிலையில் உள்ளனர்.
பெருந்தோட்டக் கல்வி எதிர்பார்த்த அளவுக்கு முன்னேறாமைக்கு முன்பள்ளிக் கல்வி வசதியில்லாமை முக்கிய காரணமாகும். இந்த பின்னணியில் பிரிடோ நிறுவனம் கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் முன்பள்ளிசாலைகளை நடத்தி வருகிறது. நுவரெலியா மாவட்டத்தில் இந்த நிறுவனத்தால் முன்பள்ளிகள் நடத்தப்படும் பகுதிகளில் பிள்ளைகளின் அடைவு மட்டமும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைவோர் எண்ணிக்கையும் முன்பள்ளிகள் இல்லாத பகுதிகளோடு ஒப்பிடும்போது மிகவும் அதிகமாகவுள்ளது என்பதை நுவரெலியா மாவட்ட கல்வி அதிகாரிகள் உறுதிப்படுத்தியிருக்கின்றனர். ஆயினும் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த முன்பள்ளிக் கல்வியை பெருந்தோட்ட பிள்ளைகள் பெறுவதற்கு மலையக அரசியல்வாதிகள் எவரும் இதுவரை உதவியதும் இல்லை. அதைப்பற்றி பேசியதும் இல்லை. அதற்காக வளங்கள் ஒதுக்கியதும் இல்லை.
முன்பள்ளிகள் ஆயிரக்கணக்கானவர்களுக்கு தொழில்வாய்ப்பைத் தருகிறது
முன்பள்ளிக்கல்வி மலையக கல்வி முன்னேற்றத்துக்கு இன்றியமையாதது என்பதைவிட, இலங்கையிலுள்ள எல்லா பெருந்தோட்டங்களிலும் சகல பிள்ளைகளுக்கும் முன்பள்ளிக் கல்வி கிடைக்க செய்வதானால் ஆயிரக்கணக்கான முன்பள்ளிகளை அமைக்க வேண்டிய தேவையுள்ளது. இவ்வாறு முன்பள்ளிகள் அமைக்கப்படும்போது ஆயிரக்கணக்கான பெருந்தோட்ட இளம் பெண்களுக்கு சமூக அங்கீகாரம் பெற்ற தொழில்வாய்ப்பு கிடைக்கும். பெருந்தோட்ட முன்பள்ளிக் கல்வி ஆயிரக்கணக்கான யுவதிகளுக்கு வேலைவாய்ப்பை தரும் ஒரு கெளரவான தொழிற்றுறை என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
ஆயினும் முன்பள்ளிகளை எவரும் தாம் நினைத்தபடி நடத்திவிட முடியாது. முன்பள்ளி ஆசிரியர்கள் தரமான பயிற்சி பெற்றவராக இருக்க வேண்டும். முன்பள்ளி ஆசிரியைகளுக்கு தரமான பயிற்சி வழங்குவதற்கு பெருந்தோட்டப் பகுதிகளில் அண்மைக்காலம்வரை வாய்ப்புக்கள் எதுவும் இல்லாத நிலையில் பெருந்தோட்ட பகுதியில் திறந்த பல்கலைக்கழங்களில் முன்பள்ளி ஆசிரி யைகளுக்கான கற்கைநெறி ஆரம்பிக்க வேண்டும் என்ற பரிந்துரை ஐந்து ஆண்டு களுக்கு முன்னரே முன்வைக்கப்பட்டது. ஆனால் மலையக அரசியல்வாதிகள் எவ ரும் அந்த முயற்சிக்கு உதவியளிக்கவுமி ல்லை. ஊக்கப்படுத்தவுமில்லை. தனியொரு நிறுவனமாகப் போராடியே ஹட்டன், கண்டி போன்ற பெருந்தோட்ட பகுதிகளில் திறந்த பல்கலைக்கழங்களில் தமிழ்மொழி யில் முன்பள்ளி ஆசிரியைகளுக்கான பயி ற்சி நெறியை ஆரம்பிப்பதில் பிரிடோ நிறுவனம் வெற்றிகண்டது.
இந்த பின்னணியில் வரவு –- செலவுத் திட்டத்தின் கல்வி மற்றும் கல்விச் சேவைகள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் பேசிய பிரதியமைச்சர் பி.திகாம்பரம் பெருந் தோட்டங்களில் முன்பள்ளிக்கல்வி பரவ லான முறையில் அபிவிருத்தி செய்யப்பட வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் அரசு, முன்பள்ளி ஆசிரியைகளுக்கு வழங்குவதாக உறுதியளித்துள்ள 2500ரூபா கொடுப்பனவு பெருந்தோட்டப் பகுதி ஆசிரியை களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியிருக்கிறார். தற்போது மாகாண சபை, பிரதேச சபை, நகர சபைகள் மூலம் முன்பள்ளி ஆசிரியைகளுக்கு கொடுப்பனவு வழங்கப்பட்டு வந்திருந்தாலும் பெருந் தோட்ட முன்பள்ளி ஆசிரியைகளுக்கு இந் தக் கொடுப்பனவு ஒருபோதும் கிடைத்ததி ல்லை. அதுபற்றி எந்த வொரு மலையக அரசியல்வாதியும் பேசியதுமில்லை. இந்தப் பின்னணியில் பிரதியமைச்சரின் முன்பள்ளி அபிவிருத்தி தொடர்பான பாராளுமன்ற உரை பெருந்தோட்ட முன்பள்ளிகளுக்கும் ஆசிரியைகளுக்கும் அங்கீகாரமும், அவர்க ளும் பாடசாலை ஆசிரியைகளுக்கு சமமான முறையில் மதிக்கப்படவும், கொடுப்பனவு களை பெறவும் வாய்ப்பை ஏற்படுத்தியுள் ளது.
லேபிள்கள்: உஜேயந்தன்
சிறுவர் துஷ்பிரயோகம் பற்றி தண்டனைச் சட்டக் கோவையின் 286, 288, 308, 345, 350, 352, 360 ஆகிய பிரிவுகள் குறிப்பிடுகின்றன. ஆபாசப்படப் புத்தகங்கள், அருவருக்கத்தக்க வெளியீடுகள், ஆபாச துண்டுப் பிரசுரங்கள், சித்திரங்கள், அச்சுப்பதிப்புக்கள், புகைப்படங்கள் போன்றவற்றை தயாரிக்கின்றமை விநியோகிக்கின்றமை சட்டத்தின் கீழ் குற்றங்களாகும். ஆபாச படங்களை கண்காட்சிக்கு வைத்திருத்தலும் குற்றமாகின்றது.
இந்த வகையில் சிறுபிள்ளைகளை பயன்படுத்தி மேற்படி பிரசுரங்களை தயாரிப்பது, அல்லது சிறுபிள்ளைகளை நாகரிகமற்ற முறையில் ஆபாசப் படமெடுப்பது, சில ஆபாச காட்சிகளை செய்யும்படி கூறி படமெடுப்பது, அத்தகைய காட்சிகளைக் கொண்ட ஆவணங்களை வைத்திருப்பது சட்டவிரோத நடவடிக்கைகளாகும். இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடும் விதத்தில் சிறுவர்களை பயன்படுத்த பெற்றோர்கள், பாதுகாவலர்கள் அனுமதித்தலும் குற்றமாகும். வேறொருவரின் பணிப்பின் பேரில் இத்தகைய ஆபாசப் படங்களை தயாரிப்பவர், கழுபுபவர் கட்டாயமாக அண்மையிலுள்ள பொலிஸ் நிலையத்தில் இதுபற்றி முறைப்பாடு செய்யவேண்டும். அவர் அவ்வாறு பொலிஸுக்கு தகவல் கொடுக்கத் தவறினால் அதுவும் குற்றமாகும். இத்தகைய ஆபாசப்படங்களை, ஆபாசக் காட்சிகளை கணனியில் இடுகின்ற நபரொருவர் தண்டனைக்குரிய குற்றமொன்றைப் புரிபவராவார். சிறுபிள்ளைகளின் பாலியல் துஷ்பிரயோகம் பற்றிய படங்களை தயாரிப்பவரும், கணனியில் இடுகின்றவர் அதுபற்றிய விபரங்களையும் அவ்வாறு தம்மை கேட்டுக் கொண்டவர் பற்றிய விபரங்களை பொலிஸ் நிலையத்திற்கு வழங்குதல் வேண்டும். மேலும் சிறுபிள்ளைகள் பற்றிய ஆபாச படங்களை தயாரிக்கும் இடத்தினுடைய உரிமையாளர், வாடகைக்காரர் கவனிப்பவர் அறிந்து கொண்டே அவ்வாறு செய்வதற்கு இடமளித்தால் குற்றம் ஒன்றுக்குப் பொறுப்பானவராக வேண்டும்.
தண்டனைச் சட்டக்கோவையின் பிரிவு 288 இன்படியாக ஒரு பிள்ளையை, பிள்ளைகளை றோட்டில், அல்லது வேறொரு இடத்தில் பிச்சையெடுக்க விடுகின்ற, தூண்டுகின்ற ஆளொருவரும் தண்டிக்கப்பட வேண்டியவராவார். சில நடனங்களை, சில செயற்பாடுகளை, பாடல்களை பாட விடுவதன் மூலம் பிச்சையெடுக்கின்ற செயற்பாட்டிற்கு காரணமாக இருப்பவர்கள், உறுதுணையாக இருப்பதுவும் குற்றமாகும். சிறுபிள்ளைகளை பாவித்து பாலியல் தொடர்புகளுக்கு வழிவகுத்துக் கொடுப்பதற்கு உதவி புரிவோரும் குற்றம் செய்பவர்களாகவே கருதப்படுவர். சட்டத்தினால் தடுக்கப்பட்ட பொருட்களை சிறுபிள்ளைகளின் மூலமாக கடத்துவதற்கு காரணமாக இருத்தலும் ஒரு குற்றமேயாகும். ஒரு சிறு பிள்ளையின் பாதுகாவலுக்கு பொறுப்பானவர்கள் அல்லது பெற்றோர் ஒரு சிறுபிள்ளையைக் கைவிடுதல், பிள்ளைகளை அநாதரவாக தவிக்க விடுதலும் சட்டத்தால் தடை செய்யப்பட்ட விடயமாகும். 18 வயதிற்கு குறைந்த பிள்ளையை வேண்டுமென்றே அடித்தல், அல்லது பிள்ளைகளைக் கவனிக்கத் தவறுவது அல்லது அப்பிள்ளைக்கு ஊறு செய்வது மனோவியல் ரீதியில் பாதிக்கச் செய்வன என்பனவையும் குற்றங்களாகும். 2006ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திருத்தச் சட்டத்தின் பிரகாரம் ஊறு என்பது மனநிலை பாதிப்பினையும் உள்ளடக்கும்.
தண்டனைச் சட்டக்கோவையின் பிரிவு 345இன் பிரகாரம் பாலியல் ரீதியாக இன்னொரு நபரை சொற்களாலோ அல்லது ஒரு செயல் மூலமாகவோ தொந்தரவு செய்வது குற்றமாகும். மற்றவர்களால் வரவேற்கப்படாத பாலியல் சேட்டைகள், தொந்தரவுகள் போன்றவையும் பிரிவு 345 இன் வரம்பெல்லையினுள் வரும். அதிகாரபூர்வமான இடத்திலிருந்தோ அல்லது வேலை செய்யும் இடத்திலிருந்தோ இத்தகைய பாலியல் சமிஞ்ஞைகளைச் செய்வது கண்டிக்கத்தக்கதும் தண்டனைக்குரிய குற்றமாகும். இப்பிரிவு பரந்த நோக்கெல்லையைக் கொண்டது. கற்பழிப்புத் தவிர்ந்த ஏனைய எந்தவிதமான பாலியல் தாக்குதல்களையும் உள்ளடக்கக் கூடிய பிரிவாகும். இப்பிரிவு சிறுபிள்ளைகள் தொடர்பிலும் ஏற்புடையதாகும்.
சிறுபிள்ளைகளைக் கடத்துதல் என்பது இலங்கைக்குள் கடத்துவதனையும், இலங்கையை விட்டு கடத்துவதையும் உள்ளடக்கும். ஒரு பிள்ளையின் கட்டுக்காவலுக்கு பொறுப்பான ஆளிடமிருந்து கடத்துதல் ஆகும். ஆண் பிள்ளைகள் 14 வயதிற்கு கீழ்பட்ட போதும் பெண் பிள்ளைகள் 16 வயதுக்கு கீழ்பட்ட போதும் அல்லது மனநிலை குறைவுடைய ஆளாயின் அவ்வாளின் பாதுகாப்பிற்கு பொறுப்பான ஆளொருவரிடமிருந்து கடத்துதல் சட்டமுறையான பாதுகாப்பிலிருந்து கடத்துதல் எனக் கூறப்படும். இந்த 14 வயது, 16 வயதெல்லையானது 18 எனச் சட்டத்தில் சீர்திருத்தம் செய்யப்படல் வேண்டும் என இக்கட்டுரையாளர் கூறுகின்றார்.
பிரிவு 360 (யு) இன் பிரகாரம் கடத்தப்படுபவரின் சம்மதம் இருந்தாலோ இல்லையோ சட்ட விரோதமான பாலியல் நோக்கத்திற்காக கடத்தப்படுதல் குற்றமாகும். இந்த வகையில் விபசார விடுதிக்கு அல்லது ஒரு தங்குமிடத்துக்கு இவர்களை பாலியல் நோக்கத்திற்கு பாவிக்கப்படுவதற்காக கடத்தப்படல் ஒரு பாரதூரமான குற்றமாகும்.
பிரிவு 360 (டீ) இன் படியாக பாலியல் சுரண்டல் என்பதன் வரைவிலக்கணம் 06 உபபிரிவுகளில் கூறப்பட்டுள்ளது. பாலியல் செயற்பாடுகள் எனத் தெரிந்து கொண்டே சிறுபிள்ளைகளை வைத்திருப்பது, அத்தகைய சட்டவிரோத செயற்பாடுடுகளுக்கு உதவுவது, தவறான பாலியல் படங்களுக்கு துணை புரிவது பிரிவு (அ) இன் கீழ் வருகின்ற விடயமாகும்.
பாலியல் உறவுகளோ அல்லது எந்தவகையான பாலியல் துஷ்பிரயோகங்களுக்கோ சிறுபிள்ளைகளைப் பயன்படுத்துதல் (ஆ) பிரிவின் கீழான பாலியல் சுரண்டலாம்.
உபபிரிவு (இ) இன்படி ஒரு சிறுபிள்ளையை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படும் வகையில் விளம்பரப்படுத்த செய்தல், அச்சு ஊடகம் மூலம் அதாவது செய்திப்பத்திரிகை மூலம் தூண்டுதல் குற்றமாகும்.
உபபிரிவு (ஈ) இன்படி ஒரு சிறுபிள்ளை மீதுள்ள செல்வாக்கு காரணமாகவோ, சிறப்புரிமை காரணமாகவோ அல்லது உறவுமுறையான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு வழிவகுத்தலும் பாலியல் சுரண்டலாகும்.
ஒரு சிறுபிள்ளையை அச்சுறுத்தி அல்லது வன்முறையைப் பாவித்து தன்னுடைய பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்த முனைவதும் பாலியல் சுரண்டலாகும். பணம் கொடுத்து அல்லது பொருட்களைக் கொடுத்து ஆசை காட்டி சிறுபிள்ளைகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துதல் பாலியல் சுரண்டலாகும்.
360 (ஊ) சிறுபிள்ளைகளை விற்றல், சதி செய்தல், விற்க அல்லது வாங்க தூண்டுதல் செய்தல், அதற்கு ஒழுங்கமைத்துக் கொடுத்தல் குற்றமாகும். இத்தகைய குற்றங்களுக்கு 25 வருட கால சிறைவாசம் நீதிமன்றத்தினால் விதிக்கப்படலாம்.
சிறுபிள்ளைகளை கட்டாயமாக வேலைக்கு அமர்த்துவது, அடிமையாக வைத்திருப்பது, விபசாரத்திற்கு வழிவகுப்பது குற்றமாகும். கட்டாய வேலைக்கு வைத்திருத்தல் சிறுபிள்ளைகளை சம்மதம் இருந்தோ இல்லையோ குற்றமாகும். கபட நோக்குடன் சிறுபிள்ளைகளின் உடற்பாகங்களை அகற்றுதல், அவ்வாறான முயற்சிக்குத் துணையாக இருப்பது பாரதூரமான குற்றமாகும்.
பிறக்காத குழந்தையை பெற்றுத் தருவதாக கூறி அல்லது பெண்களை பிள்ளையைப் பெற்றுத் தருவதற்காக ஆட்சேர்ப்பது சட்டத்தால் தடுக்கப்பட்ட விடயங்களாகும். பிறப்புப் பதிவுப் பத்திரங்களில் தெரிந்து கொண்டே மாற்றங்களை செய்வது, அதனை மாற்ற உதவுவது மோசடி செய்வது சட்ட விரோதமாகும்.
பிறந்த குழந்தைகளை சிறுபிள்ளைகளை ஆஸ்பத்திரிகள் சிறுவர் இல்லங்கள், பாதுகாப்பு நிலையங்களில் இருந்து சட்ட விரோதமான முறையில் தத்தெடுப்பது தண்டனைக்குரியதாகும். பதினெட்டு வயதிற்கு கீழ் உள்ளவர்களை ஆசை காட்டி மோசம் செய்வது குற்றமாகும்.
பிரிவு 363இன் படி சம்மதம் இருந்ததோ இல்லையோ 16 வயதிற்கு குறைந்த சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படும் போது அதனை அச்சிறுமி எதிர்த்தது தடுத்தது தொடர்பான சாட்சியம் அவசியமில்லை எனக் கூறுகின்றது.
பிரிவு 364 (யு) இன் படியாக தடுக்கப்பட்ட தகாத உறவு முறையான பாலியல் குற்றம் பற்றிக் குறிப்பிடுகின்றது. தாய் தகப்பன், தத்தெடுத்த தாய் தகப்பன், சகோதர்கள், ஒரு தாய்க்குப் பிறந்த பிள்ளைகள், ஒரு தகப்பனுக்குப் பிறந்த பிள்ளைகள் தமக்குள் செய்யும் திருமணங்கள், பேரன் பேத்திகள் திருமணம் போன்றவை தடுக்கப்பட்ட உறவு முறைகளின் திருமணத்திற்குள் உள்ளடங்கும்.
ஒரு நபருடையதோ அல்லது விலங்கினுடையதோ குதத்தினூடாக உறவு கொள்ளுதல் இயற்கைக்கு முரணான குற்றங்கள் என்ற வகுதியினுள் வரும். 16 வயதிற்கு கீழ்பட்ட ஒரு பிள்ளையுடன் சம்மதம் இருந்ததோ இல்லையோ பண்பாடற்ற முறையில் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகப்படுத்தப்பட்டால் அந்நபர் 10 வருடத்திற்கு குறையாத 25 வருடத்திற்கு மேற்படாத சிறைத்தண்டனையைப் பெறுவார். இத்தகைய விடயங்களை பாரதூரமான பாரியல் துஷ்பிரயோகம் எனக் கூறுவர்.
பாலியல் குற்றங்கள் தொடர்பில் பாதிக்கப்பட்டவரின் பெயரை பாதிக்கப்பட்டவரை அடையாளம் கண்டு கொள்ள வழிசமைக்கும் விடயத்தை எவராவது அச்சிடுதல் அல்லது வெளியிடுதல் குற்றமொன்றாகும்.சிறுபிள்ளைகளை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கும் போது 25 வருட கால சிறைத்தண்டனையும், தண்டமும் விதிக்கப்படுவதோடு, பாதிக்கப்பட்டவருக்கு நட்டஈடும் வழங்கும்படியும் நீதிமன்றம் உத்தரவிடும்.
லேபிள்கள்: யோ உஜேயந்தன்
வாழ்விடங்களை அமைக்கும் புதிய திட்டம்
விண்வெளி நோக்கிய உலக நாடுகளின் ஆய்வு நடவடிக்கைகள் சற்றே தீவிரம் பெற்றுள்ளதாகத் தோன்றுகிறது. செவ்வாய்க் கோள் நோக்கிய அமெரிக்க மற்றும் இந்திய ஆய்வுத் தொகுதிகளின் விண்பயணம், அக்கோள் நோக்கி விண்வெளி வீரர்களை அனுப்புவது தொடர்பான அமெரிக்க ‘நாஸா’ நிறுவனத்தின் ஒத்திகைகள் மற்றும் சீன நாட்டின் சந்திரன் நோக்கிய அண்மைய விண்பயணங்கள் என்றவாறான பல்வேறு வகையான விண்வெளி ஆய்வு முயற்சிகள் ஆய்வாளர்களால் முனைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த 12 ஆந் திகதி வால்வெள்ளி ஒன்றில் ஆய்வுத்தொகுதியை தரையிறக்கும் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் முயற்சி நடந்தேறியது. எனினும், அம்முயற்சி முழு வெற்றியளிக்கவில்லை எனத் தெரியவருகின்றது. இவ்வாறாக பலநோக்கிலான ஆய்வு முனைப்புக்கள் பல்வேறு நாடுகளிலிருந்து முன்னெடுக்கப்படுகின்றன.
விண்வெளிக்கு விண்வெளி ஆய்வாளர்களை அனுப்பி ஆய்வுகளை மேற்கொள்ளுதல் என்பதற்கு அப்பால், அங்கு மனிதக் குடியேற்றங்களை நிறுவுதல், சுற்றுலாத் தலங்களை அமைத்தல் போன்ற விடயங்களை முன்னெடுப்பதற்கான சாத்தியங்கள் குறித்தும் ஆராயப்பட்டுவருகின்றன. புவியின் மேற்பரப்புப் போன்று ஏனைய விண்பொருட்களின் மேற்பரப்புக்கள் மனித வாழ்விற்கு உகந்தவையாகக் காணப்படவில்லை. அம்மேற்பரப்புக்களில் உயிரினங்கள் வாழ்வதற்கேற்ற உவப்பான காலநிலை காணப்படாததுடன், ஆபத்தான அண்டவெளிக் கதிர்களின் தாக்கம், அதிகரித்த விண்பொருட்களின் மோதல் என்பவை உயிராபத்தினை ஏற்படுத்துபவையாகக் காணப்படுகின்றன.
விண்வெளியில் மனிதர் குடியேறுவதற்கு முன், மேற்குறிப்பிட்ட அபாயங்களிலிருந்து பாதுகாப்பளிக்கும் வாழ்விடங்களைக் கட்டமைப்பது என்பது கட்டாயமானது. அண்மையில், நெதர்லாந்தின் Noordwijk இல் அமைந்துள்ள ஐரோப்பிய விண்வெளி தொழில்நுட்பக்கூடத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் முப்பரிமாணப் பதியிகள் ஊடாக சந்திரனில் காணப்படும் மூலப்பொருட்களைப் பயன்படுத்திப் பாதுகாப்பான வதிவிடங்களை ஆக்கும் வழிமுறைகள் குறித்துக் கலந்துரையாடப்பட்டுள்ளது. இக்கலந்துரையாடலில் 350 இற்கும் மேற்பட்ட அறிவியலாளர்கள் கலந்து கருத்துப்பரிமாறல்களை மேற்கொண்டனர்.
சந்திரனில் மனிதக் குடியேற்றங்கள் ஏற்படுத்தும் எண்ணம் ஈடேற வேண்டுமெனில், அதற்கான அனைத்து விநியோக நடவடிக்கைகளும் புவியிலிருந்தே மேற்கொள்ளப்படவேண்டும். எனவே, பாதுகாப்பான வாழ்விடக் கட்டமைப்புக்களைக் கட்டியெழுப்புவதற்கு அனைத்துப் பொருட்களையும் புவியிலிருந்து கொண்டு செல்வதென்பது பாரிய செலவினை ஏற்படுத்துவதாக அமையும். ஆதலால், சந்திரனின் மேற்பரப்பில் காணப்படும் மூலப்பொருட்களை முப்பரிமாணப் பதியி ஊடாக தேவைக்கு ஏற்ற வடிவமாக மாற்றியமைத்து, புவியிலிருந்து கொண்டு செல்லப்படும் அவசியமான கட்டமைப்புப் பொருட்களுடன் இணைத்து, சந்திரனில் உட்கட்டுமானங்களைக் கட்டியெழுப்புவது தொடர்பாக ஐரோப்பிய விண்வெளி ஆய்வாளர்கள் சிந்தித்து வருகின்றனர்.
நடைபெற்ற கலந்துரையாடலில் முன்மொழியப்பட்ட திட்டத்தின் பிரகாரம், புவியிலிருந்து கொண்டுசெல்லப்படும் கட்டமைப்பு, காற்றினால் நிரப்பப்பட்டு கவிகை வடிவிலான வாழ்விடம் கட்டமைக்கப்படும். பின்னர்,
அதன் வெளிப்பகுதி, சந்திரனின் மேற்பரப்பில் காணப்படும் மூலப்பொருட்களை முப்பரிமாணப்பதியி வாயிலாக உரிய வடிவங்கள் ஆக்கி காப்புறை இடுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இக்காப்புறை சந்திரனின் உயர்வெப்பநிலை மாறல்கள் அகப்பகுதியைச் சென்றடையாமல் தடுப்பதுடன், அண்டவெளிக் கதிர்ப்புக்கள், விண்பொருள் மோதுகைகள் ஆகியவற்றிலிருந்தும் பாதுகாப்பதாக அமையும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் இதன் மேற்பரப்பில் அமைக்கப்படும் பாதுகாப்புடன் கூடிய சாளரங்கள் சூரிய ஒளியை உள்ளே அனுமதித்து வாழ்விடத்தின் அகப்பகுதியை பகல் நேரங்களில் ஒளியூட்டும்.
சந்திரனின் மேற்பரப்பிலான வாழ்விடம், மேற்குறிப்பிட்ட தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி மூன்று புவி மாதங்களில் கட்டியெழுப்பப்பட இயலும் என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இது, நான்கு விண்வெளி வீரர்கள் வதிந்து தமது ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போதுமான அகக் கனவளவினைக் கொண்டதாக காணப்படும். எதிர்வரும் 40 வருடங்களில் இவ்வகையான கட்டமைப்புக்கள் ஐரோப்பிய விண்வெளி ஆய்வகத்தினால் சந்திரனில் அமைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகின்றது.
லேபிள்கள்: யோ உஜேயந்தன்
பக்குவமற்ற இளம் ரீன் ஏஜ் வயதுடைய பிள்ளைகள் நல்லது கெட்டது எது என்பது பற்றி சீர்தூக்கி பார்த்து தீர்மானங்களை எடுக்க முடியாத வயதினர். இவர்களின் அனுபவமற்ற தன்மையும் அறியாமையும் இவர்கள் தவறுகளில் சிக்குவதற்கு காரணமாக இருக்கின்றன. இவர்களது நடவடிக்கைகள் மீது பெற்றோர் கண்காணிப்பாக இருப்பதுடன் அவர்களது மனநிலைகளை புரிந்து அவர்களுக்கு ஒரு நல்ல ஆலோசகராகவும் அவர்களுடன் நட்பாகவும் அதே நேரம் கட்டுக்கோப்பாகவும் அவர்களை வழி நடத்த வேண்டும். ஆனால், பெற்றோர்களோ இன்றைய பொருளாதாரம், தமது முன்னேற்றங்கள், தமது உயர்கல்வி, பதவி உயர்வு, போட்டிகள், பொருள்தேடுதல் மற்றும் அவர்களின் தனிப்பட்ட நடவடிக்கைகள் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து முழு மூச்சாக ஓடிக்கொண்டேயிருக்கிறார்கள். இந்நிலையில் தமது பிள்ளைகள் கல்வி நடவடிக்கைகளிலேயே தம்மை முற்றும் முழுதாக ஈடுபடுத்தியிருக்கிறார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் இருந்து வருகிறார்கள். இறுதியில் தமது பக்குவமற்ற வயதிலுள்ள பிள்ளைகள் விடுவிக்கப்பட முடியாத சிக்கல்களில் சிக்கிய பின்னரே திரும்பிப் பார்க்கின்றனர்.
ரீன் ஏஜ் இளம் வயதினருக்கு எவ்வாறான வழிகளில் தவறான தொடர்புகள் ஏற்பட முடியும்?
இவ்வாறான இளம் வயதினருக்கு சில சந்தர்ப்பங்களில் வீடுகளில் தனிமையே துணையாகிறது. இவர்களுக்கு கண்காணிப்பற்ற தனிமை என்பது மிகவும் ஒரு ஆபத்தான விடயம் என்பதை எவரும் உணர்வதில்லை. இப்பராயத்தினர் இரு வழிகளில் தவறான தொடர்புகளுக்கும் சிக்கல்களுக்கும் முகம் கொடுக்கிறார்கள். முதலாவது வழி இவர்களது அறியாமையே பலவீனமாகப் பயன்படுத்தி வீடுகளில் வந்துபோகும் தெரிந்தவர்கள், உறவினர்களாலேயே ஏற்படக் கூடும். அதாவது இவர்கள் இப்பிள்ளைகளுடன் அன்பாகப் பேசி நட்பாகப் பழகி தகாத உறவுவரை கொண்டுசெல்ல முடியும். இப்பிள்ளைகளோ இது குறித்து அறிவோ அனுபவமோ இல்லாமையினால் இவ்வாறான வலைகளிற்குள் சிக்கிக்கொள்ளும் பரிதாபம் ஏற்படுகின்றது.
இரண்டாவது வழி இப்பிள்ளைகள் வெளி செல்லும் போது ஏற்படும் ரீன ஏஜ் காதல் தொடர்புகள் மீளமுடியாத சிக்கல்களுக்கு முகங்கொடுக்குமளவிற்கு போய்விடுகின்றன. இவற்றிற்கு பக்க பலமாக இவர்களின் கைகளில் கொடுக்கப்பட்ட கையடக்கத் தொலைபேசிகள், கணினிகள் இணையத்தளங்கள் பேஸ்புக் என்பன அமைகின்றன. தமது பிள்ளைகள் அந்தளவிற்கு போகமாட்டார்கள் என பெற்றோர்கள் தமது மனங்களில் கொண்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கை எனும் பலமே இவ்வாறான சிக்கல்கள் ஏற்படுவதற்கான பலவீனமாக மாறுகின்றது.
இவ்வாறான ரீனேச் பருவத்தில் ஏற்படும் தவறான தொடர்புகளின் பின் விளைவுகள் எவை?
தவறான தொடர்புகள் இளம் பிள்ளைகளில் மீளமுடியாத உளவியல் உடற் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. உளவியல் தாக்கங்கள் என்கின்ற போது பிள்ளைகள் பிற்கால வாழ்க்கையிலும் தமது திருமண வாழ்க்கையிலும் பயந்தவர்களாகவும் தன்னம்பிக்கை இழந்தவர்களாகவும் வாழ்க்கையில் வெறுப்புடையவர்களாகவும் உளவியல் ரீதியாகவே தீர்க்கப்பட முடியாத மனத்தாக்கங்களில் சிக்கித் தவிக்கின்றனர். அத்துடன் கல்வியில் திறமைகளை வெளிக்காட்டும் தன்மை மங்கிப்போவதும் திருமண வாழ்க்கையில் வெற்றியடைய முடியாத பிரிவுகளுக்கும் பிரச்சினைகளுக்கும் முகங்கொடுப்பது வழமையாகி விடும்.
உடல் ரீதியான தாக்கங்கள் என்கின்ற போது பாலியல் தொற்று நோய்களுக்கு உள்ளாதல், வேண்டப்படாத கருத்தரித்தல், கன்னித்தன்மை இழக்கப்படுதல் என முக்கிய மருத்துவ ரீதியான சிக்கல்கள் ஏற்படுகின்றன. இதன் பின்னர் இதற்கான தீர்வுகளுக்காக எமது பெற்றோர்கள் ஏங்க வேண்டி உள்ளது.
ரீனேச் பருவத்தினரின் பிரச்சினைகளை தடுப்பது எவ்வாறு?
பெற்றோர்களாகிய நாங்கள் முதலில் இவ்வயது பிள்ளைகள் எதிர்கொள்ளக்கூடிய பிரச்சினைகள் குறித்தும் அறிந்திருக்க வேண்டும். அத்துடன் இவ்வயது பிள்ளைகள் பக்குவமற்ற வயதுடையவர்கள் அறியாமையிலும் அனுபவமற்ற தன்மையிலும் உள்ளவர்கள் என்பதனை மறந்துவிடக் கூடாது. இவர்களால் ஒரு அறிவியல் ரீதியான தீர்மானங்களை எடுக்க முடியாது என்பதனை நாம் அறிந்திருக்க வேண்டும்.
இவர்களைக் கண்காணிக்க கண்டிப்புடன் நாம் நடந்து கொள்வதன் மூலம் வெற்றி கொள்ள முடியாது. இவ்வாறு கண்டிப்புடன் நடக்கும் பெற்றோர்களின் பிள்ளைகள் அன்பையும் அரவணைப்பையும் வெளியிடங்களில் தேடுவார்கள். தமது உணர்வுகளையும் மன நிலைகளையும் வெளியார்களுடனேயே பகிர்ந்து கொள்வார்கள். இதனை வெற்றி கொள்ள நாம் எமது பிள்ளைகளுக்கு ஒரு விதத்தில் நல்ல நண்பர்களாகவே நடந்து கொண்டு அவர்களை மனம்விட்டுப் பேச சந்தர்ப்பம் வழங்கி அவர்களது மனநிலைகளை அறிந்த வண்ணம் இருக்க வேண்டும். இதன் மூலமே அவர்களைச் சுற்றியிருக்கும் சூழலையும் அவர்களது உணர்வுகள் குறித்தும் அறிந்து அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.
இப்பராயத்தினருக்கு தனிமை ஆபத்தானது. எனவே இதற்கான சந்தர்ப்பங்களைத் தவிர்க்க வேண்டும். அத்துடன் குடும்பத்திற்குள் வந்து போகும் அறிந்தவர்களால் ஏற்படக்கூடிய துஷ்பிரயோகங்கள் குறித்து அறிந்திருக்க வேண்டும். ஆகையால் எமது பிள்ளைகளை அனுமதியின்றி தொடுவதற்கு எவரையும் அனுமதிக்கக் கூடாது என பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். கூடுதலாகவும் தொடர்ச்சியாகவும் எவரும் தொடுகையை ஏற்படுத்தினால் பிள்ளைகள் உடனடியாக பெற்றோர்களிடம் முறையிடுவதற்கோ அல்லது கூச்சலிட்டு கத்துவதற்கோ கற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.
எமது பிள்ளைகளை மட்டுமே அறிந்திருந்தால் போதாது அவர்களைச் சுற்றியிருக்கும் நண்பர்கள் எப்படிப் பட்டவர்கள் என்பதனை பற்றி ஒரு கண்ணோட்டம் இருக்க வேண்டும்.
பக்குவமற்ற இளம் வயதினர் கைகளில் உள்ள கையடக்கத்தொலைபேசிகள் இணையத்தளங்களால் ஏற்படும் தொடர்புகள் நன்மை தீமைகள் குறித்து அறிந்திருக்க வேண்டும்.பாலியல் கல்வியின் பங்களிப்பு என்ன?
இளம் பராயத்தினரையும் ரீன் ஏஜ் இது போன்ற தவறான தொடர்புகளுக்கும் உறவுகளுக்கும் ஆளாகாமல் தவிர்ப்பதற்கு பாலியல் கல்வி உதவியளிக்கும் என முடிவு செய்து மேலைநாடுகளில் அதனை நடைமுறைப்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் தொடுகையிலிருந்து ஆரம்பிக்கும் உறவுகள் எதுவரை சென்று முடியும் என ஆரம்பத்திலேயே பிள்ளைகள் அறிந்திருப்பார்கள்.
இதன் மூலம் சம்பவங்களை ஆரம்பத்திலேயே தடுப்பதற்கும் தவிர்ப்பதற்கும் அவர்களால் முடிந்திருக்கக் கூடும். ஆனால் எமது பிள்ளைகளிற்கு இது போன்ற அறிவுகள் இல்லாமையினால் எல்லாம் முடிவடைந்த பின்னரே விளைவுகளை உணர்கின்றார்கள். ஆனால், இன்னொரு பக்கத்தை பார்ப்போமாயின் பாலியல் கல்வியின் ஆரம்ப அறிவுகள் சிறுவர்களை தவறாக வழி நடத்தவும் அவர்களின் மனங்களைச் சிதைக்கவும் உதவியளித்துவிடுமே என அச்சமாகவும் உள்ளது.
எனவே, பாலியற்கல்வியின் இரு புறங்களையும் சீர்தூக்கிப் பார்த்தால் இது எந்தளவிற்கு நடைமுறையில் பயனளிக்குமென விவாதித்துக்கொண்டே போகலாம்.
ஆனால், அளவான பாலியல் தொடர்பான ஆரம்ப அறிவு பாடசாலை மட்டத்தில் இருப்பது நடைமுறையில் நடந்து கொண்டிருக்கும் பல வித சிக்கல்களிலிருந்து சிறார்கள் தப்பித்துக் கொள்வதற்கு அவர்களுக்கு உதவியளிக்குமென நம்புகின்றேன்.
ujeyanthan
லேபிள்கள்: யோ.உஜேயந்தன்
லேபிள்கள்: யோ. உஜேயந்தன்