திங்கள், 6 ஜூன், 2011

கல்வியில் வினைத்திறன், விளைதிறன் என்பது

முகாமைத்துவ சிந்தனைகளில் மிக முக்கியத்துவம் வாய்ந்த எண்ணக்கருக்களே வினைத்திறன், விளைதிறன் என்பவையாகும். இவை இரண்டும் சிறந்த முகாமைத்துவத்திலிருந்து பிரிக்க முடியாத அம்சங்களாகும். எனவே இவ்விரண்டு எண்ணக் கருக்களையும் சுருக்கமாக நோக்குவோம்.
வினைதிறன்
(Efficiency) :-
மனித வளம், பெளதீக வளம், நிதி வளம், பொருள் வளம், கால வளம் போன்ற சகல வளங்களையும் சரியான செயல்களுக்குச் சரியாகப் பயன்படுத்தி விரயத்தைத் தவிர்த்து அவற்றால் உச்சப் பயனைப் பெற்றுக் கொள்வதற்கு எடுக்கப்படும் முயற்சியே வினைத்திறன் எனப்படும். சுருங்கக் கூறின். வளங்களைச் சரியாகவும் சிக்கனமாகவும் பயன்படுத்தும் செயன் முறையே வினைதிறன் எனலாம்.
வினைத்திறன் உள்Zடுகளுடன் தொடர்புடையது. அதாவது இழிவளவான வளங்களைக் கொண்டு உச்சப் பயனைப் பெற முடியுமாயின் அதுவே வினைத்திறனின் மிக உயர் கட்டமாக இருக்கும்.
விளைத்திறன்
(Effectiveness) :-
இதனை செயல்திறன் அல்லது பயனுறுதி என்றும் கூறுவர். தீர்மானிக்கப்பட்ட குறிக்கோளை அடைந்து கொள்வதுடன் தொடர்புடைய அம்சமே விளைத்திறனாகும். ஏற்கனவே சரியாகத் தீர்மானித்துக் கொண்ட நோக்கங்களை உயர்ந்த மட்டத்தில் நிறைவேற்றிக் கொள்வதனை விளைத்திறன் எனலாம். இன்னொரு விதத்தில் கூறுவதாயின் குறித்த காலப் பகுதிக்குள் எதிர்பார்த்த நோக்கத்தை வெற்றிகரமாக அடைதல் விளைதிறன் என்று கூறலாம்.
விளைதிறன் வெளியீடுகளுடன் தொடர்புடையதாகும். ஒரு பாடசாலையைப் பொறுத்த வரையில் கல்விப் பெறுபேறுகள், இணைப்பாட விதானச் செயற்பாடுகளின் அடைவுகள், மாணவர்களின் நடத்தைகள் என்பவையே வெளியீடுகளாகக் காணப்படுகின்றன.
சிறந்த முகாமைத்துவமுள்ள இடத்தில் வினைத்திறனும், விளைதிறனும் உயர்ந்த அளவில் இருக்கும். முகாமைத்துவம் பலவீனம் அடையும் போது இவை இரண்டும் அல்லது இவற்றில் ஒன்று குறைந்து காணப்படும்.
வினைத்திறன், விளைதிறன் என்பவை உயர்ந்த மட்டத்தில் பேணப்படும் பாடசாலைகள் பல்வேறு சிறந்த பண்பியல்புகளைக் கொண்டிருப்பதைக் காணலாம். அவ்வாறான பாடசாலைகளின் பண்பியல்புகளில் முக்கியமானவையாகப் பின்வருவனவற்றை அடையாளப்படுத்தலாம்.
சிறந்த தலைமைத்துவம்:
வினைத்திறன், விளைதிறன் என்பனவற்றை ஏற்படுத்த சிறந்த முகாமைத்துவம் அவசியமாகும். சிறந்த முகாமைத்துவத்திற்கு சிறந்த தலைமைத்துவம் இன்றியமையாததாகும். இந்த வகையில் தலைமைத்துவ ஆளுமைகளை அதிகளவு கொண்டுள்ள அதிபர்கள் இப்பாடசாலைகளைத் தலைமை தாங்கி நடத்திச் செல்வதைக் காணலாம். இவர்கள் எல்லா நடவடிக்கைகளையும் நன்கு திட்டமிட்டு, வேலைகளைப் பகிர்ந்தளித்து, ஒழுங்குபடுத்தி, கண்காணித்து நடைமுறைப்படுத்துபவர்களாக இருப்பர்.
ஒழுங்கான முகாமைத்துவக் கட்டமைப்பினைப் பேணல்
அதிபர் தலைமை தாங்க அவருக்கு உதவும், அவருடன் இணைந்து செயற்படும் பிரதி அதிபர், உதவி அதிபர்கள், பகுதித் தலைவர்கள், பாட இணைப்பாளர்கள், வகுப்பாசிரியர்கள், முகாமைத்துவக் குழு, ஒழுக்காற்றுக் குழு, மாணவத் தலைவர்கள் என்று சிறந்த முகாமைத்துவக் கட்டமைப்பு இப்பாடசாலையில் காணப்படும். இது பாடசாலைகளின் தரத்திற்கேற்ப மிக விரிந்த அளவில் அல்லது குறுகிய அளவில் இருக்கும்.
பாடசாலையில் கற்றல், கற்பித்தல் சிறப்பான வகையில் நடைபெறுதல்
பாடசாலைகளைப் பொறுத்த வரையில் கற்றல், கற்பித்தலே முக்கியத்துவம் பெறுகின்றன. இந்த அடிப்படையில் நோக்கும் போது வினைத்திறன், விளைதிறனுள்ள பாடசாலைகளில் திட்டமிட்ட நேர அட்டவணைக்கேற்ப உரிய வேளைகளில் உரிய பாடங்கள் வகுப்பறைகளில் கற்பிக்கப்படுவதுடன் மாணவர்களும் கற்றலில் ஆர்வத்துடன் ஈடுபடுவதை அவதானிக்க முடியும்.
ஆசிரியர்கள் உற்சாகமாகவும், அர்ப்பணிப்புடனும், கூட்டாகவும் பணியாற்றுவர்:
இப்பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்கள் மாணவர்களினதும், பாடசாலையினதும் நலனைக் கருத்திற் கொண்டு ஈடுபாட்டுடன் ஒன்றாக இணைந்து செயற்படும் தன்மையைக் காணலாம். இவ்வாசிரியர்கள் அதிபரினதும் முகாமைத்துவக் குழுவினதும் அறிவுறுத்தல்களுக்கேற்ப செயற்படுவர்.
மாணவர்களின் இடைவிலகல் குறைந்து காணப்படும்:
மாணவர்கள் இடைவிலகும் தன்மை இப்பாடசாலைகளில் குறைந்திருப்பதுடன் இப்பாடசாலைகளில் கற்கச் சேர்ந்த மாணவர்கள், வேறு பாடசாலைகளுக்கு விலகிச் செல்வதைக் கூடத்தவிர்த்து பெருமளவு இங்கேயே கல்வி நடவடிக்கைகளை தொடர்வதைக் காணலாம்.
இடைத்தொடர்புகள்
சீராக இருத்தல்:
அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோருக்கிடையிலான இடைத் தொடர்புகள் சிறப்பாக இருப்பதுடன் இவர்களுக்கிடையில் நல்லுறவு பேணப்படும். குறித்த விடயங்களில் இவர்கள் அனைவரும் ஒற்றுமையுடனும் அர்ப்பணிப்புடனும் இணைந்து செயற்படுவதைக் காணலாம்.
மாணவர்களின் பரீட்சைப் பெறுபேறுகள் உயர்ந்து இருத்தல்:
பொதுவாக பாடசாலை மட்டத்தில் நடைபெறும் பரீட்சைகளிலும் குறிப்பாக இலங்கைப் பாடசாலை மாணவர்களுக்குப் பொதுவாக நடைபெறும் ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை, க. பொ. த. (சா/த), க. பொ. த. (உ/த) பரீட்சைகளிலும் மாணவர்கள் பெற்றுள்ள பெறுபேறுகள் இப்பாடசாலைகளில் உயர்ந்த அளவிலேயே இருக்கும்.
இணைப்பாடவிதானச் செயற்பாடுகளும் அடைவுகளும் உயர்ந்த நிலையில் இருத்தல்:
இணைப் பாடவிதானச் செயற்பாடுகளான விளையாட்டு, ஆக்கச் செயற்பாடுகள், தமிழ்த் தினம், ஆங்கில தினம், சித்திரப் போட்டிகள், மாணவர் மன்றம் போன்ற எல்லா விடயங்களிலும் இப்பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும் உற்சாகத்துடன் ஈடுபடுவர். மேலும் இவ்விடயங்களில் இடம்பெறும் கோட்ட மட், வலய மட்ட, மாகாண, மாவட்ட மட்ட, தீவு மட்டத்திலான போட்டிகளில் இப்பாடசாலை மாணவர்கள் கலந்து கொள்வதுடன் அவற்றில் வெற்றி பெறக் கூடியவர்களாகவும் சாதனைகளை நிகழ்த்தக் கூடியவர்களாகவும் இருப்பர்.
மாணவர்களினதும், ஆசிரியர்களினதும் சிறந்த அடைவுகள், திறமைகள் பாராட்டப்படல்;
இப்பாடசாலைகளில் திறமை காட்டும் மாணவர்களும் ஆசிரியர்களும் வைபவங்கள் விழாக்களின் மூலம் பாராட்டப்படுவர். புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெறும் மாணவர்கள், க. பொ. த. (உ/த), க. பொ. த. (சா/த) பரீட்சைகளில் அதிகூடிய பெறுபேறுகளைப் பெறும் மாணவர்கள், பல்கலைக்கழக அனுமதி பெறும் மாணவர்கள், இணைப்பாட விதானச் செயற்பாட்டு போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்கள் இவ்வாறான மாணவர்களுக்கு கற்பித்த, பயிற்சி அளித்த ஆசிரியர்கள் பாடசாலைக்கு பல வழிகளிலும் புகழ் தேடித் தந்த மாணவர்கள் ஆகியோர் அடிக்கடி பாராட்டப்படுவர். இதற்காக பரிசளிப்பு விழாக்கள், ஆண்டு இறுதி விழாக்கள் என்பன இப்பாடசாலைகளில் ஒழுங்குபடுத்தி நடைமுறைப்படுத்தப்படுவ தைக் காணலாம்.
சிறந்த ஒழுங்கமைப்பும் அழகிய சூழலும் காணப்படும்:
இப்பாடசாலையின் வகுப்பறைகள் ஏனைய கட்டிடங்கள் சரியாக ஒழுங்கு படுத்தப்பட்டிருப்பதுடன், இயற்கை நிலையைக் கொண்டும் உள்ள வளங்களைப் பாவித்தும் வகுப்பறை சூழலும் பாடசாலையின் வெளிச்சூழலும் அழகு படுத்தப்பட்டிருப்பதையும் அவதானிக்கலாம்.
போதியளவு வளங்களும், வளப்பயன்பாடும் காணப்படல்:
பாடசாலைக்குத் தேவையான வளங்களை பாடசாலை நிர்வாகம் பல்வேறு வழிகளில் முயற்சிகளை மேற்கொண்டு பெற்றுக் கொடுக்கும். இது அரசின் ஊடாக அல்லது அரச சார்பற்ற நிறுவனங்களின் ஊடாக அல்லது பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம், நலன் விரும்பிகள் போன்றோரினூடாகப் பெறப்படலாம். பாடசாலைகளின் தரத்திற்கும் தேவைக்கும் ஏற்ப வளங்கள் பெறப்படும். இதன் அடிப்படையில் விஞ்ஞான கூடம், கணனிப் பிரிவு, ஒலி, ஒளி அறை, நூலகம், கற்றல், கற்பித்தல் சாதனங்கள் என்று வளங்களின் பட்டியல் நீண்டு செல்லும்.
இதேவேளை இவ்வளங்கள் உரிய முறையில் பயன்படுத்தப்படுவதையும் காணலாம். பெளதீக வளங்களுடன் போதியளவு மனித வளமும் இப்பாடசாலையில் இருக்கும்.
பாடசாலைக்கும் சமூகத்திற்கும் நல்ல தொடர்பிருத்தல்:
சமூகத்துடன் நெருங்கிய தொடர்புடைய பாடசாலையாக இது இருக்கும். பெற்றோர் இப்பாடசாலையுடன் நல்ல தொடர்பு வைத்திருப்பதுடன் பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பெற்றோர், ஆசிரியர் சங்கம், பழைய மாணவர்கள் சங்கம் என்பனவற்றினூடாகவும் இப்பாடசாலைக்கும் சமூகத்திற்கும் இடையிலான தொடர்புகள் அதிகரிக்கப்படும்.
விழுமியங்களும் ஒழுக்கப் பண்புகளும் பேணப்படல்:
இப்பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர்களும் கற்கும் மாணவர்களும் நற்பண்புடையவர்களாகவும் விழுமியங்களைப் பேணுபவர்களாகவும் சிறந்த நடத்தைகளைக் கொண்டவர்களாகவும் இருப்பர். ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கிடையில் நல்லுறவு பேணப்படுவதையும் காணலாம்.
பாடசாலையின் தரவுகள் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதுடன் அறிக்கைகள் பேணப்படல்,
பாடசாலையின் முக்கிய தகவல்கள் மாணவர்கள் தொகை, ஆசிரியர் தொகை, வரைபடம், முக்கிய குழுக்கள், இலக்கு, பணிக்கூற்று, இலச்சினை போன்றவை காட்சிப்படுத்தப்பட்டிருப்பதுடன் பாடசாலையின் சகல நடவடிக்கைகளும், கணக்குகளும் சரியாக அறிக்கைப் படுத்தப்பட்டிருப்பதையும் அவதானிக்கலாம்.
இவ்வாறான பல சிறந்த பண்பியல்புகளை வினைத்திறன், விளை திறனுள்ள பாடசா லைகளில் காணலாம். ஒரு பாடசாலையை வினைத்திறன், திளைதிறனுள்ள பாடசாலையாக மாற்றுவதற்கு அப்பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர், முகாமைத்துவக் குழு, அப்பாடசாலையுடன் தொடர்புபட்ட சங்கங்கள், கல்வி அதிகாரிகள் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவது அவசியமாகும்.

லேபிள்கள்:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு