புதன், 27 ஏப்ரல், 2011

முன்பள்ளி கல்வியின் அவசியம்

இன்று எங்கு பார்த்தாலும் மாணவர் முன்பள்ளி நிலையங்களுக்கான விளம்பரங்கள் கண்ணைப் பறிக்கின்ற அளவுக்கு பெரிய பெரிய விளம்பரப் பலகைகளாக வீதிகள் தோறும் தொங்கவிடப்பட்டு காட்சிப்படுத்தப்படுகின்றன. இக்காலங்களில் குறிப்பாக வருட இறுதியிலும் ஆரம்பத்திலும் காண்கின்றோம்.
பொதுவாக இன்று கிராமங்களில் கூட ஆரம்பிக்கப்படுகின்ற முன்பள்ளிக் கூடத்திலும் ஆங்கிலத்தில் வகுப்புக்கள் நடாத்தப்படும் என்கிற பிரச்சாரம் பலமாகவே இருக்கும். பெற்றோரும் ஏதோ பிள்ளை சிறு பராயத்தில் சில ஆங்கிலச் சொற்களை பயில்வது நல்லதுதானே என்கிற எண்ணத்தில் பணத்தை வாரியிறைக்கின்றனர். முன்பள்ளிகளில் போட்டி போட்டுக்கொண்டு சேர்க்கின்றனர்.
ஆனால் அங்கு யார் யாரால் பிள்ளை பராமரிக்கப்படுகிறது என்றெல்லாம் எதுவுமே பார்க்கமாட்டார்கள். பாடத்திட்டத்தை தாண்டி பயிற்சிக் கொப்பிகளும், புத்தகங்களும் வாங்கிக்கொடுத்து முதுகில் பாரிய சுமையுடன் அனுப்பும் பெற்றோர்கள் கூட இக்கல்வியின் பயன்பாடுகள் பற்றிய அறிவின்றிச் செயற்படுவதுதான் பரிதாபத்திற்குரியதாகும்.
இன்று முன்பள்ளி எனப்படுகின்ற பாலர் கல்வியின் அவசியம் குறித்து பல்வேறு மட்டங்களில் பேசப்பட்டாலும் அது முறைசார்ந்த அமைப்புக்கள் ஊடாக இன்னும் வந்து சேரவில்லை. பாடசாலைக்கு தரம் ஒன்றில் சேரும் பிள்ளையை கையாளுவதற்கான முன்னோடித் திட்டமாகவே இம் முன்பயிற்சி அமைகிறது. ‘இங்குள்ளவர்கள் இவ்விளம்பராயத்துப் பிள்ளைகளை கையாளுவதற்குரிய பயிற்சிகளோ, பாடத் திட்டங்களோ இன்றியும் காணப்படுகின்றனர். இது பிள்ளையின் ஆக்கவூக்கத்திறனை மழுங்கடிக்கச் செய்கின்ற ஒரு விடயமாகவும் கொள்ளப்படுகிறது.
ஒரு காலகட்டத்தில் இலங்கையின் நகரங்களில் மட்டுமே இயங்கிய இப்பாலர் பாடசாலைகள் இன்று அனைத்து இடங்களிலும் காணப்படுகின்றன. இது கல்வியின் தேவையும், அவசியமும் உணரப்பட்டுள்ளமையைத் தெளிவாக்கியுள்ளது. அதனால்தானோ என்னவோ முன்பள்ளி நிலையங்களின் அதிகரிப்பும் காணப்படுகிறது.
போதிய வளப் பற்றாக்குறையுடன் இவை நடாத்தப்படுவதும் பெரும் குறைபாடாகக் கொள்ளலாம். இக்குறைபாடுகளை நிவர்த்தி செய்து பெளதீக வளத்தைக் கொண்டு செயற்பாடுகளுடன் கூடிய கற்றலையே இந்நிலையங்கள் ஆற்றவேண்டும். அதனைவிடுத்து வளப்பற்றாக்குறையுடன் அமைந்த கற்றலானது மாணவர்களின் எதிர்காலத்தையே சூனியமாக்கிவிடும். இதனால் நேரடியான கண்காணிப்பும், பார்வையும் அவசியமாகும்.
கடந்தகாலங்களில் பாலர் பாடசாலைக்கான திட்டங்கள் அரசினால் தயாரிக்கப்பட்டு, அதன் முக்கியத்துவமும் உணர்த்தப்பட்டிருந்தன. கடந்த 1953 ஆம் ஆண்டில் பாலர் பாடசாலைக்கான, பாடத்திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இவை “வேலைக்குகந்த மகிழ்ச்சி நிறைந்த இடங்களாக” அமையவேண்டும் என இத்திட்டத்தின் மூலம் எதிர்பார்க்கப்பட்டது.
இருப்பினும் இத்திட்டத்தின் நோக்கம் சரியான முறையில் அமையப் பெறாததால் உரிய இலக்கை அடையவில்லை. தொடர்ந்து 1961 ஆண்டில் தேசிய கல்வி ஆணைக்குழு பேராசிரியர் ஜே. ஈ. ஜயசூரிய தலைமையில் முன்பள்ளிகளின் அவசியம் சம்பந்தமான கருத்துக்களை அன்று தெரிவித்திருந்தது.
4 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முன்பள்ளி நிலையங்கள் வீட்டுச் சூழலில் உருவாக்கப்படுவதுடன் பிள்ளைகளின் உடல், உள விருத்தியுடன், முதிய ஆசிரியர் ஒருவரின் கண்காணிப்புடனும், உள்ளூராட்சி மற்றும் கல்வித் திணைக்களத்தின் அனுசரணைகளுடனும் இருக்க வேண்டும் எனப்பட்டது. பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தான் இங்கு கற்பிக்க வேண்டும் எனப் பல சிபாரிசுகள் முன்வைக்கப்பட்டன. இருப்பினும் அத்திட்டம் அரசின் போதிய அனுசரணையின்றி சோபையிழந்து போயிற்று.
தொடர்ந்து 1972 ஆண்டில் அரசினால் வெளியிடப்பட்டிருந்த புதிய கல்விச் சீர்திருத்தத்தில் முன்பள்ளிக் கல்வியின் அவசியம் பற்றியும் கூறப்பட்டிருந்தது. இருப்பினும் அதில் அரசின் பொறுப்புக்கள் செல்வாக்குச் செலுத்தவில்லை. பின்னர் கொண்டுவரப்பட்ட போகொட பிரேமரத்னா தலைமையில் சீர் செய்யப்பட்ட (1979) தேசிய கல்வி ஆணைக்குழுவின் சிபாரிசுகளும் முன்பள்ளி சம்பந்தமான முக்கியத்துவத்தை வலியுறுத்தி இருந்தன.
அதேவேளை கடந்த காலத்தில் (1997) கொண்டுவரப்பட்ட பொதுக் கல்விச் சீர்திருத்தங்களில் முன்பள்ளி பற்றிய உள்ளடக்கம் மிகவும் பலமானதாக அமையப் பெற்றிருந்தமை விசேட அம்சமாகும். அதில் “3 - 5 வயதுக்கிடைப்பட்ட பிள்ளையின் முழு வளர்ச்சி முக்கியமானது. அதைக் கடந்த காலத்தைவிட கல்வியமைப்பில் கூடியளவு கவனம் ஈர்க்கும் விடயமாக பார்க்கவேண்டியுள்ளது.
தகுந்த வழிகாட்டலும், சிறந்த மேற்பார்வையும், அரசின் கட்டுப்பாடும் அமைகின்றபோது கூடிய பலனைத் தரும்” என்றும் கூறப்பட்டிருந்தது. அத்துடன் நாட்டின் பல பகுதிகளிலும் முன்பள்ளி நிலையங்கள் நடத்தப்பட்டாலும் அவை சிறந்த தரத்தில் காணப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி ஜனாதிபதி செயலணிக்குழு பின்வரும் சிபாரிசுகளையும் அப்போது செய்திருந்தது. அதாவது;
1. 3-5 வயதிற்கிடைப்பட்ட பிள்ளைகள் கூடியளவில் பங்குபற்றுவதற்கேற்ற வகையில் அதிக எண்ணிக்கையில் முன்பள்ளிகளை உருவாக்கி அவற்றிற்கு வேண்டிய வசதிகளை ஏற்படுத்துதல்,
2. தகுந்த அதிகாரமுடையவர்களால் முன்பள்ளி ஆசிரியரின் தரம், பள்ளிவசதிகள், மேற்பார்வை போன்ற விடயங்களில் சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்வதன் மூலம் முன்பள்ளிகளை ஒழுங்கமைத்தல்.
3. பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சு, மற்றும் பொருத்தமான முகவர் நிலையங்களைச் சேர்ந்த இக் குறிப்பிடப்பட்ட துறையில் திறமை வாய்ந்தோரால் இம் முன்பள்ளிக்கான அடிப்படைப் பாடத்திட்டத்தை அமைத்தல், மாகாண அமைச்சுகளுக்கு இப்பாடத்திட்டத்தை கையளிக்கும் முன் தயாரிக்கப்பட்ட வழிகாட்டியை ஆதாரமாகக் கொண்டு முன்னோடிச் சோதனை நடாத்துதல் வேண்டும். எவ்வாறாயினும் இவ்வாறு தயாரிக்கப்பட்ட பாடத்திட்டம் ஓர் வழிகாட்டியாக மாத்திரம் அமையுமேயொழிய ஆசிரியர்களின் சுய ஆக்கங்களை மழுங்கடிப்பதாக அமையமாட்டாது.
4. கல்வி உயர்கல்வி அமைச்சு இம் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சிகளை வழங்குவதோடு அவர்களுக்கு மாதிரி கற்பித்தலை விருத்தி செய்து கற்றலுக்கான பாடநூல்களையும் வழங்கவுள்ளது என்றும்,
5. ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தில் பிள்ளை வளர்ச்சிக்கான திணைக்களமும், பிள்ளைக் கல்வி நிலையம் ஒன்றும் நிறுவப்படவுள்ளது. இந்நிலையமானது பிள்ளை வளர்ச்சி பற்றிய அறிவையும், ஆய்வையும் நடத்தி ஓர் தகவல்களைப் பெறும் வங்கியை உருவாக்குவதோடு நடைமுறைப்படுத்தப்படும் முன்பள்ளிக்கான நிகழ்ச்சித் திட்டங்களை மதிப்பீடு செய்யும் எனவும் கூறப்பட்டுள்ளதையும் காணலாம்.
இவற்றின் அடிப்படையில் முன்பள்ளி நிலையங்கள் அமையப் பெற்று வந்தாலும் இங்கே அடிப்படையான அம்சங்கள் இன்றியும், முன்பள்ளிகளை தனிநபர்கள் தான் விரும்பியபடி நடாத்துவதால் பிள்ளையின் ஆரம்பப்படியிலேயே பிழைகள் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் தோன்றுவதாக சில பெற்றோர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
பாடசாலைக் கல்விக்கான அத்திவாரமாக அமைவது இந்த முன்பள்ளிக் கல்வியாகும். பிள்ளையின் முழுமையான அபிவிருத்தியை முன்பள்ளிகளில் சமநிலை கொண்ட தரம் பேணும் தினச் செயற்பாடுகள் ஊடாக ஓழுங்கமைத்து நடைமுறைப்படுத்துதல் அவசியமாகும். கல்வி உளவியலாளர்களது கருத்தின்படி “மனித மூளையின் முக்கியமான வளர்ச்சிப் பருவமானது குழந்தை கருவிலிருந்து முதல் 5 வருடங்களில் தான் அமைந்துள்ளது.
குழந்தையின் உடல், உள சமூக அபிவிருத்தி, பெற்றோர் தமது பிள்ளையின் மீது காட்டுகின்ற கரிசனையில் தங்கியுள்ளது. அத்துடன் இவை பிள்ளையில் விருத்தியடைவதானது பெற்றோர் தகுந்த முறையில் கவனம் செலுத்தி பராமரிப்பதிலேயே தங்கியுள்ளது என கல்வி உளவியலாளர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
இதன் அடிப்படையில் இப்பருவப் பிள்ளைகள் இந்நிலையங்களில் கல்வி பயில்கையில் இவர்களை கையாள்பவர்கள் “ஆரம்பப் பிள்ளைப் பருவ அபிவிருத்தி ஆசிரியர்கள்” என அழைக்கப்படுகின்றனர். இவ்வாறான ஆசிரியர்கள் இப் பிள்ளைகள் மீது காட்டுகின்ற செயற்பாடுகள் அமைதியானதும் உறுதியானதும், உயிர்த் துடிப்புள்ளதுமான விளையாட்டு அனுபவங்களைக் கொண்டு அமைதல் வேண்டும்.
பிள்ளையின் தசைநார், நுண்ணியக்க, பேரியக்க, அபிவிருத்திக்கு வலுவூட்டுவதற்கு உந்து சக்தியாக அமைதல் வேண்டும். அப்போதுதான் ஆரம்பக் கல்வியை பெறக் கூடியதான மனோநிலை, மனோ தைரியம், அப்பிள்ளையின் உளமதில் பதிய ஆரம்பிக்கும். ஆடல், பாடல், கதைகூறல், அறிந்து கொள்ளல், வரைதல், ஒட்டுதல், காட்சிப்படுத்தல் போன்ற இன்னோரன்ன செயற்பாடுகளினுடாக பிள்ளையினது விருத்தித் திறனை மேம்பாடடையச் செய்கின்றதாய் அமைதல் வேண்டும். இச் செயற்பாடுகள் உரிய நேரத்தை வரையறுத்து மாணவர்களுக்கு அலுப்பூட்டாத வண்ணம் அமைத்துக்கொள்ளல் அவசியமாகும்.
எனவே, இவ்வாறு பல்வேறு கோணத்தில் முக்கியத்துவம் பெற்ற ஆரம்பப் பருவப் பிள்ளைகளுக்கான இக் கல்வியானது முறையாக அமைந்த புகுநிலைக் கல்வியாக அமைதல் வேண்டும். இதற்கு கூடியளவு முக்கியத்துவம் கொடுத்து தங்களது பிள்ளைகளின் எதிர்காலம் வியாபித்து அமைவதற்கு ஏற்ற கல்விச் சூழலை வழங்கும் முன்பள்ளி நிலையங்களை பெற்றோர் நாடுதல் அவசியம் என்பதை அறிந்து கொள்வதுடன், இளமையிற் கல்வி சிலையில் எழுத்து என்பதற்கொப்ப தராதரமற்ற முன்பள்ளி நிலையங்களும் பயிற்சிகள் அற்ற நிலையில் உள்ள ஆசிரியர்களும் இம்மாணவர்களை கையாள்கின்ற போது பிள்ளையின் கல்விப்போக்கு வேறுவிதமாக அமைவதற்கு ஏதுவாக அமைந்துவிடுகிறது.
இந்த நிலையை இல்லாமல் செய்வதற்கும், பிள்ளைகள் ஒழுங்கு முறையில் செயற்படுவதற்கும் முக்கியத்துவம் மிக்கதான முன்பள்ளி பாடசாலைகள் சிறந்து விளங்குவதற்கு ஏற்றவாறு அமைந்துள்ளதா? என்பதையும் உரியவர்களும், பிள்ளைகளைப் பராமரிக்கின்ற அமைப்புக்களும் உரிய கவனமெடுத்து இக்காலங்களில் தொங்கவிடப்படுகின்ற முன்பள்ளிக்கான விளம்பரப் பதாகைகளில் மயங்கிடாது உரியவாறான வசதிகளும், வாய்ப்புக்களும் உள்ள இடங்களை தெரிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அமையப் பெறாத நிலையங்களை உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் இதனுடன் தொடர்புள்ள அரச அமைப்புக்கள் கண்காணித்துக் கொள்வதுடன், அறவிடும் பணம், சட்ட ரீதியான பதிவுகள், நிலையத்தின் சுற்றுப்புறச் சூழல் போன்ற பல விடயங்களில் கவனத்தை செலுத்துதலும் அவசியமாகும்.

லேபிள்கள்:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு