வெள்ளி, 25 மார்ச், 2011

பாடசாலைக் கல்வி வளர்ச்சியில் தனியார் வகுப்புக்களின் தாக்கம்

இன்று வரை உலக வல்லரசு நாடுகளுக்கு சமனான கல்வி அறிவை கொண்ட நாடு இலங்கை ஆகும்.ஆயுத, செல்வ, தொழில் நுட்ப வளங்களை விட இலங்கை கல்வியை மாத்திரம் குறிக்கோளாகக் கொண்டு செயற்பட்டு வருகின்றமையே இதற்கான அடிப்படைக் காரணமாகும்.
இலங்கை அரசு வேறு எந்த சேவைக்கும் செலவு செய்யாத அளவு பணத்தை இந்தக் கல்விச் வேவைக்காக இன்றளவும் வாரி இறைத்துக்கொண்டிருப்பதே இதற்கு சிறந்ததோர் சான்றாகும்.
கடந்த காலங்களைப் பார்க்கின்றபோது மாணவர்கள் தமது கல்வித் தேவையை நிறைவு செய்யவென பாடசாலையை மாத்திரமே நம்பி வந்தனர். இதனால் இலங்கை அரசு பாடசாலைகள் தொடர்பாக மிகுந்த கரிசனையை செலுத்தி, அதெற்கென தனித்துவமான கருத்திட்டத்தை (Curriculum) உருவாக்கி, அக் கருத்திட்டத்தை அடைவதற்குத் தேவையான சகல வளங்களையும் பாடசாலைகளுக்கு வழங்கியது.
இதன் விளைவாக பாடசாலைகள், கல்வி ஊற்றெடுக்கும் இடங்களாக பெருமதிப்போடு போற்றப்பட்டும் பேணப்பட்டும் வந்தன.
கால ஓட்டத்தில் பாடசாலைகளில் கற்பிக்கின்ற ஆசிரியர்கள் தாம் கற்பிக்கின்ற பாட விதானங்களில் தெளிந்த விளக்கத்தை அளிப்பதற்கு பாடசாலை நேரத்தில் நேரம் போதாமையால் பாடசாலை தவிர்ந்த நேரங்களில் மாணவர்களை பிரேத்தியேகமாக அழைத்து தமது கற்பித்தலை மேற்கொண்டு சென்றனர்.
இவாகளுடைய இச்செயல் பாடசாலைகளில் எந்தவிமான தாக்கத்தையும் செலுத்தாத அதேவேளை பாடசாலையின் வளர்ச்சிக்கே பங்களித்தது.
இவ்வாறு ஆரம்ப காலத்தில் நல்லநோக்குடனே இலவசமாக ஆரம்பிக்கப்பட்ட இத்தனியார் வகுப்புக்கள் பிற்பட்ட காலங்களில் தமது நோக்கத்தை இழந்து, கல்வி வளங்களை மையமாகக்கொள்ள வேண்டிய நிலையிலிருந்து சறுகி பணத்தை மையமாகக் கொண்டு செயற்பட்டு, ஆசிரியர் சேவையினை ஆசிரியர் தொழிலாக மாற்றி விட்டுள்ளமையே கவலைக்குரிய விடயமாகும்.
நவீன தனியார் வகுப்புக்களின் பிரவாகப் பெருக்கினால் இலங்கை அரசுக்கு எதிர்காலத்தில் மிகப் பெரும் சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய ஒரு துரதிஷ்ட நிலை ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகும். சமகாலத்தில் இத்தனியார் வகுப்புக்கள் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் சிலவற்றை மாத்திரம் இங்கு அடிக்கோடிட்டுக் காட்டுவது பொருத்தம் என எண்ணுகின்றேன்.
01.பாடசாலை மாணவர் வருகை வீழ்ச்சி:
புத்தகக் கல்வியை மட்டுமே இலக்காகக் கொண்ட மாணவர்கள் தனியார் வகுப்புகளுக்குச் சென்று மிக விரைவாக தமது பாடத்திட்டத்தினை (Syllabus) பூர்த்தி செய்துவிடுவதால் தாங்கள் பாடசாலைக்கு வருகின்ற வீதத்தினை குறைத்துக் கொள்கின்றனர்.
எந்தளவுக்கு என்று சொன்னால் சில மாணவர்கள் பரீட்சை எழுதுவதற்கு மட்டுமே பாடசாலைகளுக்கு வருகின்றனர். இதனால் ஏனைய இணைப்பாட விதான செயற்பாடுகளுக்கும், பாடசாலை செயற்பாடுகளுக்கும் பொருத்தமான மாணவர்களைப் பெற முடியாமல் போகின்றது.
02. பாடசாலைக் கல்வியில் கவனம் செலுத்தாமை:
தனியார் வகுப்புகளுக்குச் செல்கின்ற மாணவர்கள் சில வேளை பாடசாலைக்கு வந்தாலும், அங்கு ஆசிரியர் கற்பிக்கின்ற பாடங்களை அவதானிப்பதிலோ அல்லது அங்கு வழங்கப்படுகின்ற பயிற்சிகளைச் செய்வதிலோ தமது கவனத்தைச் செலுத்தாமல்
மாறாக ஏனைய மாணவர்களின் கல்விக்கு இடைஞ்சல்களை ஏற்படுத்துவதையே காணமுடிகிறது.
தாங்கள் தனியார் வகுப்புக்களில் ஏலவே படித்து விட்டதால் தங்களால் அப்பாடம் தொடர்பான பரீட்சைகளில் வெல்ல முடியும் என்ற ஒரு அலாதியான நம்பிக்கையிலேயே அவர்கள் செயற்படுகின்றனர்.
03.ஆசிரியர்கள் மனமுடைதல்:
தங்களின் வகுப்பிலுள்ள பெரும்பான்மையான மாணவர்கள் இவ்வாறு பாடசாலைக் கல்வியில் அசிரத்தையாக செயற்படுகின்ற பொழுது அங்கு கற்பிக்கின்ற ஆசிரியர்கள் மனமுடைந்து இவர்களுக்கு தாங்கள் ஏன் கற்பிக்க வேண்டும் எனக் கருதி விடுகின்றனர்.
இத்தகைய எண்ணம் அவர்களினுள் முளைவிடுகின்றபோது ஏனோ தானோ என்றோ அல்லது கடமைக்காகவோ அவர்கள் கற்பிப்பார்களே ஒழிய மனம் வைத்து விருப்பத்துடன் கற்பிக்க மாட்டார்கள்.
இந்நிலை பாடசாலையிலுள்ள பெரும்பாலான ஆசிரியர்களிடம் ஏற்படுமாயின் அது அப்பாடசாலையின் வளர்ச்சிக்கு ஒரு பெரும் முட்டுக்கட்டையாக அமைந்து விடும் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.
04. வசதியற்ற மாணவர்களின் கல்வி வீழ்ச்சி:
இவ்வாறு ஆசிரியர்கள் மனமுடைந்து ஒழுங்கான முறையில் கற்பிக்காதவிடத்து அது பாடசாலையை மட்டுமே நம்பியிருக்கும் வறிய மாணவர்களின் கல்வித் தேடலை நிச்சயமாக மழுங்கடித்துவிடும்.
எந்தவித வசதிகளுமற்ற, பாடசாலையை மட்டுமே நம்பிக் கல்வி கற்கின்ற இத்தகைய மாணவர்களுக்கு சரியான முறையில் கல்வி வழங்கப்படாமல் இருக்கின்றமையால்தான் இன்று பொதுப்பரீட்சை களில் இலங்கை 50 வீதமான வீழ்ச்சியைச் சந்தித்து உள்ளது என்பதும் ஏற்கத்தகுந்த காரணமே.
இவ்வாறு ஏழை மாணவர்கள் கல்வி பெறாமையால் விரக்தி அடைந்து பாடசாலையை விட்டும் இடை விலகிச் செல்லும் அவலநிலை அதிகரிப்பதையும் அண்மைக் காலங்களில் அவதானிக்க முடிகிறது.
05. ஆளுமைமிக்க மானுட வளத்தைப் பெற முடியாமை:
ஒரு நாட்டினுடைய வளர்ச்சியும் வீழ்ச்சியும் அந் நாட்டின் மானுட வளத்திலேயே தங்கியுள்ளது.
அணு குண்டு வீசப்பட்ட ஜப்பான் இன்று வானளாவ உயர்ந்து நிற்பதற்கு காரணம், அது தன்னகத்தே கொண்ட மானுட வளத்தைச் சரியாக இனங்கண்டு பயன் படுத்தியமையேயாகும்.
இலங்கையில் வறிய மாணவர்கள் பாடசாலைகளில் இருந்து இடைவிலகிச் செல்கின்றபோது அவர்களுக்குள் காணப்படுகின்ற ஆளுமைகளும் திறமைகளும் மழுங்கடிக்கப்படுகின்றன. அவர்கள் செயற்திறன் குன்றியவர்களாக மாறிவிடுகின்றனர். இதனால் இலங்கை தான் பெறவேண்டிய மிகச்சிறந்த மானுட வளங்களையெல்லாம் மறைமுகமாக இழக்க வேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலையை எதிர்கொண்டு வருகின்றது.
06. செயற்திறனற்ற கல்வியிலாளர்கள் உருவாக்கம்:
இலங்கையில் இன்றளவும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற கல்வி முறையில் மாணவர்கள் தாம் கற்கின்ற வற்றைச் செயற்படுத்திப் பார்க்கின்ற களமாக பாடசாலை அமைய வேண்டியது மிக முக்கியமான ஒன்றாகும்.
உதாரணமாக விஞ்ஞான பாடத்தில் தாம் கற்கின்ற ஒவ்வொரு பரிசோதனையையும் ஆய்வு கூடத்தில் செய்து பார்த்து நம் அன்றாட வாழ்வில் அவற்றைப் பயன்படுத்துவதே அப்பாடத்தினுடைய இலக்காகும்.
ஆனால் இன்று தனியார் நிறுவனங்களில் அத்தகைய எந்த வளங்களும் இல்லாமல் வெறுமனே வாய்மொழி மூலமாக மட்டுமே பாடங்கள் கற்பிக்கப்படுகின்றமையால், அவ்வாறு கற்கின்ற மாணவர்களால் பரீட்சைகளில் அதிக மதிப்பெண்களைப் பெற முடிகின்ற போதிலும் அப்பாடத்தினுடைய இலக்கு தவறி விடுகின்றது.
இலங்கையில் இன்று வெளியிடப்படும் பாட நூல்களில் ஒவ்வொரு பாடத்தினதும் இலக்குகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை ஒவ்வொன்றிலும் ‘அன்றாட வாழ்வில் பயன்படுத்தல்’ என்ற சொல்லாடலை அதிகம் காணமுடிகிறது. அதுவே அப்பாடத்தினுடைய இலக்குமாகும்.
ஆனால் இன்று சாதாரண நுணுக்குக்காட்டியைக் கூட கண்ணூடாகக் காணாமல் எத்தனையோ மாணவர்கள் க.பொ.த (சா/த) பரீட்சைக்குத் தோற்றுகின்றனர் என்பதே கவலைக்குரிய விடயமாகும்.
07. ஆசிரியர்களிடையே தோன்றியுள்ள பணம் சம்பாதிக்கின்ற ஆவல்:
சிலர், தனியார் நிறுவனங்களின் ஊடாக பணம் சம்பாதிப்பதைக் கண்ணுற்ற வேறு சில ஆசிரியர்கள் தாங்களும் அவ்வாறு பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரு அலாதிப் பிரியத்தினால் அவர்களும் தனியார் வகுப்புக்களை ஆரம்பிக்கின்றனர். இதனால் ஒரே ஆசிரியர் இரண்டு இடங்களில் இரண்டு முறையாகக் கற்பிக்கின்ற நிலமை தோன்றியுள்ளது.
ஆசிரியர்கள் பாடசாலைகளில் மேலோட்டமாக அல்லது அரை குறையாகக் கற்பிக்கும் அதேவேளை தமது தனிப்பிட்ட வகுப்புக்களில் மாணவர்களை கவர்வதற்காக ஆழமாகவும் முழுமையாகவும் அங்கு கற்பிக்கின்றனர். இது போன்ற ஒரு சில ஆசிரியர்களினுடைய செயற்பாட்டினால்தான் இன்று ஆசிரிய சேவை ஆசிரிய தொழிலாக மாறிச் சென்று அதன் புனிதத்துவத்தை இழந்து நிற்கிறது.
08. இங்கை அரசு விழலுக்கு நீரிறைக்கிறது:
எந்தத்துறைக்கும் செலவிடாத ஒரு கனிசமான தொகையை இலங்கை அரசு கல்விக்குச் செலவிடுவதாக ஆரம்பத்தில் குறிப்பிட்டேன். அதிலும் முக்கியமாக இலவச பாட நூல்களுக்கே பாரிய ஒரு தொகை ஒதுக்கப்படுகின்றது.
இன்று கல்வி கற்கின்ற ஒவ்வொரு மாணவர்களுக்கும் வண்ண வண்ணப் புத்தகங்களும், கற்பிக்கின்ற ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும் அவர்களது பாடம் சார் வழிகாட்டி நூல்களும் (Teacher’s Guide) அச்சடித்து (விலையுடன்) இலவசமாக விநியோகிக்கப்பட்டிருக்க, ஆசிரியர்கள் தாம் விரும்பிய முறை யில் கற்பிப்பதையும்; மாணவர்கள் தமது பாடநூல்களைப் புறந்தள்ளிவிட்டு தனியார் வகுப்புக் குறிப்புக் கொப்பிகளை அல்லது அங்கு வழங்கப்படுகின்ற மேலதிகக் குறிப்புக்களை (Student’ Guide / Tutes) மட்டும் கற்பதில் பகீரதப்பிரயத்தனம் மேற்கொள்வதைக் காண்கிறோம்.
இதனால் அரசாங்கம் செய்த செலவு வீணாகி விடுகின்றது. இதற்குச் செலவிட்ட பணத்தை வேறு எதற்காவது செலவிட்டு நாட்டை முன்னேற்றி இருக்கலாமோ என எண்ணத் தோன்றுகிறது.
09. பாடசாலையில் ஒழுக்க வீழ்ச்சி:
மேற்சொன்ன இத்தனை விளைவுகளாலும், பாடசாலைகள் வெறுமனே ஒரு சம்பிரதாயத்திற்காகத் திறக்கப்பட்டு கற்றல் கற்பித்தல்கள் நடைபெறும் இடங்களாக மாறி வருகின்றமையால் பாடசாலை மாணவர்களிடையே ஒழுக்க வீழ்ச்சி தோன்றுவதற்கு அது வழிகோலியுள்ளது என்றால் மிகையில்லை.
எந்தளவுக்கு என்று சொன்னால், தண்டனையாக பாடசாலையில் இருந்து மாணவர்களை இடைநிறுத்தினாலும் அதை மகிழ்வுடன் ஏற்றுக் கொள்கின்றவர்களைக்கூட இன்று ஆங்காங்கே காண முடிகின்றது.
அதேபோல மாணவர் – ஆசிரியர் இடைத்தொடர்புகள் குன்றி, மாணவ – மாணவ இடைத்தொடர்புகள் குன்றி பாடசாலைகள் தமது புனிதத்துவத்தை இழந்து வருகின்றன என்பதே உண்மையாகும்.
ஆரம்ப காலங்களில் அதிமுக்கியமான ஓரிரண்டு பாடங்களுக்கு மட்டுமே தனியார் வகுப்புக்கள் நடாத்தப்பட்ட நிலை மாறி இன்று பாடசாலையில் கற்பிக்கின்ற (விருப்பத்திற்குரிய பாடங்கள் உட்பட) சகல பாடங்களுக்கும் தனியார் வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளன.
அவற்றின் பால் கவரப்படுகின்ற மாணவர்கள் இரவு பகலாக அங்குமிங்கும் அலைந்து திரிவதைக் காண்கின்றோம். ஆசிரியர்களுக்கிடையேயும் தனியார் வகுப்புக்களில் கற்பிக்கின்ற விடயத்தில் போட்டி நிலமை தோன்றியுள்ளது.
முற்று முழுதாக தனியார் வகுப்புக்களைக் குறை சொல்வதோ அல்லது அங்கு கற்பிக்கின்ற ஆசிரியர்களைக் குறை காண்பதோ இக்கட்டுரையின் நோக்கமல்ல.
இருப்பினும் பாடசாலைகளில் ஏற்படுகின்ற ஒழுக்க வீழ்ச்சிக்கும், இலங்கையினுடைய கல்வி வீழ்ச்சிக்கும் ஒரு பாரிய காரணியாக இத்தனியார் வகுப்புக்கள் ஆகிவிடக் கூடாது என்ற ஒரு நேர்ச் சிந்தனையின் அடிப்படையில் இக்கட்டுரை வரையப்பட்டுள்ளது.
எனவே எதிர்காலத்தில் இத்தனியார் வகுப்புக்களை முன்னெடுப்பது தொடர்பான ஆலோசனைகளை முன்வைப்பதன் மூலமும் அவற்றுக்கென தனியான வரையறைகளை ஏற்படுத்துவதன் மூலமும் எமது பாடசாலைகளை சிறப்படையச் செய்யும் அதேவேளை இலங்கையினுடைய பரீட்சை சித்தி வீதத்தினை அதிகரிக்கலாம் என்பதுவுமே எனது கருத்தாகும்

லேபிள்கள்:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு