புதன், 24 நவம்பர், 2010

நேரத்தின் முக்கியத்துவம்

நேரத்தின் அருமை நமக்குத் தெரியவேண்டுமானால் வாழ்க்கையில் சிலரைச் சந்திக்க வேண்டும. ஓர் ஆண்டின் அருமையை உணர வேண்டுமானால் 5 மதிப்பெண்கள் குறைவாகப் பெற்றதால் தேர்வில் தோல்வியுற்ற ஒரு மாணவனைச் சந்திக்கவேண்டும். அவன் கத்துவான், கதறுவான் ஒரு சிறு கவனக் குறைவால் மீண்டும் படித்த பாடங்களையே ஆண்டு முழுக்கப் படிப்பது எவ்வளவு பெரிய கசப்பு என்று!

ஒரு மாதத்தில் அருமையை உணர வேண்டுமானால் குறைப் பிரவசமாகக் குழந்தை பெற்ற தாய்மார்களைக் கேட்கவேண்டும்.

குறைப் பிரசவக் குழந்தைகளைத்தான் காப்பாற்றுவதில் எவ்வளவு இடர்பாடுகள்! சென்னையில் ஒரு பிரபல மருத்துவ மனையில் குறைப்பிரசவக் குழந்தையைப் பராமரிக்கச் சராசரியாக 1000 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறார்கள. ஓரிரு மாதங்கள் தள்ளிப் பிறந்திருந்தால் எவ்வளவு இனிமையாக இருந்திருக்கும். ஒரு வாரத்தின் அருமையை உணர வாரப் பத்திரிகைகளின் ஆசிரியர்களைக் கேட்கவேண்டும்.

ஒரு நாளின் அருமையை உணரத் தினக்கூலிகள், அன்றாடங் காய்ச்சிகள், சாலையோர நடைபாதைக் கடைக்காரர்கள், தள்ளுவண்டி வியாபாரிகளைக் கேட்க வேண்டும். -பந்த்- என்கிற பெயரால் தேவையில்லாமல் கதவை இழுத்துச் சாத்துகிற வியாதி இங்கே மிக அதிகம். அனைத்தும் செயல்படாமல் போகின்றபோது கூடவே வருமானமும் போய்விடுகிறது. வியாபாரத்தை வைத்தும் அன்றன்று கிடைக்கிற கூலியை வைத்தும் பிழைக்கிறவர்கள், பந்த் நாட்களில் வயிற்றில் ஈரத் துணியைப்போட்டுக்கொள்ள வேண்டியது தான். இவர்களைக் கேளுங்கள், ஒரு நாளின் அருமையைப்பற்றி விலாவாரியாகச் சொல்வார்கள்.

ஒரு மணி நேரத்தின் அருமையை உணரவேண்டுமா? மருத்தவரைக் கேளுங்கள். இவர்கள் சொல்வார்கள் -சற்றுமுன்பாக அழைத்து வந்திருந்தால் இந்த உயிரை நான் காப்பாற்றியிருப்பேன்- என்று. விபத்தில் சிக்கியவர்களை விபத்து நடந்த நேரம் முதல் மருத்துவர்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கும் வரை இருக்கிற நேரத்தை ஆங்கிலத்தில்"GOLDEN HOUR" என்று அழைக்கும் வழக்கு மருத்துவ உலகில் உண்டு. இந்த தங்க நேரத்துக்குள் அடிபட்டவரைக் கொண்டுபோய்ச் சேர்க்க முடியாமல் போனதால் எத்தனையோ பேர் தங்களது இன்னுயிரை இழந்துவிட்டார்கள்.
ஒரு நிமிடத்தின் அருமையை உணர, புகையிரதத்தை கோட்டை விட்டார்கள் அல்லவா, அவர்களைக் கேளுங்கள். இப்பத்தான் சார் வந்தேன். அதற்குள் அது புறப்பட்டுவிட்டது’ என்பார்கள் பரிதாபமாக. இரயிலின் கடைசிப் பெட்டியைப் பார்த்து பரிதாபமாக ஏக்கப் பெருமூச்சு விடுவார்கள்.

ஒரு விநாடியின் அருமையை உணர வேண்டுமானால் சாலையில் விபத்தைச் சந்தித்தவர்களைக் கேட்கவேண்டும். -இப்படித்திரும்பிப் பார்ப்பதற்குள் என்னை அடிச்சுத் தூக்கிட்டான்;! என்பார்கள். சிலர் இதைச் சொல்வதற்குக் கூட இருக்கமாட்டார்கள் போய்ச் சேர்ந்து விடுவார்கள்.!

மில்லி செக்கண்ட் என்று ஒரு அளவு உண்டு. பலருக்கு இதைப் பற்றித் தெரியாது. இதைப்பற்றியெல்லாம் கவலைப்படும் நிலைமையிலும் இவர்கள் இல்லை. அண்மையில் ஆசியத் தடகளத்தில் ஜேதிர்மாயி தங்கம் வென்றது விநாடி இடைவெளிகளில் இல்லை. விநாடியில் நூறில் சில பங்குகளில் தான; பி. டி. உசா நாலாவது ஓடி வந்ததும் விநாடி இடைவெளிகளில் இல்லை. விநாடியில் நூறில் சில பங்குகளில்தான். எண்ணிப் பாருங்கள் 4 ஆண்டுகள் பயிற்சி செய்து இப்படிச்சுண்டுகிற நேரத்தின் ஒரு பகுதியில் தங்கப் பதக்கத்தை இழந்தால் அவர்களது மனநிலை எப்படி இருக்கும். !
என்ன, லேனா உதாரணமாக அடுக்கிக் கொண்டே போகிறாரே என்று பார்க்கிறீர்காளா? இன்னும் கூட ஒன்று பாக்கி இருக்கிறது. அதுதான் மைக்ரோ செக்கண்ட். இந்தக் குறைந்த நேரத்தில் அமெரிக்காவில் இருக்கிற ஒரு சூப்பர் கம்பியூட்டர் ஒருகோடியே 60 இலட்சம் கணக்குகளைப் போட்டு முடித்துவிடுகிறது. இனிமேல் எந்த ஒரு நேர அளவீட்டையும் இந்தக் கண்ணோட்டத்தில் பார்க்க நாம் கற்றுக்கொண்டுவிட்டால் நம்மை மிஞ்ச வேறு ஆள் கிடையாது.

லேபிள்கள்:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு