திங்கள், 14 மார்ச், 2011

விடுச்சுழல் கல்வியில் செலுத்தும் செல்வாக்கு

அரசாங்க அல்லது தனியார் பாடசாலைகளைத் தவிர்த்து வீட்டில் பெற்றோராலும் போதனாசிரியர்களாலும் வழங்கப்படும் கல்வியே வீட்டுக்கல்வி, அல்லது வீட்டுப் பாடசாலை என்று அழைக்கப்படுகின்றது. காலனித்துவத்திற்கு முன்பு நமது பகுதிகளில் வீட்டுக்கல்வியே பரவலாக இருந்துவந்த்து. எமது மரபில் ஆசிரியரின் இல்லங்கள் கல்விக்கூடங்களாக விளங்கின. முறைசார் பாடசாலைகளும் கட்டாயக் கல்விச் சட்டங்களும் வருவதற்கு முன்னர் இம்முறையை நாம் பின்பற்றி வந்தோம். ஆனால் தற்காலத்தில் முறைசார் பாடசாலைக்கு ஒரு மாற்று ஏற்பாடாக, வீட்டுப்பாடசாலைகள் தோன்றியுள்ளன.
புதிய அறிவு மைய, தகவல் மைய நூற்றாண்டிலும் முழுப்பாடசாலைக் கல்வியையும் வீடுகளிலேயே வைத்துக் கற்பிப்பதற்குரிய சாதனங்கள் வளர்ச்சியடைந்துவிட்டன. பாடசாலைகளின் கல்விச் சூழலுக்கு மாறுபட்ட சூழலில் வைத்து கல்வியை வழங்க விரும்பும் பெற்றோர்களுக்கு வீட்டுப் பாடசாலை ஒரு சட்டபூர்வமான மாற்று ஏற்பாடாகும். மேற்கு நாடுகளில் சமைய, மற்றும் கல்வி ரீதியான காரணங்களுக்காகவும் நடைமுறையிலுள்ள அரசாங்க, தனியார் கல்வியை விரும்பாதவர்களும் வீடுகளை கல்விக்கூடங்களாக்கிக் கொள்கின்றனர். ஒதுக்குப்புறமாக தனித்து அல்லது புலம்பெயர்ந்து வாழும் குடும்பங்களும் இந்த ஏற்பாட்டைச் செய்ய வேண்டியுள்ளது.
வீட்டில் இடம்பெறும் கல்வியை வெளியிலுள்ள பாடசாலைகள் மேற்பார்வை செய்வதுமுண்டு, பாடசாலை தொடர்பற்ற பாட ஏற்பாடு என்ற நிபந்தனையற்ற வீட்டுக்கல்வியும் உண்டு. சில நாடுகளில் வீட்டில் பயிலும் குழந்தைகளின் பாடஏற்பாட்டுக்கு அரசாங்க அனுமதியையும் பெறவேண்டியுள்ளது. 1977 லேயே பாடசாலை இல்லாமல் வளர்தல் என்ற சிந்தனை தோன்றிவிட்டது. 1960 களிலிருந்து பாடசாலை கல்வி முறை கடும் எதிர்ப்புக்குள்ளாகி வருகின்றது. 1964 இல் ஜே. ஹோல்ட் என்ற அறிஞர் How Children Fail – குழந்தைகள் எப்படி தோற்கிறார்கள் என்ற நூலில் பாடசாலைக் கல்வியை காரசாரமாக விமர்சித்தார். பாடசாலைகள் குழந்தைகளை நிர்ப்பந்தம் செய்வதன் காரணமாகவே அவர்கள் சித்தியடைய முடியவில்லை என்ற கருத்தை அவர் வலியுறுத்தினார்.
ஆரம்பவயதில் வீட்டில் பெற்றோரிடம் வளரும் குழந்தைகளின் உளவளர்ச்சி சிறப்பாக அமைந்துள்ளது. பாடசாலைகளில் சேர்த்துவிடுவதால் இவ்வாறான நன்மை இழக்கப்படுகின்றது. நிறுவன மயப்பட்ட பாடசாலைச்சூழலில் இவ்விழப்பை ஈடுசெய்ய முடியாது. பெரும்பாலான குழந்தைகளின் வளர்ச்சிக்கு வீடே சரியான இடமாகும். பின்தங்கிய வகுப்பினரின் குழந்தைகள், விசேட தேவையுடைய குழந்தைகள் ஆகியோருக்கு வீட்டுக்கு வெளியே பாடசாலையின் கல்வி ஏற்பாடுகள் தேவையாகும். மற்றக் குழந்தைகளைப் பொறுத்தவரையில் தகுதியுள்ள ஆசிரியர்களைவிட சாதாரண பெற்றோர்களே போதுமானவர்கள் என்ற முறையில் கல்வியாளர்கள் வெளியிட்ட கருத்துக்கள் பெற்றோர்களை வீட்டுப்பாடசாலைகள் குறித்து சிந்திக்க வைத்தன.
இவ்வறிஞர்கள் பாடசாலைகளில் இடம்பெறும் வளமையான கல்வி வீடுகளில் இடம்பெற வேண்டுமென்று கூறவில்லை. அவ்வாறான பாடசாலைக் கல்வியை அவர்கள் எதிர்த்தனர். கல்வியானது வெறுமனே புலமை சார்ந்தது, புத்தக்க்கல்வியே கல்வி என அவர்கள் சொல்லவில்லை. அவர்களுடைய சிந்தனையின் படி, கல்வியானது இயற்கையானது, வாழ்க்கையைப் பரிசீலிப்பது. குடும்ப உறுப்பினர்களின் நாளாந்த வாழ்க்கைச் செயற்பாடுகளிலிருந்து எழுவதாகும்.
வீட்டில் கல்வி வழங்க முற்பட்டோர் பல்வகையான முறைகளையும் சாதனங்களையும் பயன்படுத்தினர். நூல்நிலையங்கள், புத்தக விற்பனை நிலையங்கள், வீட்டுப்பாடசாலை அமைப்புக்களின் ஏற்பாடுகள், நூல்கள், பாடஏற்பாடு, சமைய நிலையங்கள் வழங்கும் கல்வி, உள்ளுர்ப் பாடசாலை பாடவிடயம், தொலைக்கல்வி ஏற்பாடுகள், தொலைக்காட்சி, வானெலியின் கல்வி நிகழ்ச்சித்திட்டங்கள், இணையத்தள வசதிகள், இலத்திரன் அஞ்சல் முதலிய பல்வேறு வழிமுறைகளை கையாளுகின்றனர். குழந்தைகளின் கற்றல் வேகத்திற்கேற்ப பாட ஏற்பாட்டுப் பொதிகளை கொள்வனவு செய்ய முடியும். அவ்வாறே பாடசாலை பாட ஏற்பாட்டுச் சாதனங்கள் அனைத்தையும் கொள்வனவு செய்து அருகிலுள்ள பாடசாலையில் கற்பிக்கப்படும் சகல விடயங்களையும் வீடுகளில் கற்பிக்கவும் முடியும். வீட்டில் கல்வி வழங்க விரும்புபவர்கள் சமூதாய வளங்களையும் பயன்படுத்த முடியும். சமூக நிலையங்கள், அரும்பொருள் காட்சிசாலை, விளையாட்டுக்கழகங்கள், வழிபாட்டு இடங்கள், விஞ்ஞானப் பூங்காக்கள், நூலகங்கள் போன்றவற்றையும் பயன்படுத்தலாம். மக்கள் அரங்குகளில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளிலும் பெற்றோரும் குழந்தைகளும் பங்கு கொள்ளலாம்.
வீட்டுக் கல்வி வழங்கும் பெற்றோர் ஒன்றுகூடி சங்கங்கள் அமைத்து கிழமைக்கொருமுறை ஒன்றுகூடவும் முடியும். அப்போது வகுப்பறைச் சூழல் ஏற்படுத்தப்படும். குழந்தைகளின் கல்வியை மேம்படுத்த பல்வேறு பெற்றோர்களின் ஆற்றல்களையும் திறன்களையும் பெற்றுக் கொள்ளலாம். செயல்முறைப் பயிற்சிகள், வெளிநாட்டு மொழிகளைக் கற்றல், விஞ்ஞானப் பரிசோதனை செய்தல், கலந்துரையாடல் என்பனவற்றை இவ்வொன்றுகூடலில் செய்யலாம். பெற்றோர்கள் சேவையின் அடிப்படையில் பங்குகொள்வதால் வீட்டுக்கல்வியின் செலவுகளும் குறைகின்றன. இணையவழிக் கற்றலையும் பெற்றோர் பயன்படுத்தலாம்.
வீட்டுக்கல்வி உண்மையில் இயற்கையாக வழங்கப்படும் கல்வியாகும். இவ்வகைக் கல்வி குழந்தைகளின் விருப்பங்களுக்கு முக்கியத்துவம் வழங்கி அறிவைப் புகட்டுவதாகும். பெற்றோர்கள் பாடநூலிலும் கற்பித்தலிலும் அதிக அக்கறை செலுத்தாது பல கற்றல் அனுபவங்களையும் செயற்பாடுகளையும் ஒழுங்கு செய்கின்றனர். பெற்றோர் தாம் விரும்பிய பாடவிடயத்தை தினித்து அதிகாரம் செய்ய மாட்டார்கள். குழந்தைகள் சுதந்திரமாகத் தேடுதலில் ஈடுபட ஊக்குவிப்பர். அறிஞர் ஹோல்ட் குழந்தைகள் தமது வாழ்க்கை அனுபவங்களினூடாக கற்பதையும் பெற்றோர்கள் குழந்தைகளோடு இணைந்து வாழ்க்கைப் பணிகளில் ஈடுபடுவதையும் வழியுறுத்தினார். குழந்தைகள் படித்தாக வேண்டும் என்று சொல்லக்கூடிய அறிவுத்தொகுதி என்று எதுவுமில்லை. பாடசாலை பாடநூல்களை அவர்கள் பயன்படுத்தலாம். ஆனால் அவை கல்விச் செயற்பாட்டின் மையப்பகுதி அல்ல என்பது அவரது கருத்தாகும்.
தங்கள் பிள்ளைகள் கல்விமான்களாக திகழ வேண்டும் என்ற வேட் கையும் எப்படியாவது அவர்களுக்கு கல்வியைப் போதித்து விட வேண்டும் என்ற பொறுப் புணர்ச்சியும் விழிப் புணர்ச்சியும் பெற்றோர் களிடம் அதிகமாக உள்ளது.அதே நேரத்தில் கல்விக்காக செலவு செய்கின்ற பொருளாதாரச் சுமையும் அதிகரித்து இருக்கிறது. பணக்காரக் குடும்பமாக இருந்துவிட்டால் பிரச்சினையில்லை. பிள்ளைகள் படிப்பதற்கான எல்லா வசதிகளையும் செய்து கொடுத்துவிட முடியும்.நடுத்தர வர்க்கத்தினரும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் பெரும் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.வீட்டு வாடகை, குடும்பச் செலவு என்று வாழ்க்கையை ஓட்டுவதே பெரும்பாடாக இருக்கின்றபோது பிள்ளைகளுக்காக பணம் செலவு செய்ய தடுமாற்றம் அடைகின்றனர்.

இப்படி சிரமப்பட்டு பிள்ளைகளைப் படிக்க வைக்கின்ற பெற்றோர்கள், அன்றாட வாழ்க்கையில் சில தியாகங்களைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.அதை அவர்கள் புரிந்து கொண்டால் வெற்றி பெற்ற மாணவனை வீட்டிலேயே உருவாக்கிவிட முடியும் என்று உளவியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஆரம்பப் பள்ளி மாணவர்களாக இருந்தாலும் சரி, இடைநிலைப் பள்ளி மாணவர்களாக இருந்தாலும் சரி, முதலில் அவர்களுக்கு நேர ஒழுங்கையும் நேரத்தை எப்படிப் பயன்படுத்துவது என்பதையும் கற்றுக் கொடுக்க வேண்டும்.

காலையில் 5 மணிக்கு பிள்ளைகளை எழுப்பி காலைக் கடன்களை முடிக்கச் செய்து குறைந்தது 1/2 மணி நேரமாவது பாடப் புத்தகங்களைப் படிக்கச் சொல்ல வேண்டும்.வெறுமனே படிக்கச் சொல்லிவிட்டு அதிகாலையிலேயே டிவியை திறந்து படம் பார்க்க பெற்றோர்கள் அமர்ந்து விடக் கூடாது. பிள்ளைகளின் பக்கத்தில் அமர்ந்து அவர்களை சத்தம் போட்டு படிக்கச் சொல்லி கேட்க வேண்டும்.

பெற்றவர்கள், தங்கள் மீது மிகுந்து அக்கறையுடன் இருக்கிறார்கள் என்ற எண்ணத்தை பிள்ளைகளின் மனதில் இது ஏற்படுத்தும். பெற்றவர்கள் மீது பிள்ளைகளுக்கு உள்ள மதிப்பும் மரியாதையும் கூடும்.சீருடை அணிவது, பாடப்புத்தகங்களை அடுக்கி வைப்பது போன்ற செயல்களை பெற்றவர்களே நேரடியாகச் செய்யாமல் பிள்ளைகளை செய்ய விட்டு நிறைகுறைகளை எடுத்துச் சொல்லி பக்குவப்படுத்த வேண்டும்.பள்ளி முடிந்து வந்தவுடன் மைலோ கலக்கிக் கொடுப்பது, ரொட்டி வாட்டிக் கொடுப்பது மட்டுமே தங்கள் கடமை என்று இல்லாமல் பள்ளிக் கூடத்தில் நடந்த சுவாரசியமான விஷயங்களை சொல்லச் சொல்லி கேட்டு ரசிக்க வேண்டும்.

அடிக்கடி குறுக்கிட்டுப் பேசி தங்களின் அதிமேதாவித் தனத்தைக் காட்டி பிள்ளைகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தக் கூடாது. அடுத்த நாள் அவர்கள் பேசத் தயக்கம் காட்டக் கூடும்.அவர்கள் படித்த பாடங்களை சுருக்கமாகச் சொல்லும்படி ஊக்கப்படுத்த வேண்டும். அப்போது நீங்களும் ஓர் ஆசிரியர் மாதிரி ஆகிவிடக் கூடாது. அவர்கள் பேச்சை ரசிக்கின்ற ஒரு ரசிகனாக மாறிவிட வேண்டும்.நல்ல கருத்துக்கள் கொண்ட சுவையான குட்டிக் குட்டிக் கதைகளைக் கூற வேண்டும். நீங்கள் ஏதாவது கேள்வி கேட்டு பிள்ளைகளிடம் பதில்பெற வேண்டும். அந்தக் கேள்விக்கான விடை உங்களுக்கு கண்டிப்பாகத் தெரிந்திருக்க வேண்டும். பிள்ளைகள் திருப்பிக் கேட்கும் போது திருதிருவென நீங்கள் விழிக்கக் கூடாது.படிப்பு மட்டுமே வாழ்க்கை என்று அழுத்தம் கொடுக்காமல் படிப்பும் வாழ்க்கைக்கு முக்கியம் என்பதை அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.பிள்ளைகள் பொறுப் பானவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதை விட நீங்களே பொறுப் புள்ளவர்களாக நடந்து கொண்டால் தானாகவே பிள்ளைகளுக்கு பொறுப்பு வந்துவிடும்.

முதலில் உங்களுக்கு இது சிரமமாக இருக்கும். பிள்ளைகளும் முரண்டு பிடிப்பார்கள். ஒரு மண்டலம் (48 நாட்கள்) இதைத் தவறாமல் கடைப்பிடித்தால் பிறகு இதுவே பழக்கத்திற்கு வந்துவிடும்.பிறகு நீங்கள் பிள்ளைகளைப் பற்றி கவலைப்பட வேண்டாம். டியூசனுக்காக பெரும் பணத்தை செலவிட வேண்டாம். பிள்ளைகளே படிப்புக்கான விஷயங்களைத் தேடித் தேடி சேகரிக்க ஆரம்பித்து விடுவார்கள். ¿மது பிள்ளைகள் புத்திசாலிகள். பெற்றோர்களும் பொறுப்புமிக்கவர்கள். ஆனால் வாழ்க்கைத் தேடலில் பிள்ளைகளோடு நேரத்தை செலவிட அவகாசம் கிடைப்பது அரிதாகி விட்டது.அன்றாடம் காலையும் மாலையும் 1/2 மணி நேரம் ஒதுக்கிப் பாருங்கள்; நீங்களே ஆச்சரியப்படும்படி பிள்ளைகள் படிப்பில் கெட்டிக்காரர்களாகத் திகழ்வார்கள்

லேபிள்கள்:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு