சூழலைப் பாதுகாத்தாலும் அதனை பின்பற்றும் முறையும்
சூழலைப் பேணுவதற்குரிய புதுப் பொருளாதார ஒழுங்கினை உலகலாவிய ரீதியில் கடைப்பிடிக்க வேண்டுமென்பது அண்மைக்காலத்தில் சூழலியலாளர்கள் வலியுறுத்தும் சிந்தனையாக உள்ளது. இச்சிந்தனைக்கான அடிப்படைக் காரணிகளையும், புதுப்பொருளாதார ஒழுங்கமைப்பில் விவசாயத்துறையிலே இயற்கை வேளாண்மை முறையைப் பின்பற்றக்கூடிய சாத்தியப்பாட்டையும் எமது பிரதேச சூழலில் இதனைப் பின்பற்றும் ஏதுநிலை பற்றியும் இக்கட்டுரை ஆராய்கிறது.
உலக சூழல் பிரச்சனைகள் எனும் போது பொதுவாக சுற்றுப்புறம் பற்றியும், சுற்றுப்புற சுகாதாரம் பற்றியும் பலர் பேசுவதுண்டு. ஆனால் சூழல் பிரச்சனைகளை புவிக்கோளம் சார்ந்த உலகளாவிய ரீதியில் அணுகுதல் வேண்டும். இவற்றைத் தெளிவாகப் புரிந்து கொள்வதற்கு புவிக்கோளம் சார்ந்த சூழல் அம்சங்கள் பற்றிய விளக்கங்கள் முதற்கண் அவசியம்.
சூழற்பாகுபாடும் பிரச்சனைகளும்.
புவிச்சூழலை கற்கும் வசதிகருதி நான்கு பெரும் பிரிவாக வகைப்படுத்தலாம் நிலமண்டலம் (Lithosphere)> நீர்மண்டலம் (Hydrosphere), வளிமண்டலம் (Atmosphre), உயிரியல் மண்டலம் (Bioshpre) என்பன அவையாகும். இவை ஒவ்வொன்றும் சில துணைப்பிரிவுகளையும் கொண்டுள்ளன. நிலமண்டலத்தினுள் புவிச்சரிதம்(Relief), மண்(Soil), ஆகியனவும், நீர்மண்டலத்தில் மேற்பரப்பு நீர்(Surface water), தரைக்கீழ் நீர்(Under ground water), சமுத்திரங்கள்(Oceans) ஆகியனவும் அடங்கும். வளிமண்டலம் எனும்போது அதனுள் வானிலை காரணிகளும் (Climate) அடங்கும். உயிரியல் மண்டலத்தினுள் இயற்கைத்தாவரம் (Natural Vegetation), விலங்கினங்கள், பறவையினங்களின் வாழ்க்கை (Animals life) ஆகியனவும் மனிதனின் வாழ்வும் அடங்கும்.
உயிரினப் பாரம்பரியத்தின் பரிணாமத்தில் இன்றைய நிலையில் உள்ள மனிதன் தோற்றம் பெற்று மனித வாழ்வை ஆரம்பித்ததிலிருந்து புவித்தொகுதியின் சகல கூறுகளின் மேலும் அவன் தன் ஆதிக்கத்தைச் செலுத்திவருகின்றான். மனித வாழ்வின் வரலாற்றுப் போக்கில் ஒவ்வொரு காலகட்டத்திலும் அவன் வெவ்வேறுபட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியே புவித்தொகுதிக் கூறுகளை தன் தேவைக்குரிய வளங்களாக மாற்றிப் பயன்படுத்தி வந்தமையை அறியமுடிகின்றது. புவித்தொகுதியும் மனித தேவைக்குரிய வளங்களை நீண்ட நெடுங்காலமாக அவனது வாழ்வுக்காக எப்பிரச்சனையுமின்றி வழங்கி வந்தது. மனித குலத்தின் இயற்கைக்கு மாறான அதிகரிப்பும் அவனது பேராசைக்குரிய தொழில்நுட்ப வளர்ச்சியும் புவித்தொகுதி வளங்களை பெருமளவு சுரண்டின. வீண்விரயமாக்கின. இதனால் வளங்கள் அழிந்தன. தேவைக்கு அதிகமாக வளங்கள் பயன்படுத்தப்பட்டதால் வளப்பற்றாக்குறை ஏற்பட்டது.
இயற்கை வேளாண்மை
பசுமைப்புரட்சியால் விவசாயத்துறையில் துரிதஎழுச்சி ஏற்பட்டுக்கொண்டிருக்க அதன் எதிர் விளைவாக உயிர் சூழல்மண்டலம் நஞ்சாகிக் கொண்டிருந்தது. பசி பட்டினியால் உலகில் சிவப்புப்புரட்சி ஏற்பட்டுவிடும் என்ற அச்சம் நிலவியபோது மூன்றாம் உலகின் உணவு உற்பத்தியை அதிகரிக்க மேற்குலகத்தால் பசுமைப்புரட்சி அவசரமாக புகுத்தப்பட்டது எனவும் விமர்சிப்பர். றொக்பெல்லர் போட் ஆகிய பல்தேசிய நிறுவனங்கள் பசுமைப்புரட்சி என்ற நடவடிக்கைகளுக்கு உதவிவந்தமை இவ் ஜயுறவை வலியுறுத்தும். இவ் ஆய்வின் பெறுபேறான பசுமைப்புரட்சியின் வித்தான புதிய இனவிதைகளைக் கண்டுபிடித்தமைக்காக 1970 ஆம் ஆண்டில் நோர்மன் போர்லாங் அவர்களுக்கு நோபல்பரிசு கிடைத்தது.
பசுமைப்புரட்சி நடவடிக்கைகள் விவசாயத்துறையில் இரசாயனத்தொழில்நுட்ப மாற்றங்களையும் பொறிமுறைத் தொழில்நுட்ப மாற்றங்களையும் புகுத்தின. இவை மூன்றாம் உலக நாடுகளுக்குப் புதியன என்பதோடு இந்நாடுகளின் பாரம்பரிய விவசாயத்துறையை மேற்கு நாடுகளின் நவீன உற்பத்திகளின்றி வெற்றிகரமாக மேற்கொள்ளமுடியாத நிலைமைகளையும் தோற்றுவித்தன. இரசாயன உரப்பாவனை, களைகொல்லிப் பாவனை, கிருமிநாசினிப் பாவனை என்பன மண், நீர் நிலைகள், தாவரம் என்பனவற்றையும் நஞ்சாக்கிற்று. இதனால் எழுபதுகளில் உச்சம்பெற்றிருந்த பசுமைப்புரட்சி நடவடிக்கைகள் எண்பதுகளில் விமர்சனத்தை எதிர்நோக்கி தொண்ணூறுகளில் மாற்றத்தை வலியுறுத்தி நிற்கின்றன. இதனாலேயே இன்று உலகம் மீண்டும் இயற்கைவேளாண்மை பற்றி சிந்திக்கத் தலைப்பட்டுள்ளது.
இயற்கைவேளாண்மையை நிலைத்துநிற்கக்கூடிய வேளாண்மை, நிலையான வேளாண்மை, பேண்தகு வேளாண்மை என்று பலவாறு வழங்குவர். இயற்கை வேளாண்மை பழமைக்குத் திரும்புதல் எனப் பொதுவாக கூறப்பட்டாலும் இன்றைய உலக நிலவரங்களை அதாவது குடித்தொகை அதிகரிப்பு, உணவுப் பற்றாக்குறை, சூழல் நெருக்கடி என்பனவற்றை மனங்கொண்டு புதுப்பொருளாதார ஒழுங்கின் அடியாகச் சிந்தித்ததன் விளைவே இது எனலாம். இயற்கை வேளாண்மையின் தந்தை என ஜப்பானியக் காந்தி மாசானபு ஃபுகாகோ (Masanabu Fukuoka)வைத் தரிசிக்கலாம். இவர் இயற்கைவேளாண்மையை வலியுறுத்தி எழுதிய “ஒற்றை வைக்கோல் புரட்சி” (One Straw Revolution -1975) என்ற நூலும் “இயற்கைக்கான வழி” (The road to nature – 1977) என்ற நூலும் மிகவும் பிரபலமானவை. இந்நூல்கள் பலமான ஆதரவையும் கடும் விமர்சனத்தையும் எதிர்கொண்டவை. இவர் வழியில் இன்றும் பலர் சிந்தித்து வருகின்ற போதிலும் பில் மோலீசின் (Bill Mollision) டேவிட் ஹம்ரன் (David Homton) ஜே.ஜே றோடேல் (J.J.Rodale) என்பவர்களும் மூன்றாம் உலகைச் சேர்ந்த இன்னும் சிலரும் முக்கியமானவர்களாகக் கருதப்படுகின்றனர்.
மாசானபு ஃபுகாகோ இயற்கை வேளாண்மை பற்றி வெறும் போதனை செய்யவில்லை. அதன் சிறப்பை செயல்முறையூடாகக் காட்டுகின்றார். ஜப்பானில் ஹிகோதீவின் மலைச்சாரலில் இவரது 15 ஏக்கரளவான விவசாயப் பண்ணை அமைந்துள்ளது. இது முற்றுமுழுதான இயற்கை விவசாயப் பண்ணையாக விளங்குகின்றது. நுண் உயிரியலாளராகவும் விவசாய சுங்க அதிகாரியாகவும் பணியாற்றி இவர், 25 வயதில் அவற்றைத் துறந்து இயற்கை வழி விசாயத்தில் நாட்டம் கொண்டார். இவர் ஒரு பொளத்த மதத்தினராக விளங்கியமையும் இயற்கையில் அதிகம் நாட்டம் கொள்ள வைத்ததெனலாம். அவரது இயற்கை நேசிப்பினை அவரது நூலில் விரவிவரும் பின்வரும் கூற்றுக்களால் உணர்ந்து கொள்ளமுடியும்.
மனிதர்களால் எதையும் அறிந்துகொள்ளமுடியாது என்பதையும் இயற்கையைப் புரிதல் மனித அறிவிற்கு அப்பாற்பட்ட விடயம் என்பதையும் இறுதியில் அறிவதற்காகவே நாம் கடினமாக கற்கவேண்டியுள்ளது,
வாழ்க்கை என்பது இயற்கையிலிருந்து விலகிய ஒன்றாக இருக்கக்கூடாது. வேளாண்மையின் இறுதி இலட்சியம் பயிர்களை வளர்ப்பதல்ல. மனித இனத்தை வளர்த்து முழுமையடையச் செய்வதே….
மனிதன் தனது சொந்த விருப்பத்தைவிட்டு, இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தால் இயற்கை அவனுக்குச் சகலதையும் அளிக்கும். மக்கள் இயற்கை உணவை விட்டு எப்போது செயற்கை உணவைத் தேர்ந்தெடுத்தார்களோ அன்றே அவர்கள் தம் அழிவுக்கான தேதியைக் குறித்துவிட்டார்கள்.
Masanobu Fukuoka,(1975) one straw Revolution.
இயற்கை வேளாண்மையை ‘ஒன்றும் செய்யாமல் ஒரு வேளாண்மை’ என்று குறிப்பிடும் மாசானபு ஃபுகாகோ தான் தன் வயலில் வேலை செய்யும் போது ‘இதனையும் செய்யாமல் இருந்தால் என்ன?’ என்ற கேள்வியைத் தன் மனதில் கேட்டுக்கொண்டே செய்வதால் இயற்கை வழியில் அனைத்தையும் விட்டுவிட முடிகின்றது என்கிறார். தன் பண்ணையில் உலாவரும் போது இயற்கையாக வளர்ந்த நெற்கதிர் ஒன்று நவீமுறையில் பயிராகும் நெல்லைவிட மிக்க ஆரோக்கியமாகவும், அதிக கதிர்களைக் கொண்டதாகவும் விளங்கியதைக் கண்டே தான் இயற்கைவழி விவசாயத்தின்பால் அக்கறை கொண்டதாக கூறும் இவர், புவியிலிருந்து வரும் அனைத்தும் புவிக்கே திரும்பிவிட வேண்டும். நெற்கதிர்களை எடுத்துக்கொண்டு ஏனையவற்றை அப்படியே விட்டுவிட வேண்டும் எனக் கூறுகின்றார். அவர் முன்வைக்கும் இயற்கை வேளாண்முறையில் நான்கு அம்சங்கள் முக்கியமானவை.
மண்வளம் பேணுதல் பற்றிக் கூறும் போது பயிர்வளர்ச்சிக்கு பண்ணையை உழ வேண்டியதில்லை. தாவரங்களின் வேர்களும், மண் புழுக்கள், முயல் மற்றும் ஏனைய சிறு விலங்கினங்கள் என்பன இயற்கையாகவே மண்ணை உழுகின்றன. உக்கவைக்கும் நுண்ணங்கிகளின் பெருக்கம் மண் வளத்தையும் பெருக்கும் என்கின்றார்.
பயிர் வளர்ச்சிக்குரிய உரம் பற்றிக் குறிப்பிடும் போது நிலத்தை அதன் போக்கில் விடுவோமாயின் இயற்கையாகவே அது மண்ணில் உரச்சத்தை நிர்வகித்துக்கொள்ளும். பண்ணையில் வளரும் மிருகங்களும், பறவையினங்களும் இயற்கையாக உரத்தை வழங்கும். வைக்கோலை வெளியேற்றாது விட்டால் அது உக்கி உரத்தை வழங்கும் எனக் கூறும் அவர், காட்டில் செழித்து வளரும் மரங்களுக்கு நாம் உரமிடுகின்றோமா? என்ற கேள்வியையும் எழுப்புகின்றார்.
களைகளின் வளர்ச்சி இயற்கை சமச்சீர்த்தன்மையைப் பேணும் ஒரு நடவடிக்கையே. அதனை உழுது அழிக்க எண்ணினால் அது பெருகுமேயன்றிக் குறையாது. பருவப்பயிர்களுக்கிடையே ஊடுபயிர்களை வளர்ப்பது வைக்கோலால் நீண்டகாலம் வயல் பரப்பை மூடிவைத்துக் கொள்வது போன்ற நடவடிக்கைகள் களையைக் கட்டுப்படுத்தும் என்கின்றார்.
பூச்சிக்கட்டுப்பாடு பற்றிக் குறிப்பிடும் போது மாசானபு ஃபுகாகோ இயற்கையான சுற்றுச் சூழலில் வளரும் பயிர்க்ள் ஆரோக்கியமானவையே. இயற்கையில் பூச்சிகளுக்கு எதிர்ப் பூச்சிகள் உண்டு. நாம் கிருமிநாசினி தெளிப்பதால் அனைத்துப் பூச்சிகளும் அழிந்து இயற்கைச்சமநிலை அற்றுப்போகின்றது. சிலந்திவலை பின்னி என் பண்ணை முழுவதையும் பாதுகாப்பதை நீங்கள் நேரில் வந்தால் பார்க்க முடியம். எனது பண்ணை சிலந்திவலைப் பரவலால் மின்னிக்கொண்டிருப்பதை பார்ப்பீர்கள். மயிர் கொட்டிகளை செம்பகம் அழிக்கும். எலிகளை ஆந்தைகள் அழிக்கும். தவளை, தேரை என்பனவும் பூச்சிகளிலிருந்து பயிர்களைக் காக்கும். இயற்கையின் விந்தைகளை எம்மால் பூரணமாக விளக்க முடியாது என்று வலியுறுத்துகின்றார்.
மாசானபு ஃபுகாகோவின் பண்ணையின் பெரும்பரப்பு பல்வகை பழ மரங்களைக் கொண்டதே. இவை ஒன்றுடன் ஒன்று இயற்கையாக இணைந்து அற்புதமாக வளர்ந்துள்ளன. இங்கு உற்பத்தியாகும் பழங்கள் இயற்கையாக ஒழுங்கற்ற வடிவங்களில் காணப்படும். சில சுருக்கம் விழுந்தும் வாடியும் இருக்கும். இவ் இயற்கைப்பழங்களுக்கு நவீனமுறையில் உற்பத்தியாகும் பழங்களைவிட ஜப்பானில் நல்ல சந்தை வாய்ப்புகள் உண்டு. நவீமுறையில் உற்பத்தியாகும் பழங்கள் கவர்ச்சியாக இருப்பதற்காக மெழுகு கூடப் பூசுகின்றார்கள். வாடாது இருக்க இரசாயன கலவைகளைத் தெளிக்கின்றார்கள். இவை எல்லாம் மக்களின் உணவை நஞ்சாக்கும் நடத்தைகள் என மாசானபு ஃபுகாகோ சாடுகிறார்.
இவரது பொருளாதார சிந்தனைகள் நவீனபொருளிளயலாளரது சிந்தனையிலிருந்து மாறுபட்டவை. விவசாய நடவடிக்கைகளில் குறைந்தளவு மக்கள் இருப்பது ஒரு அபிவிருத்தி குறிகாட்டியென நவீன பொருளியலாளர் கூற இவர் 80-90 வீத மக்கள் விவசாயத்தில் ஈடுபட வேண்டுமெனக் கூறுகின்றார். பொருளாதார வளர்ச்சி வீத அதிகரிப்பைப் பற்றி அலட்சியப்படுத்தும் இவர் வளர்ச்சி வீதம் 0 ஆக இருப்பதே நிலையான பொருளாதார வளர்ச்சி என வாதிடுகின்றார். மாசானபு ஃபுகாகோ நவீன உலகில் பழமையைப் பேணுவதன் மூலம் புதுப்பொருளாதார ஒழுங்கை உருவாக்கமுடியுமென்று சொல்லாலல்ல செயல்மூலம் நிரூபித்து வருகின்றார்.
சூழலுக்கு ஊறுவிளைவிக்காத நிலைத்து நிற்கும் வேளாண்மை பற்றிய கருத்துக்களை உலகிற்கு பரப்பி வரும் இன்னொரு முக்கியமானவர் பில் மோலீசன் (Bill Mollisipon) ஆவார் இவரும் டேவிட் ஹோம்ரன் என்பவரும் இணைந்து ‘ஃபோமா கல்சர்’ என்ற நூலை 1978 இல் வெளியிட்டனர். இதன் அர்த்தம் நிலைத்துநிற்கும் பயிர்ச்செய்கை (Permnanent Culture) என்பதாகும். இவர்கள் இந்நூலில் மாசானபு ஃபுகாகோ சிந்தனைகளால் கவரப்பட்டுள்ளமை நன்கு வெளிப்படுகின்றது. ஆஸ்திரேலியாவில் நியூசவுத் வேல்ஸ் மாகாணத்தில் டயால்கம் (Taylgum) என்ற இடத்தில் நிலைக்கும் பயிர்ச்செய்கை நிறுவனம் (Perma Culture Institute) என்ற அமைப்பினை நிறுவி அதனூடாக மேற்படி வேளாண் முறைகளை உலகிற்குப் பரப்பி வருகின்றார்கள். உலகில் இவர்களுக்கு 54 நாடுகளில் கிளை நிறுவனங்கள் உண்டு. இந் நிறுவனங்களின் மூலம் நிலைக்கும் வேளாண்மையை மேம்படுத்துவதற்கான பயிற்சிகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. முறையான பாடத்திட்டம் மூலம் வழங்கப்படும் இப்பயிற்சியில் விவசாயச் செய்முறை அத்துடன் இணைந்த தோட்டக்கலை, கட்டிடக்கலை, போக்குவரத்து, நிதி, சமூக அபிவிருத்தி திட்டங்கள், விரயமற்ற உற்பத்தி, சுற்றுவட்ட முறையில் வளங்களைப் பயன்படுத்துதல். உள்ளுர் பாரம்பரிய தாவர வித்துக்களை மீண்டும் அறிமுகப்படுத்துதல், தரிசான நிலங்களை வேளாண்மைச்செய்கை மூலம் சீர்செய்தல் என்பன அடங்கும். இவற்றை ஒழுக்கநெறியுள்ள திட்டமிட்ட விஞ்ஞானமாகக் கொண்டே பயிற்றிவிக்கின்றார்கள்.
நிலைக்கும் பண்பு புவியின் பாதுகாப்புக் குறித்த ஒழுக்கநெறி மாத்திரமன்றி மனிதபாதுகாப்புக்குறித்த ஒழுக்கநெறியுமாகும். இவர்களது போதனையில் நுகர்வது போக எஞ்சிய அனைத்தும் மறுமுதலீடாக புவிக்கே திரும்பி விடவேண்டும். புவியைப் பேணும் ஒழுக்க நெறி தார்மீக நெறியாகவும் கல்வி நெறியாகவும் போற்றப்படவேண்டும் என்பது இவர்களது வேண்டுகோளாகும். எந்த ஒரு அரசுக்கும் அல்லது அரசியல் அமைப்புக்கும் அழிந்துவரும் புவிபற்றி அக்கறையே இல்லை. நிலம் என்றால் அதில் எந்தளவு பணம் பெறலாமென்றே திட்டமிடுகின்றார்கள் என இவர்கள் சாடுகின்றார்கள்.
பில் மோலீசின் நவீன விவசாயத்தை இறந்து கொண்டிருக்கும் விவசாய முறை என சாடுவதோடு நவீன விவசாயம் வர்த்தக நோக்கத்தைக்கொண்ட, அழிவுக்கு வழிகோலும் முறைகளை உள்ளடக்கிய, எரிபொருளை வீணடிக்கின்ற விவசாயம் என்கின்றார். மேலும் அவர் நவீன விவசாயம் முட்டாள் தனமான நோக்கங்களுக்காக தேவையற்ற பயிர்களை வளர்க்கின்றது. சோயா பயிர் உற்பத்தி கால்நடைக்கு உணவாகின்றது. மீனைப் பொடிசெய்து பன்றிகளை வளர்க்கின்றார்கள். மாட்டிறச்சி வர்த்தகத்தால் உலகின் புல் நிலங்கள் அழிந்து பாலைநிலம் பரவி வருகின்றது என்கிறார். மேலும் நவீன விவசாயச் செய்கை தொழிற்சாலை உற்பத்திக்கான மூலப்பொருளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டதே தவிர மக்களுக்கு உணவு வழங்குவதையல்ல. புவியின் மொத்த நிலப்பரப்பில் 4வீத பரப்பளவில் உணவு உற்பத்தி முறையாகச் செய்யப்பட்டாலே உலகில் உணவுப் பஞ்சம் ஏற்படமாட்டாது என உறுதிபடக் கூறுகின்றார்.
நவீன முறையில் விவசாயம் செய்தவர்கள் இம் மாற்றுமுறைக்கு வரும் போது ஆரம்பத்தில் உற்பத்தி குறையும் என்றாலும் பின்னர் உற்பத்தி படிப்படியாக அதிகரிக்கும். நவீனமுறையில் இரசாயனப் பொருட்களை அதிகளவில் பயன்படுத்தி வந்ததன் காரணமாக 5 ஆண்டுகள் நிலைமாறும் நிலை நிலவும். ஆறாவது ஆண்டிலிருந்து உற்பத்தி இருமடங்காக உயரும். வேளாண்மையுடன் காடுவளர்ப்பும் இணைந்துள்ளதால் நைட்ரசன் சத்து நிலங்களுக்கு ஊட்டத்தை வழங்கும். தானியங்கள், பழங்கள், காய்கறிகள், கூடவே மரக்கறிகள் நிறைந்த வேளாண்பண்ணை முறைகளையே பில் மோவீசின் குழுவினர் வலியுறுத்துகின்றனர். இவர்களது பண்ணை சுயநிறைவு கொண்டது. உரத்தின் தேவையோ, களை பூச்சி நாசினிகளின் தேவையோ எழுவதில்லை. இவர்களது பயிர்ச்செய்கை முறை பரந்துபட்டு பயிர்ச்செய்கை முறை (Extensive Agriculture) ஆகும்.
எவ்வளவு மோசமான தரிசு நிலம் என்றாலும் அந்நிலத்தை பசுமையாக்கக்கூடும் என கூறும் இவர்கள் பாறை நிலம், அதிக ஈரம் கொண்டநிலம், உவர்நிலம், வரண்ட பாலைநிலம், என்பனவற்றில் வேளாண் பண்ணைகளை உருவாக்கி வெற்றி கண்டுள்ளனர். ஜ.நாவின் உணவு விவசாய நிறுவனத்தின்( F.A.O) பயிற்சியாளர் தொகையைவிட தங்கள் நிறுவனத்தின் பயிற்சியாளர் தொகை அதிகமென பெருமைப்படும் பில் மோலீசன் இந்தியாவில் மட்டும் ஏறத்தாழ 1000 கிராமங்களில் ஃபேமாகல்சர் பயிற்சியாளர்கள் பணியாற்றி வருகின்றார்கள் என்கின்றார். ஏறத்தாழ ஒரு இலட்சம் இந்திய விவசாயிகள் பில் மோலிசனின் பண்ணைத்திட்ட முறைகளைப் பின்பற்றி பயனடைந்து வருகின்றார்கள். மூன்றாம் உலக நாடுகளுக்கு இவரது வேளாண் முறைகள் பொருத்தமானவை என கருதப்படுகின்றது. நிலைத்து நிற்கக்கூடிய இவ்வகை வேளாண்முறைகள் மீது நிஜமான அக்கறை செலுத்தும் காலம் வருமெனக்கூறும் இவர் 2000 ஆம் ஆண்டின் பின் நவீன விவசாய முறை மெல்லமெல்ல இறந்து நிலைத்துநிற்கும் விவசாயமே நிலைபெறும் என சூளுரைக்கின்றார்.
அமெரிக்காவிலிருந்தும் ஒரு குரல் இயற்கை வேளாண்மையில் அக்கறை கொண்ட ஒலிப்பு ஆச்சரியத்தை அளிப்பதே. அக்குரல் “றோடேல் நிறுவனத்தின்” குரலாகும். ஜே.ஜே. றோடேல் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்நிறுவனத்தை அவரது மகன் ஜோன் றோடேல் தற்போது நடத்தி வருகின்றார். அமெரிக்காவில் பென்சில்வேனியா மாநிலத்தில் எம்மாமவுஸ் என்ற இடத்தில் இத்தொண்டு நிறுவனம் அமைந்துள்ளது. இயற்கை வேளாண்மையின் சிறப்பை உலகிற்கு பரப்புவது மாத்திரமன்றி மூன்றாம் உலக வசதிகுறைந்த ஏழைமக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கான சமூகநலத் திட்டங்களையும் இந்நிறுவனம் நடைமுறைப்படுத்தி வருகின்றது.
சூழலுக்கு ஊறுவிளைவிக்காத வேளாண் செய்கையை அடிப்படையாகக்கொண்ட சுயநிறைவு பெறத்தக்க அபிவிருத்தித்திட்டங்களிற்கு இந்நிறுவனம் உதவி வழங்கி வருகின்றது. மூன்றாம் உலகநாடுகளில் உள்ள வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்துவரும் மக்கள் பயன்பெறும் பொருட்டே பெரும்பாலும் இவ் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
றோடேல் நிறுவனத்தினர் உலகில் பரப்பிவரும் வேளாண்முறைக்கு “புனர் ஜென்ம வேளாண்மை” (Rebirth Agriculture) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இவர்களது நிறுவனமே மாசானபு ஃபுகாகோவின் ஒரு வைக்கோல் புரட்சி ( One Straw Revolution) என்ற நூலையும் இயற்கைக்கான வழி (The Road to nature) என்ற நூலையும் ஆங்கில மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டதன் மூலம் நூலாசிரியரை அனைத்துலகத்திற்கும் அறிமுகமாக்கியது.
றோடேல் நிறுவனம் நிலைத்து நிற்கும் வேளாண்மைப் பண்புகளை உலகத்தவர் அறிதல் பொருட்டு “உயிர்ப்பு வேளாண்மை” (Organic Farming) என்ற சஞ்சிகையினையும், புதிய பண்ணை (New Farm) என்ற செய்திப்பத்திரிகையையும் வெளியிட்டு வருகின்றது. மேலும் இயற்கை வேளாண்மையை மேம்படுத்தத்தக்க பல்வேறு நூல்களையும் இந்நிறுவனம் காலத்துக்கு காலம் வெளியிட்டு வருவதோடு சர்வதேச கருத்தரங்குகளையும் ஒழுங்கு செய்து வருகின்றது.
இயற்கை வேளாண்மை பற்றி முதலாம் உலக நாட்டைச் சேர்ந்தவர்களைவிட மூன்றாம் உலகநாட்டினரே கூடிய அக்கறை கொள்ளவேண்டும். யதார்த்த நிலை கவலை தருவதாக உள்ளது. அரசாங்க மட்டத்தில் திட்டமிடுவோரும் இதுபற்றி அலட்சியமாகவே இருக்கின்றார்கள். இங்குள்ள அரசசார்பற்ற நிறுவனங்களும் நிதி நெருக்கடியாலும் நிபுணத்துவக் குறைபாட்டாலும் இவ்விடயம் தொடர்பாக அதிகளவில் அக்கறை செலுத்த முடியாதுள்ளது. இருப்பினும் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் நிலைத்து நிற்கும் வேளாண்மையால் சில நிறுவனங்கள் கவனம் கொள்கின்றன.
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் அகமதபாத் நகரில் கலாநிதி அனில்குப்தாவின் நிறுவனம் குறிப்பிடத்தக்க பணியாற்றி வருகின்றது. இவர்கள் ‘நம்வழி வேளாண்மை’ என்ற மகுடவாசகத்தை முன்வைத்து சூழல்பேண் வேளாண் அபிவிருத்தியை முன்னெடுத்து வருகின்றார்கள். இந்நிறுவனத்தின் கிளைகள் தமிழ்நாட்டில் மதுரை, ஒரிஸ்ஸாவில் புவனேஸ்வர், கேரளாவில் கோட்டயம், பூட்டானில் திம்பு, உத்தரப்பிரதேசத்தில் சஹாரன்பூர் ஆகிய இடங்களில் அமைந்துள்ளன. இவர்கள் காந்திய நிறுவனங்களுடனும் இணைந்தும் பணியாற்றி வருகின்றார்கள். அனில் குப்தாவின் நிறுவனத்தினர் நம்வழி வேளாண்மை பற்றி பிரசாரம் செய்யும் அளவிற்கு மாதிரிப்பண்ணைகளை அமைத்து செயல்முறையில் காட்டும் தன்மை குறைவாகவே உள்ளது.
தமிழ்நாட்டில் மனீந்தர்பால் என்பவர் பாண்டிச்சேரியில் அரவிந்தர் ஆசிரமத்தின் துணையுடன் நடத்தும் 100 ஏக்கர் பரப்பளவுள்ள குளோரியாப்பண்ணை, புதுவையில் அமைந்துள்ள ஏ.எஸ் சட்டார்ஜியின் இயற்கைப்பண்ணை, கீரானூரில் நாம்மாழ்வார் நடத்தும் லெய்சா (Leisa) பண்ணை, உடுமலைப்பேட்டையில் சி.ஆர் ராமநாதனின் விவசாய காட்டியல் (Agro Forestry) பண்ணை, எம்.எஸ் சுவாமிநாதன்ஆராய்ச்சி நிறுவனத்தினர் நடத்தும் சில பண்ணைகள், வீரனூர் சுற்றுச்சூழல் சங்கப் பண்ணை என்பன இந்தியாவில் இயற்கை வேளாண்முறைகளை முன்னெடுப்போருக்க வழிகாட்டும் பண்ணைகளாக விளங்குகின்றன.
இலங்கையில் கலாநிதி ஆரியரத்தினாவின் சர்வோதய இயக்கம் நடத்தும் சில விவசாயப் பண்ணைகளும் மன்னாரிலுள்ள “ஸ்கந்தபாம்” எனும் பண்ணையும் இயற்கை வேளாண்வழியை பின்பற்றத் தூண்டுதலளிக்கும் எம்மவரின் முயற்சியெனக் குறிப்பிடலாம்.
முடிவுரை
எமது பிரதேசத்தில் கடந்த மூன்று தசாப்தங்களாக நிலவிவந்த யுத்த நெருக்கடியால் நாம் பல இன்னல்களை எதிர்நோக்கினாலும் சில நன்மைகளும் விளைந்துள்ளன. எரிபொருள் உரம், களை நாசினி, கிருமிநாசினி என்பவற்றின் தட்டுப்பாட்டால் எமது விவசாய நிலங்கள் நஞ்சாகாது பேணப்பட்டு வந்துள்ளமை குறித்துரைக்கத்தக்க நல்விளைவுகளாகும். இந்நிலங்கள் நிலைத்துநிற்கும் பண்பு கொண்ட இயற்கை வேளாண்மைக்குரிய அடிப்படைகளை கொண்டுள்ளன. வலிகாமத்தில் வடபகுதிச்செம்மண் வலயம், தீவுப்பகுதி பிரதேசம் என்பன மக்கள் புலம்பெயர்ந்ததால் இரு தசாப்தங்களாக பலவழிகளில் இயற்கைவழி மாற்றத்தி;றகுள்ளாகி சீர்பெற்றுள்ளன. இவ் இடங்களில் புனர்வாழ்வு, புனர்நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளும் இக்காலகட்டத்தில் அரசும், அரசசார்பற்ற நிறுவனங்களும் 21ஆம் நூற்றாண்டுக்குரிய சூழல்பேண் இயற்கைவேளாண் வழிமுறைகளை மேற்குறித்த பகுதிகளில் அறிமுகப்படுத்துதல் அறிவுடைமையாகும்.
பொதுவாக யாழ்ப்பாண விவசாய மக்கள் மூன்று தசாப்தங்களாக நீடித்த யுத்தகாலத்தில் உரம், நாசினிப்பாவனையின்றி அதிகளவு விவசாய உற்பத்திகளைப் பெற்றமை கவனத்திற்குரியது. தீவுப்பகுதியை பொறுத்தவரையில் மீள்குடியமர்ந்தோர் குறைவு. ஆனால் விவசாய நிலங்கள் அதிகம் உள. இச்சூழ்நிலையைப் பயன்படுத்தி சூழல்பேண் இயற்கை வேளாண் பண்ணைகளையும், விலங்கு வளர்ப்பு பண்ணைகளையும் அங்கு உருவாக்குதல் சாத்தியமே. இக்கட்டுரையாளர் தீவுப்பகுதியை சேர்ந்த வேலணைக்கிராமத்தில் “இராசரத்தினம் உருக்குமணி” பசுமைக்கிராமம் ஒன்றை உருவாக்கி வருவதையும, அங்கு இயற்கை வேளாண்மை முறையில் உபஉணவு உற்பத்தியில் ஈடுபட்டு வருவதையும் முன்னுதாரணமாக கொள்ளலாம்.
யாழ்ப்பாண நகரச்சந்தையில் உடன் விற்பனை செய்யக்கூடிய காய்கறி உற்பத்தி, விலங்கு வேளாண் உற்பத்தி, மீன்பிடி உற்பத்தி என்பனவற்றை தீவுப்பகுதியில் மேற்கொள்ள உதவி வழங்குவதன் மூலம் தீவுப்பகுதியை அபிவிருத்தி செய்வதோடு யாழ்ப்பாண நகர மக்களில் ஒருபகுதியினரின் உணவுத் தேவையினையும் பூர்த்தி செய்ய முடியும்.
பொதுவாக வடகீழ் மாகாண புனர்வாழ்வு, புனர்நிர்மாணம் என்பவற்றிற்காகத் திட்டமிடுவோரும் ஆலோசனை வழங்குவோரும் இப்பிரதேசங்களில் நிலைத்து நிற்கும் பண்பு கொண்ட 21ஆம் நூற்றாண்டிற்குரிய சூழல் பேண் வேளாண் அபிவிருத்தியை முன்னெடுத்தல் பயன்தருமா என்பது பற்றியும் எவ்வெவ் இடங்களில் எந்தெந்த வழிகளில் இதனை அமுல் நடத்த முடியுமென்பது பற்றியும் ஆய்வுகளை மேற்கொண்டு தெளிந்த நல்லறிவைப் பெறுதல் வேண்டும்

லேபிள்கள்: யோ.உஜேயந்தன்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு