புதன், 22 ஜூன், 2011

சர்வதேச புவி தினம்

சர்வதேச புவி தினம் என்பது ஆண்டு தோறும் ஏப்ரல் 22ம் நாளன்று புவியின் சுற்றுச் சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கோடு அனைத்து நாடுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரு சிறப்பு நாளாகும்.
உலகளாவிய ரீதியில் புவியின் சூழல் மாசடைவதைக் கருத்திற்கொண்டு முதன் முதலாக ஐக்கிய அமெரிக்காவில் சுற்றுச் சூழலியல் நிபுணரும், செனட்டருமான கேலோர்ட் நெல்சன் என்பவர் சுற்றுச்சூழல் பற்றிய அறிவைப் பரப்பத் தகுந்த நாளாக 1970ம் ஆண்டு ஏப்ரல் 22ம் திகதியை தேர்ந்தெடுத்து அழைப்பு விடுத்தார்.

அவரது அழைப்பை ஏற்று 20 மில்லியன் மக்கள் இந்நிகழ்வில் பங்கெடுத்தார்கள். அன்றிலிருந்து ஆண்டு தோறும் இந்நாள் உலகளாவிய ரீதியில் சர்வதேச பூமி நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஐக்கிய நாடுகள் சபை ஜூன் 5ம் திகதியை சர்வதேச சுற்றுச் சூழல் தினமாக அனுசரித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

மனிதர்களின் அலட்சியப்போக்கு காரணமாக புவி தன் சமநிலையை இழந்து செல்கிறது. நவீன விஞ்ஞான தொழில்நுட்ப மாற்றங்கள், கைத்தொழில் மயமாக்கல், நகர மயமாக்கல் மக்கள்தொகைப் பெருக்கம் ஆகிய காரணிகளால் சூழல் பல வகையாக மாசடைகிறது. நச்சு வாயுக்களால் வளிமண்டலம் நிரம்பியுள்ளது.

போர்ச் சூழலினாலும், அணுப் பரிசோதனைகளாலும் அழிவுகளைப் புவி எதிர்நோக்குகிறது. இத்தனைக்கும் மனிதனின் அலட்சியப் போக்கும், சுயநலமுமே காரணமாக இருக்கின்றது. இத்தகைய பேராபத்துகளில் இருந்து நாம் வாழும் புவியைப் பாதுகாக்க மக்கள் அனைவரும் ஒருமித்து செயற்பட வேண்டியதன் அவசியம் உணரப்படுகின்றது. இந்தப் பின்னணியிலேயே சர்வதேச புவிதினம் கொண்டாடப்படுகிறது.

நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்பன மனித வாழ்க்கைக்காக இறைவனால் வழங்கப்பட்ட நன்கொடையாகும். புவியை அலங்கரித்துள்ள கடல், நதி, நீர்வீழ்ச்சிகள், காடு, கழனி, வனாந்தரங்கள், மலைகள், பள்ளத்தாக்குகள் அனைத்தும் மனித வாழ்க்கைக்கு அத்தியவசியமானவை.

பூமி- மத்திய கோட்டுப் பகுதியில் தன் மீது போர்த்தி அழகு பார்க்கும் பச்சைக் கம்பளம் தான் இந்த எழில் கொஞ்சும் இயற்கை. குறிப்பாக அயன மண்டல மழைக்காடுகளைக் குறிப்பிடலாம். இந்த மழைக் காடுகளைத் தேசத்தின் மிகக் குறுகிய பரப்பில் கொண்டிருக்கும் நாடுகள் மீது ஏனைய நாடுகள் பொறாமை கொள்ளும் அளவுக்கு மழைக்காடுகள்- இயற்கையின் புதையல்களாகவே இருக்கின்றன.

இருந்தும் இந்த பூமியின் ஒட்டுமொத்த உயிரின வகைகளில்(இதுவரை பெயரிடப்பட்ட 104 மில்லியன் தாவர-விலங்கினங்களைத் தவிர பன்மடங்கு ஏராளமான ஜீவராசிகள் இன்னமும் அடையாளம் காணப்படாமல் உள்ளன) பாதியளவு, சூரியன் நுழையவே தயங்கும் அடர்ந்த இந்தக் காடுகளில் தான் இராஜாங்கம் செய்கின்றன. அதிலும் இவற்றில் பெரும்பாலானவை உலகின் வேறு எந்தப் பகுதிகளிலும் காண முடியாத அளவுக்கு இந்த நாடுகளுக்கு மட்டுமே சொந்தக்காரர்களாக இருக்கின்றன.

உலகம் முழுவதும் உள்ள மழைக் காடுகளில் ஆயிரத்துக்கும் அதிகமான இனக் குழுமங்களாக 140 மில்லியன் பழங்குடியினர் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களின் கலாசாரமும் வாழ்க்கை முறையும் மழைக் காடுகளின் நிலைத்திருத்தலில் வசிக்கும் பங்கு பிரதானமானது.

ஏராளமான இரகசியங்களைப் பொத்தி வைத்திருக்கும் மழைக்காட்டின் "சாவி" காடுகளின் பாதுகாவலர்களாகிய இந்தப் பழங்குடியினரின் கைகளிலேயே இருக்கிறது. பல நூற்றாண்டு காலப் பட்டறிவின் ஊடாக இவர்கள் தேர்வு செய்து பயன்படுத்தும் மழைக்காட்டுத் தாவர- விலங்கினங்களே புதிய ரக இனங்களாக வெளியுலகுக்கு ஆராய்ச்சியாளர்களால் அறிமுகம் செய்யப்படுகின்றன.

ஆண்டுக்கு 120 தொடக்கம் 235 அங்குலம் வரையும் மழை வீழ்ச்சியைப் பெறும் மழைக் காடுகள் நீர்ச்சுழற்சியில் பங்கேற்பதன் மூலம் பூமியின் தட்பவெப்ப நிலையைத் தீர்மானிப்பதில் பிரதான பங்களிப்பைச் செய்கின்றன. மழைக்காடுகளுக்கு வெளியே பூமியின் பிற பகுதிகளில் உள்ள உயிரினங்களின் தொடர்ச்சியான இருத்தலுக்கும் இன்றியமையாத ஒரு காட்டுத்தொடர்தான் இந்த மழைக்காடுகள்.

நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பூமியின் நிலப்பரப்பில் 12 சதவீதத்தை அலங்கரித்துக் கொண்டிருந்த அயன மண்டல மழைக்காடுகள் இன்று வெறும் ஐந்து சதவீதம் என்று கூறும் அளவிற்கு குறுகிப் போயிருக்கிறது. நிமிடமொன்றுக்கு 50 தொடங்கி 100 ஏக்கர் பரப்பளவுள்ள காடுகள் அழிக்கப்படுவதாக செய்தித் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இயற்கை மனிதனின் கொடூரப்பிடிக்குள் சிக்கி படிப்படியாக அழிந்து கொண்டே வருகிறது.

இயற்கையை அழிப்பதனால் அழிக்கப்படுவது ஆயிரக்கணக்கான தாவர விலங்கின வகைகளும் ஈடு செய்யப்பட முடியாத பாரம்பரியப் பொருளுமே தவிர வறுமை ஒழிப்பல்ல. மாறாக பூமி சந்தித்தது கோரப்புயல்களும், இயற்கையோடு ஒட்டிய வகையில் பஞ்சம், பட்டினி என்று பொசுக்கிக் கொண்டிருக்கும் கடும் வறட்சி போன்றனவையுமே. அதாவது இயற்கையை அழிப்பதனால் புவிச் சமநிலைக் குலைவுகள் தான் ஏற்படுகின்றன.

மேலும் அமிலப் படிவுகள் மண்ணின் வளத்தை நச்சாக்கி விடுகின்றது. கைத்தொழில் வாயுக்கள் வளிமண்டலத்தைக் குறிப்பாக ஓசோன் படலத்தை அழித்துக் கொண்டிருக்கின்றது. இதனால் புவி வெப்பமாவதுடன் சூழலையும் பாதிக்கின்றது. சுற்றாடல் மாசடைவதைத் தவிர்ப்பதன் மூலம் புவியை நாம் பாதுகாக்க முடியும்.

மனிதன் சூழலைப் பாதுகாக்கும் அக்கறையுடன் இருந்தால் மட்டுமே இத்தகைய ஆபத்துக்களில் இருந்து புவியைப் பாதுகாக்கலாம். இது தனிப்பட்ட ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் ஆழமாக வேரிடப்படுவதன் மூலமே சூழல் மாசடைவதைத் தடுக்க முடியும்.

அண்மையில் தாய்லாந்தில் நடைபெற்ற இயற்கை சார்பான மகாநாட்டில் உலக நாடுகள் புவியைக் காக்க எடுக்க வேண்டிய பொதுக் கொள்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. புவிச் சூழல் மனிதனைக் கட்டுப்படுத்துகிறது. எனவே சூழலைக் காத்து புவியையும் காத்து வாழ்வை வளமாக்க வேண்டிய பொறுப்பு மனிதனையே சாருகின்றது.

லேபிள்கள்:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு