புதன், 22 ஜூன், 2011

நகர்மயமாக்கல் போக்கும் அதன் விளைவுகளும்

1972 - ஆம் ஆண்டு ரோம்கிளப் "வளர்ச்சியின் எல்லை" என்ற மக்கள் தொகை குறித்த மால்தீசிய அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கை நகர்மயமாக்கல் போக்கு தீவிரமடையும் என வருங்காலத்தைப் பற்றி கணித்தது. அதன் கணிப்பை விஞ்சக் கூடிய அளவு இன்று பூமி பெருமளவு நகர்மயமாகிவிட்டது.
பத்து லட்சம் பேருக்கு மேல் வாழும் நகரங்கள் 1950-ஆம் ஆண்டு 86-இருந்து; இன்று 400 ஆக உயர்ந்துள்ளது; 2015-ஆம் ஆண்டில் அது 550 ஆக ஆகக்கூடும். தற்போதைய நகர மக்கள் தொகை 1960-ஆம் ஆண்டின் மொத்த உலக மக்கள் தொகையைக் காட்டிலும் அதிகமாகவே உள்ளது. கிராமங்களில் வாழும் 320 கோடி மக்கள் 2020-ஆம் ஆண்டுகளில் குறைந்து விடுவர். உலக நகர்மயமாக்கல் வளர்ச்சிப் போக்கின் காரணமாக 2050-ஆம் ஆண்டில் நகரங்களில் மட்டும் வசிப்போர் 1000 கோடிக்கு மேல் போய்விடும்.
இதில் வளர்முகநாடுகளின் நகர்மயமாக்கம் தான் தீவிரமாக இருக்கப்போகிறது. அடுத்த தலைமுறையில் வளர்முக நாடுகளின் நகர மக்கள் 400 கோடியாகிவிடும். சினா, இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகளின் மொத்த நகரமக்கள் தொகை இன்றைய ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க மக்கள் தொகைக்குச் சமமாக உள்ளது. 80 லட்சம் பேருக்கு மேல் மக்கள் குடியிருக்கும் மாநகரங்கள் (Mega Cities), இரண்டு கோடிக்கு மேல் வாழும் மாபெரும் நகரங்கள் (Hyper cities) ஆகியவற்றின் வளர்ச்சி அபரிமிதமாகிவிடும். (பிரெஞ்சு புரட்சியின்போது மொத்த நகர வாழ் மக்கள் வெறும் 2 கோடி மட்டுமே).
மாநகரங்களின் பெருக்கம் ஒருபுறம் இருந்தாலும் இரண்டாம் அடுக்கு நகரங்களிலும், சிறிய நகர்ப்புற பகுதிகளிலும் மக்கள் திரள்வது அதிகரிக்கவே செய்யும் இம்மாதிரியான நகர வளர்ச்சி நகரத்துக்குத் தேவையான சேவைகள் எதுவும் திட்டமிடப்படுவதில்லை.
சினாவில் 1978-ஆம் ஆண்டு 193 நகரங்கள் இருந்தன. 1998-ல் அது 640 ஆக உயர்ந்து விட்டது. 1979-சந்தை சிர்திருத்தத்தின் விளைவாக கிராமப்புற உழைப்பு சக்திகள் சிறிய நகரங்களை நோக்கியும் - மாநகரங்களை நோக்கியும் நகர ஆரம்பித்தன. இதன் விளைவாக நகர மக்கள் இன்று 43 சதவீதமாக ஆகிவிட்டனர்.
சினத்து கிராமங்கள் நகர மயமாக்கப்பட்டதோடு நகரங்களை நோக்கிய குடிபெயர்சியும் பெருமளவில் நடைபெற்றது.
புதிய நகர்மயமாக்கம்:-
நமது சமகாலத்தில் கிராம / நகர கலவை என்பது மனித இருப்பிடத்துக்கான வளர்ச்சியில் புதிய பாதையாக உருவெடுத்துள்ளது நாட்டின் எந்த பகுதியும் தூய நகரமாக அல்லது தூய கிராமமாக இல்லாமல் இரண்டின் கலவையான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவிலும் இத்தகைய புதிய நகர் மயமாக்கல் நிகழ்ந்து வருகிறது.
நதியோர டெல்டாகள் இன்று மாநகர வளர்ச்சியில் நகர - தொழில் மையங்களாகவே மாற்றப்படுகின்றன. ஷங்காய் அப்படிப்பட்ட மகாநகரம் ஆகிவிட்டது. உலக மூலதன வலைப்பின்னல் நகரங்களில் ஒன்றாக டோகியோ, நியூயார்க், லண்டன் ஆகியவற்றுடன் ஷங்காயும் ஆகிவிடும். இந்த மகாநகரங்களில் தான் அனைத்து தகவல்களும் குவிக்கப்படுகின்றன. உலக நகரங்களாக மாறிய மகா நகரங்களுக்கும் - இதர நகரங்களுக்கும் இடையே சமமின்மையும், ஏற்றத் தாழ்வும் புதிய முரண்பாடுகளாக வளர்ந்துள்ளன. இதனால் நகரத்துக்கும் கிராமத்துக்கும் இடையிலான, இடைவெளி என்ற பிரச்சனை சிறிய நகரங்களுக்கும் பெரிய மாநகரங்களுக்கும் இடையிலான வருமானம் மற்றும் வளர்ச்சி பற்றிய இடைவெளி என்ற பிரச்சனையாக மாறிவிட்டது.
தற்போதைய நகரமயமாக்கம் தொழில் மயமாதல், வளர்ச்சி போன்ற திசைகளோடு எந்த தொடர்பும் இல்லாத வகையில் திசைகளோடு எந்த தொடர்பும் இல்லாத வகையில் நடைபெறுகிறது. உற்பத்தியையும், வேலைவாய்ப்பையும் பிரிக்கும் தன்மை கொண்ட சிலிகான் முதலாளித்துவத்தின் விளைவு இது என சிலர் விவாதிக்கின்றனர்.
ஆனால், ஆசியா, சகாரா ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்குப் பகுதிகளில் வளர்ச்சி இல்லாத நகரமயமாக்கலே நடைபெற்று வருகிறது. இங்கெல்லாம் 1970-களில் ஏற்பட்ட கடன் நெருக்கடியும், 1980களில் உலக நிதி நிறுவனம் முன்வைத்த பொருளாதார சிர்திருத்தங்களும் உலக அரசியல் வளர்ச்சியின் அங்கமாக புதிய வகைப்பட்ட நகரங்களையே உருவாக்கின. 1960-93 ஆண்டுகளில் உண்மைக் கூலி குறைந்தது. விலை வாசி உயர்ந்தது; நகர வேலையின்மை உச்சத்துக்குச் சென்றது. ஆனால், இந்த ஆண்டுகளில் ஆண்டுக்கு 3.8 சதமாக தொடர்ந்து வளர்ச்சியடையவே செய்தது.
நகரங்கள் வேலைவாய்ப்பை அளிக்கும் மையங்களாக இருக்கும் நிலை மாறியும் நகர மக்கள் தொகை பல்கிப் பெருகுவதன் ரகசியம் என்ன? தான்சானியா போன்ற நாடுகளில் கூட எவ்வித நகர பெருக்கம் ஏற்பட்டுக் கொண்டே உள்ளது.
உலக வர்த்தக அமைப்பும், சர்வதேச நிதி நிறுவனமும் வேளாண்மை ஒழுங்கற்றதாக்கி விவசாயிகளை விவசாயி என்ற நிலையிலிருந்து வீழச்செய்து (De-peasantiozation) அதன் மூலம் உபரியான கிராமப்புற தொழிலாளர்களை உள்பத்தி செய்கிறது. இந்த கிராமப்புற உழைப்பாளர்கள் மாநகரங்களின் சேரிகளில் தஞ்சம் புகுகின்றனர். நகரங்களில் எதிர்மறையான பொருளாதார வளர்ச்சி இருந்தும் வேலைவாய்ப்புகளில் தேக்கநிலை இருந்தும் நகர மக்கள் தொகை பெருக்கம் இதனால் தீவிரமடைகிறது. இது "மிகு-நகர்மயம்" என்று அழைக்கப்படுகிறது. புதிய தாராளவாத உலக முறைமையியல் விளைவுகளில் இதுவும் ஒன்று.
மார்க்ஸ் தொடங்கி வெப்பர் வரையிலான செவ்வியல் சமூகவியலாளர்கள் எதிர்காலத்தின் மாநகரங்கள் மான்செஸ்டர், பெர்லின், சிகாகோ போன்ற தொழில்மயநகரங்களின் அடியோற்றியே தொழில்மயமாகும் எனக் கருதினர். லாஸ் ஏஞ்ஜல்ஸ் தொடங்கி பெங்களூர் வரை இது ஓரளவு நிறைவேறியுள்ளது. ஆனால் தெற்கு நாடுகளின் பெரும்பாலான நகரங்கள் விக்டோரியன் காலத்து டப்ளின் நகரம் போலவே ஆகிவிட்டது. டப்ளின் நகரம் 1800 முதல் 1850 வரை தொழில் மயமாவதற்குப் பதிலாக தொழில்மய இறக்கம் என்ற (De-industrialisation) பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தது. அந்த நகரின் சேரிகள் தொழில் புரட்சியின் விளைவாக உருவானவை அல்ல.
இவ்விதமேதான் தார்-ஏ-சலாம், டாக்கா, லிமா போன்ற நகரங்கள் இறக்குமதி சார்பு தொழிலைக் கொண்டதாலும், பொதுத்துறை ஆலைகள் குறைந்ததாலும், ஊக்கமான மத்தியதர வர்க்கம் தமது தரத்தில் இருந்து வீழ்ந்தாலும் பேரழிவுக்கு உள்ளானாலும் அந்த நகரங்கள் வளரவே செய்தன. ஜாவாவிலும் இந்தியாவிலும் நடைபெற்ற யந்திர மயம், மெக்சிகோ, ஹாதி, கென்யா போன்ற நாடுகளின் உணவு இறக்குமதி, ஆப்பிரிக்கா முழுவதும் நிலவிய உள்நாட்டுப் போர் மற்றும் பஞ்சம், பெரும் உடமையின் உறுதிப்பாடு, வேளாண் வர்த்தகத்தின் தொழில் போட்டி போன்ற "உலகக் காரணிகள்" நகர் மயமாக்கல் போக்கை உந்தித்தள்ளி வருகிறது.
அதே சமயத்தில் பொருளாதார கட்டமைப்பை சரி செய்யும் போக்கு (Sap), நாணய மதிப்புக் குறைப்பு, அரசின் தலையீடு குறைதல், நகரங்களின் கடன் மற்றும் வீழ்ச்சியின் தீவிரம் போன்றவை காரணமாக நகரச் சேரிகள் பெருமளவில் தயாரிக்கப்படுகிறது. இதன் விளைவாக டிக்கன்ஸ் காலத்து படுமோசமான பின்தங்கிய நிலை நகர்மய உலகத்தில் விரைந்து பரவி வருகிறது.
நகர்புற வறுமை பற்றிய "சேரிகளின் சவால்" என்ற ஐக்கிய நாடுகள் சபையின் மானுட குடியிருப்பு திட்டம் 2003 அக்டோபரில் வெளியிடப்பட்டது. இது உலகம் தழுவிய அளவில் நகர்ப்புற வறுமை பற்றிய ஆய்வை மேற்கொண்டது. முதன் முறையாக, சினாவும் முன்னாள் சோவியத் நாடுகளும் இதில் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன. இந்த புதிய அறிக்கை பழைய ஐக்கிய நாடுகளின் அறிக்கைகளின் பார்வையில் இருந்து வேறுபட்ட பார்வையைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. உலக வங்கி, பன்னாட்டு நிதிநிறுவனம் போன்ற "வாஷிங்டன் பொதுக்கருத்து" மாதிரிகள் உலக அளவிளான நகரச் சேரிகளின் பிரச்சனையை மோசமான அரசாங்க நிர்வாகத்தின் விளைவாக மட்டுமே காட்டுகின்றன. உலகமயமும் அதனால் ஏற்பட்ட அசமத்துவமும் இத்தகைய சேரிகள் உருவாவதற்கான காரணங்கள் என்பதை மூடி மறைக்கின்றன.
ஆனால் ஐ.நா அமைப்பின் இந்த புதிய அறிக்கை சர்வதேச நிதி நிறுவனத்தின் பொருளாதாரக் கட்டமைப்பை சரி செய்யும் திட்டத்தின் - புதிய தாராள வாதத்தின் விளைவாகவே நகரச் சேரிகளின் பிரச்சனையைப் பார்க்கிறது. கடந்த 20 ஆண்டுகால தேசிய அளவிலும் சர்வதேச அளவில் கடைபிடிக்கப்பட்ட பொருளாதார திசைவழி காரணமாகவே நகர வறுமையும் நகரச் சேரிகளம் பல்கிப் பெருகி உள்ளன. ஒதுக்கலும், அசமத்துவமும் தீவிரமாகியுள்ளன. நகர்வாழ் அறிவாளிகள் நகரங்களை வளர்ச்சிக்கான சாதனமாக பயன்படுத்திக் கொள்வதை தடுத்துள்ளன என அறிக்கை குற்றம் சாட்டுகிறது.
சேரிகளின் சவால் என்று அறிக்கை சுற்றுச் சூழல் பிரச்சனையை, நகர்ப்புற நச்சுத் தன்மைகளை, நிலம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை. கிராமப்புறங்களிருந்து குடிபெயர்ந்துவரும் ஏராளமான உழைப்பாளிகள் பற்றியோ, நகர்ப்புற ஏழ்மையின் பாலியல் தன்மைகளையோ, முறைசாரா வேலைவாய்ப்பின் நிலைகளையோ கூட அறிக்கை கவனத்தில் கொள்ளவில்லை. இவ்வளவு குறைபாடுகள் இருந்தும் இந்த அறிக்கை பல அடிப்படைகளில் மதிப்பு மிகுந்ததாகவே உள்ளது. நகர வறுமையின் பேரழிவுகளைப் பற்றி அதன் உலகளாவிய விளைவுகளைப் பற்றி அறிக்கை ஆதாரப் பூர்வமான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
வறுமையின் நகரமயமாக்கம்:-
1812-ஆம் ஆண்டு சேரிகள் என்றால் மோசடிகளும், குற்றவியல் வியாபாரமும் நடைபெறும் இடம் என வரையறுக்கப்பட்டது. 1830-40களில் ஏழைகள் வாழும் வாழ்விடமாக சேரிகள் புரிந்துகொள்ளப்பட்டன. ஒரு தலைமுறைக்குப் பின் இந்தியாவிலும், அமெரிக்காவிலும் சேரிகள் உருவானதைத் தொடர்ந்து அது ஒரு சர்வதேச நிகழ்வுப் போக்காக அறியப்பட்டது. மோசமான குடிசை வீடு, அதீத மக்கள், நெரிசல், வறுமை மற்றும் தீமையின் கூட்டுத் தொகையாகவே சேரிகள் விளங்கின. பாதுகாக்கப்பட்ட தண்ணீரின்மை, கழிப்பிடமின்மை, பாதுகாப்பின்மை, போன்ற இல்லாமைகள் பலவற்றின் வாழ்விடமாக சேரிகள் விளங்கின.
இத்தகைய நகரச் சேரிகளில் வாழ்வோர் 2001 ஆம் ஆண்டில் 92 கோடி பேர் ஆவார். இது ஏங்கல்ஸ் தனது இளம் வயதில் மான்செஸ்டரை ஆராய்ந்தபோது நிலவிய உலக மக்கள் தொகைக்குக் சமமாகும். வளர்முக நாடுகளின் நகரவாசிகளில் 78 சதவீதத்தினர் உண்மையில் சேரிவாசிகளே ஆவர். இவர்கள் உலக நகரமக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர். நகரங்களில் வசிக்கும் சேரிவாசிகளின் சதவீதம் சில நாடுகளில் 90 சதவீதத்துக்கும் மேல் உள்ளனர். எத்தியோப்பியா நகரவாசிகளில் 99.4% சேரி மக்கள். ஆப்கானிஸ்தானில் 98.5% நேபாளத்தில் 92% டெல்லியிலோ சேரிக்குள் சேரிகள் உருவாவது என்ற போக்கு அதிகரித்துவிட்டது. ஆனால், அதிகாரப்பூர்வமான அரசு அறிக்கைகளில் இந்த பிரச்சனை வெகுவாக மூடி மறைக்கப்பட்டு விடுகிறது.
உலகெங்கும் இன்று 2.5 லட்சம் நகர சேரிகள் உள்ளதாக அறியப்பட்டுள்ளது. தெற்காசியாவின் மிகப்பெரிய மாநகரங்களான கராச்சி, முப்பை, டெல்லி, கொல்கத்தா, டாக்கா ஆகிய ஐந்து நகரங்களில் மட்டும் 15,000 சேரி குடியிருப்புகளில் இரண்டு கோடி பேர் வாழ்கின்றனர்.
மரபு சார்ந்த வகையில் தொழில் புரட்சி மூலமாக உருவான சேரிகள் நகரின் உள்ளேயே நகரின் அழுகலாகக் கிடக்கும். ஆனால் தற்போதைய புதிய நகர சேரிகள் நகரத்தின் விளிம்புகளில் பெருகி வருகின்றன.
சேரி புவியியல் குடியிருப்புக்கான இடத்தினை அளிப்பதில் தொடங்குகிறது. வளர்முக நாடுகளின் 85 சதவீதமான நகரவாசிகள் சட்ட விரோதமாகவே நிலத்தை அபகரித்துள்ளதாக ஒரு ஹார்வர்டு ஆய்வு கூறுகிறது. நிலத்தின் மீதான யூகபேரம் பெருமளவு நகரங்களில் வளர்ந்து வருகிறது. சட்ட விரோதமான தனியார் நில யூக பேரத்தில் தேசிய அளவிலும் உள்ளூர் அளவிலுமான அரசியல் தலையீடு வழக்கமாகவே உள்ளது. சட்டப்பூர்வ நிலைமை இல்லாத சேரி வாசிகள் அதிகாரிகள் மற்றும் கட்சித் தலைவர்களின் பிடியில் சிக்கிக்கொண்டு விடுகின்றனர்.
மனித வாழ்வுக்கான அடிப்படை வசதிகள் இத்தகைய நகரச் சேரிகளின் இயல்பாகவே மறுக்கப்பட்டு விடுகின்றன. ஆப்பிரிக்க நகரச் சேரிகளில் நீரும் - மின்சாரமும், இதர நகர சேவைகளும் இன்று வரை உருவாகவே இல்லை 57 சதவீதமான ஆப்பிரிக்க நகரவாசிகள் கழிப்பிட வசதி ஏதுமின்றியே வாழ்கின்றனர். நகரங்களில் உருவாகும் மானுட/மிருக கழிவுகள் தண்ணீரோடு கலந்து விடுவதால் நீர்வழி நோய் காரணமாக 20 லட்சம் நகரக் குழந்தைகள் ஆண்டு தோறும் மாண்டுபோகின்றன. நைரோபி போன்ற நகரங்களில் பிளாஸ்டிக் பைகளில் தமது கழிவுகளை ஏழைகள் சுமந்து திரிய வேண்டியுள்ளது. மும்பையில் 500 பேருக்கு ஒரு கழிவறைக்கூடு என்ற விதத்தில் உள்ளது. இவை அச்சுறுத்தும் வாழ்க்கையே தவிர வேறில்லை. இதுவல்லாது நச்சுக் கழிவுகளின் பெருக்கம், வேதித் தொழிற்சாலைகளின் கழிவுகள், சாக்கடை கழிவுகளின் பெருக்கம் போன்றவைகளால் சேரிகளே முதலில் தாக்கப்படுகின்றன. இந்தியாவில் போபால் விஷவாயு கசிவின் பேரழிவை இங்கு நினைவு கூறிக்கொள்ளலாம்.
பொருளாதார சிர்திருத்தமும் நகர்மயமாக்கலும்:-
உலகமய நிலைகளில் கடைபிடிக்கப்படும் பொருளாதார சிர்திருத்தங்கள் நகரங்களின் நலத்திட்டங்களை கைவிட்டு விடுகின்றது. நகர வளர்ச்சிக்கான அரசாங்க முதலீட்டை நிதிச் சிக்கனம் என்ற பெயரில் இல்லாமல் ஆக்கிவிடுகிறது. இத்தகைய புதிய பொருளாதாரக் கொள்கைகள் கிராம எதிர்ப்பு தன்மை கொண்டவை மட்டுமல்ல. அவை நகர எதிர்ப்பு தன்மை கொண்டவையுமாகும். ரீகன் தொடங்கி புஷ் வரையிலான அமெரிக்க அதிபர்களின் ஆதரவோடு உலகெங்கும் பெரிய வங்கிகளின் நலன் காக்கப்பட்டது. பொதுத்துறை தனியார்மயமாக்கப்பட்டது. நிதி நாணய மதிப்புகள் குறைக்கப்பட்டன. உடல்நலன் மற்றும் கல்வித் துறைகள் லாப நோக்கத்தோடு தனியார் மயமாக்கப்பட்டன. இறக்குமதி கட்டுப்பாடுகளும் உணவு மானியங்களும் இல்லாமல் ஆக்கப்பட்டன. உலக சரக்கு சந்தையில் வளர்ச்சி அடைந்த நாடுகளின் பகாசுர கம்பெனிகளின் வர்த்தகமே "சுதந்திரச் சந்தை" என்ற பெயரில் பாதுகாக்கப்பட்டது.
அரசு தனது கடமை, பொறுப்புகளில் இருந்து பொருளாதார சிர்திருத்தம் என்ற பெயரால் பின் வாங்கியது நகர வறுமை பெருமளவு வளர்ந்ததற்கு காரணம் என்ற ஐநாவின் அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. இது 1980-90களில் நடைபெற்றது.
வெள்ளை மாளிகையாலும், சர்வதேச நிதி நிறுவனத்தாலும் செயற்கையாக உருவாக்கப்பட்ட பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக நகர்ப்புற ஆப்பிரிக்காவும், லத்தீன் அமெரிக்காவும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டன. உண்மையில் உலகெங்கும் பல நாடுகளில் எண்ணை விலை உயர்வு, பஞ்சம், வட்டி விகித உயர்வு, சரக்கு விலைகளின் மாற்றம் போன்றவைகள் பொருளாதார சிர்திருத்தம் காரணமாக ஏற்பட்டன.
தேசிய பொருளாதார கட்டமைப்பை சரி செய்யும் திட்டத்தை மேற்கொண்டதன் விளைவாக ஆப்பிரிக்காவெங்கும் ஆலை உற்பத்தியாளர்கள் வீழ்ச்சியடைந்தனர். மூலதனம் பறந்து சென்றது. விலைவாசி உயர்ந்தது. தொழிலாளியின் உண்மை கூலி வீழ்ந்தது. இவற்றின் விளைவாக மோசமான குற்றங்களும், அடியாட்களின் பெருக்கமும் அதிகரித்துவிட்டது.
1970களில் 7.5 கோடி பேர் கிராமப்புற ஏழைகள் லத்தீன் அமெரிக்காவெங்கும் இருந்தனர் (நகர ஏழைகள் 4.4 கோடி) 1990-ல் 115 கோடி பேர் நகர ஏழைகள்; 8 கோடி பேர் கிராம ஏழைகள் என ஏழைகள் பற்றிய நகர, கிராம வித்தியாசம் மாறுபடத் தொடங்கியது. லத்தீன் அமொரிக்காவில் பொருளாதார சிர்திருத்தங்களை ராணுவ சர்வாதிகாரிகளே பெருமளவு மேற்கொண்டனர். சிலியின் சாண்டியாகோ நகரில் சர்வாதிகாரி பினோசெ சேரிகளையும் - சந்தைப்பகுதிகளையும் புல்டோசர் கொண்டு அழித்தான். அவை கிளார்ச்சியின் மையங்கள் என்பதால் அழிக்கப்பட்டன. போனஸ் அயர்சில் ஏழைக்கும் - பணக்காரனுக்கும் இடையிலான வருமான விகிதம் 23 மடங்கு என இருந்தது. லிமாவில் 1985-90 ஆண்டுகளில் மட்டும் 17 சதவீதத்தில் இருந்து 44 சதவீதமாக ஏழைகள் பெருகிவிட்டனர்.
இந்த பெருவெள்ளத்தில் நீந்திக் கரைசேருகிறவர்கள் சேரலாம், இல்லையேல் மூழ்கிச் சாகலாம் என்ற கொடூர சமூக சிந்தனை புதிய தாராளமயத்தின் கருத்தியலாகவே வளர்க்கப்பட்டது. இந்த நிலையில் சேரி வாழ் பெண்களின் நிலை பல மடங்கு கேவலமாகியது. அமைப்பு சாரா துறைகளில் பெண்கள் கொடூரமான முறையில் சுரண்டப்படுவது தீவிரமடைந்துவிட்டது. சுய வேலை வாய்ப்பு மூலம் பெண்களை பொருளாதார ரீதியில் சுதந்திரமானவர்களாக ஆக்குவது என்ற முழக்கம் உண்மையில் ஏமாற்றாகவே முடிந்தது.
முன்னாள் சோவியத் நாடுகளில் நகர வறுமை பல மடங்கு உயர்ந்துவிட்டது. வரலாறு காணாத ஒட்டாண்டித்தனம் அது. 1990-ல் 1.4 கோடி பேர் இந்த நாடுகளில் ஏழைகளாக இருந்தனர். 2003-ல் 16.8 கோடி பேராக இது உயர்ந்து விட்டது. இந்த பொருளாதாரப் பேரழிவு முதலாளித்துவம் அவர்களுக்கு அளித்த பரிசு!
உபரி மனிதர்களா?
1870-1900 வரையிலுமான பிற்கால விக்டோரியன் ஏகாதிபத்தியம் உலகச் சந்தையை ஆசிய / ஆப்பிரிக்க விவசாயிகளிடம் கொண்டு சென்றது. விளைவு: லட்சக்கணக்கான பஞ்சச் சாவுகளும் பாரம்பரிய தொழிலில் இருந்து கோடிக்கணக்கானோர் துரத்தி எறியப்படுதலும், லத்தீன் அமெரிக்காவில் அரை விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் குறைந்த பட்சம் உயிர்வாழ்வதற்கே இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டனர். இவற்றின் காரணமாக இருபதாம் நூற்றாண்டில் கிராமப்புற மக்களின் எழுச்சிகளும், கிராமப்புற பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான தேசவிடுதலைகளும் உருவாயின.
தற்போது பொருளாதார சிர்திருத்தங்கள் அதே போன்றதொரு அடிப்படை மாற்றங்களுக்கு வழி ஏற்படுத்துகிறது. நகரங்கள் வளமையையும் செழிப்பையும் கொண்டுள்ளதற்குப் பதிலாக திறனற்ற உபரி மக்களைக் கொட்டுமிடமாக மாறிவிட்டது. கூலி குறைவான அமைப்புசாரா சேவைகளும், தொழில்களும், வர்த்தகமும் தாராள மயத்தின் நேரடி விளைவாகும் என ஐநா அமைப்பின் அறிக்கை எடுத்துரைக்கிறது. உண்மையில், உலகெங்கும் நகரங்களின் அமைப்புசாரா தொழிலாளி வர்க்கத்தின் எண்ணிகை நூறு கோடியைத் தாண்டிவிட்டது. அமைப்புசாரா உற்பத்தி முறையிலேயே (ஆலைத் தொழில் அழிவைத் தொடர்ந்து) வாழ்ந்து கொள்ளும் முறையை மூன்றாம் உலக நாடுகளின் நகரங்கள் வளர்த்து வருகின்றன.
சேரிகளின் சவால் என்ற அறிக்கை, வளர் முக நாடுகளின் பொருளாதார ரீதியாக செயல்படும் மக்கள் தொகையில் ஐந்தில் இரண்டு பங்கினர் அமைப்புசாரா தொழிலாளரே என எடுத்துக் காட்டியுள்ளது.
இந்த அமைப்புசாரா தொழில் மூலமாக, ஆசியாவில் 40 சதவீதமாக நகரப்புற வேலை வாய்ப்பு உருவாக்கப்படுகிறது. மத்திய அமெரிக்காவில் இது 60-75 சதவீதமாகவும், ஆப்பிரிக்காவில் இது 60 சதவீதமாகவும் உள்ளது.
இது எதைக் காட்டுகிறது?
பெரும்பாலான மக்கள் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்ட தொழிலாளர்களாகவே இருப்பதைக் காட்டுகிறது. இந்த அமைப்புசாரா தொழிலாளர்கள் தாங்கள் வேலை செய்யுமிடத்திலும், உலக அளவிலான சுரண்டல் ஏற்பாட்டிலும் கொடூரமாக சுரண்டப்படுகின்றனர். இவர்களுக்கு தொழிலாளர் நலச் சட்டங்கள் மூலமான பாதுகாப்பு ஏதுமில்லை.
இந்த அமைப்புசாரா தொழிலாளர்கள் குட்டி முதலாளிகள் அல்லர்; இவர்கள் தொழிலாளர் ரிசர்வ் படையுமல்ல. அல்லது, இவர்கள் பழைய அர்த்தத்தில் உதிரிப் பட்டாளிகளுமல்ல. இவர்கள் புதிய உழைப்புப் பிரிவினையின் ஒப்பந்த வேலைகளுக்கு ஆட்பட்ட உழைப்பு சக்திகளாவர். பன்னாட்டு பகாசுர கம்பெனிகளின் நேரடிச் சுரண்டலுக்கு ஆட்பட்டவர்களாவர்.
ஐரோப்பிய தொழில் புரட்சி கிராமப்புறங்களில் இருந்கு வெளியேற்றப்பட்ட தொழிலாளர்கள் அனைவரையும் ஈர்த்துக் கொள்ளவில்லை. அமெரிக்க கண்டத்துக்கு மிகப் பெருமளவில் ஐரோப்பிலிருந்து குடிபெயற்சி நடைபெற்றதால் இந்த பிரச்சனை ஓரளவு சமாளிக்கப்பட்டது. ஆனால், இன்று உழைப்பு சந்தை உலகமயமாகி விடவில்லை. பணக்கார நாடுகளுக்கு பெருமளவில் குடிபெயர்வதை தடுக்கும் தொழில் நுட்ப "பெருஞ்சுவர்" வலுவாக எழுப்பப்பட்டுவிட்டது. எனவே 21-ஆம் நூற்றாண்டின் உபரி மனிதர்கள் நகரச் சேரிகளில் குவிக்கப்படும் நிலை ஏற்பட்டு விட்டது. இவர்கள் ஆலைத் தொழிலில் சம்பந்தப் படாத அமைப்புசாரா தொழிலாளர்களாக தமது வாழ்நிலையை வைத்திருக்கிறவர்கள்.
பொருளாதாரத்தில் பல சிறு அடுக்குகளாக உள்ள இவர்கள் இனவழியேயும் பல இனங்களைச் சார்ந்தவர்களாக உள்ளனர். இவர்களுக்கு கூட்டு உழைப்பு அல்லது பெருவீத வர்க்கப் போராட்டம் என்ற கலாச்சாரம் உருவாக வாய்ப்பில்லை. இவர்கள் ஆலைகளில் ஒன்று சேர்வதில்லை. மாறாக, சந்தைகளில் அல்லது சேரித் தெருக்களில் செயல்படுகின்றனர். இத்தகைய அமைப்பு சாரா உழைப்புசக்தி பணக்காரர்களுக்கு "வீட்டு சேவை" செய்வது தொடங்கி பல வகைப்பட்ட சேவைத் துறைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். தற்போது நிலவும் உற்பத்தி முறைமையை மாற்றி அமைப்பது குறித்த ஆர்வம் இவர்களுக்கு இருக்க முடியாது. தனக்கான வர்க்கமாக (Class in itself) இத்தகையவர் மாறுவது - அதுவும் மார்க்சிய அடிப்படையில் மாறுவது - என்ற வாய்ப்பு இன்று அருகியே உள்ளது. இத்தகைய மாநகர ஆக்கம் பற்றியோ - அமைப்புசாரா தொழிலாளர் பற்றியோ மார்க்ஸ் ஏங்கல்ஸின் ஆய்வுகள் எதுவும் குறிப்பிடவில்லை.*
(* குறிப்பு : இன்றைய மாநகர ஆக்கம் பற்றி மார்க்ஸ் காலத்திலேயே குறிப்பிட்டிருக்க முடியாது. மார்க்சியத்திடம் அவ்விதமான "எதிர்காலவியலை" எதிர்பார்ப்பது மார்க்சியமாகாது. உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி, புதிய சமூக வேலைப் பிரிவு, புதிய வர்க்கங்களின் ஆக்கம் போன்றவை முதலாளித்துவத்தின் கீழ் மூலதனக் குவியலின் நிகழ்வுப் போக்கோடு தொடர்புடையது. இந்த மார்க்சிய அடிப்படையில் இக்கட்டுரை அமையவில்லை என்பது கட்டுரையின் பலவீனங்களில் ஒன்று.)
மதவாத அரசியலின் வளர்ச்சி
அமைப்புசாரா தொழிலாளர்களின் போராட்டம் எதுவும் தொடர்ச்சியற்றதாகவும், திடுமென தோன்றுவதாகவுமே உள்ளது. அவை பொதுவாக உடனடி நுகர்வுப் பிரச்சனை மீதான இயக்கமாகவே உள்ளது. உணவுப் பொருள் விலை உயர்வை எதிர்த்த கலகங்கள், குடியிருப்பு உரிமைக்கான மோதல்கள் என்பன போன்றவையாகவே உள்ளன. பெரும்பாலும், வெனிசுலாவிலும் நகர்ப்புற ஏழைகளின் பிரச்சனைகளை இடதுசாரி அரசியலாக்குவதில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. அவையும் சமூக மாற்றம் பற்றியதாக இல்லாமல், சலுகை திட்டம் பற்றியதாகவே அமைந்துள்ளது.
ஆனால், தெற்காசியாவிலும் - ஆப்பிரிக்காவிலும் சேரி நகரங்களின் பிரச்சனைகளை இனமத வாத இயக்கங்கள் எடுத்துக் கொண்டுள்ளன. லாகோஸில் முஸ்ஸ“ம் எதிர்ப்பு கலகங்கள் நகரப் பிரச்சனை வெடித்தது. மும்பையில் இத்தகைய இயக்கத்தை அரை பாசிச இயக்கமான சிவசேனா நடத்தியது.
புதிய நகர்மயமான உலகம் அதீத வேகத்தில் உருவாகி வருகிறது. எதிர்பாராத திசைகளில் அது பயணப்படுகிறது. கடந்த காலத்தை மட்டும் வழி காட்டியாகக் கொண்டு இதனை எதிர்கொள்ள முடியாது. புதிய வகைப்பட்ட நகரங்களின் சமூக பதட்டம் எப்படிப்பட்டதாக மாறும் என்பதை ஒருவரும் முன்கூட்டி அறிய இயலவில்லை.
தொழில் புரட்சி நகரங்களில் கடவுள் செத்துப் போனார். ஆனால் இன்று வளர்முக நாடுகளின் நகரங்களில் அவர் மீண்டும் எழுகிறார். இந்த இரண்டு நகர வறுமைகளின் கலாச்சாரங்களுக்கும் இடையிலான வேறுபாடு பெரியதாகவே உள்ளது. தொழில் புரட்சி காலத்து தொழிலாளி வர்க்கம் நகர்மயம் காரணமாக சமயச் சார்பற்றதாகவே இருந்தது. அப்போதைய நகரச் சேரிகளில் சிறு அளவில் தேவாலயங்கள் இருந்தாலும் பிரதான போக்காக கடவுள் நம்பிக்கையின்மையே தொழிலாளர் உணர்வில் இருந்தது. 1880-களில் பெர்லின் உலகின் மிக அதிகமான மதமற்றவர்கள் வாழும் நகரமாக இருந்தது. 1902-ல் லண்டனின் தொழிலாளர் குடியிருப்புகளில் 12 சதவீதத்தினரே தேவாலயங்களுக்குச் சென்றனர். பார்சிலோனாவிலும், டோகியோவிலும், செயின்ட் பீட்டர்ஸ் பர்க்கிலும் தொழிலாளர்கள் டார்வினையும் மார்க்சையும் தழுவினர்.
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப ஆண்டுகளில் அராஜக வாதமும், சோசலிசமும் ஊக்கமாக செயல்பட்டதைப் போல, இன்று வளர்முக நாடுகளின் மாநகரங்களிலும், நகரங்களிலும் வெகு ஜனப்படுத்தப்பட்ட இஸ்லாமும், கிருத்துவமும், இந்துத்துவமும் வேகமாகச் செயல்படுகின்றன.
மொராக்கோவில் உள்ள நகரங்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள், இவர்கள் மத்தியில் எழுந்த இஸ்லாமிய இயக்கம்தான் நகரச் சேரிகளின் உண்மையான அரசாங்கமாக உள்ளது. அரசு எந்திரம் தாக்கும் போது சட்ட உதவி செய்வது, இரவுப் பள்ளிகளை நடத்துவது, நோய்வாய்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி, புனிதப் பயணங்களுக்கு ஏற்பாடு செய்வது, மரணமடைந்தால் அடக்கம் செய்ய உதவுவது போன்ற பல வகைகளில் இந்த நகரச் சேரி மக்களுக்கு இத்தகைய மத இயக்கங்கள் உதவுகின்றன. அன்றாட வாழ்வின் கொடூரங்கள் மீதான அன்றாட நடவடிக்கைகளாகவே இவை உள்ளன. அரசின் புறக்கணிப்பை எதிர்த்த போராட்டங்கள் இத்தகைய மத அரசியல் அமைப்புகள் மூலம் நடத்தப்படுகின்றன.
மேலைய நாடுகள் அல்லாத மூன்றாம் உலக நாடுகளின் கிருத்துவமாக பெந்தகோஸ்த் கிருத்துவம் உருவாகியுள்ளது. பெந்தகோஸ்த் கிருத்துவம் வறுமையின் இருப்பிடமாக உள்ள நகரங்களில் மிகுந்த ஊக்கமாகச் செயல்படுகிறது. இது நகரங்களின் கொடூர வாழ்க்கைக்கு எதிரான மாற்றுப் பண்பாடாகவே வளர்ந்துள்ளது. இது நகரங்களில் உள்ள ஏழைப் பெண்களுக்கு சுய உதவிக்குழுக்களை அமைத்துக் கொடுக்கிறது. குடியால் மதி மயங்கி போதைக்கு அடிமையானவர்களை மீட்டு புதிய வாழ்க்கை கிடைக்க உதவுகிறது. தெருக் குழந்தைகளைத் திரட்டி அவர்களுக்குரியதை செய்ய விழைகிறது. இவற்றோடு, மனிதத்துன்பங்களுக்கு தீர்வாக - மருந்தாக மத நம்பிக்கையை முன் வைக்கிறது.
இத்தகைய மதவாத கிளர்ச்சிகள் தொழிற் சங்கங்களையும் - இடது சாரி அரசியலையும் எதிர்ப்பதில் முனைப்பாக உள்ளன. நகர ஏழைகள் பற்றிய பிரச்சனைகளில் மிகுந்த தீவிரவாதத் தன்மையிலான இயக்கத்தையும் நடத்துகின்றன. மாநகரச் சேரிகளில் இத்தகைய மத அடிப்படைவாத இயக்கங்கள் இதனால் பலம் பெற்றுவிடுகின்றன.
இடதுசாரிகள் இத்தகைய நகரச் சேரிகளில் பெருமளவு செயல்படுவதில்லை என்பதால் இது எந்தத் தடையுமின்றி நடைபெற்றுவருகிறது. இது எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும் என்பதை இனித்தான் பார்க்க வேண்டும்.

லேபிள்கள்:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு