செவ்வாய், 21 செப்டம்பர், 2010

குழந்தைகளுக்கான கல்வி

UJEYANTHAN.Y
B.Ed(Reading)

‘கற்றல் என்பது ‘வெற்றி பெறுதல்’ என்று இன்று சுருங்கிப் போய்விட்டது. மெல்லக் கற்போர் தோல்வியுற்றோர் ஆகிறார். தோல்வி என்பது ஓர் அவமதிப்பு. வெற்றி மட்டுமே இலக்கு. பண்பு (Character) குறித்துப் பேசி வந்த பள்ளிகள், இன்று ஆளுமை (Personality) குறித்துப் பேசுகின்றன. ஆளுமை என்பது வெற்றி பெற்றோருக்கான குறியீடு ஆகும்.

கதைகளும், கட்டுக் கதைகளும் அதிகம் புழங்குவதும் வெற்றி பெற்றோரைப் பற்றிய பேச்சுக்களில் தான். வெற்றி பெற்றவர்கள் சொல்லப் போகும் ‘வெற்றி ரகசிய உளறல்களை’க் கேட்பதில் தான் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு ஆர்வம்! (டோனியின் வாழ்க்கை வரலாறு இன்று நூற்றுக்கணக்கான இந்தியப் பத்திரிக்கைகளில் வெளிவந்து கொண்டிருக்கிறது).

மிகச்சிறு பிராயத்திலேயே குழந்தைகளின் வெற்றி தோல்வி குறித்த பேச்சுகள் தொடங்கி விடுகின்றன. “எங்க அண்ணன் மகன் ஆறு மாசத்தில தவழ ஆரம்பிச்சுட்டான். இவன் இன்னும் குப்புறக் கூட விழுகல!”

குழந்தைகளின் வெற்றி தோல்விகளை மதிப்பிட எடைக் கற்களாக இரு தடைக் கற்கள் இருக்கின்றன. ஒன்று ‘அறிவின் ஆதிக்கம்.’ மற்றொன்று ‘வயது வந்தோரின் எதிர்பார்ப்பு’.

உணர்ச்சிகளையும் இதயங்களையும் அற்பமாய் ஒதுக்கும் அறிவின் குறூரமும், சிறகுகளை அறுத்துச் சுமைகளை ஏற்றுப் பெரியோரின் சொந்த ஆசைகளும் சில குழந்தைகளிடம் வெற்றிக் களிப்பையும், பல குழந்தைகளிடம் விடுபடும் தவிப்பையும் உண்டாக்கி விடுகின்றன.

சரி – தப்பு கண்டுபிடிக்கும் அறிவின் கர்வத்தைக் களையாமல் ஒரு குழந்தையையும் நம்மால் புரிந்து கொள்ள முடியாது.

ஸ்விஸ் நாட்டு உளவியல் நிபுணர் ஜீன் பியாஜெட் (Jean Piaget 1896-1980) பற்றிக் கல்வியாளர்கள் அடிக்கடி குறிப்பிடுவார்கள். அவசரம்… வேகம்… முந்துவது போன்ற ரேஸ் மைதானத்து வார்த்தைகள் கல்விக் கூடங்களை வந்து ஆக்கிரமித்தபோது, குழந்தை எவ்வாறு சுயமாக, படிப்படியாகக் கற்கிறது என்பதை ‘வெற்றி வெறியர்களுக்கு’ மண்டையில் அடித்து விளக்கியவர் பியாஜெட்.

பியாஜெட் ஐந்து வயதுச் சிறுமி ஜுலியாவுடன் நடத்திய சிறிய ஓர் உரையாடல் கல்வி உலகின் கவனத்தைப் பற்றிப் பிணித்தது. ‘காற்று உரையாடல்’ என அது பெயரிட்டு அழைக்கப்படுகிறது.

பியா: காற்று எப்படி உண்டாகுது ஜுலி?

ஜுலி: மரம்தான் காத்தை உண்டாக்குது!

பியா: அது எப்படி உனக்குத் தெரியும்?

ஜுலி: மரம் கிளைகளை ஆட்டி அசைத்துக் காத்தை உண்டாக்குவதை நான் பாத்திருக்கேன்.

பியா: அப்படியா? எனக்குச் செஞ்சு காட்டேன்!

ஜுலி: இந்தா இப்பிடித்தான்! (தன் கைகளை அசைக்கிறாள்)

பியா: காத்து வரல!…

ஜுலி: ம்ம்! மரம் பெரிசில்ல! அது கைய அசைக்கிறப்ப காத்து வந்திடும்.

பியா: அப்படீன்னா கடல்ல எப்படி ஜுலி காத்து வருது? அங்க மரங்களே இல்லையே!

ஜுலி: ம்! காத்து தரையில் இருந்து கடலுக்குப் போகுது. இல்ல! இல்ல! அது காத்து இல்ல. அலை! (ஓடிப் போகிறாள்).

பியாஜெட் ஆயிரக்கணக்கான குழந்தைகளுடன் உரையாடல் நடத்தியவர். வயது வந்தோர் உலக அறிவுச் செய்திகளை அவர் ஒருபோதும் குழந்தைகளுடனான உரையாடலில் இடைச் செருகியதில்லை.

வயது வந்தவர்களின் அறிவுலகப் பார்வையின் படி ஜுலியர் சொன்னதெல்லாம் தப்பு. ஆனால் உண்மையில் அது தப்பு அல்ல என்பது பியாஜெட்டின் கருத்து. ஒவ்வொன்றையும் குழந்தை தன் வழியில் அறியும் முயற்சி இது.

ஜுலியாவின் நம்பிக்கைகளை அங்கீகரித்து பியாஜெட் உரையாடலைத் தொடர்ந்தார். அந்த நம்பிக்கைகளைச் சரி என்று ஒப்புக் கொள்ளவும் இல்லை. தவறு என்று மறுக்கவும் இல்லை. குழந்தை தான் கட்டமைக்கும் தர்க்க வழியிலேயே பயணம் செய்து, இறுதியில் உண்மையைக் கண்டறிவதுதான் நிலைக்கும். வயது வந்தோரின் அவசரத்துக்குக் குழந்தையின் புரிதலைத் திருத்துவதும், சரி செய்வதும் தவறு என்பது பியாஜெட்டின் கருத்து.

தோற்கும் பின்தங்கும் தடுமாறும் குழந்தைகளைப் புரிந்து கொள்ள இந்தத் தெளிவும் நிதானமும் தேவை. வயது வந்தோரின் தர்க்க அறிவைக் குழந்தைகளிடம் திணிப்பதன் மூலம் மேலும் மேலும் அக் குழந்தைகளிடம் தோல்வியையே திணிக்கிறோம். குழந்தைகளைத் தனிமைப்படுத்துகிறோம். விம்ம வைக்கிறோம். குறுக வைக்கிறோம்; துர்காவைப் போல் சிலரை அழுது அழுது தூங்க வைக்கிறோம்…

3


குழந்தைகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும்? எப்படி ஏற்க வேண்டும்?

நம்முடைய ஆசைகளுடனா? நம்முடைய எதிர்பார்ப்புகளுடனா? வெற்றி குறித்த நம் ஏக்கங்கள், பிரமைகளுடனா?

எதிர்பார்ப்பு பிரியத்தில் இருந்து எழலாம். ஆனால் எதிர்பார்ப்பின் அடுத்த அவதாரம் நிர்ப்பந்தம் தானே!

“குழந்தைகள் உங்களுடன்
இருக்கலாம்;
ஆனால் அவர்கள் உங்களுக்குச்
சொந்தமானவர்கள் அல்ல
அவர்களுக்கு உங்கள் அன்பைக் கொடுங்கள்!
உங்கள் சிந்தனைகளைத்
தர வேண்டாம்,
அவர்களுக்கென்று சிந்தனைகள்
இருக்கவே இருக்கின்றன”

என்பது கலீல் கிப்ரான் பாட்டு.

குழந்தைகள் எப்படி இருக்கிறார்களோ அப்படியே அவர்களை ஏற்றுக்கொள்வது (accepting them as they are) தான் உண்மையான அன்பு. ‘இப்படி இருந்தால் நல்லது’ என்ற உங்கள் விருப்பத்துக்கும் அந்தக் குழந்தைக்கும் சம்பந்தம் என்ன?

இதைச் சொன்னவர் ஏ.எஸ்.நீல் (A.S.Neill) சொன்னவர் மட்டுமல்ல; நடைமுறைப்படுத்தியும் காட்டியவர். குழந்தைகளை அப்படியே விரும்பி ஏற்றுக் கொண்டவர். இவர்களை இப்படி வளைத்து நிமிர்த்த வேண்டும் என்று எவ்விதத்திலும் திட்டம் இடாதவர்.

நீல் ஸ்காட்லாந்துகாரர்(1833-1973). கோடைமலைப் பள்ளி (Summer Hill School) என்ற தனித்துவம் மிக்க சோதனைப் பள்ளியை (Experimental School) இங்கிலாந்தில் நிறுவியவர். குழந்தை உரிமைகள் குறித்துச் சிந்திக்கிறவர்கள் ஸம்மர் ஹில் அனுபவங்களை வாசித்தால் நெகிழ்ந்து போவார்கள்.

‘இதைச் செய்யாதே!’ என்று குழந்தைகளுக்கு ஆணைகள் பிறப்பிக்காத பள்ளி. பள்ளிக்குப் பொருந்துமாறு குழந்தைகளைத் திருத்துவதற்கு மாறாக, குழந்தைகளோடு பொருந்துமாறு தன்னைத் திருத்தித் திருத்தி அமைத்துக் கொண்ட பள்ளி. ஒவ்வொரு குழந்தையும் ஆர்வம் கொண்டு கல்வியைத் தொடரும் வரை காத்திருந்த பள்ளி. எந்தக் குழந்தைக்கும் தோல்வியுணர்வை வழங்காத பள்ளி.

ஸம்மர்ஹில் நிறுவி வரலாறு படைத்த நீல், அடிப்படையில் தோல்வியுற்ற ஓர் ஆசிரியர்தான்.

ஸ்காட்லாந்தின் கிராமப்புறப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தபோது (1917) மாணவர்களுக்கு அதிக சுதந்திரம் கொடுத்தார் என்பதற்காகப் பணி நீக்கம் செய்யப்பட்டவர்.

பணிநீக்கம் செய்யப்பட்டு பள்ளியை விட்டு வெளியேறுகையில் அவர் தன் சின்னஞ்சிறு மாணவர்களுடன் உரையாடுகிறார்:

“நான் ஏன் இந்தப் பள்ளிக்கூடத்தை விட்டுப் போகிறேன் என்பது உங்களுக்குப் புரியுமோ என்னவோ? இருந்தாலும் புரியவைக்க முயற்சி செய்து பார்க்கிறேன். உங்களுடைய அம்மா அப்பாக்களூக்குப் பிடிக்காததால் நான் வேலைநீக்கம் செய்யப்பட்டேன். நான் நல்ல ஆசிரியர் இல்லையாம்! உங்களுக்கு நிறைய சுதந்திரம் கொடுத்து விட்டேனாம். பாடம் சொல்லிக் கொடுப்பதை விட்டு விட்டுப் படம் போடவும், மீன் பிடிக்கவும், விளையாடவும் உங்களைப் பழக்குகிறேனாம். உங்களுக்குத் தேவையானதைக் கூட நான் சொல்லித் தரவில்லையாம்! பொலிவியாவின் தலைநகரம் எது என்று உங்களில் யாருக்காவது தெரியுமா? உங்களுக்குத் தெரியாதல்லவா? இதையெல்லாம் நான் சொல்லித் தரவில்லை அல்லவா?…” இவ்வாறு நீல் பேசிக் கொண்டிருக்கையில் ஜிம் என்ற மாணவன் எழுந்து கேட்கிறான் ‘பொலிவியாவின் தலைநகரம் எது சார்?. நீல் பதில் அளிக்கிறார்: “அது எனக்கே தெரியாது ஜிம்.”

பொய்மை கலவாத உரையாடல் இது.

எப்போதும் இப்படித்தான். பொய்மையற்ற உரையாடல்களுடனே அவர் குழந்தைகளை எதிர் கொண்டார். குழந்தைகளை நேசித்தார்.

பியாஜெட்டும், நீலும் குழந்தைகளை மதித்தவர்கள்; மதிப்பிட நினைத்தவர்கள் அல்லர்.

பியாஜெட், நீல் போன்றோரின் கண்களுக்குத் துர்கா கோமாளியல்ல, ஆர்வமுள்ளவள்; துடிப்பானவள்; பிரியத்துக்குரியவள். மனோரீதியான சில பிரச்சினைகள் அவளிடம் உண்டு. ஆனால் அவை களைய முடியாதவை அல்ல. களையலாம். எப்படி? சரி, தப்பு கண்டுபிடித்தா? இல்லை. பொறுமையும் வாஞ்சையும் கொண்டு! யாராவது ஒரே ஒருத்தராவது அவளோடு கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டும்.

லேபிள்கள்: ,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு