செவ்வாய், 21 செப்டம்பர், 2010

குரு ஸ்தானம்! ஆசிரியர்

குரு ஸ்தானம்!
வாழ்வின் இரண்டு அதி முக்கிய அறைகள். ஒன்று கருவறை; அம்மாவுடையது. மற்றொன்று பள்ளியறை ஆசிரியருடையது! அம்மா வாழ்வை தந்து உலகத்தை அறிமுகப்படுத்துவார். ஆசிரியர் அறிவை தந்து வாழ்வை அறிமுகப்படுத்துவார். உலகின் மிக உன்னத அறைகளுக்கும், அதன் அன்பாளர்களுக்கும் மிக்க வந்தனம்!
மூன்றாமிடம்!
தலைச்சிறந்த வரிசை ஒன்று உள்ளது. அதில் ஆசிரியருக்குமான இடமும் நன்று உள்ளது. மாதா, பிதா, குரு, தெய்வம் என்பதில் இடம் மூன்று - ஆசிரியப் பணிக்கென உள்ளது.
7-ல் 1 பங்கு / 2 பங்கு!
இன்றைய அறிவியல், மருத்துவ முன்னேற்றம் மனிதனின் வயது ஸ்கோரின் சராசரியை 70 வரை கொண்டு வந்து உள்ளது. இன்று கட்டாய கல்வி சட்டமாகிவிட்டது. ஒரு மனிதன் குறைந்தது 10 ஆம் வகுப்பு வரை படிப்பான் என்று வைத்து கொள்ளலாம். அப்படியென்றால், 10 வருடங்கள் பள்ளி. இதன்மூலம் ஒரு மனிதன் தனது வாழ்வின் 7ல் 1 பங்கை ஆசிரியரிடம் அர்ப்பணிக்கிறான். அதுவே மேல் படிப்பு, உயர் படிப்பு, சிறப்பு படிப்பு என்று மனிதன் படிப்பில் பல படிகள் ஏறினால், மேலும், 10 வருடங்கள் ஆசிரியரின் மேற்பார்வையில் அவன் வாழ்வை செலவழிப்பான். அந்த நிலையில் அவனின் வாழ்வின் பங்கில் அதாவது 7ல் இரு பங்கை, ஆசிரியரிடம் அர்ப்பணிக்கிறான்.
நோபலில் 60 சதவீதம்!
அமைதி, விஞ்ஞானம், இலக்கியம் என பல துறைகளில் உன்னதம் புரிந்தவர்களுக்கு மனிதகுலம் சூட்டும் மிகப் பெரிய மகுடம் "நோபல்' ஆகும். இதனை இன்றளவும் வென்றிட்ட மாந்தர்களில் 60 விழுக்காடு நபர்கள் ஆசிரியர் பணியில் இருந்தவர்கள்தான்.
இந்த பட்டியலில் முதல் இடம்!
உலகில் தவறுகள், பிழைகள், குற்றங்கள், பாவங்கள், கொடூரம் என வளர்ந்து கொண்டே இருக்கும் போது நம்பிக்கையுடன் சாய்ந்து கொள்ளும் ஒரு இடம் உண்டு. பெற்றோரும், சான்றோர்களும் அந்த இடம் ஆசிரியருடையது என இக்காலத்தில் கூறுவர். சமூகம் தீமையிலிருந்து விலகி நன்மையில் நடந்திட, அதனை நடத்திட பெரிதும் நம்புவது ஆசிரியர்களையே! அதனால், தவறே செய்யக்கூடாதோர் பட்டியலில் ஆசிரியர்கள் முதலிடம் பெறுகின்றனர். ஆசிரியரின் தவறு, மனிதனின் ஆதார நம்பிக்கை அடிப்படையையே ஆட்டம் காண செய்துவிடும். ஆசிரியர் மேல் இச்சமூகம் மிகுந்த மரியாதையை, மிகுந்த நம்பிக்கையை வைத்துள்ளது. அதனால்தான் சமூகம் தனது சந்ததியை தனது எதிர்காலத்தையே ஆசிரியரிடம் அளித்து உள்ளது. மாணவனும், ஆசிரியரை மலை போல் நம்புகிறான் . பாதை காட்ட வேண்டிய ஆசிரியர்கள் ஒழுக்கமாய் வாழ வேண்டும். மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாய் ஆசிரியரின் வாழ்வு இருந்திடல் வேண்டும்.
வெளிச்சம் தரச் செய்ய வேண்டும்!
நன்றாக படிப்பவன் கடைசியில் கவனிக்கப்பட வேண்டியவன். மோசமாய் படிப்பவன் எமர்ஜென்சி கேஸ்; உடனே கவனிக்கப்பட வேண்டியவன். படிப்பில் ஆர்வம் இல்லாதவன் பியூஸ் போன பல்பு போன்றவன். கூடு இருக்கும் ஆனால், உயிர் இராது. ஆசிரியர் விஞ்ஞானி போல ஆராய்ந்து அங்கே உயிரை ஊட்ட வேண்டும். சுமாராய் படிப்பவன் லோ வோல்டேஜில் எரியும் பல்பு. வோல்டேஜை சரி செய்தால் போதும். நன்றாய் படிப்பவன் பளிச்சென பகல் போல எரியும் பல்பு. திடீரென ஈசல்கள் மண்டாதபடி மட்டும் பார்த்து கொள்ள வேண்டும்.
ஒரு சினிமா ஹீரோ போல் !
ஒரு ஹீரோவிற்கு தெரியாத வேலையே இல்லை. தெரியாத விஷயமே இல்லை என்பதுபோல் காட்டுவார்கள். எதிலும் பூந்து புறப்பட்டு வருபவன் தானே ஹீரோ. அதுபோல ஒரு ஆசிரியர் ஏராளமாய் பாடத்தை பற்றியும், பாடத்தை ஒட்டியும், பாடத்திற்கு வெளியேயும் அறிந்து இருக்க வேண்டும். மாணவர்களின் மேல் உண்மையான அக்கறை வேண்டும். ஒவ்வொரு நாளும் புதிதாய் பிறந்தது போல புத்துணர்வுடன், புதிய புதிய விஷயங்களுடன் மாணவர்கள் முன் வர வேண்டும். படிப்போடு, நாட்டு நடப்பை, சமூக அக்கறையை, அன்பை, மனிதாபிமானத்தை, வாழும் வாழ்வில் மேன்மையை, பண்பாட்டை, கலாசாரத்தை என்று மாணவருக்கு அறிமுகம் செய்ய வேண்டும்.
"எந்தவொரு குழந்தையையும் என்னிடம் 7 ஆண்டுகள் விட்டு வையுங்கள். அதன் பிறகு எந்த சாத்தானும், ஏன் கடவுளும் கூட அவனை அவனது குண நலன்களை மாற்ற முடியாது!'
-புகழ் பெற்ற கிரேக்க ஆசிரியரின் அனுபவ மொழி இது.
ஹேப்பி பர்த்டே டூ யு ஆல் !
மாணவர்கள் பிறந்தநாளை, பள்ளி அறிய கொண்டாடுவர். ஆசிரியரும் பரிசு தருவார். எந்த ஆசிரியராவது பிறந்தநாளை அனைவரும் அறிய கொண்டாடியது உண்டா? இல்லை. ஆசிரியர் தினத்தையே தம் ஆசிரியர்களின் பிறந்த தினமாய் மாணவர்கள் நினைத்து கொண்டாடலாமே! காசு போட்டு பெரிய பரிசாய் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. ஆசிரியருக்கு பிடித்த பேனா, புத்தகம் என அவர் மனம் கவர்ந்தவற்றை அளிக்கலாம். படிக்காதவன் - படிக்கிறேன் என்றும், ஒழுங்கில்லாதவன் - இனி ஒழுக்கமாய் இருப்பேன் என்றும் உறுதிமொழி எழுதி தரலாம். ஒரு உண்மையான ஆசிரியருக்கு மாணாக்கரின் நலமே பெரும் பரிசு. இதுபோல உறுதிமொழி தந்து அதை அம்மாணவர்கள் கடைப்பிடிக்கவும் வேண்டும். மற்ற மாணவர்கள் கூட்டமாய் இதை செய்திடல் வேண்டும்.
மாணவர்களுக்கு சவால் !
ஆசிரியரின் நடை, உடை, பாவனை, பேச்சு, பாடம் நடத்தும் பாங்கு, வாகனம் என எதை வேண்டுமானாலும் எடுத்து கொண்டு கிண்டல் செய்யும் சில மாணவர்கள் உண்டு. ஆசிரியரின் மேன்மையை பற்றி தெரியாதவர்கள் அவர்கள். அவர்களை சும்மா விட்டு விட முடியாது. குரு பீடத்தின் மகிமையை எடுத்து காட்ட வேண்டும். ஆசிரியர் என்றால் பெரிய ஆளா என்ன? என கேட்கும் மாணவனுக்கு ஒரு சவால்!
ஒரு ஐந்து வயது குழந்தைக்கு பொறுமையாய், மகிழ்வாய், அன்பாய், "அ, ஆ, இ' சொல்லி கொடுங்கள் பார்க்கலாம். அப்படி நீங்கள் படிக்கும்போது ஆசிரியரின் உயர்வு விளங்கும். கண்கள் பணிக்கும்; கரங்கள் துதிக்கும்; மனம் மன்னிப்புக்கு மன்றாடும். ஆசிரியர், அம்மா, அப்பா, நண்பன் என்று எல்லாமாய் இருப்பவர் ஆசிரியர். ஆசிரிய பெருமக்களுக்கு சிறுவர்மலர் வாசக குட்டீஸ் களின் சார்பாக ஆசிரியர்தின வாழ்த்துக்கள்!

லேபிள்கள்:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு