திங்கள், 6 செப்டம்பர், 2010

கல்வி என்பது

இந்த உலகில் ஒருவர் பெறுகிற அறிவு, அனுபவம், ஆற்றல் ஆகியவற்றின் தொகுப்பே
கல்வி எனப்படும். அவர் பெறுகிற கல்வி அவரது ஆளுமைக்கும், ஆற்றலுக்கும்
அடித்தளமாக இருந்து அவரின் ஒவ்வொரு செயலையும் சிறப்பாகச் செய்ய வழி
அமைக்க வேண்டும்.

தரமான கல்வியைப் பெற்றவர்கள் மற்றவர்களிடமிருந்து மாறுபட்டவர்களாக,
மற்றவர்களுக்கு வழிகாட்டுகிற சிறப்புப் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
நுட்பமாகச் செயற்படுகிற கூர்மையான அறிவுடையவராக இருந்து மற்றவர்களை வழி
நடத்த வேண்டும், தானும் நடக்க வேண்டும்.

பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு கல்வி இப்படித்தான் இருந்தது. கற்றவர்களைத்
தேடிச் சென்று, கல்வி கற்று மக்கள் தங்களை உயர்த்திக் கொண்டார்கள்.
எழுத்தறிவு, எண்ணறிவு, பட்டறிவு, மருத்துவம், போர்த்திறன், கை
வேலைத்திறன், இசை, கூத்து, நுண்கலைகள் எனப் பல்வேறு வகைகளில் கற்றுக்
கொள்பவருக்குள் நுழைகிற கருத்துருக்கள் அவருக்குள் மாற்றங்களை ஏற்படுத்தி
அவர்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தியது \ உயர்த்தியது.

ஆளுபவரின் பிள்ளையாக இருந்தால்கூட ஆசிரியருக்கு முன் அவர் ஒரு
மாணவர்தான். ஆசிரியருக்குப் பணிவிடை செய்துதான் அவர் கற்றுக் கொண்டார்.
பொருளை விட மதிப்பும் மரியாதையும் மேலெழுந்து நின்றன. பெற்றோர்களுக்கு
அடுத்த படியாக ஆசிரியர் கருதப்பட்டார். மக்களின் வணக்கத்திற்குரியவராக
ஆசிரியர் இருந்தார்.


இதற்குப் பின் வந்த காலங்களில்.....

வேதத்தைக் கேட்டால், கேட்ட காதில், ஈயத்தைக் காய்ச்சி ஊற்று என்று சொன்ன
ஆசிரியர்கள் தோன்றினார்கள்.

கட்டைவிரலைக் குரு தட்சணையாகக் கேட்ட ஆசிரியரும், மறுப்பு ஏதும் கூறாமல்
வெட்டித் தந்த மாணவரும் இருந்தனர்.

கை கட்டி, வாய் புதைத்து, அடங்கி ஒடுங்கி, பணிவுடன் பிரணவ
மந்திரத்திற்கான பொருளை முருகனிடம் சிவன் கேட்டு நிற்பதையும், மாணவர்கள்
இப்படித்தான் அடங்கி ஒடுங்கி - கற்க வேண்டும் என்பதையும் சூழல்
காட்டியது.

சாதி, குலம், வருணம், ஏழை, பணக்காரன் - என்பவை உள்நுழைந்து
கற்பவருக்கும், ஆசிரியருக்கும் இடையில் ஒரு பெரிய தடைக் கல்லை
உருவாக்கியது. ஒரு பிரிவினர் ஓரங்கட்டப் பட்டனர். கல்வி ஒரு சிலருக்கு
எட்டாக் கனி ஆனது.


இன்றைய சூழலில்.....

அறிவியல் கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பச் செறிவு, சுருங்கிப் போன உலகம்,
பொருளாதார வளர்ச்சி போன்ற காரணிகளால் - கல்வி என்பதற்கான கருத்துருக்களை
வெகுவாக மாற்றியுள்ளன.

அறிவு நுட்பத்திற்கான அடித்தளமாக இருந்த கல்வி இன்றைய சூழலில் அந்த
நிலையிலிருந்து மாறி, பொருளீட்டுகிற \ வணிகத்திற்கான படிக்கட்டுகளாக
மாறியுள்ளன. பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு கல்வியானது
வடிவமைக்கப்பட்டு, பொருள்வழிப் பெருகின்ற வணிகப் பொருளாக, கல்வி
மாற்றப்பட்டுள்ளது. ஆசிரியர்களும் விற்பனையாளராக மாறி விற்பனை
செய்கின்றனர். பொருளீட்டுகின்றனர். இடைத் தரகர்களும் ஆசிரியர்களைக்
கூலிக்கு அமர்த்தி விளம்பரம் செய்து விற்பனையைக் கூட்டுகின்றனர்.

சுதந்திரம் அடைந்த பிறகு....

கல்வி மைய அரசின் நேரடிப் பார்வையில் உள்ளது எனவும், கல்வியில் செய்யும்
மாற்றங்கள் அனைத்தும் மைய அரசின் அனுமதி பெற்றே செய்ய வேண்டும் எனவும்
விதி முறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

நமது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு
குடிமகனுக்கும் 14 வயது வரை கல்வியைத் தரமாகவும், இலவயமாகவும்,
கட்டாயமாகவும் தரவேண்டியது அரசின் கடமை என்று அரசியலமைப்புச் சட்டம்
கூறுகிறது.

ஆனால் இன்றைய சூழலில் தொடக்கக் கல்விக்கே பெரும் பொருள் செலவு செய்ய
வேண்டியுள்ளது. கல்வி தனியாருக்கான பொருளீட்டும் வழிகளில் ஒன்றாக
மாற்றப்பட்டுள்ளது.

தற்பொழுது தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அரசுப் பள்ளிகளின்
எண்ணிக்கையைவிட அதிகமாக உள்ளன. யார் வேண்டுமானாலும் கல்வி நிறுவனங்களை
நிறுவி வணிகம் செய்யலாம்.

ஆங்கிலேயன் ஆண்ட பொழுது அவர்களுக்கு உதவுகிற எழுத்தர் வேலைக்காக
மெக்காலேயால் அன்றைய கல்வி முறை வடிவமைக்கப்பட்டது. ஆங்கிலேயன் சென்ற
பிறகும் கூட ஆங்கிலமும், கல்வி முறையும் இன்னும் இங்கே வாழ்ந்து
கொண்டுதான் இருக்கிறது.

உளவியல் அறிஞர்களும், கல்வியாளர்களும் தாய்மொழிக் கல்வியை வலியுறுத்திய
போதும் இன்றும் இங்குள்ள பெற்றோர்களின் ஆங்கில மோகத்தால், ஒன்றும் அறியாத
மழலையர்கள் ஆங்கிலக் கல்வியில் மூழ்கி எழுகிறார்கள்.

தெளிவான புரிதலுக்கும் நுட்பமான செயற்பாடுகளுக்கும் தாய்மொழிக் கல்வியே
சிறந்தது, அதுவும் தொடக்க நிலைகளில் அதுவே கட்டாயமானது என்ற
கருத்துருக்கள் இங்கே ஏட்டளவில்தான் இருக்கின்றன. இதை உணர்ந்து
செயற்படுகிற பெற்றோர்களோ, கல்வியாளர்களோ, அதிகாரிகளோ இங்கு இல்லை.

கடந்த இருபது ஆண்டுகளாகக் கல்விக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டு,
நாளிதழ்களிலும், மேடைகளிலும், அறிவிப்புகளிலும் அதிகமாகப்
பேசப்படுகின்றன. கல்வியாளர் தவே அவர்களால் உருவாக்கிய குறைந்த பட்ச
கற்றல் இலக்குகளைக்கொண்ட கல்விமுறை, கற்றலில் இனிமை, அனைவருக்கும் கல்வி,
செயல்வழிக் கல்வி, படிப்பும் இனிக்கும் - இப்படிப் பல்வேறு பெயர்களில்
கல்விக்கான அணுகுமுறைகளும், கற்றல் கற்பித்தல் வழி முறைகளும் தமிழகத்தில்
பயன்பாட்டிற்காகப் பேசப்பட்டுள்ளன. சமச்சீர் கல்வி என்பதும் பரவலாகப்
பேசப்பட்டு வருகின்றன.

கடந்த சில ஆண்டுகளாக அரசுத் தொடக்கப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை
வெகுவாகக் குறைந்து வருகின்றன. மறுபுறம் ஆங்கிலவழி மழலையர் பள்ளிகள்
புற்றீசல்களாய் பெருகிக் கொண்டிருக்கின்றன. இதை ஈடுகட்ட தமிழக அரசும்
முதல் வகுப்பிலிருந்தே ஆங்கிலத்தை அறிமுகம் செய்கிறது. மாணவர்களின்
வளர்ச்சி நிலையை இன்னும் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஆய்வு செய்து
பார்த்தால் தான் தெரியும்.

பொதுவாக இன்றைய சூழலில் ஆறாம் வகுப்பில் படிக்கும் மாணவர்களில் 15
விழுக்காட்டினருக்குத் தமிழே படிக்கத் தெரியவில்லை.

கல்வி என்பது மாணவர்களுக்கு அடிப்படை அறிவை தந்து அவர்களை ஆற்றலோடு
வளர்த்த வேண்டும் என்பதே அறிஞர்களின் உள்ளக்கிடக்கை.

எனவே இதனையே கல்வியாளர்களும், கல்விக்கூடங்களும், கல்வி அதிகாரிகளும்,
கல்வித் துறை சார்ந்த அனைவரும் நெஞ்சில் நிறுத்தி, திட்டமிட்டு
செயற்படுத்த வேண்டும்.

லேபிள்கள்:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு