மகாத்மா காந்தி, கல்வி சிந்தனை
குழந்தைகளின் ஆரம்பகாலக் கல்வி, செயல்வழியிலேயே (activity based) நடைபெற
வேண்டுமென்பது பல காலமாகக் கல்வியாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட,
பெரும்பாலான நாடுகளில் வெற்றிகரமாக இயங்கும் அடிப்படைக் கோட்பாடாகும்.
மான்டிஸோரி முறை போன்ற புகழ்பெற்ற போதனா முறைகள் இந்தக் கோட்பாட்டையே
வலியுறுத்துகின்றன. மகாத்மா காந்தி இதற்கும் ஒரு படி மேலே போய்,
குழந்தைகள் செயல்வழி மட்டுமின்றி, உழைப்புவழிக் கற்க வேண்டுமென்றார்.
ஆனால் இந்திய அனுபவத்தில், தொலைநோக்குப் பார்வையுடைய சில கல்வியாளர்களின்
கனவில் பிறந்த சிறிய மாற்றுப் பள்ளிகளிலேயே செயல்வழிக் கற்றல்
வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டிருக்கிறது.
இந்திய வகுப்பறைகள் குழந்தைகளுக்கு ஏற்றவையாக இல்லை; போதனா முறைகள்
குழந்தைகளை மையமாகக் கொண்டவையல்ல. அதிலும் பெரும்பாலான குழந்தைகள் முதல்
தலைமுறையாகக் கல்வி பயிலும் ஏழ்மையில் மூழ்கிய குடும்பத்துக் குழந்தைகள்
என்பதால் அவர்களது தனிப்பட்ட தேவைகளையும் அவர்களது மொழி, சமூகப்
பொருளாதாரப் பின்னணியை மனத்தில் கொண்டும் உருவாக்கப்பட்ட போதனா முறைகள்
தேவை. வகுப்பறைகள் இறுகிப்போன அதிகாரக் கலாச்சாரத்தில்
மூழ்கிக்கிடக்கின்றன. ஆசிரியர் அதிகார பீடத்தில் அமர்ந்து பிரம்பைச்
சுழற்றும் சர்வாதிகாரியாகவும் மாணவர் கைகட்டி வாய் புதைக்கும்
அடிமைகளாகவும் தோற்றமளிக்கின்றனர். மாணவர் என்ற காலிப் பாத்திரத்தில்
விவரங்களைக் கொட்டுவதே ஆசிரியரது பணி. இந்த அவல நிலை காரணமாக ஆர்.கே.
நாராயணன் நாடாளுமன்றத்தில் சொன்னதைப் போல் புரியாமை என்ற கொடுமை இந்தியக்
கல்வி அமைப்பின் சாபக்கேடாக நிலைபெற்றுள்ளது.
அனைத்துக் குழந்தைகளும் திறம்படக் கற்க வேண்டுமென்றால் இரு தளங்களில்
உடனடியான ஆழ்ந்த கவனம் செலுத்த வேண்டும். போதனா முறை குழந்தையை
மையமாகக்கொண்டதாக, குழந்தை ஆர்வத்துடன் கற்று, சுயசிந்தனையும்
படைப்பாற்றலும் மிக்க வளர்ச்சிபெற உகந்ததாக இருக்க வேண்டும். இரண்டாவதாக,
அனைத்துக் குழந்தைகளும் கற்றல் திறன்களை அடைய வேண்டும். அதாவது, போதனா
முறை (teaching process), திறனடைதல் (learning outcome) இரண்டும்
உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
இன்று இந்தியாவில் குழந்தைகள் கற்றல் திறன்களை அடைவதில் பெரும் பின்னடைவு
ஏற்பட்டுள்ளது. 2005ஆம் ஆண்டிலிருந்து மூன்று ஆண்டுகளாக நடைபெறும் ASER
(Annual Status of Education Report) என்ற தேசிய அளவிலான ஆய்வு, பள்ளிச்
சிறார்களின் தாழ்ந்த கற்றல் திறமைகள் குறித்த அதிர்ச்சி அளிக்கும்
விவரங்களை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கைகளின்படி நாடு முழுவதும் உள்ள
ஐந்தாம் வகுப்பு மாணவரில் 59 சதவீதத்தினர்தாம் இரண்டாம் வகுப்பிற்குரிய
பாடத்தைத் தங்கள் தாய்மொழியில் வாசிக்கும் திறமை பெற்றவர்கள்.
தமிழ்நாட்டில் 35 சதவீத மாணவர்தாம் இத்திறமை பெற்றவர்கள். கணிதத்தில்
தேசிய அளவில் ஐந்தாம் வகுப்பு மாணவரில் 42 சதவீதத்தினர் மட்டுமே எளிய
கழித்தல் கணக்குச் செய்ய இயன்றவர்கள்; தமிழ்நாட்டில் 18 சதவீத மாணவரே
இந்தத் திறமை பெற்றவர்கள். கல்வியில் தமிழ்நாடு முன்னணி மாநிலம் என்று
கொண்டாடிக்கொண்ட பெருமை காற்றில் பறந்து விட்டது. தமிழ்நாடு தேசிய
சராசரியைவிடவும் தாழ்ந்துகிடக்கிறது.
வேதனைக்கும் வெட்கத்திற்கும் உரிய இத்தகைய நிலை மாறக் கல்வியில் உடனடித்
தேவைப்படும் மாற்றங்களில் ஒன்றுதான் செயல்வழிக் கற்றல். இதனை ஒரு
மாநிலத்தின் பெரும்பாலான குழந்தைகள் கற்கும் அரசு-பொதுப் பள்ளிகளில்
நடைமுறைபடுத்தும் முயற்சி சில ஆண்டுகளுக்கு முன் ஆந்திராவில் 'நல்லி
கல்லி' என்ற பெயரில் தொடங்கப்பட்டது. ஆனால் விரைவில் கைவிடப்பட்டது.
இன்று தமிழ்நாட்டின் அனைத்து அரசு-பஞ்சாயத்து, உதவி பெறும் பள்ளிகளில்
செயலில் உள்ளது. ஆங்காங்கே சிறிய அளவில் மட்டும் நடந்துகொண்டிருந்த ஒரு
சிறந்த கற்றல் முறையை 70 லட்சம் குழந்தைகள் பயனடையும் வண்ணம்
பிரம்மிக்கத்தக்க விரிவாக்கம் செய்திருக்கும் தமிழக அரசும் அனைவருக்கும்
கல்வி இயக்ககமும் (சர்வ சிக்ஷா அபியான்) பாராட்டுதலுக்கு உரியவை.
செயல்வழிக் கற்றல் தமிழ்நாட்டில் முதலில் சென்னை மாநகரப் பள்ளிகளில்
அறிமுகம் செய்யப்பட்டு, பின் ஒன்றியத்திற்கு 10 பள்ளிகளுக்கு எனக் கொண்டு
செல்லப்பட்டு, 2007-2008ஆம் ஆண்டில் மாநிலத்தின் அனைத்து அரசு-உதவி
பெறும் பள்ளிகளுக்கும் பெரும் விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆந்திராவில்
புகழ்பெற்ற ரிஷி பள்ளத்தாக்குப் பள்ளியினால் நடத்தப்பெறும் கிராமப்புறப்
பள்ளிகள் தமிழகத்திற்கு மாதிரியாகக் கொள்ளப்பட்டன.
இம்முறை சில வகுப்பறை உத்திகள், உபகரணங்கள் மூலம் இயங்குகிறது. ஒன்றாம்
வகுப்பிலிருந்து நான்காம் வகுப்புவரையிலான மாணவர்கள் இத்திட்டத்தின்
கீழ்க் கொண்டுவரப்பட்டுள்ளனர். ஒவ்வொரு பாடப் பிரிவிலும் அடைய வேண்டிய
திறன்கள் ஒரு ஏணி வடிவில் அமைக்கப்பட்டு, அதில் பல மைல்கற்கள்
குறிக்கப்பட்டுள்ளன. ஏணியின் ஒவ்வொரு படிக்கும் உரிய பல செயல்முறைகளும்
அவற்றிற்கான குறியீடுகளும் (logos) வகுக்கப்பட்டுள்ளன. அதனைப்
புரிந்துகொண்ட குழந்தை ஏணியில் படிப்படியாக ஏறிச் செல்கிறது.
வகுப்பறையின் நான்கு சுவரிலும் குழந்தைக்கு எட்டும் உயரத்தில் கரும்பலகை
அமைக்கப்பட்டு, ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒன்று முதல் நான்காம் வகுப்புவரையிலான குழந்தைகள் ஒன்றாகக் கற்கிறார்கள்;
பல குழுக்களாகப் பிரிந்து வட்டமாக அமர்ந்து, ஆசிரியரின் துணையுடனோ சக
மாணவர் துணையுடனோ தாமாகவோ கற்கிறார்கள். ஆசிரியர் குழந்தைகளுக்குச்
சமமாகத் தரையில் அமர்ந்து கற்பிக்கிறார். பாடப் புத்தகத்திற்குப்
பதிலாகப் படங்களும் சொற்களும் கொண்ட அட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன.
செயல்வழிக் கற்றல் வகுப்பறைச் சூழலில் மிகப் பெரும் மாற்றத்தைக்
கொணர்ந்திருக்கிறது. அடக்குமுறையின் வடிவமாக இருந்த வகுப்பறை
மறைந்துவிட்டது. இத்தனை நாட்களாகக் குழந்தைகளின் மென்மையான தோள்களின்
மீது சுமத்தப்பட்டிருந்த அச்சத்தின் சுமை அகன்றிருக்கிறது.
பிரம்பும்கூடக் காணாமல் போய் விட்டது. சலனமற்ற சவத்தன்மை கொண்ட வகுப்பறை,
குழந்தைகளின் ஆர்வக் குரல் ஒலிக்கும் உயிரோட்டம் கொண்டதாக
மாறியிருக்கிறது. ஆசிரியரின் சர்வாதி காரமும் சட்டாம்பிள்ளைத் தனமும்
மறைந்து விட்டன.
கற்றல் என்பது அச்சுறுத்தல், மூச்சுத் திணறவைத்தல், மனப்பாடம் செய்து
கொட்டுதல், ஆசிரியரின் பிரம்படிக்கு அடிபணிதல் என்ற புரிதல் மாறி, கற்றல்
என்பது குழந்தைகள் பங்கேற்கும் குழந்தைகளை மதிக்கும் இனிய அனுபவம் என்ற
புதிய பொருள் பெற்றுள்ளது. குழந்தைகள் அவர்களது இயல்புக்கு மாறாக, நாள்
முழுவதும் ஒரு இடத்தில் கட்டிப்போட்டுக் கிடக்கும் நிலை மாறி,
சுதந்திரமாக வகுப்பறை முழுதும் நடமாடுகின்றனர். குழந்தைகள் நேசிக்கும்
இடமாக வகுப்பறை மாறியிருக்கிறது. கற்றல் அட்டைகள் நிரம்பிய பெட்டிகள்,
கூரையிலிருந்தும் சுவர்களிலிருந்தும் தொங்கும் குழந்தைகள் வரைந்த படங்கள்
என வகுப்பறை வண்ணமயமாக விளங்குகிறது.
ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையில் இருந்த தடுப்புச் சுவர்
உடைந்திருக்கிறது. ஆதிக்க பீடமான நாற்காலியிலிருந்து ஆசிரியர்கள்
இறங்கிவந்து, தரையில் குழந்தைகளுடன் அமர்ந்திருப்பதே ஒரு ஜனநாயகச் சூழலை
உருவாக்கியுள்ளது. காலங்காலமாக வகுப்பறை கட்டிக்காத்துவந்த ஆண்டான்-அடிமை
உறவை அடித்து நொறுக்கிவிட்டது. இதுவரை மாணவருக்கு மறுக்கப்பட்ட கரும்பலகை
அவர்களுக்குச் சொந்தமாகிவிட்டது. ஒவ்வொரு குழந்தைக்கும் ஒதுக்கப்பட்டுள்ள
சிறிய கரும்பலகை மழலை எழுத்துகளால் நிரம்பிவழிகிறது.
ஒவ்வொரு குழந்தைக்குமான வெளியும் தன் வேகத்தில் முன்னேறுவதற்குமான
சுதந்திரமும் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. குழந்தை கற்றல் ஏணிப்படியில்
குறிக்கப்பட்ட செயல்களைச் செய்து முடிப்பது, தன்னுடைய வேகத்தில் ஏணியில்
மேலே ஏறுவது, மைல்கற்களைத் தாண்டிச்செல்வது, ஒவ்வொரு கட்டத்திலும் தான்
கற்றுக்கொண்டதை மதிப்பிடுவது எனத் தன்னிலை விளக்கம் பெறுவதும் அதனை
ஆசிரியரும் சக மாணவரும் சகஜமாக ஏற்றுக்கொள்வதும் வியப்பிற்குரிய
மாற்றங்களாகும். மேற்கண்ட மாற்றங்களின் விளைவாகக் குழந்தை தன் சக்தியை
உணர்கிறாள். உயிர்த்துடிப்புள்ள, மகிழ்ச்சியான இடமாக வகுப்பறை
உருவெடுத்துள்ளது.
செயல்வழிக் கற்றல் பற்றி ஆய்வு மேற்கொண்ட எங்கள் குழு தமிழ்நாட்டின்
ஆரம்பக் கல்விக்கு இம்முறை ஒரு வரப்பிரசாதம் என்று கருதுகிறது. பழைய
முறைக்கு மாறிப்போய்விடா வண்ணம் இது கட்டிக் காப்பாற்றப்பட வேண்டும்
என்றும் வலியுறுத்துகிறது. அரசின் நிதி நிலை, அரசியல் நிர்ப்பந்தங்கள்,
அதிகாரிகள் மட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவற்றிற்குச் செயல்வழிக்
கற்றல் பலியாகிவிடக் கூடாது. எங்கள் வலிமையான முதல் பரிந்துரை செயல்வழிக்
கற்றல் தொடர வேண்டும்; வலிமைப்படுத்தப்பட வேண்டும்; பழமைக்குச் சரிந்து
விடாமல் காப்பாற்றப்பட வேண்டும். செயல்வழிக் கற்றல் மேலும் உயிரோட்டம்
உள்ளதாகவும் குழந்தைகளுக்குக் கூடுதல் பயனுள்ளதாகவும் சிக்கல்
குறைந்ததாகவும் மாற்றப்பட வேண்டும். இதனை மனத்தில் கொண்டு அறிக்கை பல
பரிந்துரைகளை அளித்துள்ளது. மிகவும் முக்கியமானவை மட்டும் இங்கு
அளிக்கப்படுகின்றன.
பிரச்சினைகளும் பரிந்துரைகளும்
செயல்வழிக் கற்றல் மாற்றுப் பள்ளிகளில் சிறிய அளவில், சிறு
எண்ணிக்கையிலான குழந்தைகளுக்கு, தீவிரக் கண்காணிப்புடன், அதன்
தத்துவார்த்த அடிப் படைகளைப் புரிந்து உள்வாங்கிய, அர்ப்பணங்கொண்ட, பல
கட்டப் பயிற்சிபெற்ற ஆசிரியராலேயே வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. அதனை
ஒரு மாநிலம் முழுதும் 70 லட்சம் குழந்தைகளுக்கு, குறுகிய காலத்திற்குள்
விரிவுபடுத்துவது பெரும் சவாலுக்குரியது. சர்வ சிக்ஷா அபியானின் தலைமை
கண்ட கனவு, மாநிலத்தில் பரந்து கிடக்கும் லட்சக்கணக்கான மாணவர்களைச்
சென்றடைவதற்குள் ஏற்படும் சிதைவுகளும் திரிபுகளும் இழப்புகளும் ஏராளம்.
அத்துடன், மாநிலத்தின் பள்ளிக் கல்வியில் ஏற்கனெவே இருக்கும் பெரும்
பிரச்சினைகளைத் தொடாமல் இந்தப் புரட்சிகரத் திட்டத்தை
நடைமுறைப்படுத்தியது பிரச்சினையின் ஆழத்தை அதிகரித்துள்ளது.
இத்தகைய முன்கூட்டிய பிரச்சினைகளில் மிக முக்கியமானது ஆசிரியர்
பற்றாக்குறை. இன்று செயல் வழிக் கற்றல் வேண்டாமென எதிர்க்கும் ஆசிரியர்
சங்கங்கள் சுட்டும் முதல் காரணம் இதுதான். இன்று தமிழக ஆரம்பப் பள்ளிகள்
அனைத்தும் ஈராசிரியர் பள்ளிகள்ளே. ஐந்து வகுப்புகளுக்கு இரு ஆசிரியர்கள்;
பல நாட்கள் பல காரணங்களால் பெரும்பாலும் ஓராசிரியரே அனைத்து
வகுப்புகளையும் நடத்துவார். கட்டணம் வசூலிக்கும் எந்தப் பள்ளியாவது ஒரு
வகுப்பிற்கு ஒரு ஆசிரியரின்றி நடைபெற இயலுமா? கதியற்ற ஏழைக்
குழந்தைகளுக்குத்தான் இந்நிலை. செயல்வழிக் கற்றல் பற்றி ஒரு தவறான
கருத்து நிலவுகிறது. பல வகுப்பு மாணவர் ஒன்றாகக் கற்கும் Multigrade
System ஆனதால், ஒரு ஆசிரியரே போதுமானது என்பது பொய்யான வாதம்; அரசு தன்
பொறுப்பை உதறும் கண்டனத்திற்குரிய போக்கு. செயல்வழிக் கல்வியில்
ஆசிரியருக்கு ஒவ்வொரு மாணவரைப் பற்றியும் அவளது பலம்-பலவீனங்கள்
குறித்தும் சரியான கணிப்பு தேவை. ஆகவே இத்திட்டத்திற்குத் தேவைப்படுவது
முன்னைவிட அதிக ஆசிரியரேயன்றிக் குறைவாக அல்ல. செயல்வழிக் கற்றல் கல்வி
நடைபெறும் ரிஷி பள்ளத்தாக்கு முதலான பள்ளிகள் எதிலுமே 30 மாணவருக்கு
ஓராசிரியர் என்ற விகிதம் மீறப்படுவதில்லை. ஆகவே எங்கள் குழுவின் மிக
அழுத்தமான பரிந்துரை இத்திட்டத்தின் முதல் தேவை வகுப்பிற்கு ஓராசிரியர்,
ஓர் ஆசிரியருக்கு 30 மாணவருக்கு மிகைப்படாத விகிதம்; பள்ளி நாட்கள்
அனைத்திலும் ஆசிரியர் வகுப்பில்தான் இருக்க வேண்டும் என்பதை
வலியுறுத்தும் கண்காணிப்பு. கல்வி மறுக்கப்பட்ட குடும்பக் குழந்தைகளுக்கு
இது ஆதாரத் தேவை என்பதையும் இன்று அமெரிக்காவில் கறுப்பு-லத்தீன் இனக்
குழந்தைகள் கற்கும் பள்ளிகளில் 20 மாணவருக்கு ஒரு ஆசிரியர் என்ற கோரிக்கை
எழுந்துள்ளதையும் அறிக்கை சுட்டிக்காண்பிக்கிறது.
அடுத்து, இத்திட்டம் குழந்தைகள் நான்காம் வகுப்பு முடிக்கும்போது
குறிக்கப்பட்ட திறமைகளைப் பெறுவர் என்ற உத்திரவாதம் ஏதும் அளிக்கவில்லை.
இம்முறையில் ஒவ்வொரு குழந்தையும் தன்னுடைய சொந்த வேகத்திலேயே கற்க
முடியும் என்றாலும், ஒரு ஆண்டிலோ அல்லது நான்கு ஆண்டுகள் முடியும்போதோ
குறிப்பிட்ட கற்றல் அடைவுகளை அனைத்துக் குழந்தைகளும் அடையச்செய்ய
வேண்டும். மூன்றாம், நான்காம் வகுப்புகளிலுள்ள குழந்தைகள் சுயமாகக்
கற்கும் திறமைகளை அடைந்துவிட வேண்டுமென்று திட்டம் எதிர்பார்க்கிறது.
நாங்கள் ஆய்வுசெய்த சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் இம்முறை
நான்காண்டுகளாக நடைபெறுகிறது. அனைத்துப் பள்ளிகளிலும் குழந்தைகளின்
திறமைகளைத் தேர்வுசெய்தோம். அதிர்ச்சியே காத்திருந்தது. மூன்று அல்லது
நான்காம் வகுப்பு மாணவர்களில் பாதிக்குக் குறைவாகத்தான் ஒரு எளிய கதை
வாசிக்கும் திறமை பெற்றவர்களே; 25 சதவீத மாணவர் வார்த்தைகள் வாசிப்பதைத்
தாண்டி, அடுத்த படிக்கு முன்னேறவில்லை. கணிதத்திலும் இதே நிலைதான்.
தாழ்வுற்ற இந்தத் திறமை நிலைக்குச் செயல்வழிக் கற்றல்தான் காரணம் என்று
சொல்லவில்லை. நிலைமை குறித்த baseline study, மாற்றத்திற்கு முந்தைய நிலை
குறித்த ஆய்வு ஏதும் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால் செயல்வழிக்
கற்றல், கற்றல் திறமை அடைவுகளில் முன்னேற்றம் எதையும்
உண்டாக்கியிருப்பதாகத் தெரியவில்லை. இந்நிலை நீடிக்குமென்றால்
சமுதாயத்தின் பெரும்பாலாரான பொதுப் பள்ளி மாணவருக்குப் பெரும் அநீதி
இழைக்கப்படுகிறது என்றுதான் கூற வேண்டும். தமிழகத்தின் பள்ளிக்கல்வி
பெருமளவு தனியார்மயமாக்கப்பட்டதின் விளைவாக அரசுப் பள்ளிகள் பெரும்
புறக்கணிப்புக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதற்கு இதுவும் ஒரு அறிகுறி.
இதை ஒட்டி எழுந்திருக்கும் ஒரு விமர்சனத்தை இங்கே குறிப்பிட வேண்டும்.
செயல்வழிக் கற்றல் கல்வி அரசு-உதவி பெறும் பள்ளிகளில் மட்டுமே ஏன்
நடைபெறுகிறது? மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் ஏன் அறிமுகப்படுத்தப்படவில்லை?
வசதிபடைத்த குழந்தைகள் ஏன் இந்தத் திட்டத்திலிருந்து விடுபட்டுள்ளனர்?
பெரும் பயனளிக்கும் சிறந்த திட்டமென்றால் அப்பள்ளிகள் இதனை அரசுப்
பள்ளிகளுக்கு முன்பே நடைமுறைப்படுத்தியிருப்பார்களே! இலவசப் பள்ளிகளில்
மட்டுமே இத்திட்டம் என்பது ஏற்கெனவே இருவகைப் பள்ளிகளுக்கும் உள்ள
இடைவெளியை இன்னும் அதிகரிக்குமோ? வசதியற்ற குழந்தைகள் போட்டிக் களத்தில்
முன்னைவிட வலுவிழந்தவர்களாக ஓரங்கட்டி ஒதுக்கப்படும் நிலை ஏற்படுமோ!
நிலவும் ஏற்றத்தாழ்வுகளை மேலும் மூர்க்கமடையச் செய்யுமோ? பல ஆசிரியர்
சங்கங்கள் இத்திட்டம் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கும் கொண்டுவரப்பட
வேண்டுமென்று கோரிக்கைவைத்துள்ளனர். அதிலும், சமச்சீர் கல்வி குறித்துப்
பேசிவரும் தமிழக அரசு முதல் கட்டமாகத் திட்டத்தை அனைவருக்கும் பொதுவானதாக
ஆக்கட்டும்.
ஒவ்வொரு வகுப்பிலும் மெதுவாகக் கற்கும் குழந்தைகள், ஒரு கட்டத்தில்
தேக்கமடைந்திருப்போர் கணிசமான எண்ணிக்கையிலுள்ளனர். இவர்கள் நிலை மிகவும்
கவலைக்கிடமானது. அதிலும் பெரும்பாலான குழந்தைகள் வீடுகளில் உதவிபெற
இயலாதவரானதால், மெதுவாகக் கற்கும் குழந்தைகளுக்கும் பின்தங்கிய
குழந்தைகளுக்கும் ஒரு கட்டத்தில் நீண்ட நாட்கள் தேங்கிவிடும்
குழந்தைகளுக்கும் திருத்தச் செயல்பாடுகள் (Remedial Programme),
கூடுதலாகச் சில வேறுபட்ட பயிற்சிகள் மூலம் அளிக்கப்பட வேண்டும். இதற்கான
எந்த ஏற்பாடும் இப்பொழுது செய்யப்படவில்லை. திட்டத்தின் மிகப் பெரும்
பலவீனம் இது. செயல்வழிக் கற்றல் திட்டத்தினுள்ளேயே திருத்தச்
செயல்பாடுகள் இணைக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுவது சரியல்ல.
கவலைக்குரிய மற்றொரு அம்சம் ஆசிரியரின் சுதந்திரம் தன் வகுப்பறையை
வடிவமைத்துக்கொள்ளும் உரிமை, புதிய போதனா முறைகளை மாணவருக்கு ஏற்றவண்ணம்
உருவாக்கும் பெருமை இவற்றிற்கெல்லாம் இத்திட்டத்தில் இடமிருப்பதாகத்
தெரியவில்லை. இக்குறைகளுக்கெல்லாம் செயல்வழிக் கற்றல்தான் காரணம் என்று
சொல்ல இயலாது. இந்தியக் கல்வியின் இரு பெரும் சீர்கேடுகள், சர்வநாசினிகள்
வணிகமயமான தனியார் கல்வியும், அதிகாரமய மாக்கப்பட்ட பொதுக் கல்வியும்தான்
இரண்டாவதின் காரணமாக ஆசிரியர் ஒரு அதிகார அமைப்பின் கடைநிலை ஊழியராக
மாற்றப்பட்டிருக்கிறார். தனது வகுப்பறையைத் தனக்கே உரிய பெருமைமிகு
படைப்புக்களமாக ஆசிரியர் கருத வேண்டும்; அதற்குரிய சுதந்திரம் அவருக்கு
அளிக்கப்பட வேண்டும். இந்தச் சுதந்திரத்தின் மறுபக்கம் ஆசிரியரின்
கடப்பாடும், தன் மாணவருக்கான பொறுப்புணர்வும். ஆசிரியருக்கு இத்தகைய
மதிப்பும் மரியாதையும் மறுக்கப்பட்டதன் விளைவு சமுதாயத்திலும்
ஆசிரியருக்கு இருந்த ஏற்றம் இன்று மறைந்துவிட்டது. ஆசிரியருக்குத் தன்
மாணவரின் பெற்றோருடனும் அவர் வழியே சுற்றிலுமுள்ள சமுதாயத்துடனும் இருக்க
வேண்டிய உயிர் பந்தங்கள் அறுபட்டன; அல்லது உருவாகவே இல்லை.
செயல்வழிக் கற்றல் இந்த வேதனைமிகு போக்கினை இன்னும் தீவிரப்படுத்தி,
அதிகார வர்க்கத்தின் கைப்பாவையாக ஆசிரியரை மாற்றியிருக்கிறதோ என்ற அச்சம்
ஏற்படுகிறது. தமிழ்நாட்டின் செயல்வழிக் கற்றல் ஒரு நுணுக்க நிர்வாக
அமைப்பு (micro-managed system). இத்திட்டத்தின் ஒவ்வொரு ஏணியின் ஒவ்வொரு
மைல்கல்லும் ஒவ்வொரு மைல்கல்லின் ஒவ்வொரு படியும் ஒவ்வொரு படியின்
ஒவ்வொரு செயல்பாடும் இப்படித்தான் இருக்க வேண்டுமென்று இறுக்கமாக
வரையறுக்கப்பட்டு வலியுறுத்தப்படுகிறது. கற்பித்தலின் ஜீவனையே இது
கொன்றுவிடுகிறதோ என்ற ஐயம் எழுகிறது. கண்காணிப்பு அமைப்பின் ஒவ்வொரு
மட்டத்து அதிகாரியும் குறிப்பிட்ட செயல்பாடுகள் முடிக்கப்பட
வேண்டுமென்பதையே இலக்காக வலியுறுத்துவதாகத் தோன்றுகிறது.
இத்தகு அதிகார அமைப்பின் காரணமாக ஆசிரியர் தாங்கள் எதிர்கொள்ளும்
பிரச்சினைகளையும் தங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் குறித்துப்
பேசவே அஞ்சுகிறார்கள். நாங்கள் சென்ற பள்ளிகளில் எந்தப் பிரச்சினை
குறித்துப் பேசுவதற்கும் ஆசிரியர் அஞ்சியதை நன்கு உணர முடிந்தது.
பள்ளியில் பல மணி நேரம் செலவழித்த பின், மீண்டும் மீண்டும் நாங்கள்
வலியுறுத்திக் கேட்டு, விமர்சித்த ஆசிரியர் பெயரோ பள்ளியின் பெயரோ
வெளியில் சொல்லப்படாது என்ற உத்திரவாதத்தைப் பலமுறை அளித்த பிறகே வாய்
திறந்து குறைகூறத் தொடங்கினர். வேறு பணிக்காக மாநிலத்தின் பல
பகுதிகளிலிருந்தும் வந்திருந்த பல ஆசிரியரை ஒருமுறை சந்திக்க
நேர்ந்தபோது, எடுத்துக் கொண்ட பொருளையே விட்டுவிட்டு, இரண்டு மணி நேரம்
செயல்வழிக் கற்றல் குறித்த ஆதங்கங்களை ஆசிரியர் கொட்டுவதைக் கேட்க
நேர்ந்தது. உங்களது கவலைகளையும் ஆலோசனைகளையும் தலைமை அதிகாரிகளுக்குத்
தெரிவித்தீர்களா என்று கேட்டதற்குக் கிடைத்த பதில்: "கூட்டங்களில் எங்களை
வாய் திறக்க அதிகாரிகள் அனுமதிப்பதில்லை. செயல்வழிக் கற்றல் குறித்துப்
புகழ வேண்டுமென்றால் பேசுங்கள்; இல்லா விட்டால் சும்மா இருங்கள்" என்று
அதிகாரிகள் மிரட்டுவதாகக் கூறினர். இத்தகைய ஆதங்கங்களைக் கடந்த சில
மாதங்களில் பலமுறை கேட்டிருக்கிறோம். இந்நிலைக்கு ஆசிரியரும் கல்வியும்
தள்ளப்பட்டிருக்கும் அவலம் குறித்து விமர்சிக்கத் தேவையில்லையென்று
நினைக்கிறேன்.
திட்டத்தின் வடிவமைப்பில் பல குறைகள் உள்ளன. இவை அனைத்தும் ஆசிரியருடன்
கலந்து ஆலோசித்துத் திருத்திக்கொள்ளக்கூடிய குறைகள்தாம். அவற்றில் ஒரு
சில:
செயல்வழிக் கற்றல் ஏணி என்பது இம்முறையின் மிக முக்கிய வடிவமைப்பு.
சொல்லப்போனால் ஏணிப்படியின் சர்வாதிகாரம் இன்று வகுப்பறைகளில்
கோலோச்சுகிறது. ஆனால் ஏணி-திறன் சமன்பாடு தெளிவாகப் புலப்படவில்லை.
ஏணியின் எந்தப் படியை முடித்தால் குழந்தை எந்தத் திறமை அடையும் என்று
சொல்ல இயலவில்லை. ஏணியின் ஒரு கட்டம் குழந்தை கற்றுக்கொண்ட ஒரு திறமையைக்
குறிக்கிறதா அல்லது குறிப்பிட்ட சில செயல்பாடுகளைக் குறிக்கின்றதா
என்பதும் தெளிவாக இல்லை. ஏணிப்படி முறை மிகவும் சிக்கலானது; அதனைக்
குழந்தைகள் புரிந்துகொள்ள மூன்று மாத காலமாயிற்று என ஆசிரியர்கள்
கூறினர். விலை மதிப்பற்ற மூன்று மாதங்களை இதற்குச் செலவிட வேண்டுமா?
ஏணியின் படிகள் குறைக்கப்பட வேண்டும் அல்லது சீரமைக்கப்பட வேண்டும்.
பாடப் புத்தகத்திற்குப் பதில் படங்களும் சொற்களும்கொண்ட வண்ண அட்டைகள்
பயன்படுத்தப்படுகின்றன. அவை மாணவர் தாமாகக் கற்கும் உபகரணங்கள் என்று
சொல்லப்படுகிறது. ஆனால் பாடப் புத்தகம் அப்படியே அட்டைகளாக
மாற்றப்பட்டிருப்பதாக ஆசிரியர்கள் சொல்கின்றனர். அட்டைகளை உருவாக்க வேறு
அணுகுமுறை பயன்படுத்தப்பட வேண்டும். அத்துடன் பாடப் புத்தகங்களும்
குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்றன. பெரும் குழப்பம் நிலவுகின்றது.
பயன்படுத்தும் உபகரணங்கள் dynamic materialஆக இல்லை; static materialஆக
இருக்கின்றன. இதனால், அட்டைகளைப் பல வகைகளில் பயன்படுத்திக்
கிடைக்கக்கூடிய நன்மையை இழக்க நேரிடுகிறது.
குழந்தைகள் குழுக்களாகப் பிரிந்து, வட்டமாக அமர்ந்து கற்பது
இத்திட்டத்தின் புதுமைகளில் ஒன்று. குழுவழிக் கற்றலில் குழந்தைகள்
குழுக்களில் இணைந்து, பகிர்ந்து, விளையாட்டுகள் போன்றவை மூலம் கற்பது
அவர்கள் ஆர்வத்துடன் எளிதாகக் கற்க ஏதுவாகிறது. ஆனால் இன்றைய செயல்வழிக்
கற்றலில் குழந்தைகள் வட்டமாக உட்கார்ந்து, ஆனால் அவரவர் தனித்தனியாகத்
தங்கள் செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்கின்றனரே அன்றி இணைந்து கற்பதில்லை.
இதுவல்ல குழுவழிக் கற்றல்.
சக மாணவரிடமிருந்து கற்றல் ஆசிரியரிடமிருந்து கற்பதைக் காட்டிலும்,
குழந்தைகள் ஆர்வமுடன், அச்சமின்றிக் கற்க உதவுவதாகச் சொல்லப்படுகிறது.
விரைவில் கற்கும் குழந்தைகள் மெதுவாகக் கற்கும் குழந்தைகளுக்குக்
கற்றுத்தரல் வேண்டும். இதன் மூலம் ஆசிரியரின் சுமையும் குறையுமென்று
சொல்லப்படுகிறது. ஆனால் இவ்வகுப்புகளில் அத்தகைய கற்றல் நடைபெறுவதாகத்
தோன்றவில்லை. முன்னேறிய குழந்தைகள் பின்தங்கியோருக்குக் கற்றுத்தரும்
திறமையும் பொறுமையும் கொண்டவரல்ல.
இவை போன்ற திட்டங்களை வடிவமைப்பதிலும் செயல்படுத்துவதிலும் ஏராளமான
குறைகளும் குழப்பங்களும் உள்ளன. ஒரு பிரம்மாண்ட திட்டத்தை
நிறைவேற்றுவதில் தொடக்கக் காலத்தில் எதிர்பார்க்கக் கூடிய
பிரச்சினைகள்தாம் இவை. விவரங்களில் சைத்தான் ஒளிந்துகொண்டிருக்கிறது
(Devil is in the detail) என்று சொல்வார்கள். நுணுக்கங்களில் கவனம்
செலுத்தாவிட்டால் திட்டமே நொறுங்கிவிடும்.
இன்று திட்டத்தை ஆதரித்தும் எதிர்த்தும் பல குரல்கள் எழுந்துள்ளன. ஒரு
ஆரோக்கியமான விவாதம் தேவை. பெரும்பாலான ஆசிரியர் சங்கங்கள் செயல்வழிக்
கல்வியைக் கொள்கையளவில் ஏற்றுக்கொண்டாலும், ஆசிரியர் பற்றாக்குறை போன்ற
அதன் அடிப்படைத் தேவைகளைத் தீர்க்காமல் திட்டத்தைத் தொடரக் கூடாது
என்கின்றன. சங்கங்கள் பொத்தாம் பொதுவாக எதிர்க்காமல் திட்டத்தின்
அடிப்படைகளையும் நுணுக்கங்களையும் குறித்து, அறிவுபூர்வமாக,
அனுபவபூர்வமாகப் பரந்த ஆய்வும் விவாதமும் நடத்தி, தங்கள் ஆலோசனைகளை ஏற்க
அரசை வற்புறுத்த வேண்டும்.
திறந்த மனத்துடன், விமர்சனங்களை ஏற்று, தேவையான மாற்றங்களைச் செய்யும்
மனப்போக்கும் முதிர்ச்சியும் கல்வித் துறைக்குத் தேவை. மேலிருந்து
திணிக்கும் திட்டங்கள் வெற்றிபெற வாய்ப்பில்லை. அனைத்து வகைப்பட்ட
பள்ளிகளிலும் இத்திட்டம் கொண்டுவரப்பட வேண்டும். பெரும் ஏற்றத்தாழ்வுகள்
மிகுந்த அமைப்பில், வசதியற்ற குழந்தைகளைக் கொடுமையான புறக்கணிப்புக்கு
உள்ளாக்கியிருக்கும் அமைப்பில், இதன் மூலம் இடைவெளிகள் இன்னும்
அதிகரிக்கும் என்ற அச்சம் தவிர்க்கப்பட வேண்டும். நீண்ட காலமாகக் கல்வி
அமைப்பைச் சீரழித்துக்கொண்டிருக்கும் பல்வகைப் பள்ளிகள், ஆசிரியர்
பற்றாக்குறை, சமுதாயப் பங்கேற்பின்மை போன்ற பிரச்சினைகளைத் தொடாமல்
போதனாமுறை மாற்றத்தினால் மட்டும் முன்னேற்றம் காண இயலாது.
அனைத்திற்கும் மேலாக போதனாமுறையும் வகுப்பறைக் கலாச்சாரமும் ஆசிரியரின்
சுதந்திரத்தில், திறமையில், படைப்பாற்றலில், அனுபவ முதிர்ச்சியில்,
பொறுப்புணர்வில் வேர் கொண்டவை. இவை அனைத்தும் மதிக்கப்படும் சூழலில்
ஆசிரியர் தம் வகுப்பறை தமக்கே உரியதெனச் சொந்தம் கொண்டாடித் தனது
மாணவரின் திறமையில் தன் வாழ்வின் அர்த்தத்தைக் காண்பார். அந்தச் சூழலை
உருவாக்கக் கல்வித் துறை முயல வேண்டும்.
இவை அனைத்தும் மேற்கொள்ளப்பட்டால், தமிழ் நாட்டின் அனைத்துக்
குழந்தைகளும் ஆர்வத்துடன் கற்று, கற்றல் திறன்களை அடைவார்கள். அனைத்துப்
பயனாளிகளும் பங்கும் பொறுப்பும் ஏற்கும் அற்புதமான மாற்றம் உருவாகும்
என்று நம்பலாம்.

லேபிள்கள்: யோ .உஜெயந்தன்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு