செவ்வாய், 19 அக்டோபர், 2010

பாடசாலையில் விழுமியத்தின் தேவை

மனிதன் உணவு, உடைக்கு பின் கல்வியை தான் வாழ்வதற்கான அத்தியாவசிய தேவையாகக் கொண்டுள்ளான். மனித சமூகம் தோன்றிய நாள் முதல் இன்றுவரை ஒவ்வொரு மனிதனுக்கும் யாராவது ஒரு ஆசானால் வாழ்க்கைக்கான வழிகாட்டல் வழங்கப்பட்டு வருகிறது. எனவே மனித சமுதாயம் தோன்றிய நாள் முதலே ஆசிரியர்களின் தேவையும், மகிமையும் உணர்த்தப்பட்டுள்ளது.

அன்று தொடக்கம் இன்றுவரை எந்த தொழிலுக்கும் இல்லாத மதிப்பும், மகத்துவமும் ஆசிரியத் தொழிலுக்கு மட்டுமே இருக்கிறது. ஏனெனில் உலகில் ஏற்படுத்தப்படும் அத்தனை நாகரிக, தொழில்நுட்ப பண்பாட்டு, விழுமிய மாற்றங்களும் பாடசாலையிலிருந்தே மாணவர்கள் மூலம் கொண்டுவரப்படுகிறது.

ஆரம்ப காலங்களை விட இன்று கல்விக்கான போட்டி அதிகம். இப்போட்டிக் கல்வி வெறும் பரீட்சை நோக்கான புத்தகக் கல்வி மட்டுமே. ஆனால் கல்வி என்பது அதுவன்று.

மனிதனின் நடத்தை, மனப்பாங்கு ரீதியாக அவனுள் ஏற்படும் சாதகமான முன்னேற்றமே கல்வியாகும். எனவே வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து கொண்டு வானுறையும் தெய்வத்தை அடைவதற்கு கல்வியின் ஊடாக கூறப்படும் விழுமியங்களை ஊன்றுகோலாகக் கொள்ள மாணவர்களை வழிப்படுத்தல் வேண்டும்.

குழந்தைப் பருவத்திற்கும், முதுமைப் பருவத்திற்கும் இடைப்பட்ட இளமைப்பருவமே சிறந்த விழுமியங்களை உள்வாங்கும் பொருத்தமான பருவம் என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள். இப்பருவத்தை மாணவர்கள் பாடசாலைகளிலே செலவிடுகின்றனர். அதனால் தான் ஆசானின் கற்றல், கற்பித்தல் செயலொலுங்கில் 80% ஆனதை ஆசிரியர்களின் செயல்கள், நடத்தை மூலமே கற்கின்றார்கள்.

தொழில்நுட்ப காலத்தை முந்திய இக்கால கட்டத்தில் பண்பாட்டு ரீதியான வீழ்ச்சி அதைவிட வேகமாக நடக்கிறது. இது அபாயகரமான சூழ்நிலைகளில் இருந்து விடுபட அடித்தளம் பாடசாலைகளிலேயே இடப்பட வேண்டும் என்பது கல்வியாளர்களின் கருத்தாகும்.

இந்த அபாயகரமான சூழ்நிலையை விட்டு மாணவச் சமூகத்தை வழி நடத்தி மீட்டெடுக்க வேண்டியதும், அதற்கான பூரண பொறுப்பும் ஆசிரியர்களையே சாரும் என்பதை ஒவ்வொரு ஆசானும் விளங்கிக் கொண்டு அதற்கான வழிகாட்டலை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மாணவர்களுக்கு வழங்க வேண்டும். சத்தியம், தர்மம், அன்பு, சாந்தி, நாகரிகம், பண்பாடு, சமூகப் பொறுப்பு, சமூக உணர்வு போன்ற உயரிய விழுமியங்களைக் கட்டியெழுப்பக் கூடியதாக எமது கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் அமைய வேண்டும்.

நாம் அன்பு செலுத்துவதன் மூலமே அதாவது எமது நடத்தை மூலமே அவர்களின் மனப்பாங்கில் மாற்றத்தை கொண்டுவர முயற்சிக்க வேண்டும். செயல் ரீதியில் இல்லாமல் வெறும் வார்த்தைகள் மூலம் மாணவர்களை வழிப்படுத்த இயலாது.

ஒரு குறிப்பிட்ட விழுமியங்களை மட்டும் மாணவர்கள் மத்தியில் திணிப்பது கூடாது. மாறாக சிறந்த நடத்தைகளையும், வழிகாட்டல் தத்துவங்களையும் சுயமாக உணர்ந்து புலக்காட்சியைப் பெற உதவுதல் வேண்டும். கற்றல், கற்பித்தல் என்பது சிக்கலான செயற்பாடு.

ஆசான் கற்பிப்பவன் மட்டுமல்ல. கற்பவனும் கூட. ஒரு ஆசான் தனது நடத்தையில் அல்லது கற்பித்தலில் விடும் ஒரு நிமிடத் தவறு ஒரு நூற்றாண்டையும் தாண்டிய தலை முறையை கருகச் செய்யும் என்பதில் ஐயமில்லை. ஆனாலும் ஆசிரிய சேவை யின் வினைத்திறன் மிகு சேவை உளவிய லாளர்களாலும், சிந்தனையாளர் களாலும் உணரப்பட்ட அளவில் அரைவாசி வீதம் கூட ஆசிரியர்களால் உணரப்படவில்லை என்பது கசப்பான உண்மையாகும்.

இன்று உலகளவில் நடக்கும் அத்தனை வன்முறைகளும் இளைய சமூகத்தினரின் அதிகூடிய பங்களிப்பில் நடைபெறுகிறது. இதற்குக் காரணமாக பாடசாலையில், வழங்கப்படும் முறைப்படுத்தப்படாத வழிகாட்டலும், குறைவான சமயக் கல்வியுமாகும் என்று மதிப்பீட்டாளர்கள் அறிக்கை விடுத்துள்ளனர்.

ஆசிரியத் தொழிலைச் சரியாக உணராத வரையில் ஒரு ஆசானால் சிறந்த பண்பாடு மிக்க மாணவர்களை உருவாக்க முடியாது என்பதை கருத்திற் கொள்ளுதல் காலச்சிறந்தது.

லேபிள்கள்:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு