செவ்வாய், 16 நவம்பர், 2010

ஜப்பானிய ஆரம்பக்கல்வி

ஜப்பானிய ஆரம்பக்கல்வி உலகப்புகழ் வாய்ந்தது; அதற்கு ஒரு காரணம் அந்நாட்டின் கல்வி முறையில் காணப்படும் சமத்துவ அம்சம். ஆற்றல்களின் அடிப்படையில் மாணவர்களைப் பிரித்து வைத்துக் கற்பிக்கும் முறைமை ஜப்பானில் இல்லை. இவ்வாறு மாணவர்களைப் பிரித்து வைத்துக் (Ability groupng) கற்பிப்பது பல உலகநாடுகளில் பின்பற்றப்படும் ஒரு ஏற்பாடு. மேலைநாடுகள் இதனைப் பெரிதும் விரும்பித் தமது நாடுகளில் தற்போது அறிமுகம் செய்து வருகின்றன.
ஆற்றல் மிக்க மாணவர்களை இனங்கண்டு, அவர்களைத் தனியாக ஒருவகுப்பில் வைத்துக் கற்பிப்பதைப் பலரும் விரும்புவர். பல்வகை ஆற்றல் உள்ளவர்களை ஒரே வகுப்பில் வைத்துக் கற்பிப்பது ஆசிரியர்களுக்குச் சிரமமானது; அவர்களுடைய பணி சுமை நிறைந்ததாகிவிடும் என்பதால் அதனைப் பலரும் விரும்புவதில்லை.
பின்லாந்து நாட்டில் மாணவர்களை ஒன்றாக வைத்துக் கற்பிக்கும் முறைமை ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. பின்லாந்துப் பிள்ளைகள் அண்மைக்காலங்களில் அடைந்துள்ள உயர்ந்த கல்வித் தேர்ச்சிகளுக்கு இந்த ஜப்பானிய முறைமையே காரணம் என்றும் கூறப்படுகின்றது. ஐக்கிய அமெரிக்காவில் காலங்காலமாக மாணவர்கள் பிரித்து வைத்தே கற்பிக்கப்பட்டனர். ஆனால் தற்போது அங்கும் இம்முறையைக் கைவிடும் போக்கு தென்படுகின்றது. மாணவர்களைப் பிரித்து வைத்துக் கற்பிப்பதால், அவர்களுடைய கல்விச் சித்திகளில் பல வேறுபாடுகளை அவதானிக்க முடிந்தது. ஐக்கிய அமெரிக்காவில் எந்தப் பிள்ளையையும் பின்தங்கிவிட இடமளிக்கப்படக்கூடாது’ என்ற கொள்கை பின்பற்றப்படுகின்றது. இந்த இலக்கினை அடைய, மாணவர்களின் ஆற்றலைக் கருத்திற் கொள்ளாது, அவர்களை ஒன்றாக வைத்துக் கற்பிக்கும் ஜப்பானிய கல்வி ஏற்பாடு இன்று பெரிதும் விரும்பப்படுகிறது.
ஆற்றலில் வேறுபட்ட மாணவர்களை ஒன்றாக வைத்துக் கற்பிப்பதால், ஜப்பானியக் கல்விமுறை அதிக அளவில் சமத்துவத்தை நிலைநாட்டுகின்றது. அந்நாட்டில் பெற்றோர்களின் சமூக, பொருளாதார அந்தஸ்து பிள்ளைகளின் கல்வித்தேர்ச்சியில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாமைக்கும் இந்த ஏற்பாடே காரணம் என்பது ஆய்வாளர் கருத்து.
ஜப்பானிய கல்வி முறை உலகளாவிய ரீதியில் பாராட்டப்பட மற்றொரு காரணம் அங்கு மாணவர்களின் முழுமையான (dall- round) கல்வியில் அக்கறை செலுத்தப்படுவதாகும். அத்தகைய முறையில் பாட ஏற்பாடு அங்கு தயாரிக்கப்பட்டுள்ளது. உணவருந்தும் வேளையின் போது கூட மாணவர்கள் ஆரோக்கியமான முறையில் தமக்குள் சமூகத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளப் பயிற்சி வழங்கப்படுகின்றது. செல்வந்த நாடுகளில் மனிதத் தொடர்புகள் குறைந்து விட்டன; குடும்பங்கள் சிறுத்து விட்டன; சமூக மாற்றங்களின் காரணமாக இவ்வாறான நிலை தோன்றிவிட்டது. பெரும்பாலான பிள்ளைகள் குடும்பத்தின் கவனிப்பின்றி தமது உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாதவர்களாகி விட்டனர்.
பிள்ளைகளின் நடத்தைகள் எல்லை மீறிச் சென்றுள்ளது. வன்செயல், பாலியல் நடத்தைகள் என்பன சீர்கெட்டுள்ளன. பாடசாலைகளில் (AIDS) தொடர்பான விடயங்களைக் கற்பிக்க வேண்டியுள்ளது. (HIV -AIDS) என்பவற்றைப் பாடசாலைகளில் தவிர்ப்பது பற்றி ஆசிரியர்களுக்கான ஏராளமான கையேடுகள் இன்று வழங்கப்பட்டுள்ளன; தவிர்ப்பதற்கான சகல வழிமுறைகளும் இருபால் மாணவர்களுக்கும் கற்பிக்க வேண்டிய நிலை மேலை நாடுகளில் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மேலை நாட்டுப் பாடசாலைகள் விஞ்ஞானக் கல்வி, கணிதக் கல்வி என்பவற்றில் தமது முழுக்கவனத்தையும் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்பின் புலத்தில் ஆளிடைத் தொடர்புகளைப் பெரிதும் வலியுறுத்தும் ஜப்பானியக் கல்வி ஏற்பாடுகள் மேலை நாடுகளில் பெரிதும் விரும்பப்படுகின்றன.
ஜப்பானிய ஆசிரியர்கள் மத்தியில் இன்று வளர்ச்சியடைந்துள்ள பாட அவதான முறையும் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. இம்முறையின் படி ஆசிரியர்களின் வகுப்பறைக் கற்பித்தலை மற்ற ஆசிரியர்கள் வகுப்பறையில் அமர்ந்து அவதானிப்பர். இதனை Lesson Study Method என்பர். ஒரு ஆசிரியரின் கற்பித்தல் முறையை அவதானித்து யாவரும் அது பற்றிய ஆக்கபூர்வமான கலந்துரையாடலில் ஈடுபடுகின்றனர். இதனால் ஆசிரியர்களின் கற்பித்தற் திறன் முன்னேற்றம் அடைய நிறைய வாய்ப்புகள் உண்டு. ஜப்பான் நாட்டின் சகல அரசாங்க ஆரம்ப பாடசாலைகளிலும் இம்முறை பின்பற்றப்படுகின்றது. மேலை நாடுகளும் இவ்வாறான ஏற்பாட்டை ஏற்று நடைமுறைப்படுத்தி வருகின்றன.
கல்வித் தேர்ச்சிக்கான சர்வதேச மதிப்பீட்டுச் சபையானது விஞ்ஞான, கணித கல்வியில் மாணவர் தேர்ச்சி பற்றிச் செய்த மதிப்பீட்டில் ஜப்பானிய மாணவர்கள் மிக உயர்ந்த புள்ளிகளைப் பெற்றனர். இதன் காரணமாகவே மேலை நாடுகள் ஹபாட அவதான’ முறையில் கூடிய அக்கறை செலுத்தத் தொடங்கின.
1995 இல் ஐக்கிய அமெரிக்கா, ஜேர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளில் எட்டாம் வகுப்பு மாணவர்களின் கணிதபாட வகுப்புகள் ஒளிப்பதிவு செய்யப்பட்டு ஆராயப்பட்டன. கலிபோனியாவில் பல்கலைக்கழக உளவியல் பேராசிரியர் இவ்வாய்வில் ஈடுபட்டார். ஜப்பானிய வகுப்பறையில் ஆசிரியர்கள் நீண்ட விரிவுரையாற்றவில்லை. அவர் மட்டுமே ஆதிக்கம் செலுத்தவில்லை. அவருடைய வழிகாட்டலில் மாணவர்கள் சுயமாக சிந்தித்துச் செயற்பட்டனர். தாமாகவே செயற்பட்ட உயர்தரமான எண்ணக்கருக்களைப் புரிந்துகொண்டனர். பேராசிரியர் ளுவபைடநச இவ்வாறான கற்பித்தல் முறை பாட அவதான முறைமையினூடாகவே வளர்ச்சி கண்டது எனக் கண்டறிந்தார். இப்பாட அவதான முறை பற்றிய அவரது பல நூல்கள் என்பன பெரிய அளவில் வாசிக்கப்பட்டன. அந்தஸ்தையும் பெற்றன.
இப் பின்புலத்தில் பாட அவதான முறை இன்று ஐக்கிய அமெரிக்கா, ஹொங்கொங், ஈரான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
பாட அவதான முறை ஜப்பானில் தோற்றமுற ஒரு முக்கிய சமூகவியல் காரணி உண்டு. மேலைநாட்டவர் தனித்தே செயற்படுவர் என்றால் ஜப்பானியர்கள் எப்போதுமே குழுவாகச் செயற்படுகின்றவர்கள். மேலைநாடுகளில் ஆசிரியர்கள் குழுவாகச் செயற்படுவதில்லை. ஆனால் ஜப்பானியப் பாடசாலைகளில் ஆசிரியர்கள் தொடர்புகளை ஏற்படுத்தும் வகையில் பெரிய ஆசிரியர் ஓய்வறைகள் உண்டு. இதனால் பாட அவதானம் போன்ற புதிய முறைகளை அங்கு ஏற்படுத்த முடிகின்றது.

லேபிள்கள்:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு